என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது.
- நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, நல்லகண்ணுவுக்கு 2 நாட்கள் உடல் நிலை சீராக இருந்தது. நேற்று இரவு மீண்டும் வெண்டிலேட்டர் ( செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
- தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.
- வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளா ங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி பேராலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.
அதைத்தொடர்ந்து பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நடக்கிறது. விழாவில் பேராலய அதிபர், பங்கு தந்தைகள், உதவி பங்குதந்தைகள் அருட்சகோதரிகள் கலந்துகொள்கிறார்கள்.
விழா நாட்களில் பேராலயத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
மறுநாள் 8-ந் தேதி புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பேராலயத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் பக்தர்கள் ஓய்வெடுக்க ஆங்காங்கே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்துள்ள பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிய அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனா்.
சிலர் தென்னங்கன்றுகளை வாங்கி ஆலயத்தில் கொடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
- நாங்கள் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.
- நாங்கள் யாருக்கும் எஜமானனும், அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி மதுரை வருகிறார். அவரை வரவேற்க மதுரை மக்கள் தயாராக இருக்கிறார்கள். மதுரையில் தி.மு.க. ஆட்சியில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் டிபன் பாக்ஸ் கொடுத்து வருகிறார். ஒரு அமைச்சருக்கு இதுதான் பணியா? என்று பொதுமக்களே கேவலமாக பேசுகிறார்கள். இன்னொரு அமைச்சர் தனது பதவி இறக்கப்பட்டதால் சைலண்ட் ஆகிவிட்டார். அவர் வருகிற தேர்தலில் நிற்பாரா? நிற்க மாட்டாரா? என்பது தெரியவில்லை. உங்க பொங்க சோறும் வேண்டாம், பூசாரித்தனமும் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.
அரசு நிகழ்ச்சிகளில் 2 அமைச்சர்கள் கலந்து கொள்வதை கூட மக்கள் அசிங்கமாக பார்க்கிறார்கள். மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடுகள் நடந்துள்ளதை ஏன் அமைச்சர்கள் கண்காணிக்கவில்லை. மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி அமைச்சர்கள் இரண்டு பேரும் மாநகராட்சியை கண்காணித்து இருந்தால் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மதுரை மாநகராட்சியில் நடந்துள்ள சொத்துவரி முறைகேடுகளுக்கு தி.மு.க. அமைச்சர்கள் இரண்டு பேருமே காரணம்.
மாநகராட்சியில் நிழல் மேயராக மேயரின் கணவர் இருந்தார். அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் மேயர் இன்னும் பதவி விலகவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நேர்மையான விசாரணை நடக்கும். ஆனால் தவறு செய்தவர்களை விட்டுவிட்டு சம்பந்தமில்லாத நபர்களை விசாரிக்க வேண்டும் என்று போலீசார் அழைக்கிறார்கள், இது ஏற்கத்தக்கது அல்ல. மதுரை மாநகராட்சி மேயர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் எதிர்பார்ப்பாகும். அடுத்து வரும் மாநகராட்சி கூட்டங்களில் மேயர் கலந்துகொண் டால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள். மதுரை மேயர் பதவியில் நீடித்தால் தி.மு.க.வுக்கு தொடர்ந்து கெட்ட பெயர் மக்கள் மத்தியில் ஏற்படும்.
அமைச்சர் மூர்த்தி இன்னும் 6 மாதத்திற்கு பிறகு எங்கு இருப்பார் என்று தெரியாது. அநேகமாக நார்வே, சுவீடன் போன்ற நாடுகளுக்கு அவர் சென்று விட வாய்ப்பு இருக்கும். மத்திய, மாநில நிதியை கொண்டு சாலைகள் போடுவது சாதனை இல்லை. நாங்கள் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.
40 ஆண்டு காலமாக நிறையாத தெப்பக்குளத்தை வைகை தண்ணீர் மூலம் நிரப்பினோம். ஆனால் இப்போது அந்த தடுப்பணையில் உள்ள ஒரு செட்டர் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைந்துள்ளது, இதுவே ஒரு முறைகேடாகும். ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மதுரையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள். அதனை அவர்கள் சொல்ல முடியுமா?
முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் பகுதியில் இந்த தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனை குடித்த பெண்கள் இளநீர் போல தண்ணீர் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த தண்ணீரை தந்தவர் எடப்பாடி பழனிசாமி. தாகம் தீர்த்த அவரை வரவேற்க மதுரை மக்களே தயாராக இருக்கிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாதை மாறி சென்று விட்டார். திசை தெரியாத காட்டுக்குள் சென்று விட்டு வழி தெரியாமல் தவிப்பது போல தவித்து வருகிறார். வேறு எதுவும் அவரைப் பற்றி சொல்வதற்கு இல்லை. அ.தி.மு.க. எப்பொழுதும் தனது கொள்கையிலிருந்து எள்ளளவும் விலகாது. அது திருமாவளவனுக்கும் தெரியும். கொள்கைகளை கடைபிடிப்பதில் எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். நாங்கள் யாருக்கும் எஜமானனும், அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.ம.மு.க. தொடங்கி 8 ஆண்டுகள் முடிந்து 9-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்.
- பல இடங்களில் எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில் இதனை கூறுகிறேன்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இன்று அ.ம.மு.க நிர்வாகி இல்லத் திருமணத்தை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2006 சட்டமன்றத் தேர்தலில் எப்படி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதுபோல் வரும் 2026- சட்டமன்றத் தேர்தலிலும் த.வெ.க தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைக்கிறேன்.
ஏனென்றால் பல இடங்களில் எடுக்கப்பட்ட சர்வேக்களின் அடிப்படையில் நான் இதனை கூறுகிறேன். அந்த அறிக்கையின் படி விஜயின் அரசியல் பிரவேசம் பல்வேறு கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எதார்த்தமான உண்மை. இதற்காக நான் அவருடன் கூட்டணிக்கு செல்வேன் என்று எண்ணி விட வேண்டாம்.
அ.ம.மு.க. தொடங்கி 8 ஆண்டுகள் முடிந்து 9-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். பல்வேறு தேர்தல்களை சந்தித்துள்ளோம். 2024 பாராளுமன்றத் தேர்தலில் 3-வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி வந்தால் இந்தியா வளர்ச்சி பெறும் என்று கருதி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றோம். தற்போதும் அந்தக் கூட்டணியில்தான் உள்ளோம் என்றார்.
- மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கோடு ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- தி.மு.க.வும்,பா.ஜ.க.வும் மறைமுக கூட்டணி என விஜய் கூறி இருப்பதெல்லாம் வெறும் பிதற்றல்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார்.
பின்னர் எச். ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக 50 சதவீதம் வரி விதித்த பாரபட்சமான நடவடிக்கை இன்று (அதாவது நேற்று) முதல் தொடங்குகிறது.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் கேட் குழுவில் இந்தியா உறுப்பினராக சேர்க்கப்பட்டது. இப்போது அமெரிக்கா விதித்துள்ள வரி காரணமாக கேட் உடன்படிக்கை தோற்றுவிட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
சுதேசி உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டும் என்றும், ஆன்லைனில் அமெரிக்கா பொருட்களை இந்திய மக்கள் அனைவரும் வாங்க மாட்டோம் என முடிவெடுக்க வேண்டும். ஒரு பொருளாதார நடவடிக்கைக்கு அடி கொடுப்பது என்பது மற்றொரு பொருளாதார நடவடிக்கை மூலமாக மட்டுமே கொடுக்க வேண்டும்.
அமெரிக்காவின் பொருளாதார பாரபட்ச நடவடிக்கைக்கு ஒவ்வொரு இந்திய மக்களும் பதிலடி கொடுக்க வேண்டும். 2024-25-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 825 பில்லியன் டாலர். அதில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 60 பில்லியன் டாலர் மட்டுமே. இது மொத்த ஏற்றுமதியில் 7.25 சதவீதம் மட்டுமே. மற்ற நாடுகளோடு வர்த்தகத்தை அதிகரிப்பதன் மூலமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்துவது மூலமாக வரக்கூடிய இழப்பை சரி முடியும்.
மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கோடு ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது அரசு செய்யும் கடமை என்றால் நாம் அரசுக்கு செய்யும் கடமை என்பது ஆன்லைனில் பொருட்களை வாங்க மாட்டோம் என முடிவெடுக்க வேண்டும். இலங்கைக்கு சொந்த பணத்தில் கப்பல் விட்டவர் தான் வ.உ.சி. அந்த கப்பலில் பணம் வாங்காமல் தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த அளவிற்கு தேச பற்று உள்ளவர்.
சிறுபான்மையினர் வாக்குகள் மட்டுமே போதும் என விஜய் முடிவு செய்துள்ளார். சிறுபான்மை வாக்கிற்காக மட்டுமே அரசியலுக்கு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளது, இந்துக்கள் வாக்கு வேண்டாம் என முடிவு செய்து இருப்பதையே காட்டுகிறது.
தி.மு.க.வும்,பா.ஜ.க.வும் மறைமுக கூட்டணி என விஜய் கூறி இருப்பதெல்லாம் வெறும் பிதற்றல். பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தோம். 1999-ல் தி.மு.க வாஜ்பாய் அரசாங்கத்துடன் கூட்டணி வைத்திருந்தது. முரசொலி மாறன், வாஜ்பாய் அரசில் இடம் பிடித்திருந்தார். இது ரகசிய உறவோ கள்ள உறவோ இல்லை. நல்ல உறவு தான் வைத்து இருந்தது.
கல்வி கொள்கையில் தி.மு.க.வின் வழியை பின்பற்றி வரும் விஜய் முதலில் அரசியலை படியுங்கள்.1974-ல் கச்சத்தீவை இலங்கைக்கு தானம் செய்தது காங்கிரஸ் அரசு. தி.மு.க அரசு மவுனமாக ஆதரித்தது. இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாஜ்பாய் பேசினார்.
தமிழகத்தில் ஜனசங்க தலைவர் ஜனா கிருஷ்ண மூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இதை முதலில் படிக்காமல் கள்ள உறவு குறித்து பேசுகிறார். கச்சத்தீவை தாரை வார்க்கும் முன் காங்கிரஸ் சிந்தித்து இருக்க வேண்டும்.
ஆதரித்த காங்கிரசிற்கும் தி.மு.க.விற்கும் கள்ள உறவு உள்ளதா எனக்கு விஜய் பதில் சொல்லட்டும். காங்கிரசை ஏன் விஜய் கண்டிக்கவில்லை? கொஞ்சமாவது விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு பேசுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் உள்ள 25 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் தூத்துக்குடியில் இருந்து இயங்குகின்றன.
- கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான மீன், இறால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து வருகிறார்.
அந்த வகையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீது முதலில் விதித்த 25 சதவீத வரி கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது. இந்நிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரியை அபராதமாக விதிப்பதாக மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த வரி நேற்று முதல் அமலாகியது. இவ்வாறு 50 சதவீத வரி விதிக்கப்பட்டதால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜவுளி, ஆயத்த ஆடைகள், எந்திர தயாரிப்பு, கடல் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடல் உணவு பொருட்கள் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 26.5 சதவீதமாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து இறால், கணவாய், பனாமின் போன்ற கடல் உணவுகள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள 25 கடல் உணவு ஏற்றுமதி நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் தூத்துக்குடியில் இருந்து இயங்குகின்றன. இந்நிறுவனங்களில் இருந்து இறால், கணவாய், ஆக்டோபஸ், மீன் மற்றும் கடல் நண்டுகள் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான மீன், இறால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இறாலின் பங்கு 40 சதவீதம் ஆகும். தற்போது அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் கடல் உணவு ஏற்றுமதி 36 ஆயிரம் கோடியாக சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு அமெரிக்காவுக்கு கடல் உணவுகள் ஏற்றுமதி ஆகி இருந்தது. தற்போது கூடுதல் வரி விதிப்பால் இந்த ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடல் உணவு நிறுவனங்கள் உற்பத்தியை 50 சதவீதம் குறைத்துள்ளன.
இதுகுறித்து கடல் உணவு உற்பத்தி நிறுவன ஏற்றுமதியாளர்கள் கூறுகையில்,
வன்னாமி இறால்களில் 60 சதவீதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ளவை சீனா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பாவுக்கு செல்கின்றன. தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுகள் அங்கு செல்ல 45 நாட்கள் ஆகும். வழக்கமாக ஒரு மாதத்திற்கு 50 கொள்கலன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யவும், இதில் பாதியளவு அமெரிக்காவுக்கு அனுப்பப்படும். தற்போது ஏற்றுமதி படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது என்றார்.
