என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை மக்கள் கடும் அவதி: இரவில் வாட்டி எடுக்கும் பனி- பகலில் கொளுத்தும் வெயில்
- இப்படி இரவு நேரத்தில் கடுமையான பனி வாட்டி எடுக்கும் நிலையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது.
- மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலங்களாக இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கடுமையான வெயில் வாட்டியெடுக்கும். தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக இரவு நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலையில் தொடங்கும் பனிப்பொழிவு காலை வரையில் நீடிக்கிறது. இதன் காரணமாக வீடுகளுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள், கார்கள் ஆகியவையும் மழையில் நனைந் தது போல் ஆகிவிடுகின்றன.
காலை நேரங்களில் வெளியில் செல்பவர்கள் காதுகளை மறைத்துக் கொண்டும் ஸ்வெட்டர் அணிந்து கொண்டும் செல்லும் நிலை உள்ளது.
இப்படி இரவு நேரத்தில் கடுமையான பனி வாட்டி எடுக்கும் நிலையில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்த தொடங்கி இருக்கிறது. மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடை காலங்களாக இருந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, பனிக்காலம் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வந்து வெயில் காலம் தொடங்கும். இதற்கு அறிகுறியாகவே வெயில் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது என கூறி உள்ளனர். இருப்பினும் தற்போதைய சூழலில் வெயில் பாதிப்பை விட பனி பாதிப்பே அதிக அளவில் உள்ளது.
இரவு நேரத்தில் அதிக அளவில் கொட்டும் பனி காரணமாக வயதானவர்கள் குழந்தைகள் ஆகியோர் சளித் தொல்லையாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சுவாசப் பிரச்சனையால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு பனியின் தாக்கம் கூடுதல் பாதிப்பையே ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக மாலை நேரங்களில் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிறிய கிளினிக்குகளில் பொது மக்கள் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சை எடுப்பதற்கும் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள்.
இந்தப் பனிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வந்து கடுமையான வெயில் வாட்டி எடுக்க உள்ள சூழலில் தேர்தல் களமும் அப்போது சூடு பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.






