search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் 103 டிகிரி வெயில் பதிவானது- அனல் காற்றால் பொதுமக்கள் அவதி
    X

    ஈரோட்டில் 103 டிகிரி வெயில் பதிவானது- அனல் காற்றால் பொதுமக்கள் அவதி

    • வெயில் நேரம் தொடங்கி விட்டதால் மக்கள் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
    • உடலில் நீர் சத்து குறையாத வகையில் தினமும் 4 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொடர்ந்து 100 டிகிரி மேல் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.

    நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 103 டிகிரி வெயில் பதிவானது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை வாட்டி வதைக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் இந்த நேரத்தில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மதிய நேரம் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.

    இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு போன்றவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெப்ப காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இரவு நேரங்களில் வீடுகளில் மின்விசிறி இயங்கினாலும் வெப்பம் காரணமாக புழுக்கம் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீர், மோர் ஆகியவற்றை அதிக அளவில் பருகி வருகின்றனர். இதனால் இது தொடர்பான வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதேபோல் தர்பூசணி பழ வியாபாரமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    வெயில் நேரம் தொடங்கி விட்டதால் மக்கள் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உடலில் நீர் சத்து குறையாத வகையில் தினமும் 4 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும். குளிர்பானங்கள், துரித உணவுகளை தவிர்த்து நீர் மோர் மற்றும் நீர் சத்துள்ள காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    தற்போதைய வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் மே மாதத்தில் என்ன செய்யப் போகிறோம் என ஈரோடு மக்கள் புலம்பி வருகின்றனர்.

    Next Story
    ×