என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி காவல்துறையினர் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மொழி புரிதல் இல்லாததாலும், தவறான புரிதல் உள்ளிட்டவையால் தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது
கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் மற்றும் மாதப்பட்டி பகுதியில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்களை சந்தித்த ஊர் மக்கள், தவறான புரிதலால் தாக்கிவிட்டதாகவும், எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சிகிச்சைக்குத் தேவையான பணம் மற்றும் பழங்களையும் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
"கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செம்படமுத்தூர், துறிஞ்சிப்பட்டி மற்றும் தாளாப்பள்ளி கிராமத்தில் கடந்த 6-ம் தேதியன்று குழந்தைகள் கடத்த போவதாக வதந்தி பரவியது. இதனை அடுத்து, வடமாநிலத்தவர்கள் 5 பேரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் 5 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த கமல் ஹூசைன்(30), நிசாம் அலி(26), முகம்மது மெசுதீன்(30), ஆஷ் முகமது(27) சோகித் அலி என தெரிந்தது. இவர்கள் 5 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தில் தங்கி, ஆட்டோவில் சென்று குப்பை, மது பாட்டில்களை சேகரித்து, அதில் கிடைக்கும் வருமானம் மூலம் வாழ்ந்து வந்தது தெரிந்தது.
வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி காவல்துறையினர் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் பெரியதாளப்பள்ளி ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் ஆகியோர் நேற்று இரவு (மார்ச் 8) கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, காவல் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவல்துறையினருடன் , கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் வடமாநில இளைஞர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது, "மொழி புரிதல் இல்லாததாலும், தவறான புரிதல் உள்ளிட்டவையால் தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது. உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அச்சம் அடைய வேண்டாம். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம்" என ஆறுதல் கூறினர். மேலும், சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களுக்கு நிதி உதவியும், பழங்கள் போன்றவற்றை அவர்கள் வழங்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, " இது போன்ற போலியான செய்திகளை கேட்டறிந்து வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீதும், போலியான செய்திகளை வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
அவ்வாறு சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் பொதுமக்களுக்கு தெரியவந்தால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். எனவே, பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்பி தாக்குதல் நடத்தக் கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென குறைத்தது.
- பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? என அவர் கேள்வி எழுப்பினார்.
தூத்துக்குடி:
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மகளிர் தின பரிசாக வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென குறைத்துள்ளது. மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் வருவதாலேயே மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது என தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிலிண்டர் விலையை எப்பொழுதோ குறைத்திருக்க முடியும். தேர்தல் வரும் சமயத்தில் தான் சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளனர். அதுவும் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? பெண்கள் சமையல் அறையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயமாக இதை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.
- ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்றவர் மாயம்.
- சமையல் பணிக்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக கடலில் விழுந்தார்.
அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குளச்சல் கிராமத்தை சேர்ந்த யாசர் அலி என்பவர் கொச்சி அருகே அரபிக் கடலில் படகில் இருந்து தவறி விழுந்து மாயமானார்.
ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு சமையல் பணிக்காக சென்ற யாசர் அலி கடலில் தவறி விழுந்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், குளச்சல் "அ" கிராமம், காமராஜ் சாலையைச் சேர்ந்த முஹைதீன் யாசர் அலி (வயது 32) த/பெ.இப்ராஹீம் என்பவர் கடந்த 08.01.2024 அன்று கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி துறைமுக கடலோர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அரபிக் கடலில் 163 கி.மீ. வடமேற்கு திசையில் ஆழ்கடலில் படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் சமையல் பணிக்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.
அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இதுவரை கண்டுபிடிக்க இயலாமல் காணாமல் போயுள்ளார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள திரு.முஹைதீன் யாசர் அலி அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வெயில் நேரம் தொடங்கி விட்டதால் மக்கள் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
- உடலில் நீர் சத்து குறையாத வகையில் தினமும் 4 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொடர்ந்து 100 டிகிரி மேல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.
நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 103 டிகிரி வெயில் பதிவானது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை வாட்டி வதைக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் இந்த நேரத்தில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மதிய நேரம் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு போன்றவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெப்ப காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இரவு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி இயங்கினாலும் வெப்பம் காரணமாக புழுக்கம் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், மோர் ஆகியவற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் இது தொடர்பான வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் தர்பூசணி பழ வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வெயில் நேரம் தொடங்கி விட்டதால் மக்கள் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உடலில் நீர் சத்து குறையாத வகையில் தினமும் 4 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும். குளிர்பானங்கள், துரித உணவுகளை தவிர்த்து நீர் மோர் மற்றும் நீர் சத்துள்ள காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போதைய வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் மே மாதத்தில் என்ன செய்யப் போகிறோம் என ஈரோடு மக்கள் புலம்பி வருகின்றனர்.
- பாலாறு அணை கட்ட ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிக்கிறார். இப்படி தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிபோகிறது.
- முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது அதற்கு கண்டனத்தை தெரிவிக்கவில்லை.
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானத்தை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டினுடைய திட்டங்களால் பயனடைந்தவர்களை தொடர்பு கொள்ள கருத்துக்களை கேட்க 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
எடப்பாடியார் இது குறித்து, தமிழ்நாட்டு மக்களுடைய எண்ணங்களை எடுத்து வைத்துள்ளார். 'நீங்கள் நலமா' என்று கேட்கும் முதல்வரே, அனைத்து நலத்திட்டங்களையும் நிறைவேறாமல் போச்சு, சட்டம் ஒழுங்கு சீரழிந்து போச்சு, சொத்து வரி, குடிநீர்வரி, மின் கட்டணம் உயர்ந்து போச்சு, விலைவாசி விண்ணை தொடுகிற அவல நிலைக்கு தமிழகம் ஆளாச்சு, போதை பொருள் அதிகமாச்சு, தமிழக வாழ்வாதார உரிமை பறிபோச்சு என்று இப்படி வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை.
தேர்தலுக்கு, தேர்தல் மட்டுமே 'நீங்கள் நலமா' என்று கேட்கிற முதல்வரே, இன்றைக்கு மக்கள் நீங்கள் கொடுத்த 520 வாக்குறுதிகளில் நிறைவேற்றாத வாக்குறுதிகள் எத்தனை என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மனித நேயம் உள்ள, மனசாட்சி உள்ள மனிதராக இருப்பவர்களிடம் 'நீங்கள் நலமா' என்று கேட்டால் அவர்கள் எப்படி நலம் என்று சொல்லுவார்கள்.
கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் நிதி ஒதுக்கீடு செய்தார்கள் அது குறித்து வாய் திறக்கவில்லை. முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது அதற்கு கண்டனத்தை தெரிவிக்கவில்லை.
பாலாறு அணை கட்ட ஜெகன்மோகன் ரெட்டி முயற்சிக்கிறார். இப்படி தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகள் எல்லாம் பறிபோகிறது. அது காப்பாற்ற எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்திலேயே கெட்டுப்போன சட்ட ஒழுங்கை காப்பாற்றவில்லை, போதை பொருள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்தவில்லை, கொலை கொள்ளை கற்பழிப்பு என்று தமிழகம் இன்றைக்கு அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
அரசின் நலத்திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை, பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் ''நீங்கள் நலமா'' என்று கேட்டால் எப்படி மக்கள் பதில் சொல்வார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு தக்க பதிலடியை மக்கள் தருவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாட்டில் பணத்தை மோசடி செய்து வைத்துள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சி நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- பஸ்களில் ஓரளவாவது பயணிகள் வருகை இருந்தால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே புத்தேரி ஊராட்சி பகுதியில் சாலை பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போதை பொருட்களை பொருத்தமட்டில் அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மாநில அரசு மிக உறுதியாக இருக்கிறது. அதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமரி மாவட்டத்தில் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஏராளமான கஞ்சா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த விவகாரத்தில் எந்த சமரசமும் இன்றி குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
எதிர்க்கட்சிகளை முடக்குவதில் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. மீண்டும் அதை நிரூபிக்கும் வகையில் அவர்களின் செயல்பாடு இருந்து வருகிறது. இந்த நாட்டில் பணத்தை மோசடி செய்து வைத்துள்ள பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சி நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்கள் தாக்கி வருகிறார்கள். இது ஜனநாயகத்தை படுகுழிக்கு கொண்டு செல்லும் செயலாகும். குமரி மாவட்டத்தில் ஏராளமான புதிய வழித்தடங்களில் புதிதாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. ஒரு சில வழித்தடங்களில் பஸ்களை இயக்கும்போது அதற்கு போதுமான வரவேற்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. பஸ்களில் ஓரளவாவது பயணிகள் வருகை இருந்தால் மட்டுமே பஸ்களை இயக்க முடியும். கோவில் திருவிழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா முழுவதும் மூன்றரை கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதனுடைய பட்டா பெண்கள் பெயரில் தான் வழங்கப்படுகிறது.
- புதிய பாராளுமன்றத்தில், சிறப்பு கூட்டத்தில் ஒரே ஒரு மசோதா தான் தாக்கல் செய்யப்பட்டது. அது வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக்கப்பட்டது.
