search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோடை வெயில் சுட்டெரிப்பதால் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்
    X

    கோடை வெயில் சுட்டெரிப்பதால் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்

    • தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.
    • பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.

    ஊட்டி:

    தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் கோடைக்காலம் தொடங்கி நடைபெற்று வருவதால் பல்வேறு இடங்களில் அனல்வெயில் கொளுத்தி வருகிறது.

    இதன்காரணமாக மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு சுற்றுலாபயணிகள் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

    மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு ஆண்டுதோறும் மக்கள் வருகை இருக்கும். இருந்தாலும் கோடை காலத்தில் அங்கு மக்கள் அதிகம் கூடுவர்.

    தற்போது ஊட்டிக்கு வரும் சுற்றுலாபயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடைசீசனை முன்னிட்டு எண்ணற்ற மலர் நாற்றுகள் நடவுசெய்யப்பட்டு அங்கு தற்போது மலர்கள் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவர்கள் பூங்காவின் மலர் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். அங்கு பல்வேறு நிறங்களில் பூத்து குலுங்கும் மலர்ச்செடிகளின் முன்பாக சுற்றுலா பயணிகள் நின்று செல்பி எடுப்பதை பார்க்க முடிகிறது.

    ஊட்டி படகு குழாம் இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதி வருகிறது. அங்கு அவர்கள் நீண்டவரிசையில் நின்று டிக்கெட் எடுத்துக் கொண்டு, ஊட்டி ஏரியில் உள்ள மிதிபடகு, எந்திர படகு ஆகியவற்றின் மூலம் சவாரிசெய்து, ஏரியின் சுற்றுப்புற பகுதிகளில் இடம்பெற்று உள்ள இய ற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    இதுதவிர தொட்டப்பெட்டா காட்சிமுனையம், லேம்ஸ்ராக் காட்சிமுனை, டால்பின்நோஸ் மற்றும் கோத்தகிரி காட்சிமுனையம் ஆகிய சுற்றுலா பிரதேசங்களிலும் திரளான சுற்றுலாப் பயணிகளை பார்க்க முடிந்தது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள தொலைநோக்கிகள் மூலம் அவர்கள் ஒட்டுமொத்த நீலகிரியின் பேரழகை கண்குளிர கண்டு ரசித்து வருகின்றனர்.

    குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகிய பகுதிகளில் கோடை சீசனை முன்னிட்டு அங்குள்ள மலர் மாடங்களில் அலங்கரித்து வைப்பதற்காக சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுற்றுலா வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்துக்கு வந்த வண்ணம் இருப்பதால் அங்குள்ள கக்கநல்லா உள்ளிட்ட முக்கிய சோதனைச்சாவடிகளில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்றுவந்த வண்ணம் உள்ளன.

    Next Story
    ×