என் மலர்
இந்தியா
- SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு, இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் சுமார் 65,000 முதல் 70,000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன.
நீட் முதுகலை தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கு தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கை விசாரித்தது. அப்போது தேர்வே எழுதாதவர்கள் கூட இந்த கட்-ஆஃப் முறையால் சிறந்த நிலையில் இருக்கும் சூழல் உருவாவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து பூஜ்ஜியம் மற்றும் மைனஸ் 40 (-40) போன்ற மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களையும் மருத்துவ மேற்படிப்பிற்குத் தகுதியானவர்களாக அறிவிப்பது நோயாளி பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தரத்தை பாதிக்கும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் காலியாக உள்ள 18,000-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக கட்-ஆஃப் குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் பொதுப்பிரிவு மற்றும் EWS (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்) மாணவர்களுக்கான தகுதித் தேர்ச்சி சதவீதம் 50-லிருந்து 7-ஆகவும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 45-லிருந்து 5-ஆகவும், SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு. இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதில் எதிர்மறை மதிப்பெண் முறை உள்ளதால், அவர்களுக்கான தகுதி மதிப்பெண் 800-க்கு -40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்வை எழுதாதவர்கள் கூட இதைவிட சிறந்த நிலையில் இருப்பார்கள் என்று குறிப்பிட்டு, -40 மதிப்பெண் தகுதியை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. மறுபுறம் இந்த விவகாரம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், தற்போதைய நீட் பிஜி 2025-26 கவுன்சிலிங் செயல்முறைக்கு உச்சநீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை.
- இன்னும் பல பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் உள்ளது
- இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகிறது.
உத்தரப் பிரதேசத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கான காலக்கெடுவை தேர்தல் ஆணையம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. அதன்படி மார்.6ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். அதே நேரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
லக்னோவில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது உத்தரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.
உத்தரப் பிரதேசத்தில் எஸ்ஐஆர் பணிகள் அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வாக்காளர் கணக்கெடுப்பு நவம்பர் 4 முதல் ஜனவரி 6 வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான கால அவகாசம் ஜனவரி 6 முதல் பிப்ரவரி 6 வரை வழங்கப்பட்டது.
இதுவரை பெயர்களை நீக்குவதற்காக படிவம் 7-இன் மூலம் 82,684 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேசமயம், பெயர்களைச் சேர்ப்பதற்காக படிவம் 6-ஐப் பயன்படுத்தி சுமார் 37.8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் 6A-இன் மூலம் விண்ணப்பிக்கலாம்; இதுவரை 1,076 புலம்பெயர்ந்த வாக்காளர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ரின்வா தெரிவித்துள்ளார்.
"சுமார் 1.40 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வரைவுப் பட்டியலில் இருந்தபோதிலும், அவை வரைபடமாக்கப்படவில்லை (not mapped). அதேசமயம், 2.22 கோடி வாக்காளர்கள் வரைபடமாக்கல் பணியை முடித்திருந்தாலும், அவற்றில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது போன்ற அனைத்து வழக்குகளிலும் தற்போது நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஒட்டுமொத்தமாக, 3.26 கோடி வாக்காளர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட வேண்டியுள்ளது. இதுவரை 2.37 கோடி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் 86.27 லட்சம் நோட்டீஸ்கள் ஏற்கனவே உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட 30 லட்சம் வழக்குகளில் விசாரணை நிறைவடைந்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 6-லிருந்து மார்ச் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அதுவரை பெயர் சேர்த்தல், நீக்கல் அல்லது விவரங்களில் திருத்தம் செய்வதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தச் சிறப்பு திருத்தப் பணியின் கீழான இறுதி வாக்காளர் பட்டியல் ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியிடப்படும்.
வாக்காளர்களுக்கு உதவும் வகையில், அனைத்து வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் இருப்பார்கள்." என தெரிவித்தார்.
மேலும் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவிற்கு முன்னரும் அனைத்து ஆட்சேபனைகளும் முறையாக ஆய்வு செய்யப்படும். இன்னும் பல பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்கள் முன்வந்து பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், எதிர்காலத்தில் வீட்டில் இருந்தபடியே எளிதாக ஆன்லைன் மூலம் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வசதியாக, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரின் எழுத்துக்கள் ஆதார் அட்டையில் உள்ளது போலவே இருப்பதை உறுதி செய்யுமாறு அவர் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தினார்.