- 2008-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போதும், கொரோனா காலத்தின் போதும் தொழில்துறையினருக்கு வழங்கப்பட்டதைப் போல ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5 ஆயிரம் உதவி வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதன் பாதகங்கள் அப்பட்டமாக தெரியவந்துள்ளன. பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு, பல லட்சம் பேருக்கு வேலையிழப்பு என அமெரிக்க வர்த்தகப் போரின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் நிலையில், அதன் தாக்கத்தை இயன்றவரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த பாதிப்புகளின் தாக்கத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் கூட, இந்தியத் தொழில்துறையினரும், தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2008-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போதும், கொரோனா காலத்தின் போதும் தொழில்துறையினருக்கு வழங்கப்பட்டதைப் போல ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். வங்கிகளுக்கு தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள் நிலைமை சீரடையும் வரை நிறுத்தி வைப்பது, அவற்றுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது, நிலைமை சமாளிக்க அவசர கால கடன் வழங்குவது, வட்டி மானியத்தை அதிகரிப்பது, வரிச் சலுகைகளை உயர்த்துவது உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5 ஆயிரம் உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக போலீசாருக்கு மர்ம நபர் போனில் தகவல் தெரிவித்தார்.
- கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக போலீசாருக்கு மர்ம நபர் போனில் தகவல் தெரிவித்தார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அவரது உத்தரவின் பேரில் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு லிப்டில் 2 பெண்கள் வந்தனர்.
- உரிய பராமரிப்பு இல்லாததால் லிப்டில் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திருவொற்றியூர்:
சென்னை, மூலக்கொத்தளம் ராமதாஸ் நகரில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சுமார் 1,440 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு லிப்ட் வசதியும் உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு லிப்டில் 2 பெண்கள் வந்தனர். திடீரென அந்த லிப்ட் பழுதாகி நடுவழியில் நின்றது. இதனால்அதிர்ச்சி அடைந்த பெண்கள் பயத்தில் கூச்சலிட்டு அலறினர்.
சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் லிப்டின் கதவை நீண்ட நேரம் போராடி உடைத்தனர். பின்னர் லிப்டிடுக்குள் சிக்கி இருந்த 2 பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். உரிய பராமரிப்பு இல்லாததால் லிப்டில் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து குடியிருப்பில் வசிக்கும் மக்கள் கூறும்போது, ஒரு அவசரத்திற்கு கூட இந்த லிப்டை பயன்படுத்த முடியவில்லை. இதனை சரியாக பராமரிப்பது இல்லை. அடிக்கடி இது போன்று நாங்கள் லிப்டில் சிக்கிய கொள்கிறோம். லிப்டில் செல்லும் போதெல்லாம் அச்சத்தோடு செல்ல வேண்டி உள்ளது.
இதற்கிடையே லிப்ட்டில் சிக்கி பெண்களை அப்பகுதி மக்கள் கதவை உடைத்து மீட்கும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ஆந்திர மாநிலத்தில் உள்ள கிளினிக்கில் சிறுமி சண்முகபிரியாவின் 5 மாத கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது.
- சிறுமியுடன் பழகிய உறவினரான சிறுவனிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள கொடிவலசா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் சண்முகபிரியா (வயது 19) டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான சிறுவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகியதால் சண்முகபிரியா 5 மாத கர்ப்பம் அடைந்தார். இது பற்றி ஆரம்பத்தில் சண்முகப்பிரியா பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்தார்.
இந்த நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள கிளினிக்கில் சிறுமி சண்முகபிரியாவின் 5 மாத கர்ப்பத்தை கலைத்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு வந்த அவருக்கு தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் சண்முகபிரியாவை திருத்தணியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகபிரியா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருத்தணி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு கர்ப்பத்தை கலைத்த நர்சு மற்றும் உதவியாளர் ஆகிய 2 பேரையும் போலீஸ்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சிறுமியுடன் பழகிய உறவினரான சிறுவனிடமும் விசாரிக்க முடிவு செய்து உள்ளனர்.
- தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு என தங்கப்பாண்டி என்பவர் பேசி வீடியோ ரீல்ஸ்களை வெளியிட்டு இருந்தார்.
- திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாப்பட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கைச் சூழல் நிறைந்த கிராமம் தான் கூமாப்பட்டி. இந்த சிறு கிராமம் தான் தங்கப்பாண்டி என்பவரின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் படுபயங்கர ஃபேமஸ் ஆனது.
ஏங்க.. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க... சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு என தங்கப்பாண்டி என்பவர் பேசி வீடியோ ரீல்ஸ்களை வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. இதையடுத்து கூமாப்பட்டிக்கு வெளியூரில் இருந்து இளைஞர்கள் படையெடுத்தனர்.
கூமாப்பட்டி கிராமத்தை டிரெண்ட் ஆக்கிய இளைஞர் தங்கப்பாண்டி, பிளவக்கல் பெரியாறு அணையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் பணி எதுவும் நடக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
அதனை தொடர்ந்து அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கப்படுகிறது.
- மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்கள் வசதியாக நிறுத்த பிரமாண்டமாக பார்க்கிங் உருவாகிறது.
சென்னை:
சென்னையின் பாரம்பரிய கட்டிடத்தின் அடையாளமாக விளங்கும் எழும்பூர் ரெயில் நிலையம் மறு சீரமைக்கப்படுகிறது. அதன் எழில்மிகு தோற்றம் மாறாமல் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்ய திட்டமிட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
எழும்பூர் ரெயில் நிலையத்துடன் மெட்ரோ ரெயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மாநகர பஸ் வசதி, கார், ஆட்டோ போன்றவை எளிதாக பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லக்கூடிய வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
ரெயில் பயணிகளுக்கு தரமான உணவு குறைந்த விலையில் கிடைக்க ஓட்டல்கள், ஷாப்பிங் செய்ய வணிகப் பகுதி, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த பல அடுக்கு பார்க்கிங் வசதி தயாராகிறது.
ரெயில்கள் வருகை மற்றும் புறப்பாடுக்கான கட்டிடம், தரை தளம் மற்றும் 3 அடுக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. ரெயில்கள் வருகை மற்றும்புறப்பாடுக்கு தனித்தனி பிரத்யேக பகுதிகள் ஒதுக்கப்படுகிறது. விமான நிலையத்திற்கு பயணிகளுக்காக சிறப்பு வழியும் அமைக்கப்படுகிறது.
ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கப்படுகிறது. காந்தி இர்வின் சாலையிலும் பூந்தமல்லி சாலையிலும் 5 அடுக்கு பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்கள் வசதியாக நிறுத்த பிரமாண்டமாக பார்க்கிங் உருவாகிறது.
பயணிகள் நடந்து செல்வதற்கு உயரமான நடைபாதை அமைக்கப்படுகிறது. பிளாட்பாரங்களை கடக்கவும், சாலைக்கு செல்ல நடை மேம்பாலமும் அமைக்கப்படுகிறது. இது தவிர பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் எளிதாக செல்ல எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதியும் புதிதாக நிறுவப்படுகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து எளிதாக வெளியேறி பஸ், ஆட்டோ, கார்களில் செல்லவும் அதே போல ரெயில் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பயணிகளை இறக்கி செல்லவும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இது தவிர புதிதாக பார்சல் அலுவலகம், ரெயில்வே மெயில் சர்வீஸ் அலுவலகம் பூந்தமல்லி சாலை பகுதியில் கட்டப்படுகிறது. துணை மின்நிலையம், புதிய ரெயில்வே குடியிருப்புகளின் தரம் உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக லிப்ட் வசதி, எஸ்கலேட்டர், குளர்ச்சியான குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்றவை கட்டப்படுகிறது.
எழும்பூர் ரெயில் நிலையத்தின் குடிநீர் தேவையை சமாளிக்க வடக்கு பகுதியில் பிரமாண்ட குடிநீர் தொட்டி "சம்ப்" தரைக்கு அடியில் கட்டப்படுகிறது. இங்கிருந்து ரெயில்களுக்கு குடிநீர் நிரப்பும் வசதியும் அளிக்கப்படுகிறது.






