என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பாசக்கார ஊர் என்றால் அது மதுரை தான்.
- கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் திரையுலகத்திற்குள் வருகின்றனர்.
மதுரை:
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் திரைப்பட சூட்டிங் இல்லாமல் இருந்தால், வாய்ப்பு கிடைக்குமேயானால் நிச்சயம் ஒரே கட்சி, ஒரே கொள்கை என்று இருக்கக்கூடிய அ.தி.மு.க.விற்கு தேர்தல் பிரசாரத்திற்கு நான் வருவேன். எனது பிரசாரம் பிற கட்சியினரையோ அல்லது பிற நபர்களையோ வசைபாடுவது குறித்து இருக்காது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களுக்கு கொடுத்த நலத்திட்டங்கள் மற்றும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் தமிழக மக்களுக்கு கொடுத்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறி தேர்தல் பிரசாரம் செய்வேன்.

பாசக்கார ஊர் என்றால் அது மதுரை தான். மேலும் நான் பிறந்த சொந்த ஊர் மதுரை அருகே தேனி இருப்பதால் இங்கு நடைபெறக் கூடிய அனைத்து நிகழ்வுகளுக்கும் நான் கலந்துகொள்கிறேன்.
தற்போதுள்ள சூழலில் வில்லன் மற்றும் கதாநாயகியின் தந்தையாக அது போன்ற கதாபாத்திரங்களில் மட்டுமே தற்போது நடித்து வருகிறேன். படப்பிடிப்பு இல்லையென்றால் நிச்சயமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். வில்லன்கள் காமெடியன் ஆகி விட்டார்கள், காமெடியர்கள் வில்லன்கள் ஆகி விட்டனர்.
இந்த நிலையில் கதாநாயகனாக நடிப்பதற்காகவே அனைவரும் திரையுலகத்திற்குள் வருகின்றனர். வாய்ப்பு கிடைத்தால் கதாநாயகனாக நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்று சந்தேகம் எழுந்து உள்ளது.
- தேர்தல் பத்திரம் மூலம் பாரதிய ஜனதா பெரியளவில் ஆதாயம் பெற்று உள்ளது.
கோவை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கோவை மாவட்டம் அன்னூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியாவில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டுமெனில் பா.ஜனதா ஆட்சி அகற்றப்பட வேண்டும். இல்லையெனில் நாடு பேராபத்தை சந்திக்க வேண்டி வரும். இந்த தேர்தலை இந்தியா கூட்டணி கொள்கைரீதியாக எதிர்கொள்ளும். 3 பேர் அடங்கிய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒருவர் பதவி விலகிய நிலையில் தற்போது அருண்கோயல் என்பவரும் ராஜினாமா செய்து உள்ளார். எனவே தேர்தல் ஆணையத்தில் தலைவர் மட்டுமே உள்ளார். தேர்தல் ஆணையம் என்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமை. இதனை பிரதமர் மோடி கேள்விக்குறியாக்கி விட்டார். இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்று சந்தேகம் எழுந்து உள்ளது.

தேர்தல் பத்திரம் மூலம் பாரதிய ஜனதா பெரியளவில் ஆதாயம் பெற்று உள்ளது. மார்ச் 13-ந்தேதிக்குள் யார்-யாருக்கு தேர்தல் பத்திரம் வழங்கப்பட்டு உள்ளது என்பதை வலைத்தளங்களில் வெளியிட வேண்டும் எனற சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய பிறகும், பாரத ஸ்டேட் வங்கி காலஅவகாசம் கேட்பது சரியல்ல.
கேரளா மாநிலத்தில் இந்தியா கூட்டணி மட்டும் தான் போட்டியிடுகிறது. மூன்றாவது அணி இல்லை. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியும், கம்யூனி ஸ்டு சார்பில் ஆனிராஜாவும் போட்டியிடுகிறார்கள். அங்கு ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், ஆனி ராஜா வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி இந்தியா கூட்டணியின் வெற்றி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்தவர் கருணாநிதி.
