என் மலர்tooltip icon

    இந்தியா

    • இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.
    • மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றி TRAI DND செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும்

    கடந்த ஒரு வருடத்தில் மோசடியில்(Spam) ஈடுபட்ட 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் மோசடி செய்திகளை அனுப்பிய ஒரு லட்சம் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.

    குடிமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றி TRAI DND செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் என்று TRAI வலியுறுத்தியுள்ளது. இந்தப் பயன்பாடு மூலம் புகார் அளிக்கப்படும்போது, TRAI மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த எண்ணைக் கண்டறிந்து, சரிபார்த்து, நிரந்தரமாகத் துண்டிக்க முடியும் என்று TRAI தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் தொலைத்தொடர்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் மக்களின் புகார்கள் மிகவும் முக்கியமானவை என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    • மகன்கள் ஒரு வருடம் முன் வீட்டை விட்டு விரட்டியதால் ஜான்பூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
    • இறுதிச் சடங்குகள் செய்யாமலேயே, உடலை அடக்கம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தில், வீட்டில் திருமணம் நடப்பதால் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தாயின் உடலை 4 நாட்கள் ப்ரீசரில் வைத்திருக்க மகன் அறிவுறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த மளிகைக் கடை வியாபாரியான பூவல் குப்தா என்பவரின் மனைவி ஷோபா தேவி, நீண்டகாலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    மகன்கள் ஒரு வருடம் முன் வீட்டை விட்டு விரட்டியதால் ஜான்பூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் அவர் வசித்து வந்த நிலையில், கடந்த நவம்பர் 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையடுத்து, முதியோர் இல்ல ஊழியர்கள் ஷோபா தேவியின் மகன்களுக்குத் தகவல் தெரிவித்தனர். முதலில் இளைய மகனிடம் பேசியபோது, அவர் தனது அண்ணனிடம் கலந்தாலோசித்த பிறகு பதிலளிப்பதாகக் கூறியுள்ளார்.

    பின்னர் அவர் முதியோர் இல்லத்தை திரும்ப அழைத்து, "இப்போது வீட்டில் திருமணம் நடக்கிறது. இந்த நேரத்தில் உடலைக் கொண்டு வந்தால் துரதிர்ஷ்டவசமாக இருக்கும். திருமணத்திற்குப் பிறகு நான்கு நாட்கள் கழித்து வந்து உடலை எடுத்துக்கொள்கிறேன். அதுவரை உடலை டீப் ஃப்ரீசரில் வைத்திருங்கள்" என்று அண்ணன் சொல்ல சொன்னதாக கூறியுள்ளார்.

    முதியோர் இல்லத்தின் ஊழியர்கள் நேரடியாக மூத்த மகனிடம் பேசியபோதும், அப்போதும் அதையே கூறியுள்ளார்.

    இதையடுத்து, ஊழியர்கள் மற்ற உறவினர்களைத் தொடர்பு கொண்ட நிலையில் அவர்கள் ஷோபா தேவியின் மகன்களை சம்மதிக்க வைத்து உடலை பெற்று வந்தனர்.

    ஆனால், மூத்த மகன் தாய்க்கு இறுதிச் சடங்குகள் செய்யாமலேயே, உடலை அடக்கம் செய்துள்ளார். திருமணம் முடிந்த பிறகு உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் தகனம் செய்துள்ளனர்.

    • ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தில் ( SIR ) அதிகப்படியான பணிச்சுமை மற்றும் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி , நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ( BLOக்கள் ) கொல்கத்தாவின் தெருக்களில் இன்று பேரணி நடத்தினர் .

    BLOக்கள் , மத்திய கொல்கத்தாவின் கல்லூரித் தெருவிலிருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர். BLO அதிகார ரக்ஷா குழுவின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடைபெற்றது.

    இந்த மாத தொடக்கத்தில் SIR தொடங்கப்பட்டதிலிருந்து மேற்குவங்கத்தில் மூன்று பெண் BLOக்கள் இறந்துள்ளனர். அவர்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாடு, கேரளா மற்றும் பாஜக ஆளும் ராஜஸ்தான் மற்றும் குஜராத்திலும் BLOக்கள் தற்கொலை மற்றும் திடீர் மரணங்கள் பதிவாகி உள்ளது.

