என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • சென்னை ஐகோர்ட், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது.
    • ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி அவருடைய வீட்டிற்கு அருகே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ரவுடி நாகேந்திரன் உடல்நல பிரச்சனையால் காலமானார். மேலும் இருவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதால் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதால் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 24-ந்தேதி மாற்றி உத்தரவிட்டது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர் சபரீஷ் சுப்ரமணியன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

    அந்த மனு மீது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி அஞ்சரியா ஆகியோர் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வாதம் முன்வைத்தது . இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றிய ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது.

    மேலும், ஒவ்வொரு வழக்கிலும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிடக் கோருவதை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 

    • விவசாயத்திற்கு உதவி புரிய அரசாங்கம் அனைத்து வழிகளையும் திறந்துவிட்டுள்ளது.
    • இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது.

    கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    பின்னர் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

    இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் வேளாண் துறயைில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

    விவசாயத்திற்கு உதவி புரிய அரசாங்கம் அனைத்து வழிகளையும் திறந்துவிட்டுள்ளது.

    இந்தியா இயற்கை விவசாயத்தில் உலக அளவிலான மையப் புள்ளியாக மாறி வருகிறது.

    இயற்கை விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயிரி உரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால் விவசாயிகள் ஆதாயங்கள் கிடைத்துள்ளன.

    தமிழ்நாட்டில் 35,000 ஹெக்டேர் நிலத்தில் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் முருகப்பொருமானுக்கு தேனும் தினை மாவையும் பிரசாதமாக படைக்கிறோம். கேரளா, கர்நாடகாவிலும் சிறுதானயங்கள் தான் இறைவனுக்கு படைக்கப்படுகின்றன.

    இயற்கை வேளாண்மை நமது பாரதத்தின் சொந்த சுதேசி கருத்து, அது நமது பாரம்பரியத்திற்கு கொண்டு செல்கிறது.

    நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு ரூ.18,000 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கு தற்போது வரை ரூ.4 லட்சம் கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளால் விவசாய நிலத்தின் வளம் குறைகிறது. இயற்கை வேளாண்மை பாதையில் நாம் முன்னேற வேண்டும் என்பதே அத்தியாவசிய தேவை.

    இயற்கை வேளாண்மை நோக்கி நகர மத்திய அரசு விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது.

    நமது அரசாங்கம் இயற்கை வேளாண்மை மேற்கொள்ள நிறைய ஊக்கம் அளித்து வருகிறது.

    இயற்கை வேளாண்மையில் விவசாயிகள் சிறுகுறு தானியங்களை பயிரிட வேண்டும். ஒற்றைப் பயிர் மட்டும் சார்ந்து இருக்காமல், பல வகைப் பயிர்களை நமது நிலத்தில் நாம் பயிரிட வேண்டும். இயற்கை வேளாண்மை, ரசாயனம் இல்லாத வேளாண்மைக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    நமது சூப்பர் உணவு உலகளாவிய சந்தைகளை சென்றுசேர வேண்டும்.

    தென்னிந்தியா விவசாயத்தின் வாழும் பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு முனிராஜ் என்பர் காதலிக்குமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
    • போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமேஸ்வரத்தில் காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியும் மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் கத்தியால் மாணவியை குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    சம்பவம் குறித்து அறிந்து வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளி மாணவியைப் பட்டியலின இளைஞர் கொன்றதாக இணையத்தில் பரவிய செய்தி வதந்தி என்று தமிழ்நாடு சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இராமேஸ்வரத்தில் இன்று (19.11.2025 பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் முனிராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. கைதான நபரும் கொல்லப்பட்ட மாணவியும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது. வெறுப்புப் பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றம்!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொறியியல் படித்தவர்கள், இஸ்ரோவில் வேலையை விட்டுவிட்டு இயற்கை வேளாண் தொழிலுக்கு வந்துள்ளனர்.
    • மாநாட்டிற்கு வராமல் போயிருந்தால் இயற்கை விவசாயம் குறித்து நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாமல் போயிருக்கும்.

    கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    பின்னர் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

    தென்னிந்திய இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டிற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    புட்டபர்த்திக்கு சென்றதால் கோவை விவசாயிகள் மாநாட்டிற்கு வருகைதர ஒரு மணி நேரம் தாமதமானது.

    தமிழை கற்றுக்கொண்டிருக்கலாமே என்று நான் அடிக்கடி நினைத்தது உண்டு. சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

    விவசாயிகள் துண்டை சுழற்றியபோது பீகார் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று என் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

    கோவையின் எம்பியாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று குடியரசு துணை தலைவராக நம்மை வழிநடத்துகிறார்.