- பிரதமரின் சுற்றுப்பயணத்தை வெற்று பயணமாக தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் ரூ.560 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் ரூ.560 கோடி மதிப்பலான 75 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தருமபுரி மாவட்டத்தில் ரூ.151.89 கோடி மதிப்பிலான 879 முடிக்கப்பட்ட திட்டப்பணிகளையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.34.10 கோடி மதிப்பில் 41 திட்டப்பணிகளும், சேலம் மாவட்டத்தில் ரூ.164.51 கோடி மதிப்பிலான கட்டிமுடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறித்து குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, நீர்வளத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை,
பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தொழில்நுட்ப கல்வி துறை, பொதுப் பணித்துறை, உயர்கல்வி துறை, வனத்துறை, காவல் துறை, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, கூட்டுறவுத்துறை,
சமூக நலத்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,
முன்னாள் படைவீரர் நலத்துறை, தாட்கோ, பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.37.44 கோடி மதிப்பிலான 51 திட்டப்பணிகளையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.65.56 கோடி மதிப்பிலான 17 திட்டப்பணிகளையும், சேலம் மாவட்டத்தில் ரூ.12.19 கோடி மதிப்பிலான 7 புதிய திட்டப்பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் 3,856 பயனாளிகளுக்கு ரூ.55.76 கோடி மதிப்பிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 2,206 பயனாளிகளுக்கு ரூ.21.63 கோடி மதிப்பிலும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 2,674 பயனாளிகளுக்கு ரூ.18.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 8736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
* சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி 3 மாவட்டங்களுக்கான முத்தான விழா.
* ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்த அதியமான் ஆட்சி செய்த பூமி தருமபுரி. தமிழ் வளர வேண்டும் என்பதால் ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் அதியமான்.
* தருமபுரி என்றதும் நினைவுக்கு வருவது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை அறிவித்தேன்.
* பெண்களுக்கு சொத்துரிமை பெற்று தந்தவர் கருணாநிதி.
* திராவிட மாடல் அரசு வகுத்த திட்டங்கள் குறித்து நாள் முழுவதும் பேசலாம்.
* மக்களுக்கான திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம்.
* தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
* தருமபுரி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை முடக்கியது அதிமுக.
* ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை கொடுத்து வருகிறது.
* பேருந்து வசதி இல்லாத 8 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து செய்து கொடுத்துள்ளோம்.
* 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில 920 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நிறைவேற்றம்.
* சேலம் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.
* தருமபுரி பாரதிபுரத்தில் 36 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாலம்.
* தருமபுரி மாவட்டத்தில் 5 சமுதாக நலக்கூடம் அமைக்கப்படும்.
* வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
* தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலில் இருந்து பாதுகாக்க 10 கோடியில் எஃகு வேலி அமைக்கப்படும்.
* சேலத்தில் 164 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலை திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும்.
* எப்போதும் மக்களுக்காகவே செயல்படும் திராவிட மாடல் அரசு.
* மத்திய பாஜக அரசு மாநிலங்களை சமமாக நடத்துவது இல்லை.
* மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு பறிக்கிறது.
* மாநில அரசின் ஆக்சிஜனான வரி வருவாயை நிறுத்த முயற்சிக்கிறது மத்திய அரசு.
* மத்திய அரசுக்கு வருவாய் என்பது மாநில அரசு கொடுப்பது தான்.
* பிரதமரின் சுற்றுப்பயணத்தை வெற்று பயணமாக தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.
* தேர்தல் நேரத்தில் மட்டும் மக்கள் மீது பிரதமருக்கு பாசம் வருகிறது.
* சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய் ஏற்றிவிட்டு தேர்தல் வருவதால் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
* தேர்தல் காரணமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி என நாடகமாடுகிறார்கள் என்று பேசினார்.
- விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது.
- விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தேரடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 27). தேவகோட்டையில் ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இதற்காக புதுக்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்தார். இவரது மனைவி சுஷ்மிதா(26). இவர்களுக்கு 3 வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று சுப்பிரமணியன் குடும்பத்துடன் திருவப்பூர் கோவில் விழாவுக்கு சென்றிருந்தார்.
