என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • குடிபோதையில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தல், திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களும், விபத்துகளும் அதிகரித்து விட்டன.
    • ஓர் வீட்டில் 5 அறைகளும், ஓர் சமையல் அறையும் இருந்தால் அந்த இல்லத்தை ரெஸ்டோ பாராக மாற்றி விட முடியும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    புதுவையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி செய்து தருவதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டு வருவதும், அதனால் புதுவையில் போதைக் கலாச்சாரம் பரவி குற்றங்கள் பெருகுவதும் கவலையளிக்கின்றன. கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய புதுவை அரசு, வருவாய் ஈட்டுவதற்காக மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் வணிகத்தை ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது.

    ஏராளமான வரலாற்றுச் சிறப்புகளையும், கலாச்சாரப் பெருமைகளையும் கொண்ட புதுச்சேரி இப்போது அதற்காக புகழ் பெறாமல், மது மற்றும் கஞ்சா போதைக் கொண்டாட்டங்களுக்காக பெயர் பெற்று வருவது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மது அருந்துவதற்காக புதுச்சேரி செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இன்னொருபுறம் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்களும் மது அருந்த தூண்டப்படுகின்றனர். இவை அனைத்துக்கும் காரணம் புதுச்சேரியில் தெருவுக்கு 4 மதுக்கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டிருப்பது தான். அதிலும் குறிப்பாக ரெஸ்டோ பார்கள் என்ற பெயரில் குடிப்பகத்துடன் கூடிய மதுக்கடைகள் மூலைக்கு மூலை திறக்கப்பட்டுள்ளன. இதனால் குற்றச்செயல்கள் பெருகி விட்டன.

    சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக குழுவாக புதுச்சேரி சென்றுள்ளனர். அங்குள்ள ஓ.எம்.ஜி என்ற ரெஸ்டோ பாரில் மது அருந்திக் கொண்டிருந்த போது, அவர்களுக்கும், குடிப்பகப் பணியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சண்முகப்பிரியன் என்ற மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஷாஜன் என்ற மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.

    இதையொத்த நிகழ்வுகள் புதுவையில் அடிக்கடி நிகழத் தொடங்கி விட்டன. குடிபோதையில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தல், திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களும், விபத்துகளும் அதிகரித்து விட்டன. இதனால் புதுவை அதன் இயல்பிலிருந்து மாறி பெரும் கலாச்சாரச் சீரழிவை சந்தித்து வருகிறது. புதுச்சேரி படிப்படியாக கோவாவைப் போல மாறி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் புதுவை இந்தியாவின் போதை தலைநகராக மாறிவிடும்.

    புதுவையில் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெற்றோரும் தங்களது பிள்ளைகள் மதுவுக்கு மிகவும் மோசமாக அடிமையாகி வருவதை எண்ணி மிகுந்த வருத்தத்திலும், வேதனையிலும் வாடுகின்றனர். புதுவையில் சாலைவிபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டன. மதுவால் புதுவை மிக மோசமான கலாச்சார சீரழிவை எதிர்கொண்டு வருவது கவலையளிக்கிறது.

    புதுச்சேரியின் இந்த சீரழிவுகளுக்கு காரணம் அங்கு அளவில்லாமல் திறக்கப்படும் மதுக்கடைகள் தான். எஃப்.எல் 1, எஃப்.எல் 2 ஆகிய பெயர்களில் மதுக்கடைகளுக்கான உரிமங்கள் வழங்கப்படுகின்றன. எஃப்.எல் 1 என்பது மொத்த வணிகத்திற்கான உரிமம் ஆகும். எஃப்.எல் 2 சில்லறை வணிகத்திற்கான உரிமம். இதில் ரெஸ்டோ பார் எனப்படும் குடிப்பகங்களுக்கும் உரிமம் வழங்கப்படுகிறது. ரெஸ்டோபார் உரிமம் பெறுவதற்காக நிபந்தனைகளும், கட்டணமும் மிகவும் குறைவு என்பதால் அதிக எண்ணிக்கையில் அவை திறக்கப்பட்டு வருகின்றன.

    ஓர் வீட்டில் 5 அறைகளும், ஓர் சமையல் அறையும் இருந்தால் அந்த இல்லத்தை ரெஸ்டோ பாராக மாற்றி விட முடியும். அதாவது அந்த அறைகளில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு சில்லறையில் மது வழங்குவது தான் ரெஸ்டோபார்களின் நோக்கம். ஆனால், விதிகளை மீறி கட்டுப்பாடு இல்லாமல் ரெஸ்டோ பார்களில் அனைவருக்கும் கட்டுப்பாடின்றி மது வணிகம் செய்யப் படுகிறது. அதனால், புதுவையில் மது வெள்ளமாக ஓடுகிறது; சீரழிவுகள் பூகம்பமாக வெடிக்கின்றன.

    புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் இன்றைய நிலையில், 86 மொத்த வணிகக் கடைகள், 240 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 476 சில்லறை வணிகக் கடைகள், 107 சாராயக் கடைகள், 81 கள்ளுக்கடைகள் என மொத்தம் 750 போதை பானக்கடைகள் உள்ளன. புதுவையின் மக்கள்தொகையான 13.94 லட்சத்துடன் ஒப்பிடும்போது 1859 பேருக்கு ஒரு போதைபானக் கடைகள் உள்ளன. புதுச்சேரி நகரத்தில் மட்டும் 536 போதைபானக்கடைகள் உள்ளன. இது 1772 பேருக்கு ஒரு கடையாகும். காரைக்காலில் இன்னும் குறைவாக 1516 பேருக்கு ஓர் போதைபானக் கடை உள்ளது. கோவாவில் 250 பேருக்கு ஒரு மதுக்கடை இருக்கும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக அதிக மதுக்கடைகள் உள்ள மாநிலமாக புதுவை தான் திகழ்கிறது.

    புதுவையில் இப்போது இருக்கும் மதுக்கடைகளே மிகவும் அதிகம் என்று கூறப்படும் நிலையில், இன்னும் 100 ரெஸ்டோபார்களுக்கு அனுமதி அளிக்க புதுவை அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் நடந்து விட்டால், புதுவையில் மதுக்கடைகள் உள்ளன என்று கூறுவதற்கு பதிலாக மதுக்கடைகளுக்குள் புதுவை உள்ளது என்று கூற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அதேபோல், புதுவையில் ஏற்கனவே 3 மது ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 6 மது ஆலைகளுக்கு புதுவை அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. ஆனால், ஆளுனர் தலையிட்டு அந்த ஆலைகளுக்கு உரிமம் அளிப்பதை தடுத்து நிறுத்தியிருக்கிறார். இல்லாவிட்டால் புதுவை மாநிலத்தில் மது சுனாமியாக ஓடிக் கொண்டிருந்திருக்கும்.

    புதுவையில் ஏராளமான மது ஆலைகள், மதுக் கடைகள், குடிப்பகங்கள் இருப்பதை யாராலும் நியாயப் படுத்த முடியாது. அண்மைக்காலங்களில் பள்ளி மாணவர்கள் மது அருந்தி விட்டு வகுப்புகளுக்கு வருவது அதிகரித்து வருகிறது. மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு மதுக்கடைகளுக்கும், குடிப்பகங்களுக்கும் தாராளமாக அனுமதி அளிப்பதை ஏற்க முடியாது. பணம் ஈட்டுவது மட்டுமே அரசின் நோக்கமாக இருக்கக் கூடாது. பணத்திற்காக மது வணிகத்தை ஊக்குவித்தால், எதிர்காலத்தில் இம்மண்ணில் திடமான இளைஞர்களே இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

    இதை உணர்ந்து புதுவை மாநிலத்தை மதுவின் பிடியிலிருந்து மீட்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக புதுவையில் இனி புதிய மது ஆலைகளுக்கோ, மதுக்கடைகளுக்கோ அனுமதி அளிக்கப்படாது என்று புதுவை அரசு அறிவிக்க வேண்டும். அதன்பின் இப்போது இருக்கும் மதுக்கடைகள், குடிப்பகங்கள் ஆகியவற்றை படிப்படியாக மூட வேண்டும். புதுவையிலும் மது விலக்கு என்ற இலக்கை நோக்கியப் பயணத்தை அம்மாநில அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட தி.மு.க. தொண்டர்களை துணை முதலமைச்சர் உதயநிதி கவுரவிக்க உள்ளார்.
    • தி.மு.க. ஒன்றிய, நகர, கிளைக்கழக மற்றும் பாக முகவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு அவர் தி.மு.க.வினரை சந்தித்து ஊக்கப்படுத்த உள்ளார்.

    மேலும் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட தி.மு.க. தொண்டர்களை துணை முதலமைச்சர் உதயநிதி கவுரவிக்க உள்ளார்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. ஒன்றிய, நகர, கிளைக்கழக மற்றும் பாக முகவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார். காஞ்சிபுரத்தில் இருந்து உதயநிதி இன்று தனது பிரசாரத்தை தொடங்குகிறார். 

    • பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது.
    • பிரிக்ஸ் அமைப்பு, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என டிரம்ப் விமர்சித்தார்.

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுகளை உள்ளடக்கியது BRICS அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா இணைந்துள்ளது.

    அண்மையில் பிரிக்ஸ் அமைப்பின் 17ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. இதனிடையே பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்க கொள்கைக்கு எதிரானது என விமர்சித்த டொனால்டு டிரம்ப், பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் எந்த நாடும், கூடுதல் 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ளும் என மிரட்டல் விடுத்திருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தக சவால்களை எதிர்கொள்ள, பிரிக்ஸ் நாடுகள் பரஸ்பர வெற்றியை இலக்காக கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளது.

