என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08.30 மணி அளவில் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
21-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று மற்றும் நாளை அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு-மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21-ந்தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22 மற்றும் 23-ந்தேதிகளில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், ஏனைய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கரூர் துயர சம்பவத்தின் போது மற்ற காங்கிரஸ் தலைவர்களை போலவே விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார்.
- தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது. குடியுரிமை திருத்தம்.
கரூர்:
கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக வலைதளங்கள் காங்கிரஸ்- தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க உள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுகின்றன.
ஆனால் காங்கிரசுக்கு விஜய் அறிமுகம் இல்லாதவர் அல்ல. காங்கிரஸில் சேருவது குறித்து விவாதிக்க 2010 ல் அவர் ராகுல் காந்தியை சந்தித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை.
கரூர் துயர சம்பவத்தின் போது மற்ற காங்கிரஸ் தலைவர்களை போலவே விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார்.
சமூக ஊடகங்களில் நாம் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது. நாங்கள் ஏற்கனவே திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி விஷயங்களை பற்றி விவாதிக்க இன்னும் நேரம் இருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது. குடியுரிமை திருத்தம்.
பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யாமல் வாக்காளர் பட்டியல் திருத்தம் மட்டும் செய்கின்றனர். இதற்கு அஸ்ஸாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறுகின்றனர்.
இதுபோல எஸ்.ஐ.ஆர் வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பில் இல்லாத தமிழகம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர் செயல்படுத்துவதன் நோக்கம் என்ன? தேர்தல் ஆணையம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒரு நிலைப்பாடும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் வேறு ஒரு நிலைப்பாடும் என இரட்டை நிலைபாடுகளுடன் செயல்படுகிறது. பா.ஜ.க.வின் ஒரு அணி போல தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றார்.
- ஆயிரம் கோடிக்கு மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லை.
- முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாறி செல்வதற்கு கமிஷன், ஊழல்தான் காரணம்.
சென்னை:
பா.ம.க. சார்பில் தி.மு.க. அரசின் தொழில் முதலீடுகள் பொய்யானவை என்ற ஆவண புத்தகம் தயாரிக்கப்பட்டது. அதனை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி சென்னையில் இன்று வெளியிட்டார்.
பின்னர் அதில் உள்ள புள்ளி விவரங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக பா.ம.க. பல்வேறு ஆவணங்களை வெளியிட்டு வருகிறது. தொழில், வேளாண்மை, கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வரைவு நிதி நிலை அறிக்கை என இதுவரை 57 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று வெளியிடப்பட்ட ஆவணம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் முதலீடுகள் எவ்வளவு வந்துள்ளது என்பதாகும்.
இதில் எந்த அளவுக்கு பொய் சொல்லி இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகள் குறித்து தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.
ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்திருப்பதாகவும், 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் மீண்டும் மீண்டும் முதலமைச்சரும், தொழில் துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் சொல்லி வருகிறார்கள். இது பொய் என்று ஆவணங்கள் மூலம் நிரூபித்து உள்ளோம்.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முதலீடு 78 சதவீதம். 2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அதில் 80 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். இது மிகப்பெரிய பொய். ஆயிரம் கோடிக்கு மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லை.
2021-22-ம் ஆண்டில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்க ஒப்பந்தங்களாகும். 2022-23-ம் ஆண்டில் முதல் கட்டமாக ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.
2023-24-ம் ஆண்டில் ரூ.61,791 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் ஹூண்டாய் நிறுவனம் மட்டும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்வதாக கூறி இருந்தனர். ஆனால் ரூ.500 கோடி மட்டுமே அந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க பயணம் செய்தார். இதன் மூலம் 66 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும் ரூ.34,014 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் 47 ஆயிரத்து 650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் விளம்பரப்படுத்தினார்கள். ஆனால் ஒரு பைசா முதலீடு கூட வரவில்லை.
இதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். வெறும் 3 சதவீத வெளிநாட்டு முதலீடு மட்டுமே வந்துள்ளது. தமிழ் நாட்டில் கங்கை கொண்டானில் தொழில் தொடங்க கையெழுத்திட்ட நிறுவனம் ஒருசில மாதங்களில் ஆந்திராவுக்கு சென்றது ஏன்?
அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தமிழகத்தை சேர்ந்தவர். அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யாமல் ஆந்திராவுக்கு சென்றது ஏன்? முதலீடுகள் ஆந்திரா, தெலுங்கானாவுக்கு மாறி செல்வதற்கு கமிஷன், ஊழல்தான் காரணம்.
இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலம் எது என்ற பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் 17 மாநிலங்கள் இடம் பெற்றன. அதில் தமிழகம் இடம் பெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பா.ம.க. பொருளாளர் சத்யபாமா, வக்கீல் பாலு, அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரித்து போராட்டம் நடத்தப்பட்டது.
- அவிநாசி சாலை மசக்காளிபாளையம் சந்திப்பு பகுதியில் முற்போக்கு இயக்கத்தினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக இன்று கோவை வருகிறார். கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உருவபொம்மையை எரித்துப்போராட்டம் நடத்தப்பட்டது.
பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழ்நாட்டில் பீகார் மக்கள் தாக்கப்படுவதாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரித்து போராட்டம் நடத்தப்பட்டது.
கோவை அவிநாசி சாலை மசக்காளிபாளையம் சந்திப்பு பகுதியில் முற்போக்கு இயக்கத்தினர் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர். உருவபொம்மையை எரித்தபடி சாலையில் ஓடியபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து கருப்பு கொடி போராட்டம் நடத்திய முற்போக்கு அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
- பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?
- பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா?
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு?
பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம்.
மு.க.ஸ்டாலின் "உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?" என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?
பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா?
ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.
- அவிநாசி போலீசார் அவர்களை கைது செய்து ரோட்டரி கிளப் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
அவினாசி:
தென்னிந்திய இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவைக்கு வருகை தர உள்ளார்.
இந்தநிலையில் பீகார் தேர்தலின்போது, பீகார் மக்கள் தமிழகத்தில் துன்புறுத்தப்படுவதாக பொய் பிரசாரம் செய்ததாகவும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கருப்புக்கொடி காட்ட இணை பொதுச்செயலாளர் விடுதலைச் செல்வம் தலைமையில் சிலர் தயாராகி வந்தனர்.
இதையறிந்த அவிநாசி போலீசார் அவர்களை கைது செய்து ரோட்டரி கிளப் மண்டபத்தில் சிறை வைத்தனர்.
- கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கூறினார்.
- நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மதுரை:
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பரமசிவம், மதுரை ஐகோர்ட் டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே 1978-ம் ஆண்டிலேயே அர சாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என கூறுகிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக தெருக்கள் சாலைகளில் சாதி பெயர்கள் இருப்பதால் பிரச்சனை ஏற்பட்டதாக இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தற்போதைய ஆளுங்கட்சி மக்களிடையே பகைமையை ஊக்குவிப்பது, பிளவுபடுத்துவதன் நோக்கமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதன் மூலம் ஆளுங்கட்சி தலைவர்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை வைக்க விரும்புகிறார்கள். இவ்வாறு தெருக்கள், சாலைகளின் பெயர்களை மாற்றுவதால் அப்பகுதியில் வசிப்பவர்கள் இருப்பிட சான்றுகளில் முகவரியை பயன்படுத்துவதில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும்.
இந்த அரசாணையை அமல்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் எந்த கருத்துகளையும் கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குடியிருப்பு பகுதி, சாலைகள், தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதற்கு வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஏற்கனவே இது தொடர்பான விசாரணை நடந்தபோது, இந்த வழக்கில் இறுதி முடிவு எடுக்கும் வரை பழைய பெயர்களை நீக்குவது, புதிய பெயர்களை அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது எனவும், இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 10-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதன்மூலம் தெருக்களுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்குவற்கு ஏற்கனவே ஐகோர்ட்டு விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது.
- திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவி ஷாலினி அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற மனித மிருகத்தால் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவி ஷாலினியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராமேஸ்வரத்தை அடுத்த சேராங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஷாலினியை அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்பவர் தம்மை காதலிக்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஆனால், அவரைக் காதலிக்க ஷாலினி மறுத்து விட்டதால் ஆத்திரமடைந்த முனியராஜ், இன்று காலை மாணவி ஷாலினி பள்ளிக்கு செல்லும் வழியில் மறித்து கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார்.
