என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வாக்குவாதம் முற்றிடவே லட்சுமி நாராயணன், அருள் முத்து செல்வன் இடையே மோதல் ஏற்பட்டது.
- கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை-தென்காசி நான்கு வழிச்சலையில் பேட்டையை அடுத்த அபிஷேகப்பட்டியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம் உள்ளது.
இங்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மாணவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகம் நுழைவாயில் அருகில் அனைத்து வாகனங்களுக்கும் பார்க்கிங் வசதி உள்ளது.
இந்நிலையில் வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவரான தச்சநல்லூர் அடுத்த மணி மூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் லட்சுமி நாராயணன் (வயது 18) நேற்று தனது மோட்டார் சைக்கிளை வாகன நிறுத்தத்தில் நிறுத்தாமல் கேண்டீன் அருகில் ஓட்டி சென்றுள்ளார்.
வரலாற்றுத்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் அருள் முத்துசெல்வன், நீ எப்படி மோட்டார் சைக்கிளை இங்கு கொண்டு வந்தாய் என கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்படவே, லட்சுமி நாராயணனுக்கு ஆதரவாக வரலாற்று துறையில் படிக்கும் ஆகாஷ் வந்துள்ளார்.
வாக்குவாதம் முற்றிடவே லட்சுமி நாராயணன், அருள் முத்து செல்வன் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் லட்சுமி நாராயணன், அருள் முத்துசெல்வன் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோஷ்டி மோதலில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக மறு உத்தரவு வரும் வரை பல்கலைக்கழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளித்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது.
- மத்திய அரசு பணியிலும் 8 ஆண்டுகள் இருந்துள்ளார்.
- காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
சென்னை:
தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக உள்ள சங்கர் ஜிவால் வருகிற 31-ந்தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
இதையொட்டி இன்று மாலையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அவருக்கு பணி நிறைவு விழா நடத்தப்படுகிறது. சங்கர் ஜிவாலுடன், காவல் துறை வீட்டு வசதி நிறுவன இயக்குனர் உள்ள டி.ஜி.பி. சைலேஸ் குமார் யாதவும் ஓய்வு பெறுகிறார்.
இதைத் தொடர்ந்து இருவருக்கும் ஒரே நேரத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த விழாவில் தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சங்கர் ஜிவால், சைலேஸ் குமார் யாதவ் ஆகிய இருவரையும் வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார்கள்.
டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் சட்டம்-ஒழுங்கு பதவியில் டி.ஜி.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த போது தான் டி.ஜி.பி. அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால் 1990-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் சில ஆண்டுகள் முன்னணி நிறுவனங்களில் என்ஜினீயராகவும் பணி புரிந்துள்ளார். அதன் பிறகே ஐ.பி.எஸ். அதிகாரி ஆனார். மதுரை மற்றும் சேலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து உள்ள சங்கர் ஜிவால், திருச்சி கமிஷனராகவும், உளவு பிரிவில் ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார். மத்திய அரசு பணியிலும் 8 ஆண்டுகள் இருந்துள்ளார். சிறப்பான பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை மறுநாள் ஓய்வு பெற உள்ள போலீஸ் டி.ஜி.பி சங்கர் ஜிவால் சந்தித்து பேசினார். அதேபோல் பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட உள்ள வெங்கடராமனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். மேலும் காவலர் வீட்டு வசதி வாரிய டி.ஜி.பி சைலேஷ் குமார் யாதவும் ஓய்வு பெறுவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட உள்ள வெங்கடராமன் குறித்த தகவல்கள்...
* 1968-ம் ஆண்டு மே 8-ந்தேதி நாகப்பட்டினத்தில் பிறந்தார்.
* யு.பி.எஸ்.சி. தேர்வில் 1994-ஆம் ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* இளங்கலை பொருளாதாரம்; பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை படிப்புகளில் முதுகலைப் பட்டம்.
* நிர்வாகப் பிரிவு ஐஜியாக இருந்தபோது, காவல்துறையில் காகிதமில்லாப் பணியை நடைமுறைப்படுத்தினார்.
* ஏடிஜிபியாக சிபிசிஐடி மற்றும் சைபர் கிரைம் பிரிவுகளில் முக்கியமான வழக்குகளை வெற்றிகரமாகக் கையாண்டவர்.
* கடந்த டிசம்பர் மாதம் டிஜிபியாகப் பதவி உயர்வு பெற்றார்.
