என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார்.
- ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. தேர்தலுக்கான நாள் நெருங்க நெருங்க தமிழக அரசியல் கட்சிகள் இடையே பதற்றம் பற்றிக்கொண்டுள்ளது. அதிலும், தமிழக அரசியல் அரங்கில் புதிய வரவான த.வெ.க. சட்டசபை தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது விவாத பொருளாக மாறி வருகிறது.
பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மத்தியில் த.வெ.க.வின் அரசியல் பயணம் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது. கரூர் துயர சம்பத்திற்கு பிறகு விஜய் காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பு ஒரு தனியார் கல்லூரியில் உள் அரங்கத்தில் நடந்தது.
இதனை தொடர்ந்து புதுச்சேரியில் பொதுக்கூட்டம் வாயிலாக மக்கள் சந்திப்பை விஜய் நடத்தினார். இனி வரும் நாட்களில் ஈரோடு மற்றும் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ச்சியாக ஜனவரி 2-வது வாரம் வரை அவர் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்தநிலையில், ஜனவரி தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணலை நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் உத்தேச பட்டியலை விஜய் தயார் செய்து வைத்துள்ளார். தொகுதிக்கு 4 பேர் வீதம் அவர் தேர்வு செய்துள்ளார். அதில் 60 சதவீதம் மாவட்ட செயலாளர்கள், பெண்களுக்கும், 40 சதவீதம் பிரபலங்கள், மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல தியேட்டர் உரிமையாளர்கள் சிலரும் சென்னை, திருச்சி, நெல்லை, ஆலங்குளம் என குறிப்பிட்ட தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், த.வெ.க.வில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. தை பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் தேர்வை விஜய் நடத்தி முடித்து, உடனடியாக அதற்கான அறிவிப்பையும் வெளியிட உள்ளார்.
- கடையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அந்த கடை மேலும் பிரபலமானது.
- ஆண்கள் தரப்பில் இருந்து கண்டன கருத்துக்களும் பதிவிடப்பட்டது.
தெருவோர கடையில் அலைமோதுகிறது பெண்கள் கூட்டம். வழக்கமாக பெண்கள் டீ கடைகளிலோ, தெருவோர ஓட்டல்களிலோ ஆண்களுக்கு நிகராக நின்று சுதந்திரமாக பேசி சிரித்தபடி சாப்பிடமாட்டார்கள். ஆனால் இந்த கடையில் மட்டும் அவர்கள் சிரித்தபடி பானிபூரியை ருசிக்கிறார்கள். காரணம் அந்த கடையில் வைக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான பெயர் பலகைதான். "ஆண்கள் யாருக்கும் அனுமதி கிடையாது" என்று எழுதப்பட்டிருப்பதால் பெண்கள் சுதந்திரமாக உணர்கிறார்கள்.
சிலர், அந்த கடையை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அந்த கடை மேலும் பிரபலமானது. பலர் பாராட்டினாலும், ஆண்கள் தரப்பில் இருந்து கண்டன கருத்துக்களும் பதிவிடப்பட்டது. ''அந்த பானிப்பூரியை விற்பவரே ஒரு ஆண்தானே'' என்று ஒருவர் எழுதியிருந்தார். இதுகுறித்த வீடியோ பல லட்சம் பேரால் பார்வையிடப்பட்டு உள்ளது.
- தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.
- டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவம்பர் 26-ந்தேதி வேறு ஒரு நிறுவனத்தை டெண்டர் வழங்கப்பட்டது.
சென்னை:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, அவற்றுக்கு 'மைக்ரோ சிப் பொருத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.
இந்த மேக்ரோ சிப்களை வழங்கும் டெண்டர், 'எக்ஸ்ஹீலர் இன்னோவேடிவ் சொல்யூசன்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பின்னர், அந்த டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவம்பர் 26-ந்தேதி வேறு ஒரு நிறுவனத்தை டெண்டர் வழங்கப்பட்டது.
இந்த டெண்டரை எதிர்த்து 'எக்ஸ்ஹீலர்' நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, "டெண்டரில் பல்வேறு குளறுபடிகள், விதிமீறல்கள் நடந்துள்ளன எனக்கூறி அந்த டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
- விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
- விஜய்யிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.
இதேபோல் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்திருந்தனர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கில் விரைவில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய்யிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய்யை கரூருக்கு அழைத்து விசாரணை நடத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால் அவரிடம் சென்னையிலேயே விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
- இந்த செயற்கைக்கோள் புளுபேர்ட் 1 முதல் 5 வரையிலான செயற்கைக்கோளை விட 3.5 மடங்கு பெரியது.