- தூங்கும் வசதி இல்லாமல் அமர்ந்து கொண்டே பயணிக்கும் பயணிகளுக்கு இது பெரும் அநீதி.
- ஒரு முழு பெர்த்தை இரண்டு பயணிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரயில்வே கூடுதல் வருமானம் ஈட்டுகிறது
ரெயில்களில் RAC முறையில் பயணிக்கும் பயணிகளிடம் முழு பயணக் கட்டணத்தையும் வசூலிக்கும் இந்திய ரெயில்வேயின் நடைமுறைக்கு பாராளுமன்ற நிலைக்குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முழு கட்டணத்தைச் செலுத்தியும், தூங்கும் வசதி இல்லாமல் அமர்ந்து கொண்டே பயணிக்கும் பயணிகளுக்கு இது பெரும் அநீதி என்று குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஒரு முழு பெர்த்தை இரண்டு பயணிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரயில்வே கூடுதல் வருமானம் ஈட்டுகிறது, ஆனால் பயணிகளுக்கு உரிய வசதிகள் வழங்கப்படுவதில்லை. எனவே RAC பயணிகளிடம், முழு கட்டணத்தில் பாதியை திரும்ப வழங்க (Refund) வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் RAC பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுக் கட்டணத்திலும் சலுகை வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்களுக்குக் கட்டண ரீதியாக ஏதேனும் ஒரு பலன் கிடைக்க வேண்டும் என்று குழு வலியுறுத்தியுள்ளது.
RAC நடைமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்திற்கு நிலைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
ரெயில்வே அமைச்சகம் இது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற நிலைக்குழு என்பது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை சிலரை உள்ளடக்கிய குழுவாகும். இது அரசின் கொள்கைகளை ஆராய்ந்து, தொடர்ந்து கண்காணிக்கும் பணியை செய்கிறது.
- காவல்துறை தரவுகளின்படி, 2026 ஜனவரி மாதத்தில் 1,777 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது.
- இதுபோன்ற பல வழக்குகள் விரைவாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன.
தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த ஜனவரி மட்டும் 807 பேர் மாயமானதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், பணத்திற்காக விளம்பரப்படுத்தப்பட்டவை என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
பண ஆதாயத்திற்காக இது போன்ற தகவல்களை பரப்பி, பீதியை ஏற்படுத்துவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சில தடயங்களைப் பின்தொடர்ந்து விசாரணை நடத்தியதில், டெல்லியில் சிறுமிகள் மாயமாவது அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள், பணம் செலுத்திய விளம்பரங்கள் (Paid promotions) மூலம் திட்டமிட்டு பரப்பப்படுவதைக் கண்டறிந்துள்ளோம். பண ஆதாயத்திற்காக இது போன்ற பீதியை உருவாக்குவது சகித்துக்கொள்ளப்படாது; அத்தகைய நபர்கள் மீது நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தரவுகளின்படி, 2026 ஜனவரி மாதத்தில் 1,777 பேர் காணாமல் போனதாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளின் மாதாந்திர சராசரியை விடக் குறைவான எண்ணிக்கையாகும். ஒப்பிட்டு அளவில், டெல்லியில் 2024-ல் 24,893 பேரும், 2025-ல் 24,508 பேரும் காணாமல் போயுள்ளனர் என்று காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. இது நகரின் சராசரி மாதாந்திர எண்ணிக்கையான 2,000-ஐ விடக் குறைவு என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜனவரியில் மாயமானவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என தகவல்கள் வெளியான நிலையில் இந்த செய்தி காட்டூத்தீயாக பரவியது. இதனைத்தொடர்ந்து காவல்துறையின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. மேலும் தலைநகரில் காணாமல் போனவர்கள் குறித்த புகார்களைப் பதிவு செய்ய ஆன்லைன் ஆப் அடிப்படையிலான நடைமுறையை பின்பற்றப்படுவதாகவும், அதில் தற்காலிகமாக காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளும் அடங்கும் என்றும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
அதாவது பள்ளி முடிந்து குழந்தைகள் வீடு திரும்பத் தாமதமாகும் போதோ அல்லது நபர்களைத் தொலைபேசி வாயிலாகத் தற்காலிகமாகத் தொடர்பு கொள்ள முடியாத சூழலிலோ, ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே குடிமக்கள் பெரும்பாலும் இது போன்ற புகார்களைப் பதிவு செய்கிறார்கள் என்று காவல்துறை கூறியுள்ளது.
