என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது.
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி உள்ளார்.
சென்னை:
அரசு பள்ளிகளில் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 1-ந்தேதி தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது. வழக்கமாக மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.
ஆனால் இந்த வருடம் முன் கூட்டியே நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று வரை 80 ஆயிரம் மாணவ-மாணவிகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவர்கள் சேர்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. தொடக்கப் பள்ளியில் 4,959 பேரும் மேல்நிலைப் பள்ளியில் 5,452 பேரும் சேர்ந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 3,890 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,770 பேரும் சேர்ந்து அடுத்தடுத்து முதலிடத்தில் உள்ளனர்.
1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளில் மட்டும் 46,586 பேரும் நடுநிலைப் பள்ளிகளில் 21,853 பேரும் சேர்ந்துள்ளனர். உயர்நிலைப் பள்ளிகளில் 6,287 பேரும், மேல்நிலைப் பள்ளிகளில் 5,350 பேரும் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதற்கான அனைத்து பணிகளையும் வேகப்படுத்தி உள்ளார்.
- மேல்சபை எம்.பி.பதவி தொடர்பாக அ.தி.மு.க. தரப்பில் இருந்து இன்னும் சாதகமான பதில் ஏதும் வரவில்லை என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- அடுத்த வாரம் மீண்டும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்கிற மன நிலைக்கு சென்று உள்ளனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவதை தே.மு.தி.க. உறுதி செய்துள்ளது.
கடந்த 1-ந்தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து பேசினர். அப்போது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதை தொடர்ந்து கடந்த 6-ந்தேதி அன்று தே.மு.தி.க. குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு சென்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். இந்த சந்திப்புக்கு பின்னர் பேட்டி அளித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தெரியவரும் என்றும் எதிர் பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக நேற்று பேட்டி அளித்த பிரேமலதா, கூட்டணி பற்றி தே.மு.தி.க. இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று கூறி புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார். தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல்சபை எம்.பி.பதவியை கட்டாயம் தர வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் கேட்டிருப்பதாகவும் இதில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாகவும் பிரேமலதா கூறியிருந்தார். இதனால் அ.தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணியில் புதிய புகைச்சல் உருவாகி உள்ளது.
இதையடுத்து அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தை தள்ளிப் போயுள்ளது. மேல்சபை எம்.பி.பதவி தொடர்பாக அ.தி.மு.க. தரப்பில் இருந்து இன்னும் சாதகமான பதில் ஏதும் வரவில்லை என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அடுத்த வாரம் மீண்டும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்கிற மன நிலைக்கு சென்று உள்ளனர்.
இதற்கிடையே இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை தே.மு.தி.க.வினர் மறுத்தனர்.
இது தொடர்பாக தே.மு.தி.க. தரப்பில் கேட்டபோது, எங்கள் கட்சியின் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள் இருவர் வெளியூரில் இருக்கிறார்கள். அவர்கள் செவ்வாய்கிழமை சென்னை வருகிறார்கள். அதன் பிறகு பேச்சுவார்த்தை நடைபெறும் என்றனர்.
இதன் மூலம் செவ்வாய் அல்லது புதன்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஒரு மேல்சபை எம்.பி. பதவி வேண்டும் என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பிடிவாதம் காட்டுவதும் கூட்டணி பேச்சுவார்த்தை தள்ளி போக முக்கிய காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
- தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2024-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஆசிரியர் உள்ளிட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை, அப்பணிகளுக்கான ஆள் தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் மாதம், போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் மாதம் ஆகியவை குறித்த விவரங்கள் கடந்த ஜனவரி மாதம் 10-ம் நாள் வெளியிடப்பட்டன.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்படும். அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் மாதத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இது குறித்த அறிவிக்கையை எதிர்பார்த்து தகுதியுடைய தேர்வர்கள் காத்திருந்தனர்.