- வணிக மற்றும் அரசு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள டெக்சாஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏ.எஸ்.டி. நிறுவனம் செல்போன் சேவைக்கான 6.5 டன் எடை கொண்ட 'புளூபேர்ட்- 6' என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கீழ் செயல்படும், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டான எல்.வி.எம்-3 மூலம் விண்ணில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஏவ திட்டமிட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் கடந்த அக்டோபர் 19-ந்தேதி இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு ராக்கெட்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அது ஏவுதளத்திற்கு நகர்த்தப்படுவதற்கு முன்பு சில முக்கிய சோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த செயற்கைக்கோள் புளுபேர்ட் 1 முதல் 5 வரையிலான செயற்கைக்கோளை விட 3.5 மடங்கு பெரியது. அத்துடன் தரவுத் திறனும் அதனை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும். குறைந்த பூமி சுற்றுப்பாதையில் இதுவரை செலுத்தப்பட்ட மிகப்பெரிய தனியார் கட்டமைத்த, செல்போன்-இணக்கமான ஆண்டெனாவாக செயல்படும். அமெரிக்கா உரிமம் பெற்ற இந்த செயற்கைக்கோள் அடுத்த தலைமுறைக்கான செயற்கைக்கோளாகும்.
இது வணிக மற்றும் அரசு பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகிற 2026-ம் ஆண்டு முதல் காலாண்டின் இறுதிக்குள் மேலும் 5 செயற்கைக்கோள்களை பூமியின் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டவுடன், இந்த செயற்கைக்கோள் அமெரிக்கா மற்றும் சில சந்தைகளில் தொடர்ச்சியான செல்லுலார் பிராட்பேண்ட் சேவையை அளிக்கும். ஸ்மார்ட்போன்களால் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய முதல் மற்றும் ஒரே விண்வெளி அடிப்படையிலான செல்லுலார் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை இந்த செயற்கைக்கோள் இயக்கும் திறன் கொண்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.
- திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-27 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி இரவு 8.49 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : உத்திரம் காலை 10.30 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் கோவில்களில் புறப்பாடு கண்டருளல். நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகி திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் கோவில்களில் அபிஷேகம்.
ஆழ்வார் திருநகரி, ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோ பால சுவாமி கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உற்சாகம்
ரிஷபம்-விவேகம்
மிதுனம்-அன்பு
கடகம்-பெருமை
சிம்மம்-பக்தி
கன்னி-பணிவு
துலாம்- வாழ்வு
விருச்சிகம்-லாபம்
தனுசு- ஆதாயம்
மகரம்-சிறப்பு
கும்பம்-கடமை
மீனம்-உண்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பரபரப்பாகச் செயல்பட்டுப் பாராட்டு மழையில் நனையும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். நாட்டுப் பற்றுமிக்கவர்களின் நல்லாதரவு உண்டு.
ரிஷபம்
தேசப்பற்றும் தெய்வப் பற்றும் மேலோங்கும் நாள். நீண்ட நாளைய நண்பர் ஒருவரின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்று இனத்தவர்கள் மனதிற்கினிய செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பர்.
கடகம்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும். உறவினர்களின் ஒத்துழைப்பு உள்ளத்தை மகிழ்விக்கும்.
சிம்மம்
நண்பர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
கன்னி
கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும்.
துலாம்
இடமாற்றச் சிந்தனைகள் மேலோங்கும் நாள். திடீர் பயணமொன்றால் தித்திக்கும் செய்தி வந்து சேரும். தொழில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.
விருச்சிகம்
புதிய பாதை புலப்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வருமானம் திருப்தி தரும். தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.
தனுசு
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். முன்னேற்றப் பாதையில் செல்ல நண்பர்கள் வழிவகுப்பர். உத்தியோகத்தில் இடமாற்றம் உறுதியாகலாம்.
மகரம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.
கும்பம்
நாவடக்கத்தோடு நடந்துகொள்ள வேண்டிய நாள். வீண் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பிரச்சனை அதிகரிக்கும்.
மீனம்
சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கும் நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.
- சென்னையில் நாளை அதிகாலை 4.45 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
- அதிகாலை 3 மணி முதல் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை:
இந்திய கடற்படையை போற்றும் விதமாக கடற்படை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் அருகே முதன்முறையாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாளை அதிகாலை 4.45 மணி தொடங்கி 6.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், மாரத்தானில் பங்கேற்பவர்களின் வசதிக்காக நாளைய தினம் அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதே வேளையில், எம்.ஜி.ஆர். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை (கோயம்பேடு வழியாக) நேரடி ரெயில் சேவை காலை 3 மணி முதல் 5 மணி வரை இயக்கப்படாது என்றும், இந்த நேரங்களில் பயணிகள் எம்.ஜி.ஆர். சென்டிரல் (கிண்டி வழியாக செல்லும் ரெயில்களில்), ஆலந்தூர் அறிஞர் அண்ணா மெட்ரோ நிலையங்களில் வழித்தடங்களை மாற்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி விளையாடுகிறார்.
- நாளை மறுதினம் மெஸ்ஸி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.
கொல்கத்தா:
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொல்கத்தாவில் லியோனல் மெஸ்ஸி சிலை திறப்பு விழா நடக்கிறது. அங்குள்ள யுவ பாரதி மைதானத்துக்கு செல்லும் மெஸ்ஸி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி, நடிகர் ஷாருக் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஆகியோரை சந்திக்கின்றார்.
