என் மலர்tooltip icon

    இந்தியா

    • இன்று உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
    • பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேர் மற்றும் உடனடி முன்பதிவு அடிப்படையில் 20 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் உடனடி முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் இருந்ததால் கடந்த வாரத்தில் சன்னிதானம், பம்பை மட்டுமின்றி மலைப்பாதையிலும் கூட்ட நெரிசல் எற்பட்டது. நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவரும் பலியானார்.

    இதையடுத்து பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    மேலும் பம்பை உள்ளிட்ட 3 இடங்களில் செயல்பட்ட உடனடி முன்பதிவு மையங்கள் மூடப்பட்டன. தேவசம்போர்டின் இந்த அதிரடி நடவடிக்கையால் உடனடி முன்பதிவு மூலமாக சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசலும் இல்லை.

    உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) எண்ணிக்கையை பக்தர்களின் வருகைக்கு தகுந்தாற்போல் அதிகரித்துக்கொள்ள தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் பக்தர்கள் வருகைக்கு தகுற்தாற்போல் "ஸ்பாட் புக்கிங்" மூலமாக அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சபரிமலையில் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக கேரள மாநில டி.ஜி.பி. ரவுடா சந்திரசேகர் சபரிமலைக்கு வந்தார். அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது மட்டுமின்றி, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அவரது தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உடனடி முன்பதிவு மூலமாக அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை, பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் 7ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இன்று உடனடி முன்பதிவில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. அது 5 ஆயிரமாகவே இருந்தது. ஆனால் ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் இன்று அதிகளவில் சபரிமலைக்கு வந்தனர். இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பதினெட்டாம் படி ஏறி சாமி தரசனம் செய்வதற்காக நின்ற பக்தர்களின் வரிசை சரங்குத்தி வரை காணப்பட்டது. அங்கிருந்து பதினெட்டாம் படியை அடைய பக்தர்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • அயோத்தி ராமர் கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கொடி ஏற்றுதல் விழா நடக்கிறது.
    • அயோத்தி சென்ற பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. தற்போது கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 161 அடி உயர் கோவில் கோபுரத்தின் மீது 30 அடி உயர் கம்பத்தில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி கொடி ஏற்றி வைக்கிறார். இதற்காக பிரதமர் மோடி அயோத்தி சென்றுள்ளார். அயோத்தி சென்ற அவர் சாலை மார்க்கமாக ராமர் கோவில் செல்கிறார். அவர் செல்லும் வழியில் இரு பக்கத்திலும் மக்கள் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் இன்று (நவ.,25) பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்.

    கொடி ஏற்றுதல் விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக விழா கோலம் பூண்டுள்ளது.

    ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

    • எத்தியோப்பியால் 12 ஆயிரம் வருடத்திற்குப் பிறகு எரிமலை வெடித்து சிதறியது.
    • பல கி.மீ. உயரத்திற்கு சாம்பல் புகை சூழ்ந்ததால் விமான போக்குவரத்து பாதிப்பு.

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு எரிமலை 12,000 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக வெடித்துள்ளது. தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ள ஹைலே குப்பி எரிமலை ஞாயிற்றுக்கிழமை குமுறிக் கொண்டிருந்த நிலையில், நேற்று வெடித்துள்ளது.

    இதனால் எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாம்பல் நிறைந்த கரும்புகை வெளியேறி வருகிறது. எரிமலையிலிருந்து சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது டெல்லி வான்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது.

    இந்த கரும்புகை டெல்லியில் இருந்து சீனாவை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும், இன்று இரவு 7.30 மணிக்குள் முழுமையாக டெல்லியில் இருந்து விலகிச் செல்லும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    எரிமலையின் சாம்பல் புகை செங்கடல், அரேபிய தீபகற்பம் ஆகியவற்றை தாண்டி இந்திய துணைக் கண்டத்தை அடைந்துள்ளது.

    ஏற்கனவே காற்று மாசு காரணமாக டெல்லி பாதிப்படைந்து வந்த நிலையில், தற்போது இந்த மேகமும் சேர்ந்த மோசமாக்கியுள்ளது. ஆனால், கடல் மட்டத்தில் இருந்து வெகு தொலைவில் சூழ்ந்துள்ளதால், மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.

    குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மாநிலத்திலும் இந்த புகை சூழ்ந்து காணப்பட்டது.

    முன்னெச்சரிக்கை காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டன.

    • மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
    • மணமகள் ஆவேசமடைந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

    பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பைதாபூர் பகுதியை சேர்ந்த மணமகனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து திருமணத்திற்காக மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக மேற்கு சாம்பரானுக்கு சென்றனர்.

    தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்ற நிலையில் மணமகன் வெகுநேரமாக கண்ணாடி அணிந்திருந்ததை மணமகள் கவனித்துள்ளார். அவருக்கு மணமகன் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும் உடனடியாக அதை வெளிக்காட்டவில்லை.

    ஆனால் திருமண சடங்குகள் நடைபெற்ற போது மணமகன் கண்ணாடியை கழற்றிய போது தான் அவருக்கு கண் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இதை மறைத்து அவர் திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது. இதையறிந்த மணமகள் ஆவேசமடைந்து திருமணத்தை நிறுத்தி விட்டு மண்டபத்தில் இருந்து வெளியேறினார்.

    இதனால் திருமண மண்டபத்தில் குழப்பம் நிலவியது. இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியது.

    • இந்த வருடம் இறுதியில் இந்தியா வர திட்டமிட்டிருந்தார்.
    • டெல்லி குண்டு வெடிப்பால் பாதுகாப்பு கவலை தெரிவித்து பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்பு கவலை காரணமாக பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நேதன்யாகு கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார். பாதுகாப்பு மதிப்பீடு நிலுவையில் உள்ள நிலையில் அடுத்த வருடம் தொடக்கத்தில் வரும் வகையில் புதிய தேதியை கோருவார் எனத் தெரிகிறது.

    நேதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இது 3-வது முறையாகும். கடந்த செப்டம்பர் 9-ந்தேதி இந்தியா வருவதாக இருந்தது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் 17-ந்தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதால் இந்திய பயணத்தை ரத்து செய்தார். அதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதமும் தேர்தல் காரணமாக இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தார்.

    கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதம்ர மோடி ஆவார்.

    • உறவினர், நண்பர்கள் புடைசூழ ஆரவாரமாக திருமணங்கள் நடைபெறுகின்றன.
    • திருமணத்துக்கு முந்தைய சடங்கில் மணமக்கள் ராட்சத பலூனை கையில் ஏந்திக் கொண்டு நடந்து சென்றனர்.

    இந்தியாவை பொறுத்தவரை திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கருதப்படுகிறது. எனவே இதனை ஒவ்வொருவரும் திருவிழா போல கொண்டாடுகின்றனர். இதனால் உறவினர், நண்பர்கள் புடைசூழ ஆரவாரமாக திருமணங்கள் நடைபெறுகின்றன. அதிலும் இளைய தலைமுறையினர் தற்போது விதவிதமாக திருமண கொண்டாட்டத்தை நடத்த விரும்புகின்றனர்.

    அந்தவகையில், திருமணத்துக்கு முந்தைய சடங்கில் மணமக்கள் ராட்சத பலூனை கையில் ஏந்திக் கொண்டு நடந்து சென்றனர். பின்னர் விளையாட்டு துப்பாக்கியால் நண்பர்கள் அதனை சுட்டனர். அப்போது அந்த பலூன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்தது. இதில் மணமக்கள் காயம் அடைந்தனர். இதனால் மகிழ்ச்சி நிறைந்த திருமண கொண்டாட்டம் சோகத்துடன் முடிந்தது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வழக்குகளை அவசரமாக பட்டியலிட குறிப்பிடுவதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
    • அசாதாரண சூழ்நிலைகளில் வாய்மொழி கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும்- தலைமை நீதிபதி.

    இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நேற்று பதவியேற்றார். சூர்யா காந்த் அடுத்த 15 மாதங்கள் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். அவர் பிப்ரவரி 9, 2027 அன்று 65 வயதை எட்டும்போது பணியில் இருந்து ஓய்வு பெறுவார்.

    பதவி ஏற்ற முதல் நாளிலேயே 17 வழக்குகளை விசாரித்துள்ளார். அத்துடன், வழக்குகளை வாய் மொழியாக தெரிவிக்கக்கூடாது. வழக்குகளை அவசரமாக பட்டியலிட குறிப்பிடுவதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். மரண தண்டனை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில் வாய்மொழி கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

    நேற்று ஜனாதிபதி மாளிகையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டு, முறையாக தலைமை நீதிபதியாக பொறுப்பெற்றுக் கொண்டார். அதன்பின் மதியம் வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். இரண்டு மணி நேரத்தில் 17 வழக்குகளை விசாரித்தார்.

