என் மலர்
உள்ளூர் செய்திகள்
- விபத்தில் காவலர் ராஜேஷ் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
- காவலர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காலராக பணிபுரிந்துவரும் ராஜேஷ் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் சரகம், சீர்காழி நத்தம் சாலையின் தடுப்பில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும், வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் காவலர் ராஜேஷ் உயிரிழந்துள்ளது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
காவலர் ராஜேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
- தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.
- பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.
ஊட்டி:
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் அனல்வெயில் கொளுத்தி வருகிறது.
இதன்காரணமாக மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு சுற்றுலாபயணிகள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு ஆண்டுதோறும் மக்கள் வருகை இருக்கும். இருந்தாலும் கோடை காலத்தில் அங்கு மக்கள் அதிகம் கூடுவர்.
தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடைசீசனை முன்னிட்டு எண்ணற்ற மலர் நாற்றுகள் நடவுசெய்யப்பட்டு அங்கு தற்போது மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவர்கள் பூங்காவின் மலர் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். அங்கு பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.
ஊட்டி படகு குழாம் இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதி வருகிறது. அங்கு அவர்கள் நீண்டவரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டு, ஊட்டி ஏரியில் உள்ள மிதிபடகு, எந்திர படகு ஆகியவற்றின் மூலம் சவாரிசெய்து, ஏரியின் சுற்றுப்புற பகுதிகளில் இடம்பெற்று உள்ள இய ற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
இதுதவிர தொட்டப்பெட்டா காட்சிமுனையம், லேம்ஸ்ராக் காட்சிமுனை, டால்பின்நோஸ் மற்றும் கோத்தகிரி காட்சிமுனையம் ஆகிய சுற்றுலா பிரதேசங்களிலும் திரளான சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.
குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் கோடை சீசனை முன்னிட்டு அங்குள்ள மலர் மாடங்களில் அலங்கரித்து வைப்பதற்காக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுற்றுலா வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த வண்ணம் இருப்பதால் அங்குள்ள கக்கநல்லா உள்ளிட்ட முக்கிய சோதனைச்சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவந்த வண்ணம் உள்ளன.
- ராஜ்குமார் படுகாயத்துடன் சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது வாஞ்சூர் சோதனை சாவடியில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் ராஜேஷ் நேற்று இரவு தனது தம்பி ராஜ்குமாருடன் மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார்.
அப்போது சீர்காழி புறவழிச்சாலையில் சென்ற போது நத்தம் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜ்குமார் படுகாயத்துடன் சீர்காழி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விபத்தில் இறந்த ராஜேஷ்சுக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
- நிகழ்ச்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
- மாலையில் பல்வேறு ஊர்களில் தலைச்சிறந்து விளங்கும் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உலகின் தொன்மையான ஆன்மீக கலாச்சாரமான தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடி மகிழும் விதமாக 'தமிழ் தெம்பு' என்னும் மண் சார்ந்த பண்பாட்டு கலை திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 17-ம் தேதி வரை தினமும் நடைபெற உள்ளது.
மஹாசிவராத்திரி விழாவை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தமிழர்களின் ஆன்மீகம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய தமிழர் வாழ்வியல் கண்காட்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், ரேக்ளா பந்தயம், நாட்டு மாடுகள் கண்காட்சி மற்றும் சந்தை, பாரம்பரிய உணவு திருவிழா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. மேலும், குதிரை சவாரி, ஒட்டக சவாரி, ராட்டிணம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற உள்ளது.
இந்நிகழ்ச்சி தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். மாலையில் பல்வேறு ஊர்களில் தலைச்சிறந்து விளங்கும் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். முதலாம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் திருப்பூரை சேர்ந்த கலைக் குழுவின் சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இது தவிர விழாவில், கைலாய வாத்தியம், ஆதியோகி திவ்ய தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மேலும், இரண்டாம் நாளான இன்று மதுரையை சேர்ந்த கலை குழுவின் பறை இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதோடு வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நாட்டு மாட்டு சந்தையும், மார்ச் 17 அன்று ரேக்ளா பந்தயமும் நடைபெற உள்ளது.
- அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்காக டி.டி.வி. தினகரனுடன் கைகோர்த்து உள்ள பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து எடப்பாடியை வீழ்த்துவதற்கு வியூகம் வகுத்துள்ளார்.
- கட்சியும் இல்லை. சின்னமும் இல்லை. இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு கொடியும் இல்லாமல், கட்சியும் இல்லாமல் தவித்து வருகிறார். சட்டப் போராட்டங்கள் மூலமாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை எப்படியும் பறித்து விடலாம் என்கிற எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோல்வி அடைய செய்வோம் என்கிற கோஷத்தோடு களமிறங்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.
டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அரசியல் களம் கண்ட ஓ.பன்னீர்செல்வத்தை காலச்சக்கரம் அவருடனேயே கொண்டு சேர்த்து இருக்கிறது என்றால் மிகையாகாது. அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்காக டி.டி.வி. தினகரனுடன் கைகோர்த்து உள்ள பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து எடப்பாடியை வீழ்த்துவதற்கு வியூகம் வகுத்துள்ளார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அரசியல் பயணம் அவருக்கு எளிதாக இருக்கவில்லை. எந்த பக்கம் எப்படி பயணிப்பது என்று தெரியாமல் தவிக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனது தனித்தன்மை பாதிக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார்.
அதே நேரத்தில் தற்போது அவருக்கு கட்சியும் இல்லை. சின்னமும் இல்லை. இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னமான குக்கர் சின்னத்தில் போட்டியிடலாமா அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிடலாமா என்பது பற்றியும் அவர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அணி நிர்வாகிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனுக்களை ரூ.10,000 செலுத்தி பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் இன்று மாலை 6 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
- பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.
- நல்ல அறிவார்ந்த சமூகத்தை வளர்க்க வேண்டும்.
சின்னாளப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக் கழக துணைவேந்தர் (கூடுதல் பொறுப்பு) காமகோடி வரவேற்று பேசினார். பல்கலைக் கழக வேந்தர் அண்ணாமலை பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
விழாவில் 2020-21, 2021-2022, 2022-2023 ஆகிய 3 ஆண்டுகளில் இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பட்டங்கள் மற்றும் பட்டயம், சான்றிதழ் படித்து முடித்த 4230 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
ஆராய்ச்சி படிப்பான பி.எச்.டி. முடித்த 175 பேருக்கும் பல்வேறு பாடங்களில் முதலிடம் பிடித்த 172 பேருக்கு தங்க பதக்கத்தையும், கணித ஆராய்ச்சிப் பணியில் அளப்பரிய சாதனை புரிந்த பல்கலைக்கழக கணிதத்துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் உயரிய விருதையும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழங்கி பேசியதாவது:-
60 ஆண்டுகளில் இந்தியா சிறிய ராக்கெட் தொடங்கி தற்போது சந்திரனில் கால் பதிக்கும் அளவிற்கு சாதித்துள்ளது. இந்தியாவிலேயே தயாரித்து விண்ணுக்கு அனுப்பும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
சந்திராயன்-2-ல் ஏற்பட்ட தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் தான், தற்போது சந்திராயன்-3ன் மூலம் வெற்றி பெற்றுள்ளோம். இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.
சந்திராயன்-3 விண்கலத்தின் வரலாற்று வெற்றி சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. அதன் வெற்றியால் ஏராளமானோர், குறிப்பாக எண்ணற்ற குழந்தைகள் உத்வேகம் அடைந்துள்ளனர் என்பதைக் காண முடிந்தது. இந்தியாவும் இந்தியர்களும் இவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.
இந்தியாவிலேயே முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம் காந்திகிராம பல்கலைக்கழகம் இது கிராமங்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கிராமங்களுக்கு கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளால் தான் வளர்ச்சியை எட்ட முடியும்.
பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். நல்ல அறிவார்ந்த சமூகத்தை வளர்க்க வேண்டும். கடுமையாக உழைப்பது மூலம் நாட்டிற்கு நம்மை அர்ப்பணிப்பு உள்ளவர்களாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பதிவாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
- தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு வழங்கலாம் என அறிவித்தது.
- தொண்டர்களும், நிர்வாகிகளும் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
அ.தி.மு.க.வில் தே.மு.தி.க., பா.ம.க. கட்சிகளை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதனிடையே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு வழங்கலாம் என அறிவித்தது. அதன்படி தொண்டர்களும், நிர்வாகிகளும் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.
இந்நிலையில், விருப்பமனு அளித்தவர்களிடம் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய கட்சிகள் இன்று நேர்காணலை நடத்துகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேர்காணலை நடத்துகிறார்.
அதே போல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தோரிடம் இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெற உள்ளது.
- வேட்பாளராக நின்று மக்களிடம் பேச முடியாத அவர், பிரசாரத்துக்கு வந்து மட்டும் என்ன பயன்?
- கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தாலும், மீண்டும் வந்து மக்களை சந்தித்து இருக்கலாம்.
கோவை:
பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க. கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. மாநிலங்களவையில் மட்டும் ஒரு இடம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
கமல்ஹாசன் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்டபோது, பொதுமக்கள் அணுக முடியாத அளவுக்குதான் இருந்தார். அவருக்கு சரியான பதிலை கோவை தெற்கு தொகுதி மக்கள் அளித்தனர். இப்போது மீண்டும் போட்டியிடும் மனநிலையில் இருந்து மாறியுள்ளார். கோவையில் மூக்கு உடைபட்டாலும் நான் வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். நாங்களும் ஆவலுடன் காத்திருந்தோம். அவர் போட்டியிடாதது எங்களுக்கு ஏமாற்றம்தான்.
தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவேன் என்று சொல்லி வந்தார். ஆட்சி அமைக்க போகிறேன் என்று சொல்லி வந்த கமல்ஹாசன், தனது அரசியல் பயணத்தில் எந்த கட்சியை விமர்சித்தாரோ, அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
வேட்பாளராக நின்று மக்களிடம் பேச முடியாத அவர், பிரசாரத்துக்கு வந்து மட்டும் என்ன பயன்? அரசியல் ஆசைக்காக அந்த பதவியை எடுத்துள்ளார்.
அவர் நட்சத்திர பேச்சாளர். அந்த நட்சத்திர பேச்சாளருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி விலை அவ்வளவுதான். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தாலும், மீண்டும் வந்து மக்களை சந்தித்து இருக்கலாம். இப்போது அவரது அரசியல் சாயம் வெளுத்துவிட்டது.
இவ்வாறு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.
- தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது.
- நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
அறந்தாங்கி:
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 2 மாதங்களில், 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று கடலில் 32 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை கைது இஅலங்கை கடற்படையினர் கைது செய்தது.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக பத்மநாதன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு சொந்தமானவை உள்பட 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறைபிடிக்கப்பட்டவர்களில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் காளியப்பன் (53), அசிலன் (18), கோடி மாறி (65), சேக் அப்துல்லா (35), தங்கராஜ் (54), ஜெயராமன் (40), சரவணன் (24) ஆகிய 7 பேரும் அடங்குவர்.
மீனவர்கள் உடனடியாக விடுவிக்கவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். சமீபத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து ராமேஸ்வரம் மீனவர்கள் பல நாள் போராட்டங்களை அறிவித்து நடத்தி இருந்தனர்.
தமிழக அரசும் இதுதொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து கடிதங்கள் எழுதியுள்ள நிலையில், மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு முடிவடைந்த நிலை இருந்தது.
இந்நிலையில், இன்று மாலையில் காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சந்தித்தனர்.
அதன்படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்தனர்.
தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கே.சி.வேணுகோபால், அஜோய்குமார், முகுல் வாஸ்னிக், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வந்தனர்.
இதற்கிடையில், காங்கிரஸ் கேட்கும் மொத்த தொகுதிகள் குறித்தும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது, மக்கள் நீதி மய்யத்திற்கு எந்த தொகுதி ஒதுக்குவது, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதித்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு உத்தரவு.
- மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.
தேசிய சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு போன்றவற்றை தினசரி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மின் வாரியத்துடன் ஆலோசனை நடத்தி மருத்துவமனைகளுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டம்.
குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது மக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 வரை வெளியில் வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெயிலில் பணிபுரிவோர் தினசரி 5 லிட்டருக்கும் அதிகமான தண்ணீரை குடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகமாக வெயிலில் இருந்தால் ஹீட் ஸ்ட்ரோக், உடலில் நீர்சத்து குறைந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
- ஜாபர் சாதிக்கிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜாபர் சாதிக், அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்திருப்பது விசாரணையில் அம்பலம்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாபர் சாதிக்கிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜாபர் சாதிக், அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்திருப்பது போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் மங்கை திரைப்படம் எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜாபர் சாதிக்குடன் இருந்த திரைப்படத் துறையை சார்ந்த பிரபலங்களின் விவரங்களும் கிடைத்துள்ளதாக என்.சி.பி அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை என்.சி.பி அலுவலகத்திற்கு அழைத்து வந்த பிரத்யேக வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.






