என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,840-க்கும், புதன்கிழமை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,120-க்கும், நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,760-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 131 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 31ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    28-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,240

    27-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,120

    26-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,840

    25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440

    24-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    28-08-2025- ஒரு கிராம் ரூ.130

    27-08-2025- ஒரு கிராம் ரூ.130

    26-08-2025- ஒரு கிராம் ரூ.130

    25-08-2025- ஒரு கிராம் ரூ.131

    24-08-2025- ஒரு கிராம் ரூ.130

    • மழையுடன் கடும் குளிரும், பனிமூட்டமும் காணப்படுகிறது.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பந்தலூர், கூடலூரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    பாடந்தொரை-அலவயல் பிரதான சாலை முழுவதும் நீரில் மூழ்கியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    தண்ணீர் வடியும் வரை காத்திருந்து அதன்பின்னரே மக்கள் அவ்வழியாக சென்றனர். கர்க்கார்பாலி செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் மெதுவாக சென்றன.

    கனமழைக்கு பாடந்தொரை மற்றும் அலவயல் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளுக்குள் தேங்கிய தண்ணீரை வாளி மூலமாக வெளியேற்றினர். சிலர் அங்கிருந்து வெளியேறி தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

    கூடலூர் பகுதியில் பெய்த கனமழைக்கு தேவாலா அருகே வாழவயல் பகுதியில் சுந்தரலிங்கம் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த சுந்தரலிங்கத்தின் மனைவி சந்திரிகா(50) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதேபோல் அந்த பகுதியில் உள்ள முத்துலிங்கம் என்பவரது வீடும் மழைக்கு இடிந்து விழுந்தது.

    பந்தலூர் தாலுகாவில் உப்பட்டி பொன்னானி, நெலாக்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பந்தலூர் பஜாரில் வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் கூடலூர், கோழிக்கோடு சென்ற அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்த படியே சென்றன.

    ஊட்டியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும், பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி மாவட்டத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடியதாக 283 பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அந்த பகுதிகளை கண்காணிக்க 43 மண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளது.

    மேலும் நீலகிரியில் 3,600 முதல்நிலை பொறுப்பாளர்கள், 200 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் பேரிடர் பாதிப்பு இருந்தால் வருவாய்த்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து நிவாரண முகாம்களில் தங்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர். 

    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக குறைந்து காணப்பட்டது.
    • அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,354 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக குறைந்து காணப்பட்டது. அதே நேரம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,354 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 91.88 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6,500 கன அடியாக வந்தது.
    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தருமபுரி:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 6,500 கன அடியாக வந்தது.

    இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.

    நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது.
    • திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்றபோது தனது நகைகள் திருட்டு போனதாக பேராசிரியை நிகிதா திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அக்கோவிலின் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமாரை, மானாமதுரை தனிப்படை போலீசார் அழைத்துச்சென்று தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நிகிதா அளித்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு நிகிதா அளித்த புகார் மற்றும் வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ. வசம் திருப்புவனம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டன.

    இந்த நிலையில் போலீசில் நிகிதா ஏற்கனவே அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக சி.பி.ஐ. நேற்று புதிய வழக்குப்பதிவு செய்தது. அந்த புகாரில் என்னென்ன உள்ளது என சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-

    கடந்த ஜூன் 27-ந் தேதி காலையில் பேராசிரியை நிகிதாவும், அவருடைய தாயார் சிவகாமியும் காரில் மடப்புரம் கோவிலுக்குச் சென்றுள்ளனர். கோவில் காவல் பணியில் இருப்பவர்களுக்கான சீருடையைப் போல தோற்றமளிக்கும் வகையில் உடை அணிந்து வந்த அஜித்குமார் அவரை அணுகி உள்ளார்.

    நிகிதா தாயாரின் முதுமையை சாதகமாகப் பயன்படுத்தி, காரை நிறுத்த அஜித்குமாரே முன்வந்து சாவியை தன்னிடம் கொடுக்க வற்புறுத்தி வாங்கினார். பின்னர் கோவிலில் இருந்து வாகனத்திற்கு திரும்பிய பிறகு, தன் கைப்பை சிதைக்கப்பட்டு இருப்பதை நிகிதா பார்த்துள்ளார். சோதனை செய்தபோது, 6 பவுன் எடையுள்ள ஒரு சங்கிலி, 2½ பவுன் எடையுள்ள 2 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடையுள்ள கல் பதித்த 2 மோதிரங்கள் என மொத்தம் 9½ பவுன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து தர வேண்டும் என நிகிதா புகார் அளித்து உள்ளார்.