பள்ளி செல்லும் மாணவிகளும், அலுவலகம் செல்லும் இளம்பெண்களும் தொடர்ந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதாலும், காதல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதாலும் பள்ளி மற்றும் அலுவலக நேரங்களில் பேருந்து நிறுத்தங்களிலும், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை செவிமடுக்க திமுக அரசு தவறியதன் விளைவாகத் தான் ஓர் அப்பாவி மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட எவருக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் நிலவி வருகிறது. ஆளுங்கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும் தான் இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். திமுக ஆட்சியில் எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான் இத்தகைய கொலைகளுக்கு காரணம் ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 217 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்; அவர்களில் 7 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 60.66 விழுக்காடும், போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 52.30 விழுக்காடும் அதிகரித்துள்ளன. இது தான் திமுக ஆட்சியின் சாதனை ஆகும்.
இராமேஸ்வரத்தில் மாணவி ஷாலினியை கொடூரமாக படுகொலை செய்த முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். மாணவி ஷாலினியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். திமுக ஆட்சியின் எஞ்சியுள்ள சில வாரங்களிலாவது பெண்களும், குழந்தைகளும் பாதுகாப்பாக நடமாடும் சூழலை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மதுரை:
உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்து செல்கின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் தென் மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு அதிகளவில் வருகை தருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், முறுக்கு, லட்டு, அதிரசம் ஆகியவற்றின் விலை கடந்த 2011-ம் வருடத்தில் இருந்து ரூ.10லிருந்து ரூ.15 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக பிரசாத பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் சார்பாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செய்யப்பட்ட இந்த விலையேற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 175 கிராம் சர்க்கரை பொங்கல், 150 கிராம் புளியோதரை, 140 கிராம் வடை, 50 கிராம் அப்பம், 40 கிராம் தேன்குழல் முறுக்கு, 60 கிராம் லட்டு இவை யாவும் தற்போது 15 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 15 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த இந்த பிரசாதங்கள் தற்போது 50 சதவீதம் விலை ஏற்றம் கண்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த விலையேற்றம் உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 8 கிராம் குங்குமம் 3 ரூபாய்க்கும், 40 கிராம் குங்குமம் 15 ரூபாய்க்கும், 100 கிராம் குங்குமம் 35 ரூபாய்க்கும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவில் வளாகத்திற்குள் பொற்றாமரை குளம் பகுதியில் 2 பிரசாத கடைகளும், அம்மன் சன்னதி, முக்குறுணி விநாயகர் ஆலயம், கொடிமரம் அருகே என மொத்தம் 6 பிரசாத ஸ்டால்கள் உள்ளன. கோவிலுக்கு வெளியே கிழக்கு கோபுரம் அருகில் ஒரு பிரசாத ஸ்டால் என 7 பிரசாத ஸ்டால்கள் கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பக்தர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய இந்த பிரசாதங்களின் விலை ஏற்றம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சள் பை 21 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் அது மட்டும் ரூபாய் 15 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 22-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.
- தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும்.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை யொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக இன்று காலை முதல் நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த 2 நாட்களும் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 22-ந் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.
வருகிற 22, 23-ந் தேதிகளில் கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வருகிற 23-ந் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதற்கு அடுத்த நாள் 24-ந் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கே.கே.நகரில் சேட் என்கிற தங்க நகை வியாபாரி இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது.
- தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
சென்னையில் 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, சைதாப்பேட்டை, கே.கே.நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கே.கே.நகரில் சேட் என்கிற தங்க நகை வியாபாரி இல்லத்தில் சோதனை நடைபெறுகிறது. கோடம்பாக்கத்தில் சுகாலி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
- வடகடல் மற்றும் தென்கடல் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
- ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
ராமேசுவரத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. தங்கச்சிமடம் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த நிலையில் நேற்றும் விட்டு விட்டு மழை பெய்தது. மேலும் கடல் சீற்றம், சூறாவளி காற்று காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மணிக்கு 45 முதல் 65 கி.மீட்டர் வரை கடல் காற்று வீசக்கூடும் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல இன்று தடை விதிக்கப்படுகிறது. மேலும் வடகடல் மற்றும் தென்கடல் நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தங்கு தளத்தில் உள்ள விசைப்படகுகளை இடைவெளி விட்டு பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்த வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியது.
அதன்படி ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களுக்கு இன்று கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இதனால் 500-க்கும் மேற்பட் விசைப்படகுகள், நாட்டு படகுகள், துறைமுகம், மீன்பிடி இறங்கு தளங்களில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. மீன்பிடி தடையால் 15 ஆயிரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.






