என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புதிய தோற்றத்துடன் எழும்பூர் ரெயில் நிலையம் உருவாகிறது
- ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கப்படுகிறது.
- மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்கள் வசதியாக நிறுத்த பிரமாண்டமாக பார்க்கிங் உருவாகிறது.
சென்னை:
சென்னையின் பாரம்பரிய கட்டிடத்தின் அடையாளமாக விளங்கும் எழும்பூர் ரெயில் நிலையம் மறு சீரமைக்கப்படுகிறது. அதன் எழில்மிகு தோற்றம் மாறாமல் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்ய திட்டமிட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
எழும்பூர் ரெயில் நிலையத்துடன் மெட்ரோ ரெயில் நிலையம் இணைக்கப்பட்டுள்ள நிலையில் மாநகர பஸ் வசதி, கார், ஆட்டோ போன்றவை எளிதாக பயணிகளை ஏற்றி, இறக்கி செல்லக்கூடிய வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
ரெயில் பயணிகளுக்கு தரமான உணவு குறைந்த விலையில் கிடைக்க ஓட்டல்கள், ஷாப்பிங் செய்ய வணிகப் பகுதி, கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த பல அடுக்கு பார்க்கிங் வசதி தயாராகிறது.
ரெயில்கள் வருகை மற்றும் புறப்பாடுக்கான கட்டிடம், தரை தளம் மற்றும் 3 அடுக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. ரெயில்கள் வருகை மற்றும்புறப்பாடுக்கு தனித்தனி பிரத்யேக பகுதிகள் ஒதுக்கப்படுகிறது. விமான நிலையத்திற்கு பயணிகளுக்காக சிறப்பு வழியும் அமைக்கப்படுகிறது.
ரெயில் நிலையத்தின் உட்பகுதியில் விசாலமான இடம் ஒதுக்கப்படுகிறது. காந்தி இர்வின் சாலையிலும் பூந்தமல்லி சாலையிலும் 5 அடுக்கு பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோக்கள் வசதியாக நிறுத்த பிரமாண்டமாக பார்க்கிங் உருவாகிறது.
பயணிகள் நடந்து செல்வதற்கு உயரமான நடைபாதை அமைக்கப்படுகிறது. பிளாட்பாரங்களை கடக்கவும், சாலைக்கு செல்ல நடை மேம்பாலமும் அமைக்கப்படுகிறது. இது தவிர பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் எளிதாக செல்ல எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் வசதியும் புதிதாக நிறுவப்படுகிறது. ரெயில் நிலையத்தில் இருந்து எளிதாக வெளியேறி பஸ், ஆட்டோ, கார்களில் செல்லவும் அதே போல ரெயில் நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பயணிகளை இறக்கி செல்லவும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இது தவிர புதிதாக பார்சல் அலுவலகம், ரெயில்வே மெயில் சர்வீஸ் அலுவலகம் பூந்தமல்லி சாலை பகுதியில் கட்டப்படுகிறது. துணை மின்நிலையம், புதிய ரெயில்வே குடியிருப்புகளின் தரம் உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக லிப்ட் வசதி, எஸ்கலேட்டர், குளர்ச்சியான குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்றவை கட்டப்படுகிறது.
எழும்பூர் ரெயில் நிலையத்தின் குடிநீர் தேவையை சமாளிக்க வடக்கு பகுதியில் பிரமாண்ட குடிநீர் தொட்டி "சம்ப்" தரைக்கு அடியில் கட்டப்படுகிறது. இங்கிருந்து ரெயில்களுக்கு குடிநீர் நிரப்பும் வசதியும் அளிக்கப்படுகிறது.






