புதுக்கோட்டை அருகே விபத்தில் தந்தை-மகள் பலி

விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது.விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை அருகே விபத்தில் தந்தை-மகள் பலி
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தேரடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 27). தேவகோட்டையில் ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இதற்காக புதுக்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்தார். இவரது மனைவி சுஷ்மிதா(26). இவர்களுக்கு 3 வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று சுப்பிரமணியன் குடும்பத்துடன் திருவப்பூர் கோவில் விழாவுக்கு சென்றிருந்தார்.

பின்பு அவர் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளை சுப்பிரமணியன் ஓட்டினார். முன்னால் குழந்தை ஹரிணியும், பின்னால் சுஷ்மிதாவும் அமர்ந்திருந்தனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றது.

அந்த பஸ்சை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் (34) என்பவர் ஓட்டினார். எதிர்பாராதவிதமாக பஸ் சுப்பிரமணியன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சுப்பிரமணியன், குழந்தை ஹரிணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

சுஷ்மிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் சுஷ்மிதாவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸபத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆத்திரத்தில் விபத்துக்கு காரணமான பஸ் கண்ணாடியை மக்கள் அடித்து நொறுக்கினர்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான சுப்பிரமணியன், ஹரிணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து சிறிது நேரம் பாதித்தது. விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் புதுக்கோட்டை, விராலிமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com