    இயற்கை விவசாயம் என்பது விசேஷமான ஒன்று, எனது இதயத்திற்கு நெருக்கமானது. பொறியியல் படித்தவர்கள், இஸ்ரோவில் வேலையை விட்டுவிட்டு இயற்கை வேளாண் தொழிலுக்கு வந்துள்ளனர்.

    கோவை மாநாட்டிற்கு வராமல் போயிருந்தால் இயற்கை விவசாயம் குறித்து நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாமல் போயிருக்கும்.

    இயற்கை விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழக விவசாயிகள் பேசியதை புரிந்து கொள்ளமுடியவில்லை என்றாலும் உணர முடிந்தது. எதிர்காலத்தில் வேளாண்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளதை நாம் காணவிருக்கிறேன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பி.எம். கிசான் திட்டத்தின் 21வது தவணையாக ரூ.18,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
    • 2019ம் ஆண்டு முதல் 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 தரப்படுகிறது.

    கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    முதலில் மாநாட்டு அரங்கில் விவசாயிகள் சார்பில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் இடம் பெற்ற 17 கண்காட்சி அரங்குகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    இதைதொடர்ந்து, கோவை விழாவில் நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதியை விடுவித்தார்.

    பி.எம். கிசான் திட்டத்தின் 21வது தவணையாக ரூ.18,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார். விவசாய நிலம் வைத்திருப்போருக்கு பிஎம் கிசான் திட்டத்தில் 2019ம் ஆண்டு முதல் 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 தரப்படுகிறது.

    3 தவணைகளாக நிலம் வைத்திருக்கும் ஒவ்வொரு விவசாயி வங்கிக்கணக்கிலும் ஆண்டுக்கு ரூ.6000 வரவு வைக்கப்படுகிறது. மேலும், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் விவசாயிகளுக்கு பிரதமர் மாடி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    • அரசியல் கட்சி தலைவர்களும் அதி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
    • தேசத்தை பாதுகாக்கும் பா.ஜ.க.வோடு தேச பக்தரான அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை வர்த்தக மையத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடந்த மாநாட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவரான எடப்பாடி பழனிசாமி தான் முடிவுகளை எடுப்பார். பா.ஜ.க. மற்றும் தோழமை கட்சிகளின் ஆதரவுடன் சட்டமன்ற தேர்தலில் 220-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும். சமூக, சமுதாய அரசியல் அமைப்புகளும் அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளித்து வருகின்றன.

    தமிழக வெற்றிக்கழகம் விரும்பினால் அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவார். தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற நினைக்கும் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்வார். தி.மு.க. வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் அதி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    இரட்டை வாக்களர்கள், போலி வாக்காளர்களை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். மூலம் செய்கிறது. இந்த பணியை எடப்பாடி பழனிசாமி வரவேற்கிறார். பீகார் தேர்தல் முடிவு தான் தமிழகத்திலும் வரும். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார்.

    பா.ஜ.க. தேசத்தை பாதுகாப்பதாக உள்ளது. தேச பக்தராக அ.தி.மு.க. உள்ளது. தேசத்தை பாதுகாக்கும் பா.ஜ.க.வோடு தேச பக்தரான அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்தில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
    • கோவையில் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் இன்று இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்தநிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த ஊழியர்கள் இன்று காலை இ-மெயில் தகவல்களை சரிபார்த்தனர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்தில் குண்டுவெடிப்பு நடத்த உள்ளோம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ஊழியர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் மற்றும் விமான நிலையத்தில் மோப்பநாய் கொண்டு சல்லடை போட்டு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன்பிறகே போலீசாரும், ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். இருந்தாலும் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    • கோவை கொடிசியா மைதானத்திற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    கோவை:

    கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் இயற்கை வேளாண் மாநாடு இன்று தொடங்கியது. முதல் நாள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    இதற்காக அவர் இன்று மதியம் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பு அளித்தனர். விழா நடைபெறும் கோவை கொடிசியா மைதானத்திற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மாநாட்டு அரங்குக்குள் சென்றார்.