    அடுத்தாண்டு பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகள் இடையேயான வர்த்தக பற்றாகுறையை நிவர்த்தி செய்வதன் மூலம், நாம் ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும் எனவும் நியாயமான, பாகுபாடற்ற, விதி சார்ந்த கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

    • மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு பெரிய அட்டை பெட்டியுடன் ராகுல் காந்தி வந்தார்.
    • ராகுல் காந்தி சிறுமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேத்தியின் பிறந்தநாளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரிசு வழங்கி உள்ளார்.

    மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு பெரிய அட்டை பெட்டியுடன் வந்த ராகுல் காந்தி, அதில் இருந்து பரிசை எடுத்து கொடுக்கிறார். அதில் இருந்த நாய்க்குட்டியை எடுத்து அவர்களிடம் காண்பிக்கிறார்.

    நாய்க்குட்டியை பார்த்து முதலில் தயங்கிய சிறுமி சிறிதுநேரத்தில் அதனை தடவிக்கொடுத்து, அதனுடன் விளையாட தொடங்கினார். ராகுலும் நாய்க்குட்டியை தடவிக்கொடுத்து, விளையாடினார்.

    இதையடுத்து ராகுல் காந்தி சிறுமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

    ரோஜா ரோஜா பாடல் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார் பாடகர் சத்யன் மகாலிங்கம்.

    ரோஜா ரோஜா பாடல் மூலம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறார் பாடகர் சத்யன் மகாலிங்கம். இவர் 26 வருடங்களுக்கு முன் காதலர் தினம் படத்தில் இடம்பெற்ற ரோஜா ரோஜா பாடலை ஒரு நிகழ்ச்சியில் சத்யன் மகாலிங்கம் பாடினார். அப்போது அவர் பாடிய வீடியோ கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. 20 வயதில் அந்த ப்மெலடி பாடலை மிகவும் அருமையாக பாடியுள்ளார்.ஆனால் இவருக்கு மெலடி பாடல்கள் பாட அதிகம் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    வசூல் ராஜா MBBS படத்தில் 'கலக்கப் போவது யாரு', சரோஜா படத்தில் 'தோஸ்து படா தோஸ்து', பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் 'அட பாஸு பாஸு', கழுகு படத்தில் 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்..' உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்களின் ஆதரவிற்கும் அன்பிற்கும் பெரும் நன்றி தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    • ஜெருசலேம் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மோடிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் நேற்று 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

    சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு படை வீரரால் தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.

    பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மோடிக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    • நான் என் தந்தை மற்றும் தாத்தாவுடன் இங்கு வசிக்கிறேன்.
    • நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன்.

    மேற்கு வங்க மாநிலம் அசன்சோலியை சேர்ந்தவர் ஸ்வாகதா பெயின். ஆசிரியையான இவருக்கு 5 வயதில் ஐதிஜ்யா என்ற மகன் உள்ளார். 2021 -ம் ஆண்டில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்ட ஸ்வாகதா பெயின் தனது ஊரில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தொலைவில் உள்ள உத்தர் தினாஜ்பூரில் பணியமர்த்தப்பட்டார்.

    அவர் குடும்பத்தை பிரிந்து உத்தர் தினாஜ்பூரில் வேலை செய்து வந்தார். தொடர் விடுமுறை வந்தால் மட்டும்தான் தனது சொந்த ஊருக்கு வந்து கணவன்- மகனை பார்த்து செல்வார்.

    இந்த நிலையில் அவரது 5 வயது மகன் ஐதிஜ்யா மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு தனது தாய்க்கு இடமாற்றம் செய்து தரக்கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அவர் முதல்-மந்திரியை "அன்புள்ள மம்தா திதுன்" என்று அழைத்து, எனது வீடு அசன்சோலில் உள்ளது. என் அம்மா உத்தர் தினாஜ்பூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    எங்களிடமிருந்து விலகி அங்கு வசிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு அவர் வீட்டிற்கு வருகிறார். நான் என் தந்தை மற்றும் தாத்தாவுடன் இங்கு வசிக்கிறேன்.

    அவர் இல்லாமல் வாழ்வது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் எனது தாயை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் அம்மாவை விரைவில் வீட்டிற்கு அனுப்பி வைக்கவும், அவர் இனி எங்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தவும்."

    இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

    ஸ்வாகதா இடமாற்றத்திற்காக முயற்சித்து வருவதாகவும், ஆனால் பல அலுவலகங்களுக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார். 2021-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சுமார் 16,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் இவரும் ஒருவர், அவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மாநில அரசிடம் பணியிட மாற்றம் நிவாரணம் கோரி வருகின்றனர்.

    இதுகுறித்து ஐதிஜ்யா கூறுகையில்:-

    முதல்-மந்திரி தனது கோரிக்கையின் பேரில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாகக் கூறினார். மம்தா திதுன் எனது வேண்டுகோளை நிறைவேற்றினால் மீண்டும் அவருக்கு நன்றி தெரிவிக்க ஒரு கடிதம் எழுதுவேன் என்றார். 

    • வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.
    • ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

    மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.

    தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.

    தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல்துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    மதராஸி திரைப்படம் இதுவரை 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது.

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். திரைப்படம் இதுவரை 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வருகிறது.

    இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் படங்களை பற்றி அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

    SK25- இப்படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இது ஒரு கமெர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக உருவாக இருக்கிறது. படத்தின் இசையை சாய் அபயங்கர் மேற்கொள்கிறார்.

    SK26 - இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இது ஒரு டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. படத்தின் இசையை அனிருத் அல்லது யுவன் மேற்கொள்கின்றனர்.

    SK27- இப்படத்தை புஷ்கர்- காயத்ரி இயக்கலாம் அதற்கான பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டு இருக்கிறது.

    • பிரான்ஸ் பிரதமர் பேரூ அரசின் கடன்களை எதிர்கொள்ள சிக்கனமான நிதிக்கொள்கையை முன்மொழிந்தார்.
    • பிரதமரின் நிதிக் கொள்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்த நிலையில், அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

    அரசின் கடன்களை எதிர்கொள்ள அவர் முன்மொழிந்த சிக்கனமான நிதிக் கொள்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த சூழலில், தனக்கான ஆதரவை நிரூப்பிக்க பேரூ நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொண்டார். ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது.

    இதனால் கடந்த 12 மாதங்களில் 4வது பிரதமரை தேர்ந்தெடுக்கும் சூழல் அங்கு உருவாகியுள்ளது.

    முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரான்ஸ் பிரதமர் பார்னியர் தோல்வி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 

    • 234 தொகுதிகளிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும்.
    • தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்த இருக்கிறோம்.

    சென்னை:

    மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவில் புனரமைப்பு பணியை பார்வையிட்டபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

    * 210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார். 234 தொகுதிகளிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும்.

    * அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது.

    * தி.மு.க.வை வசைபாடிய அண்ணாமலையே தி.மு.க. வலுவாக இருக்கிறது என பேசியிருக்கிறார்.

    * தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் மாலையிலேயே தெரிந்து விடும்.

    புதுடெல்லி:

    நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்தேதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவருக்கும் இடையே போட்டி உறுதியானது.

    இதற்கிடையே இந்த தேர்தலில் எவ்வாறு வாக்கு அளிக்க வேண்டும்? என தேசிய ஜனநாயக கூட்டணி தரப்பிலும், 'இந்தியா' கூட்டணி சார்பிலும் தங்களது அணி எம்.பி.க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 'இந்தியா' கூட்டணி இதனை ஒரு மாதிரி தேர்தலாகவே நடத்திப் பார்த்தது.

    பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த வாக்களிப்பு ஒத்திகையில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களும், அந்தந்த கூட்டணி கட்சி எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் நேற்று டெல்லி வந்தனர். அவர்கள் தேர்தல் பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.க்கள், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.க்கள் ஆகியோர் தனித்தனியாக கலந்து ஆலோசித்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க தயார் ஆனார்கள்.

    இதற்கிடையே ஒடிசாவின் முன்னாள் ஆளுங்கட்சியான பிஜூ ஜனதா தளம் கட்சி, இந்த தேர்தலில் பங்களிக்கப்போவது இல்லை என தெரிவித்து உள்ளது. அந்த கட்சியின் எம்.பி.யான சஸ்மித் பத்ரா இதனை புவனேஸ்வரில் தெரிவித்தாலும், டெல்லியிலும் இதனை உறுதி செய்தார்.

    இந்த கட்சிக்கு மக்களவையில் எம்.பி.க்கள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் 7 பேர் இருக்கிறார்கள்.

    இதைப்போல பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியும் தேர்தலை புறக்கணிக்கிறது. அந்த கட்சியின் செயல் தலைவரான கே.டி.ராமராவ் இதனை அறிவித்தார். இந்த கட்சிக்கு மக்களவையில் உறுப்பினர்கள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் 4 உறுப்பினர்கள் உள்ளனர்.

    தேர்தலின் போக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை காட்டுகிறது என்றே சொல்லலாம். இருப்பினும் இரு அணிகளும் நேற்று வாக்களிப்பில் வெற்றிகரமாக பங்கேற்பது பற்றி பல்வேறு ஆலோசனைகளை நடத்தின.

    இந்த நிலையில், தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. மாலை 5 மணி வரை பாராளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற முடிவுகள் மாலையிலேயே தெரிந்து விடும்.

    வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார். 

    ×