    மதியம் உச்சநீதிமன்றம் வருகை தந்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் பாரம்பரிய நீதிமன்ற அறை எண் ஒன்றில் நீதிபதிகள் ஜோய்மல்யா பாக்சி மற்றும் அதுல் எஸ் சந்துர்கர் ஆகியோரைக் கொண்ட மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு தலைமை தாங்கினார்.

    • காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது.
    • நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து காங்கிரஸ் போய்விட்டது.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 243 இடங்களில் 202 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

    இதைப்போன்று கர்நாடகாவிலும் பாஜக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்க காத்திருக்கிறார்கள் என பாஜக தலைவர் ஆர். அசோகா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஆர். அசோகா கூறியதாவது:-

    காங்கிரஸ் இல்லாத கர்நாடகா, மாநிலத்திற்கு நல்லது. இந்த மோசமான காங்கிரஸ் போக வேண்டும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து அது போய்விட்டது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அதிகாரம் வழங்கியதுபோன்று, கர்நாடகாவிலும் அதிகாரம் வழங்க மக்கள் தயாராகிவிட்டனர். கர்நாடக மாநில மக்கள் பட்டனை அழுத்த தயாரிவிட்டனர். தேர்தலுக்காக காத்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அசோகா தெரிவித்தார்.

    கர்நாடகாவில் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதலமைச்சராக இருந்துள்ள நிலையில், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராக வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

    • பிரிவு 370 ரத்து, பேச்சு சுதந்திரம் மற்றும் குடியுரிமை உரிமைகள் குறித்த தீர்ப்புகளில் அவர் பங்கு வகித்தார்.
    • பாதுகாப்பு என்ற போர்வையில் எதையும் செய்ய அரசாங்கத்திற்கு சுதந்திர அனுமதி கிடைக்காது.

    இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நேற்று பதவியேற்றார். சூர்யா காந்த் அடுத்த 15 மாதங்கள் தலைமை நீதிபதி பதவியில் இருப்பார். அவர் பிப்ரவரி 9, 2027 அன்று 65 வயதை எட்டும்போது பணியில் இருந்து ஓய்வு பெறுவார்.

    அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிப்ரவரி 10, 1962 அன்று பிறந்த சூர்யகாந்த், ஒரு சிறிய நகரத்தில் ஒரு வழக்கறிஞராக தொடங்கி நாட்டின் நீதித்துறையின் மிக உயர்ந்த பதவியை எட்டியுள்ளார்.

    உச்சநீதிமன்ற நீதிபதியாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளில் ஒரு பகுதியாக சூர்யகாந்த் இருந்துள்ளார்.

    உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் பணியாற்றிய காலத்தில், பிரிவு 370 ரத்து, பேச்சு சுதந்திரம் மற்றும் குடியுரிமை உரிமைகள் குறித்த தீர்ப்புகளில் அவர் பங்கு வகித்தார். காலனிய கால தேசத்துரோகச் சட்டத்தை நிறுத்தி வைத்த அமர்வில் அவர் ஒரு பகுதியாக இருந்தார்.

    உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் உட்பட வழக்கறிஞர் சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட பெருமையும் நீதிபதி சூர்யகாந்துக்கு உண்டு.

    1967 ஆம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக தீர்ப்பை ரத்து செய்த ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி சூர்யகாந்த் ஒரு பகுதியாக இருந்தார். இந்த உத்தரவு பல்கலைக்கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்தை மறுபரிசீலனை செய்ய வழி வகுத்தது.

    நாட்டின் அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உளவு பார்க்கப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கை விசாரித்த அமர்வில் நீதிபதி சூர்யகாந்தும் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் சட்டவிரோத கண்காணிப்பு குற்றச்சாட்டுகளை விசாரிக்க சைபர் நிபுணர்கள் குழுவை அமைத்தார்.

    அந்த வழக்கில், "பாதுகாப்பு என்ற போர்வையில் எதையும் செய்ய அரசாங்கத்திற்கு சுதந்திர அனுமதி கிடைக்காது" என்று அவர் அங்கம் வகித்த அமர்வு தெரிவித்த கூற்று பிரபலமானது.

    2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு முடிவை உறுதி செய்த அமர்வில் காந்த் இருந்தார் .