    இந்த புகார் தொடர்பான விசாரணைக்காக போலீசார் அதே நாளில் அஜித்குமாரை அழைத்துச் சென்றனர். மறுநாள் இரவில் அவர் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக போலீசாரால் அறிவிக்கப்பட்டது. ஜூன் 29 அன்று மாலை 5.45 மணி முதல் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீடித்த பிரேத பரிசோதனையில், அஜித்குமாரின் கால்கள், கைகள், மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 44 வெளிப்புற காயங்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் 19 காயங்கள் ஆழமானவை. தசை வரை நீண்டு இருந்தன. பிரேத பரிசோதனைக்கு சுமார் 12 முதல் 24 மணி நேரத்திற்கு முன்பு மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என்று மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் சிகிச்சை நிபுணர்களின் அறிக்கை கூறி உள்ளது. ஆனால் இறப்புக்கான சரியான காரணத்தை குறிப்பிடவில்லை. மற்றொரு பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ளது. திருப்புவனத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    இவ்வாறு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

    நிகிதாவிடம் இருந்து உண்மையிலேயே நகை திருட்டு போனதா? மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அஜித்குமாரை போலீசார் கடுமையாக தாக்கி கொன்றனரா? என இந்த வழக்கில் சந்தேகம் எழுப்பப்பட்டது. அதன் உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரிலேயே சி.பி.ஐ. இந்த நகை திருட்டு வழக்கையும் விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.
    • மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சந்திர கிரகணம் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.57 மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிவடைகிறது. எனவே அன்றைய தினம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உபகோவில்களில் அன்று மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம கால சுவாமி புறப்பாடு ஆகியவை பகல் 11.41 மணிக்கு நடைபெறும். அன்று மதியம் 12.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது.

    எனவே மதியத்திற்கு மேல் தரிசனம் செய்யவோ, அர்ச்சனை செய்யவோ அனுமதி இல்லை. அடுத்த நாள் (8-ந்தேதி) வழக்கம் போல் தரிசனம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாரச்சந்தை அருகே உள்ள நகராட்சி கட்டிடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.
    • தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை நகர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 51). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர் அங்குள்ள வாரச்சந்தை அருகே உள்ள நகராட்சி கட்டிடத்தில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சதீஷ் பா.ஜ.க. கட்சியின் நகர் வர்த்தகப்பிரிவு தலைவராகவும் இருந்தார்.

    இவர் வேலை முடித்து விட்டு தினமும் நண்பர்களை சந்தித்து மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று இரவு வேலை முடித்துவிட்டு சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் மெக்கானிக் கடையில் சந்தித்து மது அருந்தினர். அதே பகுதியில் தாரை தப்பட்டை குழுவினர் சிலர் தங்கியிருந்தனர். அவர்களும் மது அருந்தினர் போதை தலைக்கேறிய நிலையில் அந்த குழுவை சேர்ந்த சிலர் சதீஷ் தரப்பை சேர்ந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    இது கைகலப்பாக மாறிய நிலையில் ஒருவரையொருவர் சரமாரியமாக தாக்கி கொண்டனர். இதில் சதீஷின் நண்பர் மணிபாரதி என்பவர் படுகாயமடைந்தார். அவரை அந்த கும்பல் தாக்கியபோது சதீஷ் தடுக்க முற்பட்டார். உடனே எதிர்தரப்பினர் அவரை தாக்கி கீழே தள்ளினர். இதில் தவறி விழுந்ததில் அவர் மயங்கினார்.

    மோதல் குறித்து தகவலறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்திருந்த மணி பாரதி மற்றும் சதீஷை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்தில் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மணிபாரதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.

    சிவகங்கையில் பா.ஜ.க. நிர்வாகி அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
    • 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிவேக பயணம், விமான சேவைக்கு இணையான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த நிலையில், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, ரெயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயல் இயக்குனர் தீலிப்குமார் கூறும்போது, "தற்போது, மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல், செகந்திராபாத்-திருப்பதி,

    சென்னை எழும்பூர்-நெல்லை ஆகிய 3 வழித்தடங்களில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் 20 பெட்டிகளாகவும், மீதமுள்ள மதுரை-பெங்களூரு கான்ட், தியோகர்-வாரணாசி, ஹவுரா-ரூர்கேலா மற்றும் இந்தூர்-நாக்பூர் ஆகிய 4 வழித்தடங்களில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் 16 பெட்டிகளாகவும் அதிகரிக்கப்படும்" என்றார்.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • கிருஷ்ணா நகர், லலிதா நகர், ராஜேஸ்வரி அவென்யூ, முத்து நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (30.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    போரூர்: ஈவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், லலிதா நகர், ராஜேஸ்வரி அவென்யூ, முத்து நகர், மேக்ஸ்வொர்த் நகர், பங்களா தூபி, மாதா நகர், பொன்னியம்மன் கோவில் தெரு.