* தற்போது சட்டம்-ஒழுங்குப் பிரிவுக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
* சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்புடன், படைத் தலைவர் பொறுப்பையும் கவனிக்க உள்ளார்.
- நல்லகண்ணு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 22-ந்தேதி வீட்டில் தவறி விழுந்ததால் காயம் அடைந்தார். கடந்த 24-ந்தேதி அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை நேரில் பார்த்தார். மேலும் அவரது உடல்நலம் குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர்.
- சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,500, சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.5,545-க்கும் கொள்முதல் செய்யப்படும்.
- செப்டம்பர் 1 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை குவிண்டால் நெல் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும்.
சென்னை:
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சாதாரண ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,500, சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.5,545-க்கும் கொள்முதல் செய்யப்படும்.
செப்டம்பர் 1 முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ந்தேதி வரை குவிண்டால் நெல் ரூ.2,500-க்கு கொள்முதல் செய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை வைகை ஆற்றில் வீசியவர்கள் யார்?
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திருப்புவனம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்தது தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்களை வைகை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.
- பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
- விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள், இன்று சிவங்கங்கை வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனங்கள்.
எதிர்க்கட்சியாக இருந்த போது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடமிருந்து வாங்கிய மனுக்கள், கருப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை.
நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, சிவகங்கை வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.
மக்களின் வலிகளை, உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி, உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.
- குளித்தலை சிவராமன் தலைவர் கலைஞர் மீது கொண்டிருந்த அதே தூய அன்பை என் மீதும் வெளிப்படுத்தி வந்தார்.
- தி.மு.கழகம் அறிவித்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 13 முறை சிறை சென்றுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வின் மூத்த முன்னோடியும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான குளித்தலை அ.சிவராமன் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.இளமைக்காலம் முதலே கழகத்தின் மீது ஆர்வம் கொண்ட அ. சிவராமன் 1971 முதல் குளித்தலை நகரச் செயலாளராக 18 ஆண்டுகளும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத் தொண்டரணி அமைப்பாளராகவும் பணியாற்றினார்.
குளித்தலையில் தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, அன்றைய திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் அன்பிலார் தலைமையில், குளித்தலை காவிரி ஆற்றங்கரையில் வெள்ளி விழா நடத்தி 60 பவுன் தங்க நாணயங்களை நகரச் செயலாளராக வழங்கிய தீவிர கலைஞர் பற்றாளர்தான் சிவராமன். தலைவர் கலைஞர் மீது கொண்டிருந்த அதே தூய அன்பை என் மீதும் வெளிப்படுத்தி வந்தார்.
தி.மு.கழகம் அறிவித்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 13 முறை சிறை சென்றுள்ளார். 1989 சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பினையும் பெற்றார்.
குளித்தலை சிவராமன் நீண்டகாலமாகத் தடம் மாறாமல் பயணித்து வந்ததற்கான அங்கீகாரமாக, இந்த ஆண்டு கரூரில் நடைபெறவுள்ள கழக முப்பெரும் விழாவில், 'பாவேந்தர் பாரதிதாசன்' விருது பெறத் தேர்வாகியிருந்தார். நேரில் கண்டு அவருக்கு விருதினை வழங்கி, அவர் கரம் பற்றிக் கொள்ள ஆவலுடன் நான் காத்திருந்த நிலையில், நம்மையெல்லாம் துயரில் ஆழ்த்தி சிவராமன் மறைந்துவிட்டார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், தாசில்தார், மீன்வளத்துறை உள்ளிட்டோருக்கு மனு அளித்தனர்.
- இதுவரை எந்த அறிவிப்பும் வராததால், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 100-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. சுமார் 600 உறுப்பினர்களை கொண்ட, பெஸ்தவர் மீனவர் சங்கத்தின் மூலம், அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மற்றும் சுற்று வட்டார ஏரிகளில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்கும் உரிமம், கடந்த மாதம் 22ம் தேதியோடு முடிவடைந்தது.
இந்நிலையில், தந்தை பெரியார் உயிரின சரணாலயத்துக்குள் வரட்டுப்பள்ளம் அணை இருப்பதாக கூறி, மாவட்ட வனத்துறையினர், மீன்பிடிக்க திடீரென அனுமதி மறுத்தனர்.
இதனால் வரட்டுப்பள்ளம் அணையில் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாத சூழ்நிலையால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழியில்லை எனக்கூறி, முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், தாசில்தார், மீன்வளத்துறை உள்ளிட்டோருக்கு மனு அளித்தனர்.