மேலும் "இதுபோன்ற பல வழக்குகள் விரைவாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அல்லது நபர்கள் கண்டுபிடிக்கப்பட்ட தகவலைத் தெரிவிப்பதில்லை என்பதால், அவை இன்னும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களிலேயே நீடிக்கின்றன, என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் உலக நாடுகளோடு, அதாவது அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் போன்றவற்றோடு ஒப்பிடுகையில் காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை டெல்லியில் குறைவே என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
- சுமார் 50% விமானங்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான தொழில்நுட்பப் கோளாறுகளை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.
- அவற்றை இயக்குவதை நிறுத்த வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
அண்மைக் காலமாக விமான விபத்துகள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் அதிகரித்து வருகின்றன.
மத்திய அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த புதிய தரவுகளின்படி, இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களில் பாதிக்கும் மேற்பட்டவை தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகளை கண்டறியப்பட்டுள்ளது.
2024 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில், ஆய்வு செய்யப்பட்ட விமானங்களில் சுமார் 50% விமானங்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.
இந்த பட்டியலில் ஏர் இந்தியா நிறுவன விமானங்கள் முதலிடத்தில் உள்ளது. இக்குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் அதிக கோளாறுகள் பதிவாகி உள்ளது.
ஏர் இந்தியாவைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
எஞ்சின் கோளாறு, கேபின் அழுத்தம் குறைதல் மற்றும் அவசரகால உபகரணங்கள் சரியாக வேலை செய்யாதது போன்ற கோளாறுகள் ஒரு முறை சரிசெய்யப்பட்டபோதும் ஒரு சில நாட்கள் மீண்டும் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
எனவே, குறைபாடுகள் உள்ள விமானங்களை முழுமையாக சரிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை இயக்குவதை நிறுத்த வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
விமான ஊழியர்களின் பற்றாக்குறை மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததே இந்தப் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
- காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
- நக்சலைட்டுகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஒரு பெண் உள்பட 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் நக்சலைட்டுகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்த நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின்போது காயமடைந்த பாதுகாப்பு வீரர் தீபக் சின்னா மாதவி (38) விமானம் மூலம் பம்ராகட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த காட்டுப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
- ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையின் பேரில், ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் நாங்கள் ஒரு பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது.
- இந்த விவகாரம் ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது என்பதால், பாட்னா ஐகோர்ட்டை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பாட்னா:
பீகாரில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஜே.டி.யூ கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இத்தேர்தலில் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய ஜன சுராஜ் கட்சி போட்டியிட்டது. அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது.
இதற்கிடையே பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளை எதிர்த்து ஜன சுராஜ் கட்சி, சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அதில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்-அமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பெண் பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய பீகார் அரசாங்கத்தின் முடிவு நடத்தை விதிகளை மீறியது என்றும், வாக்காளர்களைப் பாதிக்கும் வகையில் ஒரு நலத்திட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பீகாரில் புதிய தேர்தல்களை நடத்தக் கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜன சுராஜ் கட்சியின் மனுவை விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த விவகாரம் ஒரு மாநிலம் சம்பந்தப்பட்டது என்பதால், பாட்னா ஐகோர்ட்டை அணுகுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, ஒரு அரசியல் கட்சியின் கோரிக்கையின் பேரில், ஒட்டு மொத்த மாநிலத்திற்கும் நாங்கள் ஒரு பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது. உங்கள் கட்சிக்கு எத்தனை வாக்குகள் கிடைத்தன? மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள், நீங்கள் விளம்பரம் தேடுவதற்காக இந்த நீதித்துறை மேடையைப் பயன்படுத்துகிறீர்களா? என்றார்.
- எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர்.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் சீன எல்லை விவகாரம், இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பியும், பதாகைகளைக் காண்பித்தும் அவையின் மையப்பகுதிக்கு சென்றனர். அவர்களை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அப்போது அவர் கூறும் போது, அவை சுமூகமாக நடைபெற வேண்டும். மக்கள் தங்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்காகவே உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர், முழக்கமிடுவதற்காக அல்ல. தற்போதைய கூட்டத் தொடரில், இடையூறுகள் காரணமாக 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும் ஆளும் கட்சி இருக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களை எச்சரித்த சபாநாயகர், இப்படிப்பட்ட அவையை என்னால் நடத்த முடியாது என்று கூறினார். தொடர்ந்து கூச்சல்-குழப்பம் நிலவியதால் மக்களவை கூடிய 4 நிமிடங்களுக்குள் அவையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
மக்களவை 12 மணிக்கு கூடியபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். அவை மீண்டும் வருகிற 9ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
- கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது, அனைவரும் முழுமையாக ஈடுபட வேண்டும்.
