என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஏங்க... கூமாப்பட்டி பிளவக்கல் அணை பூங்கா மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கியிருக்காங்க!
    X

    ஏங்க... கூமாப்பட்டி பிளவக்கல் அணை பூங்கா மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கியிருக்காங்க!

    • தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு என தங்கப்பாண்டி என்பவர் பேசி வீடியோ ரீல்ஸ்களை வெளியிட்டு இருந்தார்.
    • திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாப்பட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கைச் சூழல் நிறைந்த கிராமம் தான் கூமாப்பட்டி. இந்த சிறு கிராமம் தான் தங்கப்பாண்டி என்பவரின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸால் படுபயங்கர ஃபேமஸ் ஆனது.

    ஏங்க.. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க... சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு என தங்கப்பாண்டி என்பவர் பேசி வீடியோ ரீல்ஸ்களை வெளியிட்டு இருந்தார்.

    இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. இதையடுத்து கூமாப்பட்டிக்கு வெளியூரில் இருந்து இளைஞர்கள் படையெடுத்தனர்.

    கூமாப்பட்டி கிராமத்தை டிரெண்ட் ஆக்கிய இளைஞர் தங்கப்பாண்டி, பிளவக்கல் பெரியாறு அணையை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தது. ஆனால் பணி எதுவும் நடக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் பிளவக்கல் பெரியாறு அணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    அதனை தொடர்ந்து அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×