மனு சம்பந்தமாக எந்தவிதமான, நடவடிக்கையும் இல்லாததால், கடந்த 25-ந்தேதி, குடும்பத்துடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, தாசில்தார் கவியரசு, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், தாலுகா அலுவலகத்தில், மீனவர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், இரண்டு நாட்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், போராட்டத்தை மீனவர்கள் தற்காலிமாக கைவிட்டனர். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வராததால், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி, இன்று காலை, அந்தியூரில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட மீனவர்களின் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், 50-க்கும் மேற்பட்டோர் கொடியை கையில் ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.
மீனவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- 2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார்.
- தேர்தல் ஆணையம் எப்போதும் பொம்மையாக தான் செயல்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
மதுரையில் நடைபெற்ற த.வெ.க. 2-வது மாநில மாநாடு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குறித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
2006 தேர்தலில் விஜயகாந்த் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டார். அதே போல 2026 தேர்தலில் விஜய் தனித்து நின்றால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
தேர்தல் ஆணையம் எப்போதும் பொம்மையாக தான் செயல்படுகிறது. வாக்கு திருட்டு தொடர்பாக இந்தியா முழுக்க சீர்திருத்தம் நடைபெற வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பது, ஓட்டு திருட்டு, கள்ள ஓட்டு எல்லாமே சரி செய்ய வேண்டும்.
தே.மு.தி.க.விற்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.
கூட்டணி, விஜய் பற்றி கேள்வி கேட்டால் இனிமேல் பதில் சொல்ல மாட்டேன். மக்கள் பிரச்சனை குறித்து கேள்வி கேளுங்கள்.
மக்களுக்காக தான் அரசியல், மக்களுக்காக தான் ஆட்சி, மக்கள் நல்லா இருந்தா தான் நாடு நல்லா இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
- ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் அதனை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் முகாம்கள் நடத்தி மக்களிடம் மனுக்களை பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இம்முகாமில் தரப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஆவணங்களில் பெயர் திருத்தம், பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றுக்கான மனுக்களை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்கள் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆற்று நீரில் மிதந்து வந்த மனுக்களை சேகரித்த போலீசார் அதனை ஆற்றில் வீசியவர்கள் யார்? என விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை அருகே கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் பகுதிகளில் நடந்த முகாம்களில் பெற்றப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளன. ஆற்றில் மிதக்கும் மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
- பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்திய அவர் ஆடு மாடுகளின் மாநாட்டையும் நடத்தினார்.
- மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள் வளர்ப்பு, இயற்கை விவசாயம் உள்ளிட்டவை பற்றி எப்போதுமே அக்கறையோடு பேசி வருபவர் ஆவார்.
அந்த வகையில் பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்திய அவர் ஆடு மாடுகளின் மாநாட்டையும் நடத்தினார்.
இந்த நிலையில் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் கூட்டு சாலையில் சீமான் நாளை காலை 10 மணிக்கு மரங்களுடன் பேசுகிறார். அங்குள்ள மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

'மரங்களோடு பேசுவோம், மக்களுக்காக பேசுவோம்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீமானுடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டையொட்டி சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று தோட்டத்தில் உள்ள மரங்களை முத்தமிட்டு மகிழ்ந்தார். அப்போது ஒரு மரத்தின் கிளையை பிடித்த படி என்ன... உனக்கு தண்ணி ஊற்றினார்களா? சாப்பாடு போட்டார்களா? என்று கேட்டு பேசுவார். அந்த வீடியோக்களையும் நாம் தமிழர் கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.
- பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
- நாளைய தினம் ஜெர்மனி, இங்கிலாந்து ஒரு வார கால பயணம் செல்கிறேன்.
சென்னை நீலாங்கரையில் தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கலைஞர் மீதும், தி.மு.க. மீதும், என் மீதும் பற்று கொண்டவர் என்.ஆர்.இளங்கோ.
* என்.ஆர்.இளங்கோ அரசு வழக்கறிஞராக பணியாற்ற வாய்ப்பு தந்தவர் கலைஞர்.
* தேர்தல் காலத்தில் வழக்கறிஞர் அணியை தயார் நிலையில் வைத்திருப்பார் என்.ஆர்.இளங்கோ.
* பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
* வாக்குத்திருட்டு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
* பீகார் போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
* நாளைய தினம் ஜெர்மனி, இங்கிலாந்து ஒரு வார கால பயணம் செல்கிறேன்.
* இதுவரை நான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
* ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் நோக்கம் குறித்து நாளை தெரிவிக்கிறேன்.
* ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