    2020 ஆம் ஆண்டில், அவரது அமர்வு காலவரையற்ற இணைய இடைநிறுத்தம் அனுமதிக்கப்படாது என்றும் இணைய அணுகல் பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதி என்றும் தீர்ப்பளித்தது.

    2023 ஆம் ஆண்டு ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்த தீர்ப்பில் வழங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்தார்.

    டிசம்பர் 2023 இல், 370வது பிரிவை ரத்து செய்து ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கை யூனியன் பிரதேசங்களாக உருவாக்கியதை உறுதி செய்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் காந்த் ஒரு பகுதியாக இருந்தார்.

    முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் (OROP) திட்டத்தை உறுதி செய்த தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்தார்.

    2024 நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் முழு தேர்வையும் ரத்து செய்ய மறுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்த உத்தரவிட்டார்.

    கடைசியாக பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிடுமாறு நீதிபதி சூர்யகாந்த் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முன் நவம்பர் 22 நிகழ்வில் பேசிய சூர்யகாந்த், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 90,000 வழக்குகளை குறைப்பதே தலைமை நீதிபதியாக இருக்கும் காலத்தில் தனக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த விபத்து தங்கள் வணிகத்தையோ அல்லது எதிர்கால விநியோகங்களையோ பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை
    • நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.

    துபாயில் நடந்த விமான கண்காட்சியின் போது தேஜஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது ஒரு அரிய சம்பவம் என்று போர் விமான உற்பத்தியாளரான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தெரிவித்துள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நடந்த விமான கண்காட்சியின் போது, இந்திய தேஜாஸ் போர் விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்திய விமானப்படை விமானியான விங் கமாண்டர் நமன்ஷ் சாயல் இந்த விபத்தில் இறந்தார்.

    எதிர்பாராத சூழ்நிலைகளால் விமானம் விபத்துக்குள்ளானதாக நிலையில் இந்த விபத்து தங்கள் வணிகத்தையோ அல்லது எதிர்கால விநியோகங்களையோ பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று HAL தெரிவித்துள்ளது. மேலும் விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளது.

    HAL தயாரித்த தேஜஸ் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து திங்களன்று நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. 

    • 11 அமைச்சர்களில் ஒன்பது பேர் மீது கலவரம், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய வழக்குகள் உள்ளன.
    • 24 அமைச்சர்களில் 21 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

    பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது.

    கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் 10வது முறையாக பதவியேற்றார்.

    பாஜகவில் இருந்து 14 பேர், ஜேடியு விலிருந்து இருந்து 8 பேர், லோக் சக்தி (ராம்விலாஸ்) கட்சியில் இருந்து 2 பேர், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சாவில் இருந்து தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வர்களாக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா பொறுப்பெற்றனர்

    இந்நிலையில் பீகாரில் பொறுப்பேற்ற 24 அமைச்சர்களில் 11 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கை வெளியிட்டுள்ளது.

    24 அமைச்சர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததன் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    24 அமைச்சர்களில் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் 11 அமைச்சர்களில் ஒன்பது பேர் மீது கலவரம், அரசு அதிகாரிகள் மீதான தாக்குதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் மற்றும் தேர்தல் முறைகேடுகள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

    இதில் பாஜகவைச் சேர்ந்த ஆறு அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ஜேடியுவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும், லோக் சக்தியின் 2 அமைச்சர்களும், இந்துஸ்தானி அவாமியின் ஒரு அமைச்சரும் குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

    அதேபோல் 24 அமைச்சர்களில் 21 பேர் ரூ.1 கோடிக்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.  

    • இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.
    • மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றி TRAI DND செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும்

    கடந்த ஒரு வருடத்தில் மோசடியில்(Spam) ஈடுபட்ட 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் மோசடி செய்திகளை அனுப்பிய ஒரு லட்சம் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.

    குடிமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றி TRAI DND செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் என்று TRAI வலியுறுத்தியுள்ளது. இந்தப் பயன்பாடு மூலம் புகார் அளிக்கப்படும்போது, TRAI மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த எண்ணைக் கண்டறிந்து, சரிபார்த்து, நிரந்தரமாகத் துண்டிக்க முடியும் என்று TRAI தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் தொலைத்தொடர்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் மக்களின் புகார்கள் மிகவும் முக்கியமானவை என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    ×