    கடந்த வாரம், ஜெய்ப்பூரில் 45 வயதான முகேஷ் ஜாங்கிட் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். SIR தொடங்கியதிலிருந்து அவர் தொடர்ந்து ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

    ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஹரி ஓம் பர்வா (34), கடந்த வாரம் மயங்கி விழுந்து இறந்தார். SIR நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பேசிய BLO அதிகார ரக்ஷா குழுவின் அதிகாரி, "குறுகிய காலத்தில் பணியை முடிக்குமாறு எங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபோன்ற பணிகள் பொதுவாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும்," என்று கூறினார்.

    தேர்தல் ஆணையம் காலக்கெடுவை நீட்டிக்காவிட்டால் அல்லது BLOக்கள் எழுப்பிய கவலைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், தொடர்ச்சியான போராட்டத்தை தொடங்குவோம் என்று BLO குழு எச்சரித்துள்ளது.

    இதற்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, BLOக்கள் மனிததன்மையற்று அதிக வேலை வாங்கப்படுவதாக கூறி SIR செயல்முறையை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த செயல்முறையால் இதுவரை நாடு முழுவதும் 16 BLOக்கள் இறந்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மாரடைப்பு, மன அழுத்தம், தற்கொலைகள். SIR ஒரு சீர்திருத்தம் அல்ல. இது ஒரு திணிக்கப்பட்ட சர்வாதிகாரம்" என்று தெரிவித்துள்ளார்.  

    • எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு செய்யும். அதை நான் ஏற்றுக் கொள்வேன்.
    • டி.கே. சிவக்குமாரும் ஏற்றுக்கொள்வார்- சித்தராமையா.

    கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20-ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே டி.கே. சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்று முகாமிட்டுள்ளனர். நேற்று 6 எம்.எல்.ஏ.-க்கள் டெல்லி சென்றுள்ளனர். இவர்கள் மேலிட தலைவர்களை சந்தித்து டி.கே. சிவக்குமாரை முதலமைச்சராக்க வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது.

    முதலமைச்சர் மாற்றம் பேச்சு வலுத்துவரும் வரும் நிலையில் சித்தராமையாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறும்போது "நாங்கள் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம். அவர்கள் நான் தொடர்ந்து முதலமைச்சராக தொடர வேண்டும் என்றால், நான் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பேன். இறுதியாக எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு செய்யும். அதை நான் ஏற்றுக் கொள்வேன். டி.கே. சிவக்குமாரும் ஏற்றுக்கொள்வார்" என்றார்.

    இந்த நிலையில் சித்தராமையாவின் ஸ்டேட்மென்ட் எங்களுக்கு வேத வாக்கு போன்றது என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-

    சித்தராமையா ஒருமுறை சொன்னால் அது எங்களுக்கு வேத வாக்கு. சித்தராமையா காங்கிரஸ் கட்சியின் சொத்தது. அரசில் அவரது வழிகாட்டுதலின்படி எல்லோரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம்.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    • ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டி ஷில்பராமமில் பெண்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய கடைகள்.
    • தனது தொகுதியை இன்னும் 16 மாதங்களுக்குள் கல்வி மையமாக மாற்ற திட்டம்.

    தெலுங்கானாவில் உள்ள பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் சர்வதேச சந்தைகளை எட்டும் வகையில் அமேசான் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    அக்சய பாத்திர பவுண்டேசன் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேவந்த் ரெட்டி "தனது தொகுதியை இன்னும் 16 மாதங்களுக்குள் கல்வி மையமாக மாற்ற மாநில அரச திட்டமிட்டுள்ளது.

    ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டி ஷில்பராமமில் பெண்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் தயாரிக்கும் பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்ய அமேசானுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

    குழந்தைகளின் கல்வி பெற்றோரின் வாழ்க்கையை மாற்றுவதால், கோடங்கல் தொகுதியில் உள்ள 312 அரசுப் பள்ளிகளில் 28,000 மாணவர்களுக்கு அக்ஷய பாத்திர அறக்கட்டளை மூலம் காலை உணவு வழங்கப்படுகிறது" என்றார்.

    • ஒப்பந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு.
    • தனியார் குடியிருப்பு வளாகங்கள் உள்ளே வாக்குச் சாவடிகள் அமைக்க பரிந்துரை.

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி மேற்கு வங்கத்திலும் நடைபெற்று வருகிறது. மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்முறையை கடுமையாக கண்டித்து வருகிறது.