- பணத்திற்காக கேமிங்கில் ஈடுபடுபவர்கள் அழிவையே சந்திப்பார்கள்.
புதுடெல்லியில் நடைபெற்ற 'பரிக்ஷா பே சர்ச்சா 2026' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டில் டேட்டா மலிவானது என்பதற்காக இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களின் வாழ்க்கை மற்றும் கல்வித் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது, அனைவரும் முழுமையாக ஈடுபட வேண்டும். ஏனெனில் அரை மனதுடன் கல்வி வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றாது.
நமது இலக்கு அடையக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் எளிதில் அடையக்கூடியதாக இருக்கக்கூடாது. முதலில் மனதை அடக்குங்கள். பின்னர் மனதை இணைக்கவும். பின்னர் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் இதை செய்தால், எப்போதும் வெற்றியாளராக இருப்பதை காண்பீர்கள்.
உங்களுக்கு கேமிங்கில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் டேட்டா மலிவானது என்பதால் நேரத்தை கடத்துவதற்காக அதில் ஈடுபடாதீர்கள். பணத்திற்காக கேமிங்கில் ஈடுபடுபவர்கள் அழிவையே சந்திப்பார்கள். நாட்டில் சூதாட்டத்தை ஊக்குவிக்கக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நான் ஒரு சட்டத்தை இயற்றி உள்ளேன்.
இருப்பினும், விளையாட்டு என்பது ஒரு திறமையாக இருக்கலாம். ஏனெனில் அதற்கு வேகமும் விழிப்புணர்வும் தேவை. மேலும் அதை சுய வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
- ஆம் ஆத்மி கட்சி தலைவர் லக்கி ஓபராய் ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு தனது ஜீப்பில் சென்றார்.
- லக்கி ஓபராயின் மனைவி நகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக போட்டியிட்டார்.
சண்டிகர்:
பஞ்சாப்பை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் லக்கி ஓபராய். இவர் இன்று காலை ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு தனது ஜீப்பில் சென்றார். அவர் ஜீப்பை குருத்வாராவுக்கு முன்பு நிறுத்தி கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
ஜீப்புக்குள் இருந்த லக்கி ஓபராயை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார் கண்ணாடி உடைந்து லக்கி ஓபராய் மீது 5 குண்டுகள் பாய்ந்தன. உடனே தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த லக்கி ஓபராயை பொதுமக்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். பஞ்சாப்பில் பட்டப்பகலில் ஆளும் ஆம் ஆத்மி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்கி ஓபராயின் மனைவி நகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்துக்கு பஞ்சாப் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறும்போது, முதல்-மந்திரி பகவந்த் மான் நிர்வாகத்தின் கீழ் பஞ்சாப்பின் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. ஆளும் கட்சித் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண குடிமக்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? என்றார்.
- அசாமிய 'கமோசா' அணிவித்து வரவேற்றார்.
- உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 'பரீட்சை பே சர்ச்சா' நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலந்துரையாடலை தொடங்கினார். இந்த ஒன்பதாவது பதிப்பில், பிரதமர் நாடு முழுவதிலும் உள்ள மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுகிறார். கற்றலை ஊக்குவிப்பது மற்றும் பொதுத் தேர்வு காலத்திற்கு முன்னதாக மாணவர்கள் மன அழுத்தமின்றி இருக்க உதவுவது ஆகியவற்றில் இந்த நிகழ்ச்சி கவனம் செலுத்துகிறது.