ஆனால், பிப்ரவரி நிறைவடைந்து மார்ச் மாதத்தில் இரண்டாவது வாரமும் பிறந்துவிட்ட நிலையில் அறிவிக்கை வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாட்டில் உயர்கல்வியின் தரத்தையும், வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. இதை உணர்ந்து அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள 7500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிக்கையை, மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு முன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதிய வீடு வழங்கப்படுகிறது.
- வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்.
சென்னை :
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிடம் கடந்த 2000-ஆம் ஆண்டில் "ஸ்த்ரிசக்தி" புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ சின்னப் பிள்ளை அவர்கள். அவர் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தியினை கேள்விப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தினார்.
இதன்படி பத்மஸ்ரீ சின்னப் பிள்ளைக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா வழங்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ சின்னப்பிள்ளைக்கு புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பழங்குடியின மக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர்.
- அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டாண்ட் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் "தனித்திறமையை வளர்த்து முன்னேற்றத்தை விரிவுபடுத்துங்கள்" என்கிற வாசகத்தை மையமாக கொண்டு, கோத்தகிரி குஞ்சப்பனை இருளர் பழங்குடியின கிராமத்தில், கலெக்டர் அருணா தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து பெண்கள், குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலெக்டர் அருணா மற்றும் கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.
பின்னர் பழங்குடியின மக்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து அதிகாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த செல்பி ஸ்டாண்ட் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதில் மாவட்ட சமூகநல அலுவலர் பிரவீனாதேவி, கோத்தகிரி தாசில்தார் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
- ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன.
- மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:
நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மெத்த பெட்டமைன் என்கிற போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு டெல்லியில் இருந்து கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளும், டெல்லி போலீசாரும் விசாரணை நடத்தி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு உலர் தேங்காய் பொடியில் மறைத்து, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான சூடோ பெட்ரினை அனுப்பி வைத்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேற்கு டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியில் உள்ள குடோன்களில் கடந்த மாதம் 15-ந்தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 50 கிலோ சூடோ பெட்ரின் போதைப்பொருள் சிக்கியது.
இந்த கடத்தலில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரகுமான், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ அளவில் சூடோ பெட்ரின் போதைப்பொருளை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி ஆகும்.
இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு தமிழகத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் (வயது 36) முக்கிய மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தி.மு.க. அயலக அணியிலும் பொறுப்பில் இருந்தார். ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதை தொடர்ந்து தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து ஜாபர் சாதிக்கை கைது செய்வதற்காக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை வந்தனர். சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரை தேடினார்கள்.
ஆனால் போலீசார் தேடி வருவதை அறிந்ததும் அவர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினார்கள். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார்.
இந்த நிலையில் ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றினார்கள். அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவுகளையும் கைப்பற்றினார்கள். அப்போது அவர் 3 செல்போன்களை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த போன்களுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அவ்வப்போது போனை ஆன் செய்து ஒரு சிலருடன் பேசி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை தென் மாநிலங்களில் தேடினார்கள். மேலும் மற்றொரு தனிப்படையினர் அவரை வடமாநிலங்களில் தேடினார்கள். அவர் இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கென்யா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்து உள்ளார்.
எனவே அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க விமான நிலையங்களில் போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் ஒட்டினார்கள். இதையடுத்து ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முடியாத வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் பிடி இறுகியது.
இந்த நிலையில் ஜாபர் சாதிக், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு அந்த வீட்டை டெல்லியை சேர்ந்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். பின்னர் நள்ளிரவில் ஜாபர் சாதிக்கை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் உடனடியாக அவரை டெல்லிக்கு அழைத்து சென்றனர்.
இது தொடர்பாக இன்று பிற்பகலில் டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பத்திரிகையாளர்களிடம் விரிவான தகவல்களை வெளியிட உள்ளனர். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு யார் யார் பின்னணியில் இருந்தனர் என்பது தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
- பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
- சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே கணியக்குளம் பஞ்சாயத்துக் குட்பட்ட உழவன் கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகிறது.
