என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருமாவளவன் பாதை மாறி சென்றுவிட்டார்- செல்லூர் ராஜூ
    X

    திருமாவளவன் பாதை மாறி சென்றுவிட்டார்- செல்லூர் ராஜூ

    • நாங்கள் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.
    • நாங்கள் யாருக்கும் எஜமானனும், அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி மதுரை வருகிறார். அவரை வரவேற்க மதுரை மக்கள் தயாராக இருக்கிறார்கள். மதுரையில் தி.மு.க. ஆட்சியில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் டிபன் பாக்ஸ் கொடுத்து வருகிறார். ஒரு அமைச்சருக்கு இதுதான் பணியா? என்று பொதுமக்களே கேவலமாக பேசுகிறார்கள். இன்னொரு அமைச்சர் தனது பதவி இறக்கப்பட்டதால் சைலண்ட் ஆகிவிட்டார். அவர் வருகிற தேர்தலில் நிற்பாரா? நிற்க மாட்டாரா? என்பது தெரியவில்லை. உங்க பொங்க சோறும் வேண்டாம், பூசாரித்தனமும் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.

    அரசு நிகழ்ச்சிகளில் 2 அமைச்சர்கள் கலந்து கொள்வதை கூட மக்கள் அசிங்கமாக பார்க்கிறார்கள். மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடுகள் நடந்துள்ளதை ஏன் அமைச்சர்கள் கண்காணிக்கவில்லை. மாதந்தோறும் ஆய்வுக் கூட்டம் நடத்தி அமைச்சர்கள் இரண்டு பேரும் மாநகராட்சியை கண்காணித்து இருந்தால் இந்த முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே மதுரை மாநகராட்சியில் நடந்துள்ள சொத்துவரி முறைகேடுகளுக்கு தி.மு.க. அமைச்சர்கள் இரண்டு பேருமே காரணம்.

    மாநகராட்சியில் நிழல் மேயராக மேயரின் கணவர் இருந்தார். அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் மேயர் இன்னும் பதவி விலகவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி நேர்மையான விசாரணை நடக்கும். ஆனால் தவறு செய்தவர்களை விட்டுவிட்டு சம்பந்தமில்லாத நபர்களை விசாரிக்க வேண்டும் என்று போலீசார் அழைக்கிறார்கள், இது ஏற்கத்தக்கது அல்ல. மதுரை மாநகராட்சி மேயர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் எதிர்பார்ப்பாகும். அடுத்து வரும் மாநகராட்சி கூட்டங்களில் மேயர் கலந்துகொண் டால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கமாட்டார்கள். மதுரை மேயர் பதவியில் நீடித்தால் தி.மு.க.வுக்கு தொடர்ந்து கெட்ட பெயர் மக்கள் மத்தியில் ஏற்படும்.

    அமைச்சர் மூர்த்தி இன்னும் 6 மாதத்திற்கு பிறகு எங்கு இருப்பார் என்று தெரியாது. அநேகமாக நார்வே, சுவீடன் போன்ற நாடுகளுக்கு அவர் சென்று விட வாய்ப்பு இருக்கும். மத்திய, மாநில நிதியை கொண்டு சாலைகள் போடுவது சாதனை இல்லை. நாங்கள் 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தபோது மதுரைக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.

    40 ஆண்டு காலமாக நிறையாத தெப்பக்குளத்தை வைகை தண்ணீர் மூலம் நிரப்பினோம். ஆனால் இப்போது அந்த தடுப்பணையில் உள்ள ஒரு செட்டர் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைந்துள்ளது, இதுவே ஒரு முறைகேடாகும். ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மதுரையில் இருக்கும் இரண்டு அமைச்சர்கள் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள். அதனை அவர்கள் சொல்ல முடியுமா?

    முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தின் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் பகுதியில் இந்த தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனை குடித்த பெண்கள் இளநீர் போல தண்ணீர் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த தண்ணீரை தந்தவர் எடப்பாடி பழனிசாமி. தாகம் தீர்த்த அவரை வரவேற்க மதுரை மக்களே தயாராக இருக்கிறார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பாதை மாறி சென்று விட்டார். திசை தெரியாத காட்டுக்குள் சென்று விட்டு வழி தெரியாமல் தவிப்பது போல தவித்து வருகிறார். வேறு எதுவும் அவரைப் பற்றி சொல்வதற்கு இல்லை. அ.தி.மு.க. எப்பொழுதும் தனது கொள்கையிலிருந்து எள்ளளவும் விலகாது. அது திருமாவளவனுக்கும் தெரியும். கொள்கைகளை கடைபிடிப்பதில் எம்.ஜி.ஆர்., அம்மா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். நாங்கள் யாருக்கும் எஜமானனும், அல்ல யாருக்கும் அடிமையும் அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×