search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் என்.எல்.சி. சுரங்க நீர்
    X

    முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வாலாஜா ஏரி

    சென்னை மக்களின் தாகத்தை தீர்க்கும் என்.எல்.சி. சுரங்க நீர்

    • கடல்போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது.
    • வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும்.

    சென்னை:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். 16 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தாலுகாகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன.

    மேலும் சென்னை மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் வீராணம் ஏரிக்கு முக்கிய பங்கு உள்ளது. அதாவது வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    ஆனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததாலும், காவிரியில் இருந்து தண்ணீர் வராததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் மளமளவென குறைந்தது. இதனால் கடந்த மாதம் பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    கடல்போல் காட்சி அளித்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காட்சி அளிக்கிறது. இதனால் கடந்த 2 வாரத்துக்கு முன்பு சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கோடைகாலம் தொடங்கி இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியாத காலங்களில் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை அனுப்புவது வழக்கம். அதன்படி என்.எல்.சி. சுரங்க நீரை வடலூா் அருகே உள்ள வாலாஜா ஏரியில் தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வாலாஜா ஏரியின் முழு கொள்ளளவு 5.5 அடியாகும். தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் 50 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து பரவனாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு தனி கால்வாய் வெட்டி அதில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் வீராணம் குழாய் வழியாக வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இதை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். வீராணம் ஏரி கைவிட்டபோதிலும் சென்னை மக்களின் தாகத்தை என்.எல்.சி. சுரங்க நீர் தீர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×