பின்பு அவர் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளை சுப்பிரமணியன் ஓட்டினார். முன்னால் குழந்தை ஹரிணியும், பின்னால் சுஷ்மிதாவும் அமர்ந்திருந்தனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றது.
அந்த பஸ்சை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் (34) என்பவர் ஓட்டினார். எதிர்பாராதவிதமாக பஸ் சுப்பிரமணியன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சுப்பிரமணியன், குழந்தை ஹரிணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
சுஷ்மிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் சுஷ்மிதாவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸபத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆத்திரத்தில் விபத்துக்கு காரணமான பஸ் கண்ணாடியை மக்கள் அடித்து நொறுக்கினர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான சுப்பிரமணியன், ஹரிணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து சிறிது நேரம் பாதித்தது. விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் புதுக்கோட்டை, விராலிமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தென் மாநிலங்களில் 5 நாட்களில் பல்வேறு இடங்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- வரும் 16-ந்தேதி கன்னியாகுமரி பிரதமர் மோடி செல்கிறார்.
சென்னை:
பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி தமிழகம் வருகிறார். தென் மாநிலங்களில் 5 நாட்களில் பல்வேறு இடங்களுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
வரும் 15 முதல் 19-ந்தேதி வரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.
தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்ல உள்ள இடங்களின் விவரம் வருமாறு:
* வரும் 15-ந்தேதி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
* வரும் 16-ந்தேதி கன்னியாகுமரி பிரதமர் மோடி செல்கிறார்.
* வரும் 18-ந்தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- தொழிலாளி, வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள குலசேகரபுரம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ லிங்கம் (வயது 54), தொழிலாளி. இவரது மகன் செல்வா (19). நேற்று மாலை தந்தை-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்வா, தனது மோட்டார் சைக்கிளை அந்தப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டாராம். இதைதொடர்ந்து அவரது தந்தை ஸ்ரீ லிங்கம், மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை மீட்க அதே பகுதியை சேர்ந்த செல்வன் (34) என்பவர் கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்க முயன்றபோது, கிணற்றுக்குள் விஷவாயு பரவி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பல மணி நேரம் போராடி நள்ளிரவு மீட்டனர். பின்னர் 2 உடல்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டன.
கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் கசிந்து கிணறு முழுவதும் விஷவாயு பரவி இருந்ததால் ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் மூச்சு திணறி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொட்டாரம் அருகே கிணற்றுக்குள் கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்கச் சென்ற தொழிலாளி-வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை கொடுத்தார்.
- ராஜேஷ்தாஸ் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
சென்னை:
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் தலைமறைவு என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
ராஜேஷ் தாஸ் தலைமறைவாகிவிட்டதாகவும், அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேஸ் தாஸ் வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக,
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ்தாஸ், பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கொடுத்த புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
மேலும் முன்னாள் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் பெண் அதிகாரியின் காரை வழிமறித்து சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தனர்.
இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் தொடங்கியது. பலகட்ட விசாரணைக்கு பிறகு இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி, இம்மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 12-ந் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று அறிவித்தார்.
இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜேஷ்தாஸ் தரப்பு வக்கீல்கள் பழனிவேல், ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவதால் இவ்வழக்கை கள்ளக்குறிச்சி கோர்ட்டுக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், அதன் உத்தரவு வரும் வரை விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு தேதியை தள்ளிவைக்கும்படி மனுதாக்கல் செய்தனர்.
இம்மனுவை ஏற்க மறுத்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, அதை தள்ளுபடி செய்தார். மேலும் ராஜேஷ்தாஸ், கண்ணன் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, கீழ்கோர்ட்டான விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் ராஜேஷ்தாசுக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமும், செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கண்ணனுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
- தேர்தலில் சரத்குமார் போட்டியிடுகிறாரா என்பது குறித்தும் நாளை நடைபெறும் கூட்டத்திற்குப் பின் தெரிய வரும்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
நெல்லை, விருதுநகர் தொகுதிகளில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி விரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் சரத்குமார் போட்டியிடுகிறாரா என்பது குறித்தும் நாளை நடைபெறும் கூட்டத்திற்குப் பின் தெரிய வரும்.