    முதலில் மாநாட்டு அரங்கில் விவசாயிகள் சார்பில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் இடம் பெற்ற 17 கண்காட்சி அரங்குகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டு இருந்த உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு, அதன் உற்பத்தி குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

    • இத்தனை ஆயிரம் காவல்துறையினர் இருந்தும் கூட நமது வீட்டுப் பிள்ளைகளை நாம் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
    • கைதுகள் தான் அதிகரிக்கிறதே தவிர திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் 'பெண்களுக்கெதிரான தி.மு.க. ஆட்சி விரைவில் ஒழிய வேண்டும்!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12-ஆம் வகுப்பு மாணவியைப் பள்ளி செல்லும் வழியில் மறித்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த மன வேதனையுமளிக்கிறது. கொலையான மாணவியின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த மீளாத் துயரைக் கடந்து வர இறைவன் அவர்களுக்குத் துணைநிற்க வேண்டுமெனப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொரு நாள் விடியும் பொழுதும் இன்று எந்தப் பெண்ணுக்கு எங்கே வன்கொடுமை நடந்துள்ளதோ என்ற பதற்றத்திலேயே செய்தித்தாள்களைப் பிரிக்க வேண்டியிருக்கிறது. இத்தனை ஆயிரம் காவல்துறையினர் இருந்தும் கூட நமது வீட்டுப் பிள்ளைகளை நாம் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. கைதுகள் தான் அதிகரிக்கிறதே தவிர திமுக ஆட்சியில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை.

    கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பெண்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூறி பாஜக பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது, கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தன் வாரிசுகளை மட்டுமே உயர்ந்ததாக நினைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து பலிகொடுக்கத் தயாராகிவிட்டார். இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி இனியும் தமிழகத்தில் தொடரக்கூடாது! திமுகவின் இந்த காட்டாட்சிக்கு நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி கூடிய விரைவில் கடிவாளமிடும்! என்று கூறியுள்ளார். 

    • ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார்.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பு அளித்தனர்.

    கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். அங்கு அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் வரவேற்பு அளித்தனர்.

    பிரதமர் மோடியின் கார் மீது மலர்களைத்தூவி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விழா நடைபெறும் கோவை கொடிசியா மைதானத்திற்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து பிரதமர் மோடி, இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் 'பி.எம். கிசான்' திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை வழங்குகிறார்.


    • தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் பணி மிகப்பெரிய ஜனநாயக மோசடியாகும்.
    • எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.

    கோவை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவை மெட்ரோ ரெயில் திட்டம் என்பது முன்பே அறிவிக்கப்பட்டது. தமிழக அரசும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அறிக்கை தயாரித்து அனுப்பியது. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தமிழக அரசு பதில் அளித்தது.

    இந்த நிலையில் திடீரென நேற்று மாலை கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து இருக்கிறது.

    20 லட்சத்திற்கு குறைவாக இருப்பதால் அனுமதி கொடுக்க இயலாது என கூறி ரத்து செய்திருக்கிறது. ஆனால் மக்கள் தொகை குறைவாக உள்ள ஆக்ரா, போபால், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி அளித்து அங்கு பணிகள் தொடங்கி விட்டன.

    ஆனால் மக்கள் தொகையை காரணம் காட்டி, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்திற்கு எதிரானது. மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்து, மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம், வஞ்சம் செய்துள்ளது.

    கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்தும், மெட்ரோ ரெயில் திட்டம் மீண்டும் செயல்படுத்த கோரியும் வருகிற 24-ந் தேதி(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் பணி மிகப்பெரிய ஜனநாயக மோசடியாகும். தேர்தல் ஆணையம் ஒருசாராகவே செயல்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பிரதமர் மோடி தமிழகத்தில் வந்து திருக்குறளையும், பாரதியார் பாட்டையும் மனப்பாடம் செய்து படித்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. அதனை தமிழக மக்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்றார். 

    • கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார்.
    • அலுவலக அறைகள், கழிவறைகள், வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பல்லடம் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது. இது 7 தளங்களை கொண்டது. கலெக்டர், வருவாய் அலுவலர் உள்பட அதிகாரிகளின் அலுவல் அறைகள் மற்றும் பல்வேறு துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் மாவட்ட கலெக்டரின் அதிகாரபூர்வ மின்னஞ்சலுக்கு, அறிமுகம் இல்லாத முகவரியில் இருந்து இன்று காலை ஒரு மெயில் வந்துள்ளது. அதில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து கலெக்டர் மணிஷ் நாரணவரே, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து மாநகர நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் வெடிகுண்டை கண்டறியும் போலீசார் குழு மோப்பநாய், புல்லட் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்தின் பல்வேறு தளங்களிலும் ஆய்வு செய்தனர்.

    கலெக்டர் அலுவலகத்தின் 7 தளங்களிலும் உள்ள அலுவலக அறைகள், கழிவறைகள் மற்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. மேலும் மின்னஞ்சல் அனுப்பிய முகவரி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வெடிகுண்டு செயல் இழக்கும் நிபுணர்கள் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்த சம்பவம் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ×