search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாம் தமிழர் கட்சி 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவது உறுதி- சீமான் திட்டவட்ட அறிவிப்பு
    X

    நாம் தமிழர் கட்சி 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவது உறுதி- சீமான் திட்டவட்ட அறிவிப்பு

    • சீமானை கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. மீண்டும் முயற்சித்து வருவதாக மீண்டும் தகவல்கள் வெளியானது.
    • நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண் வேட்பாளர்களும் 20 ஆண் வேட்பாளர்களும் களம் இறங்குகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார்.

    நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கு ஏற்கனவே தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர் சீமானிடம் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது.

    இதுபற்றி சீமானே வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். நாம் தமிழர் கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் தனித்து போட்டியிடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சீமானை கூட்டணியில் சேர்ப்பதற்கு அ.தி.மு.க. மீண்டும் முயற்சித்து வருவதாக மீண்டும் தகவல்கள் வெளியானது. ஆனால் நாம் தமிழர் கட்சியினர் இதனை மறுத்துள்ளனர். இது தொடர்பாக அந்த கட்சி நிர்வாகிகள் கூறும்போது, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்த பிறகும் நாங்கள் கூட்டணி சேரப்போவதாக வதந்தியை பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்தனர்.

    இது தொடர்பாக சீமானிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. கூட்டணி சேரப்போவதாக தவறான தகவல்களை, வதந்தியை பரப்புகிறார்கள். ஒருவேளை அது போன்ற தகவலை பரப்புபவர்கள் எங்களுக்காக பேசிக்கொண்டிருக்கிறார்களோ? 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாம் தமிழர் கட்சி சார்பில் 20 பெண் வேட்பாளர்களும் 20 ஆண் வேட்பாளர்களும் களம் இறங்குகிறார்கள். எங்கள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரையும் விரைவில் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய உள்ளேன். கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்காததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதில் முடிவு கிடைத்தவுடன் தேர்தல் பணிகளில் விரைவாக ஈடுபடுவோம்.

    இவ்வாறு சீமான் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    Next Story
    ×