ஆலந்தூர்:
மத்திய இணை மந்திரி எல்.முருகன் கோவைக்கு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக நம்முடைய சகோதரிகள், தாய்மார்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு பல நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக இந்தியா முழுவதும் மூன்றரை கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதனுடைய பட்டா பெண்கள் பெயரில் தான் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச கழிப்பிடமும் கட்டி தரப்பட்டுள்ளது. மேலும் புதிய டிரோன் டெக்னாலஜி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3 கோடி பேரை லட்சாதிபதியாக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் இலக்கு. அதுவே பாரத பிரதமருடைய இலக்காக இருந்து வருகிறது.
அதேபோல புதிய பாராளுமன்றத்தில், சிறப்பு கூட்டத்தில் ஒரே ஒரு மசோதா தான் தாக்கல் செய்யப்பட்டது. அது வரலாற்று சிறப்புமிக்க சட்டமாக்கப்பட்டது. அது பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இப்படி பெண்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த, முன்னேற்ற பிரதமர் நரேந்திர மோடி வேலை செய்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.
- தி.மு.க. கூட்டணிக்காக அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறோம் என்றார் கமல்ஹாசன்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று மதியம் 1 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று அழைத்துச் சென்றார். பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. அந்த உடன்பாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கமல்ஹாசனும் கையெழுத்திட்டனர்.
மேலும் இந்த உடன்பாட்டில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து விட்டு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. எங்கள் கட்சி சார்பிலும் வேறு யாரும் போட்டியிடவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எங்களது முழு ஒத்துழைப்பு இருக்கும். இது பதவிக்கான விஷயம் இல்லை. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கை குலுக்க வேண்டுமோ அங்கு கை குலுக்கி இருக்கிறேன் என தெரிவித்தார்.
- பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்யும்.
- அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் கமல் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வது எனவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
- போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
- தி.மு.க.வுக்கு அது கடும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு இன்று ஆலோசனை நடத்தியது. கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லியில் போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் தி.மு.க. அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்தும் விசாரணையில் ஜாபர் சாதிக் நிச்சயம் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பார்.
அப்போது போதைப்பொருள் கடத்தலில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்ற உண்மைகள் வெளிவரும். இதன் மூலம் தி.மு.க. கலகலத்து போகும். போதைப்பொருள் கடத்தல் விவகாரம் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். தி.மு.க.வுக்கு அது கடும் பின்னடைவை ஏற்படுத்துவதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீமானை கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. மீண்டும் முயற்சித்து வருவதாக மீண்டும் தகவல்கள் வெளியானது.
- நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண் வேட்பாளர்களும் 20 ஆண் வேட்பாளர்களும் களம் இறங்குகிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கு ஏற்கனவே தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர் சீமானிடம் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.
இதுபற்றி சீமானே வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் தனித்து போட்டியிடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சீமானை கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. மீண்டும் முயற்சித்து வருவதாக மீண்டும் தகவல்கள் வெளியானது. ஆனால் நாம் தமிழர் கட்சியினர் இதனை மறுத்துள்ளனர். இது தொடர்பாக அந்த கட்சி நிர்வாகிகள் கூறும்போது, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்த பிறகும் நாங்கள் கூட்டணி சேரப்போவதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக சீமானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. கூட்டணி சேரப்போவதாக தவறான தகவல்களை, வதந்தியை பரப்புகிறார்கள். ஒருவேளை அது போன்ற தகவலை பரப்புபவர்கள் எங்களுக்காக பேசிக்கொண்டிருக்கிறார்களோ? 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண் வேட்பாளர்களும் 20 ஆண் வேட்பாளர்களும் களம் இறங்குகிறார்கள். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் விரைவில் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய உள்ளேன். கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதில் முடிவு கிடைத்தவுடன் தேர்தல் பணிகளில் விரைவாக ஈடுபடுவோம்.
இவ்வாறு சீமான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
- திருக்கோவிலூர் தொகுதிக்காக தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- விழுப்புரம் கலெக்டர் பழனி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
விழுப்புரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ., பதவி பறிபோனதால், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அப்போதே திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் தொகுதிக்காக தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் சீல் வைத்து மூடப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வெளியில் எடுத்து திருக்கோவிலூருக்கு அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. விழுப்புரம் கலெக்டர் பழனி முன்னிலையில் நடைபெற்ற இந்த பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
ஏற்கனவே, விளவங்கோடு தொகுதிக்கும் விழுப்புரத்தில் இருந்து மின்னணு வாங்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.