    இருந்தபோதிலும், நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதால் தேர்தல் ஆணையம் பணியை தொடர்ந்துள்ளது.

    இந்த நிலையில் இரண்டு விசயங்கள் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு மம்தா பானர்ஜி கடிதம் ஒன்று எழுதியுள்ளார். "மாநில தேர்தல் அதிகாரி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு SIR தொடர்பான பணிகள் அல்லது தேர்தல் தொடர்பான பணிகளுக்கு ஒப்பந்த டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் பங்க்ளா சகாயத கேந்திரா (BSK) ஸ்டாஃப்களை ஈடுபடுத்தக் கூடாது என கடிதம் எழுதியுள்ளார்.

    அதே நேரத்தில், தலைமை நிர்வாக அதிகாரியின் அலுவலகம் ஒரு வருட காலத்திற்கு 1,000 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் மற்றும் 50 மென்பொருள் உருவாக்குநர்களை பணியமர்த்துவதற்கான முன்மொழிவு கோரிக்கையை (RfP) வெளியிட்டுள்ளது. மேலும், தனியார் குடியிருப்பு வளாகங்கள் உள்ளே வாக்குச் சாவடிகள் அமைக்க பரிந்துரை செய்துள்ளது.

    இது தொடர்பாக தலையிட வேண்டும் என மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

    • சித்தராமையா முதல்வராக பதவி ஏற்று இரண்டரை ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது.
    • அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு.

    கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20-ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி.கே. சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் கார்கேவை ஏற்கனவே சந்தித்து பேசினர்.

    இந்த நிலையில் சித்தராமையா உடன் கார்கே நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்தித்து பேசியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் இது 2ஆவது சந்திப்பாகும். இதனால் முதலமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதற்கிடையே டி.கே. சிவக்குமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் டெல்லி சென்று முகாமிட்டுள்ளனர். நேற்று 6 எம்.எல்.ஏ.-க்கள் டெல்லி சென்றுள்ளனர். இவர்கள் மேலிட தலைவர்களை சந்தித்து டி.கே. சிவக்குமாரை முதலமைச்சராக்க வலியுறுத்துவார்கள் எனத் தெரிகிறது.

    இதற்கிடையே, சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகியோர் மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ, அதை ஏற்போம் எனத் தெரிவித்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மாற்றம் பேச்சு வலுத்துவரும் வரும் நிலையில் சித்தராமையாவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம். அவர்கள் நான் தொடர்ந்து முதலமைச்சராக தொடர வேண்டும் என்றால், நான் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பேன். இறுதியாக எதுவாக இருந்தாலும் மேலிடம் முடிவு செய்யும். அதை நான் ஏற்றுக் கொள்வேன். டி.கே. சிவக்குமாரும் ஏற்றுக்கொள்வார்.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.

    மேலும், டி.கே. சிவக்குமார் முதலமைச்சர் ஆவாரா? என்ற கேள்விக்கு "மேலிடம் முடிவு செய்யும் என்று நான் சொன்ன பிறகு, நீங்கள் மீண்டும் அதையே கேட்கிறீர்கள்" எனப் பதில் அளித்தார்.

    ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு, சித்தராமையா டெல்லி சென்று அவரை சந்திப்பார் எனத் தகவல் வெளியாகி வருகிறது.

    முதலமைச்சர் மாற்றம் குறித்து மேலிடம் (உயர்மட்ட குழு) முடிவு செய்யும் என கார்கே தெரிவித்திருந்தார்.

    • மருத்துவர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டிருக்கலாம் அல்லது தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டிருக்கலாம் என்று போலீசார் தகவல்.
    • அமெரிக்கா செல்லும் கனவு தடைப்பட்ட நிலையில் மருத்துவர் உயிர்மாய்ப்பு.

    ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோகிணி என்ற 38 வயது பெண் மருத்துவர், அமெரிக்க விசா மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஹைதராபாத்தில் உள்ள பத்மாராவ் நகரில் ரோகிணி தனியாக வசித்து வந்தநிலையில், குடும்பத்தினர் அவருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே ரோகிணி வீட்டு பணிப்பெண்ணும் நீண்டநேரம் கதவை தட்டியுள்ளார். ரோகிணி கதவைத் திறக்காததால், அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது இறந்தநிலையில் கிடந்துள்ளார்.

