என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- செத்துக் கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பறவைகள் இறந்த பகுதிகளில் முழுமையான கிருமிநாசினி தெளிக்க வேண்டும்
சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இறந்து போன காகங்களின் வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கால்நடைத் துறை தெரிவித்துள்ளது. செத்துக் கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே பறவைகள் இறந்த பகுதிகளில் முழுமையான கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்றும் இறந்த பறவைகளை கையால் தொட வேண்டாம் எனவும் கால்நடைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்க உள்ளவர்கள் மற்றும் அனைவரது மனதிலும் உள்ளது.
- 2026-ம் ஆண்டு எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார்.
கோவை:
தமிழக வெற்றிக்கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுவாக தமிழக மக்கள் இரண்டு இயக்கங்களே தமிழகத்தை ஆள வேண்டுமா? என்று சிந்தித்து வருகின்றனர். புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. மக்கள் புதிய தலைமையை முடிவு செய்து விட்டனர். அந்த நோக்கத்தோடு எங்களது தமிழக வெற்றிக்கழகம் வீறுநடை போட்டு வருகிறது.
தமிழக வெற்றிக்கழக தலைவரான விஜயை பற்றி மற்ற கட்சிகள் கருத்து சொல்வதற்கு காரணம், அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எங்கள் தலைவரை ஒவ்வொரு இயக்கங்களும் மாறி மாறி கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இளைஞர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் 3 லட்சம் பேர் தமிழகத்தில் தேர்தல் எப்போது நடக்க போகிறது என்பதற்காக பதிவு செய்து, காத்திருக்கும் வரலாறு இந்திய வரலாற்றில் இடம் பெறப்போகிறது.
புதிய தலைமை ஆளவேண்டும். அதுவும், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஆள வேண்டும் என்ற எண்ணம் புதிதாக வாக்களிக்க உள்ளவர்கள் மற்றும் அனைவரது மனதிலும் உள்ளது. எனவே 2026-ம் ஆண்டு எங்கள் தலைவர் விஜய் முதலமைச்சராக வருவார். 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறும்.
அ.தி.மு.க வுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால் தான் எங்கள் தலைவரை பற்றி அவர்கள் விமர்சித்து வருகின்றனர். வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்கள் தி.மு.க.வை தான் பேச வேண்டும். இதில் இருந்தே பி டீமாக யார் செயல்படுகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.
அவர் எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லட்டும். அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தோல்வி பயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்ட காரணத்தால் தான் இப்படி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக கொடுக்க வேண்டியது. ஆனால் தோல்வி பயம் வந்ததன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார் என்றார்.
- தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
- அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
புதுக்கோட்டை ஆதி திராவிடர் நலத்துறை சமூக நீதி விடுதிக்கு மாணவிகளின் உணவுக்காக வழங்கப்படும் நிதி கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு வழங்கப்படவில்லை என்றும், விடுதியில் அரிசி, எரிவாயு சிலிண்டர் ஆகியவை மட்டுமே இருப்பதால் அதைக் கொண்டு, கடந்த 2 மாதங்களாக வெறும் சோறு மட்டும் வடித்து தங்கள் சொந்த செலவில் ஊறுகாய் அல்லது சிப்ஸ் வாங்கி மாணவர்களுக்கு வழங்குவதாகவும் விடுதி பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புரதச்சத்து, காய்கறிகள் என சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி மாதத்தில் 4 நாள்கள் அசைவ உணவு வழங்கப்பட வேண்டும்.
ஆனால், தி.மு.க. ஆட்சியில் இவை அனைத்தும் ஏட்டளவில் தான் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமின்றி, அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் சீரழிந்து கொண்டு தான் இருக்கின்றன. அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள் என்று கூறியுள்ளார்.
- தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திற்கும் நாளை முதல் விருப்பமனு வழங்கப்படுகிறது.
- வருகிற 14-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு வழங்கப்படுகிறது.
சென்னை:
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சியின் தேர்தல் பணிகளை பல்வேறு வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார்.
234 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் நடை பெற்று வரும் தேர்தல் பணிகள் குறித்து பொதுச் செயலாளர் என்.ஆனந்துடன் ஆலோசனை நடத்தி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.
இதை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை முதல் விருப்ப மனு வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நம் வெற்றித் தலைவர் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந்தேதி (சனிக்கிழமை) வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.
நாளை நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாட்களில் காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம்.
விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திற்கும் நாளை முதல் விருப்பமனு வழங்கப்படுகிறது. புதுச்சேரியில் 23 தொகுதிகள் காரைக்காலில் 5 தொகுதிகள், மாகி-1, ஏனாம்-1 ஆகிய 30 சட்டமன்ற தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கும் நாளை முதல் விருப்ப மனு வழங்கப்படுகிறது.
