search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். அணிக்கு ஒரு தொகுதி? குக்கர் அல்லது தாமரை சின்னத்தில் போட்டி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பா.ஜ.க. கூட்டணியில் ஓ.பி.எஸ். அணிக்கு ஒரு தொகுதி? குக்கர் அல்லது தாமரை சின்னத்தில் போட்டி

    • அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்காக டி.டி.வி. தினகரனுடன் கைகோர்த்து உள்ள பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து எடப்பாடியை வீழ்த்துவதற்கு வியூகம் வகுத்துள்ளார்.
    • கட்சியும் இல்லை. சின்னமும் இல்லை. இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு கொடியும் இல்லாமல், கட்சியும் இல்லாமல் தவித்து வருகிறார். சட்டப் போராட்டங்கள் மூலமாக எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை எப்படியும் பறித்து விடலாம் என்கிற எண்ணத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோல்வி அடைய செய்வோம் என்கிற கோஷத்தோடு களமிறங்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

    டி.டி.வி.தினகரனுக்கு எதிராக அரசியல் களம் கண்ட ஓ.பன்னீர்செல்வத்தை காலச்சக்கரம் அவருடனேயே கொண்டு சேர்த்து இருக்கிறது என்றால் மிகையாகாது. அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்காக டி.டி.வி. தினகரனுடன் கைகோர்த்து உள்ள பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து எடப்பாடியை வீழ்த்துவதற்கு வியூகம் வகுத்துள்ளார்.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அரசியல் பயணம் அவருக்கு எளிதாக இருக்கவில்லை. எந்த பக்கம் எப்படி பயணிப்பது என்று தெரியாமல் தவிக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அந்த இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனது தனித்தன்மை பாதிக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார்.

    அதே நேரத்தில் தற்போது அவருக்கு கட்சியும் இல்லை. சின்னமும் இல்லை. இதனால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னமான குக்கர் சின்னத்தில் போட்டியிடலாமா அல்லது தாமரை சின்னத்தில் போட்டியிடலாமா என்பது பற்றியும் அவர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதனிடையே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் அணி நிர்வாகிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்ப மனுக்களை ரூ.10,000 செலுத்தி பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் இன்று மாலை 6 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×