அந்த பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சிகள் அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமிரா அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளை தனியாக வெளியே விடக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் 2 கன்றுகுட்டிகள் இறந்து கிடந்தது. மேலும் ஆடுகளும் உயிரிழந்திருந்தது.
எனவே சிறுத்தை தான் அடித்து கொன்று இருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கருதுகிறார்கள். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
- நகரங்களை காட்டிலும், புறநகர் பகுதிகளான கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி களமிறங்கி வேலை செய்கின்றனர்.
- பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றிக்கனியை பறிக்கும் நோக்கில் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க., வினர் பல்வேறு தேர்தல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். நகரங்களை காட்டிலும், புறநகர் பகுதிகளான கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கவனம் செலுத்தி களமிறங்கி வேலை செய்கின்றனர். அதன்படி தினமும் மண்டலம், சக்தி கேந்திரம், பூத் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
தொழில் நகரமான திருப்பூரில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட், ராஜஸ்தான் என பல்வேறு வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு தங்கி பல்வேறு பனியன் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநில தொழிலாளர்கள், தொழில் துறையினரின் ஓட்டுக்களை வளைக்கும் நோக்கில், பா.ஜ.க., பிறமொழி பிரிவினர் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அவ்வகையில், சில நாட்களுக்கு முன் திருப்பூரில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழில்துறையினருடன் கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்.
அதில், ராஜஸ்தான் மாநில எம்.பி., ராஜேந்திரகுமார் கெலாட் பங்கேற்று கலந்துரையாடினார். இரண்டாம் கட்டமாக, மற்றொரு கூட்டத்தை பா.ஜ.க.,வினர் வரும் 12-ந் தேதி திருப்பூரில் ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து பா.ஜ.க., நிர்வாகிகள் கூறியதாவது:-திருப்பூரில் வாழும் வடமாநில தொழிலாளர்களை சந்தித்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி வருகின்றோம். இப்பணி பா.ஜ.க., பிறமொழி பிரிவினர் நடத்தி வருகின்றனர். தற்போது, இரண்டாம் கட்டமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். திருப்பூருக்காக நீங்கள், உங்களுக்காக திருப்பூர், எங்களுடன் நீங்கள், உங்களுடன் நாங்கள் என பல தலைப்புகளில் அவர்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
- இன்று இரவு அம்மன் ஆண் பூதவாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப் பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கி சக்தி கரக ஊர்வலம் நடைபெற்றது.
விழாவின் 2-ம் நாளான இன்று காலை மயானக் கொள்ளைவிழா நடை பெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
உற்சவ அம்மனுக்கு ஆக்ரோஷ அங்காளி (மயானக் காளி) அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு ஊரின் முக்கியப் பிரமுகர்கள் மேள தாளம் முழங்க கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். பின்பு பூஜைகள் நடை பெற்றவுடன் காலை 10.45 மணிக்கு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் உற்சவ அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக வந்து சிம்ம வாகனத்தில் அமர்ந்தார். 11 மணிக்கு பிரம்ம கபாலம் (கப்பரை முகம்) அம்மனுக்கு முன்பாக பூசாரிகள் ஆடியபடி மயானம் நோக்கி சென்றனர். தொடர்ந்து அம்மனும் மயானத்தில் எழுந்தருளினார். பின்பு அம்மனுக்கு தீபாரதனை காண்பித்தவுடன் பக்தர்கள் மயானத்தில் குவித்திருந்த சுண்டல் , நவதானியங்கள், காய்கறிகள் பழங்கள்,சில்லறை நாணயங்கள் ஆகியவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர். இதுவே மயானக் கொள்ளை என்று அழைக்கப்படுகிறது.
- கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் உள்ளிட்ட கோவில்களில் கிரிவல பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
- கிரிவலப்பாதையில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நேற்று இரவு முழுவதும் அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவில் கருவறையின் மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவருக்கு நள்ளிரவு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
இதனை தொடர்ந்து தாழம்பூ சாத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல லட்சம் பக்தர்கள் ஓம் நமசிவாய எனும் சிவ மந்திரத்தை உச்சரித்தவாரே பக்தி பரவசத்துடன் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து வணங்கினர்.
கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் உள்ளிட்ட கோவில்களில் கிரிவல பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
கிரிவலப்பாதையில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரே இரவில் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்ததால் நகரின் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தெருக்களிலும், சாலையோரங்களில் 4 சக்கர வாகனத்தை நிறுத்தி சென்ற வெளியூர் பக்தர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களால் சில இடங்களில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 12 மணி நேர சிவராத்திரி விழாவை உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி கிரிவலம் வந்த பக்தர்களும் கண்டு ரசித்தனர்.
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நகர் முழுவதும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, சுவாமி, அம்பாள் வீதி உலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருவிழாவின் 8-வது நாள் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை 9 மணிக்கு நடராஜர் கேடயத்தில் புறப்பாடாகி வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி தேரில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. மேலும் சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து, இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் எழுந்த ருளினர். கிழக்கு ராஜ கோபுரம் பகுதியில் இருந்து தேரோட்டம் நடந்தது. சிவ கோஷத்துடன் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் ஆடி, அசைந்து வந்த தேரை பக்தி பரவசத்துடன் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தை முன்னி ட்டு கோவில் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நான்கு ரத வீதிகளிலும் இன்று காலை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- யாரும் தி.மு.க.வுடன் பேச வேண்டாம். அவர்களாக வரட்டும். தொகுதி எண்ணிக்கையை சொல்லட்டும்.
- இறுக்கமான சூழ்நிலையை புரிந்து கொண்ட தி.மு.க. தலைமை கனிமொழி எம்.பி. மூலம் பேச்சுவார்த்தையை தொடர்ந்துள்ளது.
சென்னை:
நீண்ட இழுபறிக்கு பிறகு தி.மு.க.-காங்கிரஸ் இடையே சுமூகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கு திரைமறைவில் நடந்த கசப்பு மற்றும் இனிப்பான சம்பவங்கள் பற்றி டெல்லி வட்டாரங்கள் கூறியதாவது:-
டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தான் ஆரம்பத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது முதலில் 5 பிளஸ் 1 என்பதில் இருந்து ஏலம் தொடங்கியது. 6 பிளஸ் 1 என்று உறுதிப்படுத்தியதும் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பதற்கில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
அதை கேட்டதும் இதற்கு மேல் ஒதுக்க முடியாது. நீங்கள் இழுத்தடித்தால் உங்களுக்குதான் சிக்கல். நீங்கள் பார்ப்பது கலைஞர் அல்ல. தளபதி. நீங்கள் உடன்படாவிட்டால் தளபதி உறுதிப்படுத்தி விட்டு அவர் வழியில் போய்க்கொண்டே இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

டி.ஆர்.பாலுவின் இந்த கறார் பேச்சு டெல்லி தலைவர்களை ஆத்திரமூட்டி இருக்கிறது. அதன் புறகு தான் யாரும் தி.மு.க.வுடன் பேச வேண்டாம். அவர்களாக வரட்டும். தொகுதி எண்ணிக்கையை சொல்லட்டும். அதன் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.
மேலிடத்தின் இந்த கசப்பான அனுபவத்தை தான் எங்களுக்குள் எந்த கசப்பும் இல்லை. இனிப்பாகவே இருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை சூசகமாக அடிக்கடி குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
இறுக்கமான சூழ்நிலையை புரிந்து கொண்ட தி.மு.க. தலைமை கனிமொழி எம்.பி. மூலம் பேச்சுவார்த்தையை தொடர்ந்துள்ளது.
டெல்லியில் நல்ல நட்புடன் இருக்கும் கனிமொழிதான் தனது பேச்சு சாதுர்யத்தால் கசப்பை மறந்து இனிமையான சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்.
அவருடன் நடந்த பேச்சில்தான் கூட்டணி இனிப்பாக முடிந்து இருக்கிறது என்றனர்.