நாளை மதியம் 12 மணிக்கு மேல் மாலை 6 மணி வரையும் மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. வருகிற 14-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான விருப்ப மனு வழங்கப்படுகிறது.
- சம்பவம் நடந்த போது எனது மகனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர்.
- இரவு நீண்ட நேரமாகியும் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 28) என்பவரை கடந்த ஜூன் மாதம் நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அஜித் குமாரை அழைத்துச் சென்று தாக்கி கொன்றதாக மானாமதுரை தனிப்படை போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐ. தரப்பில் போலீஸ் காவலில் தான் அஜித்குமார் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.எஸ்.பி. விசாரிக்க சொன்னதால் கடுமையாக தாக்கி போலீசார் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 10 போலீஸ்காரர்களுக்கு தொடர்பு உள்ளது. நகை திருட்டு எதுவும் நடக்கவில்லை. பொய் புகாரில் அஜித் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி, ஒன்றுமே இல்லாத காரணத்திற்காக ஒரு அப்பாவியை தாக்கி கொலை செய்துள்ளனர். மனம் பதைபதைக்கிறது என்று தெரிவித்ததோடு பொய் புகார் அளித்த நிகிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் திருப்புவனத்தில் அஜித்குமாரின் தாயார் மாலதி இன்று பேட்டி அளித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனது மகனை போலீசார் அடித்து கொன்று உள்ளனர். இந்த வழக்கில் எனது மகன் திருடன் இல்லை என்று நீதிபதி கூறியிருப்பது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. இருப்பினும் எனது மகன் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
சம்பவம் நடந்த போது எனது மகனை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். ஆனால் அது குறித்து எனக்கு எதுவும் தகவல் தெரிவிக்கவில்லை. வீட்டுக்கு வந்த போலீசார் பீரோவை திறந்து அதில் இருந்தவைகளை சோதனை செய்தனர்.
அப்போது மற்றொரு மகனையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். இரவு நீண்ட நேரமாகியும் 2 பேரும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் எனக்கும் பயம் ஏற்பட்டது. போலீஸ் நிலையத்திற்கு சென்ற போதும் அங்கு என்னை போலீசார் விரட்டி விட்டனர். உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் கேட்ட போதும் மகன்களை போலீசார் விசாரித்து விட்டுவிடுவார்கள் என்று கூறினார்கள். அதை நம்பி இருந்த நிலையில் எனது மகனை போலீசார் அடித்து கொன்று உள்ளனர். எனது மகன் நகையை எடுத்தது யார் பார்த்தார்கள்? பொய் புகார் அளித்த நிகிதாவை கைது செய்ய வேண்டும்.
அஜித் குமாரை விசாரிக்க சொல்லி 5 போலீஸ்காரர்களிடம் கூறிய உயர் அதிகாரி யார்? என்பது எங்களுக்கு தெரியவேண்டும்.
கஞ்சிக்கு இல்லாவிட்டாலும் வைராக்கியத்துடன் மகன்களை வளர்த்துள்ளேன். ஆனால் நகை திருட்டு பொய் புகாரை கூறி எனது மகனை சாகடித்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் எதற்காக எனது மகனை அடித்தார்கள்? யார் அடிக்க சொன்னது? எனது மகனை கொலை செய்து சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்கள் உட்பட யாரும் வெளியே வரக்கூடாது.
சி.பி.ஐ. விசாரணை மேல் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒரு தாய் என்ற உணர்வுடன் நீதிபதி நேற்று இந்த வழக்கில் சில கருத்துக்களை முன் வைத்துள்ளதை உணர்ந்துள்ளேன் என்றார்.
- தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
- கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதிவரை நடைபெற்றது. அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த மாதம் தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெறும் புதிய திட்டங்கள், அதற்கான செலவுகள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களுக்கான தொடர் செலவுகள், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
- தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை.
- மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூரில் இன்று அ.தி.மு.க. முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் வீடு, வீடாக சென்று விடியா ஆட்சிக்கு, உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்கிற பிரசார விளக்கக் கூட்டம் நடத்தி, தி.மு.க. ஆட்சியின் அவலங்களை தாய்மார்களிடம் எடுத்து கூறி வருகிறோம்.
கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஆகி உள்ளது. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கே பயமாக இருப்பதாக தாய்மார்கள் தெரிவிக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க., நிறைவேற்றவில்லை. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது.
எங்கள் கூட்டணி, அ.தி.மு.க., தலைமையில் ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விரைவில் வெளியேறும். பின்னர் படிப்படியாக மற்ற கட்சிகளும் வெளியேறும். த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஒன்றும் தெரியாது என்றார்.
- காதலை கைவிட்டு தன்னை போலீஸ் நிலையம் வரை புகார் கொடுத்து அசிங்கப்படுத்தியதால் சம்பவத்தன்று ஜான்பாண்டியன் தனது காதலி வீட்டிற்கு சென்றார்.