அதன்பின், நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து, ஐதராபாத் செல்லும் மெஸ்ஸி அங்குள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடுகிறார். இதில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியும் விளையாடுகிறார். மெஸ்ஸியை கொண்டாடும் விதமாக இசை கச்சேரி நடக்கிறது.
தொடர்ந்து, மும்பை செல்லும் மெஸ்ஸி இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கோப்பை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரபலங்களுடன் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் அவர், வான்கடே மைதானத்தில் நடக்கும் பேஷன் ஷோ நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
நாளை மறுதினம் மெஸ்ஸி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அருண் ஜெட்லி மைதானத்தில் மினர்வா அகாடமி வீரர்களைப் பாராட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
- கம்போடியா உடனான அமைதி ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக தாய்லாந்து அறிவித்தது.
- புதிய எல்லை மோதல்கள் இருநாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்தது.
பாங்காங்:
ஆசிய நாடுகளான கம்போடியா-தாய்லாந்து இடையே 1907-ம் ஆண்டில் சர்வதேச எல்லை வகுக்கப்பட்டது. இருப்பினும் எல்லையில் அமைந்துள்ள 11-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்து கோவில் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன
இந்த மோதல், கடந்த ஜூலையில் முற்றியது. இருதரப்பு வீரர்கள் மோதிக்கொண்டதில் 48 பேர் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் அகதிளாகினர். 5 நாட்கள் நீடித்த இந்த போரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்தார். அக்டோபரில் மலேசியா சென்றபோது டிரம்ப் முன்னிலையில் இருநாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
கம்போடியா புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி தங்கள் நாட்டு வீரர் காயமடைந்ததாகக்கூறி அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தாய்லாந்து நவம்பரில் அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி இருநாட்டு வீரர்களிடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதில் இருதரப்பை சேர்ந்த 8 வீரர்கள் பலியாகினர்.
புதிய எல்லை மோதல்கள் இருநாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தாய்லாந்து நாடாளுமன்றத்தை அந்நாட்டு அரசு கலைத்துள்ளது. இதையடுத்து, சுமார் 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதுவரை பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தலைமையில் இடைக்கால அரசு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சமீப காலமாக சசி தரூர் பிரதமர் மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார்.
- இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
புதுடெல்லி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் புகழ்ந்து வருகிறார். இது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்து கட்சி குழு கூட்டத்தில் சசி தரூர் இடம்பெற்றார்.
இதற்கிடையே, மத்திய அரசின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ள சசி தரூர், காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.
இந்நிலையில், நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளார். சசி தரூர் 3வது முறையாக ஆலோசனைக் கூட்டத்தை தவிர்த்திருப்பது காங்கிரஸ் கட்சி மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் மற்றும் கடந்த மாதம் எஸ்.ஐ.ஆர். குறித்த விவாதத்தையும் அவர் புறக்கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அந்தமானில் வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார்.
- சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவிஜயபுரம்:
சாவர்க்கரின் புகழ்பெற்ற கவிதையான 'சாகரா ப்ராண்' எழுதப்பட்டு 116வது ஆண்டு நிறைவை ஒட்டி, உள்துறை மந்திரி அமித் ஷா இன்று அந்தமான் நிகோபர் தீவுக்குச் சென்றார்.
தெற்கு அந்தமானில் உள்ள பியோத்னாபாத் என்ற இடத்தில் நிறுவப்பட்ட வீர சாவர்க்கர் சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்துவைத்தார். அதன்பின், சாவர்க்கரைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் பூங்கா ஒன்றையும் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அப்போது உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:
அந்தமான் நிகோபர் தீவுகள் ஒரு தீவுக்கூட்டம் அல்ல. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தவம், தியாகம், அர்ப்பணிப்பு, தேசபக்தியால் உருவான ஒரு புனித பூமி.
நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, வீர சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒருபோதும் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
அவர் தமது காலத்தில் ஹிந்து சமூகத்தில் இருந்த தீமைகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடினார். சமூகத்தின் எதிர்ப்பு அவருக்கு இருந்தாலும் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தார்.
வீர சாவர்க்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி. பிறப்பிலே ஒரு உண்மையான தேசபக்தர்.
சுதந்திரத்துக்கு முன், அந்தமான் நிகோபர் சிறைக்கு கொண்டு வரப்பட்ட நபர், அங்கிருந்து திரும்பி வந்தாலும் அவர்களின் மனம், ஆன்மா அழிக்கப்பட்டு, ஒருபோதும் அசல் வடிவத்திற்கு திரும்ப முடியாது.
ஆனாலும், வீர சாவர்க்கர் தமது வாழ்க்கையின் கடினமான நாட்களை இங்கே கழித்ததால் இந்தியருக்கு ஒரு தீர்த்த ஸ்தலமாக மாறிவிட்டது. இந்த இடம், மற்றொரு சுதந்திர போராட்ட வீரரான நேதாஜியின் நினைவுடனும் இணைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சாவர்க்கர் 1911-ம் ஆண்டு ஸ்ரீ விஜயபுரம் என அழைக்கப்படும் போர்ட் பிளேயரில் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