சமத்துவ மக்கள் கட்சி எத்தனை இடங்களில் போட்டி?, எங்கெல்லாம் போட்டி? என்பதை சரத்குமார் நாளை அறிவிக்க உள்ளார்.
- சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் தே.மு.தி.க. அங்கம் வகித்திருக்கிறது.
- பா.ம.க.வோ அதற்கு உடனடியாக பதிலளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்து இருக்கும் நிலையில், அ.தி.மு.க. கூட்டணி இன்னும் முழுமை அடையாமல் இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்சிகளில் பா.ம.க.வை தவிர மற்ற கட்சிகள் அ.தி.மு.க. அணியில் இடம் பெறுவது உறுதியாகி இருக்கிறது. தே.மு.தி.க.வுடன் இரண்டு கட்ட கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை தள்ளிப் போய் இருக்கிறது.
அதே நேரத்தில் பா.ம.க. உடன் அ.தி.மு.க. இன்னும் தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தையை தொடங்காமலேயே உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது பற்றி விசாரித்ததில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே அ.தி.மு.க.வுக்கு நிபந்தனைகளை விதித்திருப்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு துணை முதலமைச்சர் பதவியை தர வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் கடுமையான நிபந்தனையை விதித்திருக்கிறது.
இதனை சற்றும் எதிர்பாராத அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிர்ந்து போய் உள்ளார். தமிழகத்தில் எப்போதுமே தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்துள்ள போதிலும் கூட்டணி கட்சிகளை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்து அழகு பார்த்து வந்துள்ளன.
இது போன்ற சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியில் பங்குபெறும் முறையில் துணை முதலமைச்சர் பதவியை கேட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றே அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் ஆட்சியில் பங்கு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த நிபந்தனையை தவிர்த்து விட்டு கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று பா.ம.க.விடம் அ.தி.மு.க. சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் பா.ம.க.வோ அதற்கு உடனடியாக பதிலளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனாலேயே பா.ம.க. உடன் எந்தவித பேச்சு வார்த்தையையும் நடத்தாமல் அ.தி.மு.க. அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
பா.ம.க. உடன் இப்படி கூட்டணி சிக்கல் இருக்கும் நிலையில் தே.மு.தி.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையும் சிக்கலுடனேயே நடந்து வருகிறது. தே.மு.தி.க.வை பொருத்த வரையில் பாராளுமன்றத்தில் அந்த கட்சி இதுவரை கால் பதித்ததில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் தே.மு.தி.க. அங்கம் வகித்திருக்கிறது.
பாராளுமன்றத் தேர்தலில் அந்த கட்சி கடந்த இரண்டு முறையும் தோல்வியையே தழுவி இருக்கிறது. இதனால் வருகிற தேர்தலில் எப்படியும் பாராளுமன்றத்தில் தே.மு.தி.க.வின் குரலை ஒலிக்க செய்து விட வேண்டும் என்பதில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா உறுதியுடன் உள்ளார்.
இதன் காரணமாகவே அ.தி.மு.க.வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒரு மேல்-சபை எம்.பி. பதவியை கண்டிப்பாக தரவேண்டும் என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள். 7 தொகுதிகள் வரை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
பாராளுமன்ற தொகுதிகளை பொருத்தவரையில் 4 தொகுதிகள் வரையில் கொடுத்தால் கூட ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தே.மு.தி.க. உள்ளது. அதே நேரத்தில் மேல்-சபை எம்.பி. பதவி கண்டிப்பாக வேண்டும் என்பதில் அந்த கட்சி உறுதியுடன் இருக்கிறது. ஒருவேளை தேர்தலில் தோற்றுப் போனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தயவில் மேல்-சபை எம்.பி. ஆகிவிடலாம் என்பது தே.மு.தி.க.வின் கணக்காக உள்ளது.