    இதுதொடர்பாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிர் மாய்ப்பு குறிப்பு ஒன்றையும் ரோகிணியின் அறையிலிருந்து எடுத்துள்ளனர். மருத்துவப் பணியில் கவனம் செலுத்தி வந்த ரோகிணி, அமெரிக்காவில் தனது எதிர்காலத்தை திட்டமிட்டிருந்துள்ளார். ஆனால் விசா மறுக்கப்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

    • தர்மேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள இல்லத்தில் காலமானார்.
    • பாலிவுட்டில் தர்மேந்திராவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.

    பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா (89) உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள இல்லத்தில் காலமானார்.

    இந்நிலையில், இந்திய சினிமாவின் சகாப்தம் முடிவுற்றது என்று தர்மேந்திராவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில்," நடிகர் தர்மேந்திராவின் மறைவு இந்திய சினிமாவின் சகாப்தம் முடிவுற்றுள்ளதை குறிக்கிறது. பாலிவுட்டில் தர்மேந்திராவின் ஒவ்வொரு கதாபாத்திரமும் பலதரப்பட்ட மக்களை கவர்ந்துள்ளது.

    தர்மேந்திராவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்றார்.

    • திருமணம் தடைப்பட்டது இருவரையும் உணர்ச்சி ரீதியாக பாதித்துள்ளது
    • ஸ்மிருதியின் தந்தை உடல்நலம் தேறிய உடன் திருமணம் நடைபெறும்

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவிற்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. இச்சூழலில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இவர்களின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்மிருதியின் காதலர் பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மன அழுத்தத்தால் பலாஷ் முச்சலுக்கு உடல்நிலை மோசமானதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் முச்சலுக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டதாகவும், இசிஜி உட்பட பிற சோதனைகள் செய்யப்பட்டதாகவும், தற்போது குணமடைந்து வீடு திரும்பியதாகவும், ஆனால் மன அழுத்தத்தில் உள்ளதாகவும் அவரது தாயார் தெரிவித்தார். திருமணம் தடைப்பட்டது இருவரையும் உணர்ச்சி ரீதியாக பாதித்தாகவும் அவர் தெரிவித்தார். 

    கடந்த வாரம் மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் வைத்து, ஸ்மிருதி மந்தனாவிடம் தன் காதலை வெளிப்படுத்தினார் பலாஷ் முச்சல். அவரின் காதலை ஏற்ற ஸ்மிருதி அவர்களின் திருமணம் தொடர்பாக வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து திருமணம் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    • இந்தியாவுடனான உறவில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம்
    • இந்தியாவுடனான வர்த்தக உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

    இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என கனடா குற்றம் சாட்டியது.

    தனது தூதரை வெளியேற்றிய கனடாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கனடா உயர் தூதரக அதிகாரியை நாட்டை விட்டே வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    அண்மையில் அமெரிக்க - கனடா உறவில் ஏற்பட்ட விரிசல் குறித்து பேசிய கனடா பிரதமர் மார்க் கார்னி, "இந்தியாவுடனான உறவில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், இந்தியாவுடனான வர்த்தக உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது இல்லை. ஆனால் எங்களது வெளியுறவு துறை மந்திரி உள்ளிட்ட பிற மந்திரிகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளுடன் சிறந்த உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கனடா பிரதமர் மார்க் கார்னி 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா வரவுள்ளதாக கனடா பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த சந்திப்பில் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

    • ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார்.
    • அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார்.

    ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்தவர் ரோகிணி (வயது 38). இவர் தற்போது ஐதராபாத்தில் உள்ள பத்மாராவ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

    ரோகிணி ரஷ்யாவில் மருத்துவ படிப்பை முடித்தார். அமெரிக்காவில் வசிக்கவும், மேற்படிப்பை தொடரவும், பயிற்சி பெறவும் ஜே-1 விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்ய அமெரிக்காவிற்கு சென்ற ரோகிணி விசா கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல மாதங்கள் காத்திருந்தார்.

    அவரது விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் ரோகிணியின் அமெரிக்காவில் பயிற்சி பெற வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனது. விரக்தியுடன் காணப்பட்ட ரோகிணி மீண்டும் ஐதராபாத் திரும்பினார்.

    நேற்று வீட்டின் அறையில் தனியாக இருந்த ரோகிணி அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் ரோகிணியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் ரோகிணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு ரோகிணியின் பெற்றோர் கதறி துடித்தனார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×