search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு ஏற்படாதது ஏன்?
    X

    அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு ஏற்படாதது ஏன்?

    • சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் தே.மு.தி.க. அங்கம் வகித்திருக்கிறது.
    • பா.ம.க.வோ அதற்கு உடனடியாக பதிலளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்து இருக்கும் நிலையில், அ.தி.மு.க. கூட்டணி இன்னும் முழுமை அடையாமல் இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கட்சிகளில் பா.ம.க.வை தவிர மற்ற கட்சிகள் அ.தி.மு.க. அணியில் இடம் பெறுவது உறுதியாகி இருக்கிறது. தே.மு.தி.க.வுடன் இரண்டு கட்ட கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை தள்ளிப் போய் இருக்கிறது.

    அதே நேரத்தில் பா.ம.க. உடன் அ.தி.மு.க. இன்னும் தொகுதி பங்கிட்டு பேச்சுவார்த்தையை தொடங்காமலேயே உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது பற்றி விசாரித்ததில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே அ.தி.மு.க.வுக்கு நிபந்தனைகளை விதித்திருப்பது தெரியவந்துள்ளது.


    குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு துணை முதலமைச்சர் பதவியை தர வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் கடுமையான நிபந்தனையை விதித்திருக்கிறது.

    இதனை சற்றும் எதிர்பாராத அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிர்ந்து போய் உள்ளார். தமிழகத்தில் எப்போதுமே தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்துள்ள போதிலும் கூட்டணி கட்சிகளை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்து அழகு பார்த்து வந்துள்ளன.

    இது போன்ற சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியில் பங்குபெறும் முறையில் துணை முதலமைச்சர் பதவியை கேட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றே அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள். எந்த சூழ்நிலையிலும் ஆட்சியில் பங்கு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

    இந்த நிபந்தனையை தவிர்த்து விட்டு கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று பா.ம.க.விடம் அ.தி.மு.க. சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


    ஆனால் பா.ம.க.வோ அதற்கு உடனடியாக பதிலளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனாலேயே பா.ம.க. உடன் எந்தவித பேச்சு வார்த்தையையும் நடத்தாமல் அ.தி.மு.க. அமைதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    பா.ம.க. உடன் இப்படி கூட்டணி சிக்கல் இருக்கும் நிலையில் தே.மு.தி.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையும் சிக்கலுடனேயே நடந்து வருகிறது. தே.மு.தி.க.வை பொருத்த வரையில் பாராளுமன்றத்தில் அந்த கட்சி இதுவரை கால் பதித்ததில்லை. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் தே.மு.தி.க. அங்கம் வகித்திருக்கிறது.

    பாராளுமன்றத் தேர்தலில் அந்த கட்சி கடந்த இரண்டு முறையும் தோல்வியையே தழுவி இருக்கிறது. இதனால் வருகிற தேர்தலில் எப்படியும் பாராளுமன்றத்தில் தே.மு.தி.க.வின் குரலை ஒலிக்க செய்து விட வேண்டும் என்பதில் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான பிரேமலதா உறுதியுடன் உள்ளார்.

    இதன் காரணமாகவே அ.தி.மு.க.வுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒரு மேல்-சபை எம்.பி. பதவியை கண்டிப்பாக தரவேண்டும் என்று தே.மு.தி.க. நிர்வாகிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள். 7 தொகுதிகள் வரை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தொகுதிகளை பொருத்தவரையில் 4 தொகுதிகள் வரையில் கொடுத்தால் கூட ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தே.மு.தி.க. உள்ளது. அதே நேரத்தில் மேல்-சபை எம்.பி. பதவி கண்டிப்பாக வேண்டும் என்பதில் அந்த கட்சி உறுதியுடன் இருக்கிறது. ஒருவேளை தேர்தலில் தோற்றுப் போனாலும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தயவில் மேல்-சபை எம்.பி. ஆகிவிடலாம் என்பது தே.மு.தி.க.வின் கணக்காக உள்ளது.

    இதற்காகவே அ.தி.மு.க.விடம் மேல்-சபை எம்.பி. பதவிக்காக தே.மு.தி.க. மல்லு கட்டிக்கொண்டு இருக்கிறது. இதனால் தே.மு.தி.க.வுடன் நடைபெற்று வரும் பேச்சு வார்த்தைகளும் தொகுதி உடன்பாடு பற்றி இறுதி முடிவு எடுக்கப்படாமலேயே இருக்கிறது.

    இது தொடர்பாக பா.ம.க., தே.மு.தி.க.வுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு சிக்கலை தீர்க்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தைகளை விரைவில் முடித்து பிரச்சாரத்தை மேற்கொள்ளலாம் என்று அ.தி.மு.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.

    ஆனால் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய 2 கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருவதால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இருப்பினும் அவற்றையெல்லாம் பேசி தீர்த்து அதி.மு.க. கூட்டணியை இறுதி செய்வதில் அந்த கட்சியின் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, "அ.தி.மு.க. கூட்டணி விரைவில் முழுமை பெறும் என்றும் அதன் பின்னர் கூட்டாக சேர்ந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கு வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×