- இளம்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அருகில் உள்ள குல்லப்புரம் மேட்டுக்காலனியை சேர்ந்த சங்கிலி மகன் ஜான்பாண்டியன் (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணை காதலித்து வந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இளம்பெண் காதலை கைவிட்டார்.
அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டதால் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் ஜான்பாண்டியன் தரப்பினரை வரவழைத்து இனிமேல் அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
காதலை கைவிட்டு தன்னை போலீஸ் நிலையம் வரை புகார் கொடுத்து அசிங்கப்படுத்தியதால் சம்பவத்தன்று ஜான்பாண்டியன் தனது காதலி வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். இளம்பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஜான்பாண்டியன் தப்பி ஓடினார்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகப்பெருமாள், ஏட்டு சந்திரசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜான்பாண்டியனை கைது செய்தனர்.
- யுனெஸ்கோவை குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டியது மோடி அரசு
- யுனெஸ்காகோவிற்கான நிதியை நிறுத்திய டிரம்ப் அரசுக்கும் பாராட்டு தெரிவிப்பார்கள்
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா - இந்தியா உறவை விமர்சித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தீபாவளிப் பண்டிகையை உலக பாரம்பரியங்களின் பட்டியலில் இனைத்ததற்காக யுனெஸ்கோவை குடியரசுத் தலைவர் உரையில் பாராட்டியது மோடி அரசு.
அதே யுனெஸ்காகோவிற்கான நிதியை நிறுத்திய டிரம்ப் அரசுக்கானப் பாராட்டை இன்றைய பட்ஜெட் விவாத்தில் ஆளுங்கட்சியிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
தென்னமரத்துக்கு ஒரு குத்து! ஏணிச் சின்னத்துக்கு ஒரு குத்து! இதுதான் பாஜகவின் வெளியுறவுக் கொள்கை" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- வைகை அணைக்கு செல்லும் தண்ணீர் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
- கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கிராமங்களில் நீரின் தேவை இருமடங்காக உயரும்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல வைகை ஆற்றை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து வைகை அணைக்கு செல்லும் தண்ணீர் மூலம் 5 மாவட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். தற்போது வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால், வைகை ஆற்றில் நீர்வரத்து மிகக் குறைந்து காணப்படுகிறது. விரைவில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், ஆறு முழுமையாக வறண்டு போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கிராமங்களில் நீரின் தேவை இருமடங்காக உயரும். அதே சமயம் வெயில் தாக்கம் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உறைகிணறுகளில் நீர்மட்டம் வேகமாக குறையும் என்பதால் கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.
எனவே அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் கிராமங்களில் சேதம் அடைந்து குடிநீர் வீணாகி வரும் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தேவையான முன்னேற்பாடு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 45.60 அடியாக உள்ளது. அணைக்க 277 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை சேடப்பட்டி, திருமங்கலம் குடிநீருக்காக 69 கன அடி மற்றும் பாசனத்துக்காக 300 கன அடி என மொத்தம் 369 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1468 மி.கன அடியாக உள்ளது.
- திமுக கூட்டத்தில் எம்.பி. ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
- கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தபோது நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
திருவள்ளூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் எம்.பி. ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தபோது நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
கூட்டத்தில் பேசிய எம்.பி. ஜெகத்ரட்சகன், "கலைஞர் உடல்நிலை சரியில்லாதபோது அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது இவ்வளவு செல்வாக்கு படைத்த நீங்கள் இப்படி சிறிய வீட்டில் இருக்கிறீர்களே. டெல்லியில் எனக்கு பெரிய வீடு இருக்கிறது. என் வீட்டுக்கு வாங்க என பிரதமர் மோடி அன்று கலைஞரை அழைத்தார். ஆனால் "எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்காங்க.. அதனால் உங்கள் வீடு பத்தாது என கலைஞர் சிரித்துக்கொண்டே கூறிவிட்டார்" என்று தெரிவித்தார்.
- ஓ.பன்னீர் செல்வம் திருச்செந்தூர் வருகையை அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
- 2-வது நாளாக இன்று காலை திருச்செந்தூர் கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர்:
முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வந்தார்.
அங்கு அவர் சுவாமி மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை தட்சணாமூர்த்தி சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார்.
தரிசனம் முடித்து வெளியே வந்த அவர், கோவில் வாசலில் உள்ள டீக்கடையில் டீ அருந்தினார். பின்னர் விருந்தினர் மாளிகை செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் சுவாமி தரிசனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உலக மக்கள் நலனுக்காக வேண்டி கொண்டேன் என்றார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறினீர்களே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தை முடிய இன்னும் 10 நாட்கள் உள்ளன என்றார். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.
ஓ.பன்னீர் செல்வம் திருச்செந்தூர் வருகையை அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கோவில் வளாகத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 2-வது நாளாக இன்று காலை திருச்செந்தூர் கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.






