என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொழில் துறையினர்- தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
- 2008-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போதும், கொரோனா காலத்தின் போதும் தொழில்துறையினருக்கு வழங்கப்பட்டதைப் போல ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5 ஆயிரம் உதவி வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அதன் பாதகங்கள் அப்பட்டமாக தெரியவந்துள்ளன. பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு, பல லட்சம் பேருக்கு வேலையிழப்பு என அமெரிக்க வர்த்தகப் போரின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் நிலையில், அதன் தாக்கத்தை இயன்றவரை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இந்த பாதிப்புகளின் தாக்கத்தை முழுமையாக தடுக்க முடியாது என்றாலும் கூட, இந்தியத் தொழில்துறையினரும், தொழிலாளர்களும் பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 2008-ம் ஆண்டு பொருளாதார மந்தநிலையின் போதும், கொரோனா காலத்தின் போதும் தொழில்துறையினருக்கு வழங்கப்பட்டதைப் போல ஊக்குவிப்பு சலுகைகள் வழங்கப்பட வேண்டும். வங்கிகளுக்கு தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகள் நிலைமை சீரடையும் வரை நிறுத்தி வைப்பது, அவற்றுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது, நிலைமை சமாளிக்க அவசர கால கடன் வழங்குவது, வட்டி மானியத்தை அதிகரிப்பது, வரிச் சலுகைகளை உயர்த்துவது உள்ளிட்ட சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு மாதம் குறைந்தது ரூ.5 ஆயிரம் உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