இதற்காகவே அ.தி.மு.க.விடம் மேல்-சபை எம்.பி. பதவிக்காக தே.மு.தி.க. மல்லு கட்டிக்கொண்டு இருக்கிறது. இதனால் தே.மு.தி.க.வுடன் நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளும் தொகுதி உடன்பாடு பற்றி இறுதி முடிவு எடுக்கப்படாமலேயே இருக்கிறது.
இது தொடர்பாக பா.ம.க., தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு சிக்கலை தீர்க்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தைகளை விரைவில் முடித்து பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய 2 கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருவதால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடித்து வருகிறது.
இருப்பினும் அவற்றையெல்லாம் பேசி தீர்த்து அதி.மு.க. கூட்டணியை இறுதி செய்வதில் அந்த கட்சியின் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, "அ.தி.மு.க. கூட்டணி விரைவில் முழுமை பெறும் என்றும் அதன் பின்னர் கூட்டாக சேர்ந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கு வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் நிச்சயம் பேசு பொருளாக இருக்கும்
சென்னை:
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று நிச்சயம் ஒரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. மேல்-சபை எம்.பி. பதவி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்டுள்ள கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்து உள்ளார்.
நாட்டின் நலன் கருதி கை குலுக்க வேண்டிய இடத்தில்கை குலுக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தி.மு.க. கூட்டணி போட்டியிடும் 39 தொகுதிகளிலும் கமல்ஹாசன் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதையடுத்து அவரது சுற்றுப்பயண திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார். இந்த பிரசாரத்தின் போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வை கண்டித்தும் பல்வேறு விஷயங்களை கமல்ஹாசன் எடுத்து வைத்து ஆதரவு திரட்ட இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு இடம் கிடைக்காத நிலையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் பிரசார வேலைகளை தொடங்குவதற்கு திட்டமிட்டு ஆயத்தமாகி வருகிறார்கள்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும் போது, "பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தலைவர் கமல்ஹாசனின் பிரசாரம் நிச்சயம் பேசு பொருளாக இருக்கும் என்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு அவரது பிரசாரம் வலு சேர்க்கும்" என்றும் தெரிவித்தார்.
- முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது.
- மற்ற கட்சிகளுடன் கேட்டு அனைவரும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படும்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, வி.கே.சிங் பங்கேற்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடரும்.
* பாஜக பொறுப்பாளர்கள் எங்களுடைய கோரிக்கைகளை தெளிவாகக் கேட்டுள்ளனர்.
* தொகுதிகள் குறித்து மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறி உள்ளனர்.
* மற்ற கட்சிகளுடன் கேட்டு அனைவரும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படும்.
* டிடிவி தினகரன் தனியாக அரசியல் கட்சியை நடத்துகிறார். அவரையும் அழைத்துப் பேச இருக்கிறார்கள் என்று கூறினார்.
- கடல்போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது.
- வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும்.
சென்னை:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். 16 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தாலுகாகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.
மேலும் சென்னை மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் வீராணம் ஏரிக்கு முக்கிய பங்கு உள்ளது. அதாவது வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.
ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், காவிரியில் இருந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது. இதனால் கடந்த மாதம் பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது.
கடல்போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் கடந்த 2 வாரத்துக்கு முன்பு சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கி இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியாத காலங்களில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அனுப்புவது வழக்கம். அதன்படி என்.எல்.சி. சுரங்க நீரை வடலூா் அருகே உள்ள வாலாஜா ஏரியில் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும். தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் 50 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து பரவனாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு தனி கால்வாய் வெட்டி அதில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் வீராணம் குழாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வீராணம் ஏரி கைவிட்டபோதிலும் சென்னை மக்களின் தாகத்தை என்.எல்.சி. சுரங்க நீர் தீர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