    ஈஞ்சம்பாக்கம்: பி.ஜே.தாமஸ் அவென்யூ, அண்ணா என்கிளேவ், ஈசிஆர் மெயின் ரோடு, சாய்பாபா கோவில் தெரு, ஆலிவ் பீச் ஹனுமான் காலனி, கிளாசிக் என்கிளேவ், ராஜன் நகர், செல்வா நகர், பிராத்தனா பார்க் அவென்யூ, ராயல் என்கிளேவ், 1, 2வது அவென்யூ, வெட்டுவாங்கேணி, ஸ்வஸ்திக் அவென்யூ, குப்பம் நகர், சரவண நகர், செங்குன்றம் கார்டன்.

    கீழ்ப்பாக்கம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டி புரம், ஓசங்குளம், நியூ பூபதி நகர், பிளவர்ஸ் சாலை, தம்புசாமி தெரு, மற்றும் கெங்குரெட்டி சாலை.

    கிண்டி: இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோவில் 1 முதல் 5வது தெரு, ஏ முதல் டி பிளாக், பூமகள் தெரு, சௌத் கட்டம், மவுண்ட் ரோடு, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர்.

    ஐடி காரிடார்: பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செயலக காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், இ.காந்தி நகர், பால்ராஜ் நகர், பெரியார் சாலை, கோவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கஜூரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர் மற்றும் ரூகி வளாகம்.

    பாரிவாக்கம்: கண்ணப்பாளையம், ஆயில்சேரி, பிடாரிதாங்கல், பனவேடு தோட்டம், கொளப்பஞ்சேரி.

    திருவேற்காடு: பருத்திப்பட்டு, கோலடி, பெருமாளாகரம், வேலப்பஞ்சாவடி, மாதர்வேடு, கூட்டுறவு நகர், சண்முகா நகர், புளியம்பேடு, பி.எச்.ரோடு, நூம்பல், பரிவாக்கம், கண்ணபாளையம், காடுவெட்டி, வீரராகவபுரம், குப்புசாமி நகர், பாரதி நகர். 

    • துபாய்க்குப் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் விமானம் சென்று கொண்டிருந்தது.
    • பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மதுரை விமான நிலையத்தில் இருந்து மதியம் 12.20 மணிக்கு துபாய்க்குப் புறப்படுவதற்காக ஓடு தளத்தில் விமானம் சென்று கொண்டிருந்தது.

    மதுரையில் இருந்து துபாய் செல்ல தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    130 பயணிகளுடன் ஓடுபாதைக்கு சென்றபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.

    நீண்ட நேரமாக விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    • மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
    • முதலமைச்சரால் வர முடியாததால் துணை முதலமைச்சர் உதயநிதியை அனுப்பி வைத்ததாக தாகவல்.

    பீகாருக்கு சென்று திரும்பிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாநில மாநாட்டில் முதல்வர் பங்கேற்கவில்லை என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வர முடியாததால் துணை முதலமைச்சர் உதயநிதியை அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    • திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் வெளியீடு.
    • விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

    2023ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலையிடம் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று டி.ஆர்.பாலு ஆஜரானார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு டி.ஆர்.பாலு கூறுகையில்," 21 நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு என

    அண்ணாமலை சொல்லியிருந்தார். அதில் 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தேன்.

    ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி அத்தனை விளக்கமும் அளித்தேன். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

    மேலும், அண்ணாமலை," 2004ம் ஆண்டு நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009ல் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை" கூறியதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த டி.ஆர்.பாலு, "சரியான நேரத்தில் பதில் சொல்கிறேன். அண்ணாமலை சொல்லும் போது என்னிடம் சொல்வார். அப்போது நான் பதில் சொல்லிக்கிறேன்" என்றார்.

    மேலும், ரூ.10 ஆயிரம் கோடி குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' பதில் சொல்ல முடியாது போய்யா' எனக்கூறிவிட்டு சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ×