search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா- இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு
    X

    தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா- இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு

    • பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்.
    • நல்ல அறிவார்ந்த சமூகத்தை வளர்க்க வேண்டும்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்கலைக் கழக துணைவேந்தர் (கூடுதல் பொறுப்பு) காமகோடி வரவேற்று பேசினார். பல்கலைக் கழக வேந்தர் அண்ணாமலை பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.

    விழாவில் 2020-21, 2021-2022, 2022-2023 ஆகிய 3 ஆண்டுகளில் இப்பல்கலைக்கழகத்தில் பயின்ற இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி பட்டங்கள் மற்றும் பட்டயம், சான்றிதழ் படித்து முடித்த 4230 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    ஆராய்ச்சி படிப்பான பி.எச்.டி. முடித்த 175 பேருக்கும் பல்வேறு பாடங்களில் முதலிடம் பிடித்த 172 பேருக்கு தங்க பதக்கத்தையும், கணித ஆராய்ச்சிப் பணியில் அளப்பரிய சாதனை புரிந்த பல்கலைக்கழக கணிதத்துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் உயரிய விருதையும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழங்கி பேசியதாவது:-

    60 ஆண்டுகளில் இந்தியா சிறிய ராக்கெட் தொடங்கி தற்போது சந்திரனில் கால் பதிக்கும் அளவிற்கு சாதித்துள்ளது. இந்தியாவிலேயே தயாரித்து விண்ணுக்கு அனுப்பும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

    சந்திராயன்-2-ல் ஏற்பட்ட தோல்வியிலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தின் அடிப்படையில் தான், தற்போது சந்திராயன்-3ன் மூலம் வெற்றி பெற்றுள்ளோம். இதன் மூலம் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது.

    சந்திராயன்-3 விண்கலத்தின் வரலாற்று வெற்றி சமூகத்தில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. அதன் வெற்றியால் ஏராளமானோர், குறிப்பாக எண்ணற்ற குழந்தைகள் உத்வேகம் அடைந்துள்ளனர் என்பதைக் காண முடிந்தது. இந்தியாவும் இந்தியர்களும் இவ்வளவு பெரிய செயல்களைச் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.

    இந்தியாவிலேயே முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகம் காந்திகிராம பல்கலைக்கழகம் இது கிராமங்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கிராமங்களுக்கு கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளால் தான் வளர்ச்சியை எட்ட முடியும்.

    பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும். நல்ல அறிவார்ந்த சமூகத்தை வளர்க்க வேண்டும். கடுமையாக உழைப்பது மூலம் நாட்டிற்கு நம்மை அர்ப்பணிப்பு உள்ளவர்களாக மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பதிவாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×