நேரலையாக ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, தேர்வுத் தயாரிப்பு, மன அழுத்த மேலாண்மை மற்றும் பொதுத் தேர்வுகளுடன் தொடர்புடைய பிற சவால்கள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்குகிறார்.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து 4.5 கோடிக்கும் அதிகமான பதிவுகளுடன், இது 2025ஆம் ஆண்டின் கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, மாணவர்கள் தாங்களே இயற்றிய பாடல்களை பிரதமர் முன்பு பாடினர். குறிப்பாக, வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த ஒரு பார்வையற்ற திவ்யாங் மாணவி, அசாமிய பாரம்பரிய உடையில் "பட்தா சல் து பட்தா சல்" (முன்னேறு, தொடர்ந்து முன்னேறு) என்ற உத்வேகமான பாடலை பாடினார். இந்தப் பாடல் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தடைகளை தாண்டி முன்னேறுவது பற்றியது. பிரதமர் மோடி உட்பட அனைவரும் கைதட்டி பாராட்டினர், இது உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது.
'பரீட்சை பே சர்ச்சா' நிகழ்ச்சியின் 9வது பதிப்பிற்காக வந்த மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி அசாமிய 'கமோசா' அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து பேசிய அவர், "இது பெண் அதிகாரமளித்தலின் சிறந்த உதாரணமாகும். குறிப்பாக வடகிழக்கு, அசாம் பகுதி பெண்களுக்கு. ஏனெனில் பெண்கள் இதை தங்கள் வீடுகளில் அன்போடும் அர்ப்பணிப்போடும் நெய்கிறார்கள்."
மேலும், "உங்கள் பெற்றோரோ, ஆசிரியர்களோ அல்லது சக நண்பர்களோ என்ன சொன்னாலும் சரி, உங்களுக்கு வரும் அனைத்து ஆலோசனைகளையும் மனதில் கொண்டு, உங்கள் சொந்த பாதையில் நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றுங்கள். நமது இலக்கு எப்போதும் எட்டக்கூடிய தூரத்தில் இருக்க வேண்டும், ஆனால் எளிதில் அடையக்கூடியதாக இருக்கக்கூடாது. எப்போதும் உங்கள் ஆசிரியரை விட ஒரு படி முன்னே இருங்கள். 'மனதைக் கட்டுப்படுத்துங்கள், பிறகு மனதை ஒருமுகப்படுத்துங்கள், அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்துங்கள்."

"வாழ்க்கையில் எல்லாவற்றிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும். நீங்கள் ஒரு பக்கமாக அதிகமாக சாய்ந்தால், கீழே விழுந்துவிடுவீர்கள். வாழ்க்கைத்திறன்களும் தொழில்முறைத் திறன்களும் சம அளவில் முக்கியமானவை, அவற்றை கல்வியின் மூலமாக மட்டுமே பெற முடியும்."
"கடந்து போனதை பற்றி நான் திரும்பி பார்ப்பதில்லை, வரவிருப்பதை நோக்கியே எப்போதும் பார்க்கிறேன். சில சமயங்களில் ஆசிரியர்கள் முக்கியமானவற்றையும், நல்ல மதிப்பெண்கள் பெற உதவும் விஷயங்களையும் மட்டுமே கற்பிக்கிறார்கள். ஆனால் ஒரு நல்ல ஆசிரியர் முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்தி, எல்லாவற்றையும் கற்பிக்கிறார். வாழ்க்கை என்பது தேர்வுகளை பற்றியது மட்டுமல்ல. கல்வி என்பது நமது வளர்ச்சிக்கு ஒரு கருவி மட்டுமே. தேர்வுகள் ஒருபோதும் இறுதி இலக்காக இருக்கக்கூடாது. முழுமையான வளர்ச்சிதான் இறுதி இலக்கு."
"கல்வி ஒரு சுமையாக தோன்றக்கூடாது. அதற்கு நமது முழுமையான ஈடுபாடு தேவை. மதிப்பெண்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தாங்கள் எந்த நிலையை அடைந்திருக்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். "நாம் ஒரு விஷயத்திலோ அல்லது நிகழ்விலோ முழுமையாக ஈடுபடும்போதுதான் அவற்றை நினைவில் வைத்திருக்கிறோம். உங்கள் வெற்றி உங்கள் பெற்றோரின் மரியாதையாக மாறுகிறது. விளையாட்டு என்பது ஒரு திறமை. அது ஆளுமை வளர்ச்சிக்கு ஒரு நல்ல வழி." என்று கூறினார்.
- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வட்டி வகிதம் 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
- வீடு, வாகன கடன்களுக்கான வட்டியிலும் மாற்றமில்லை.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதமாகும். 2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வட்டி வகிதம் 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டு வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லாததால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியிலும் மாற்றமில்லை.






