search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poison gas"

    • தொழிலாளி, வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள குலசேகரபுரம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ லிங்கம் (வயது 54), தொழிலாளி. இவரது மகன் செல்வா (19). நேற்று மாலை தந்தை-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த செல்வா, தனது மோட்டார் சைக்கிளை அந்தப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டாராம். இதைதொடர்ந்து அவரது தந்தை ஸ்ரீ லிங்கம், மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை மீட்க அதே பகுதியை சேர்ந்த செல்வன் (34) என்பவர் கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். ஆனால் அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

    இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் இறங்க முயன்றபோது, கிணற்றுக்குள் விஷவாயு பரவி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பல மணி நேரம் போராடி நள்ளிரவு மீட்டனர். பின்னர் 2 உடல்களும் கரைக்கு கொண்டு வரப்பட்டன.

    கிணற்றுக்குள் தள்ளி விடப்பட்ட மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் கசிந்து கிணறு முழுவதும் விஷவாயு பரவி இருந்ததால் ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் மூச்சு திணறி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு ஸ்ரீலிங்கம் மற்றும் செல்வன் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அஞ்சு கிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொட்டாரம் அருகே கிணற்றுக்குள் கிடந்த மோட்டார் சைக்கிளை மீட்கச் சென்ற தொழிலாளி-வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள்.
    • கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி, ஓ.சி.எப். பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது தொழிலாளர்கள் மோசஸ், தேவன் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானார்கள். இது தொடர்பாக தேசிய தூய்மைபணியாளர்கள் பாதுகாப்பு ஆணைய தலைவர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அவர்கள், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    • சுப்பிரமணியத்தின் உடலை போலீசார் மீட்டனர்.
    • பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65).இவர் கிருஷ்ணாபுரம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு வேலை செய்து வந்தார். நேற்று காலை வேலைக்கு சென்ற சுப்பிரமணி பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள கழிவு நீர் தொட்டிக்குள் சுப்பிரமணி பிணமாக கிடந்தார்.

    அவரது உடலை போலீசார் மீட்டனர். சுப்பிரமணி கழிவு நீர் தொட்டிக்குள் தவறி விழுந்தாரா? அல்லது விஷவாயு தாக்கியதா? என்பது குறித்து பொன்னேரி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    நாமக்கல் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் பாலன் (வயது 40).

    இவர் கோவை உக்கடம் பகுதியில் தங்கியிருந்து தங்க துகள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி அதில் தங்க துகள்கள் இருந்தால் அதனை பிரித்து எடுத்து விற்பனை செய்கிறார்.

    கடந்த சில நாட்களாக பாலனுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தங்க துகள்கள் சேகரிக்க செல்லவில்லை என தெரிகிறது.

    இதனையடுத்து தனது தந்தைக்கு உதவி செய்வதற்காக பாலனின் மகன் விக்னேஷ் (13)நாமக்கல்லில் இருந்து கோவை வந்தார்.

    இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், விக்னேஷ் இன்று காலை தனது உறவினர்கள் சிலருடன் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் மண்ணை அள்ளி தங்க துகள்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சாக்கடையில் இருந்து விஷவாயு தாக்கியது. இதில் விக்னேஷ் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சிறுவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    விசாரணையில், தங்க நகை பட்டறைகளில் பயன்படுத்தப்படும் சிலவகை கெமிக்கல்கள் சாக்கடை நீரில் கலந்ததால் அதன் மூலம் விஷவாயு பரவி சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சர்க்கரை ஆலை பாகு கழிவுகளை அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
    • விஷவாயு கசிவால் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் புகளூரில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் கரும்புகள் இந்த ஆலையில் அரவைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது

    இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையில் பாகு காய்ச்சி அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குழாய்கள் மூலம் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது தற்போது பொங்கல் விடுமுறை தினத்தை ஒட்டி தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

    இன்று மீண்டும் சர்க்கரை ஆலையில் அரவைப் பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடந்த சர்க்கரை ஆலை பாகு கழிவுகளை அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    ஒரு வாரமாக தேங்கியிருந்த கழிவுகளில் இருந்து திடீரென்று வாயு கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பணியில் இருந்த இரண்டு தொழிலாளர்களும் திடீரென மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வேலாயுதம் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்தார்.
    • நிவாரணத் தொகையில் பாதி பணத்தை கேட்ட அமைச்சரை கண்டித்து எதிர்க் கட்சிகள் கண்டனம்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் சச்சினபள்ளியை சேர்ந்தவர்கள் அணில், வீர பிரம்மம், கொண்டல் ராவ். இவர்கள் 3 பேரும் கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி தனியார் ஓட்டல் அருகே உள்ள பாதாள சாக்கடையில் இறங்கி அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது விஷவாயு தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி தொகை அறிவித்தார்.

    முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையை பெறுவதற்காக நீர்வளத்துறை அமைச்சர் அம்பாடி ராம் பாபுவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சென்றனர்.

    அப்போது அவர் ரூ 2. 50 லட்சம் கொடுத்தால் தான் காசோலையை தர முடியும் என திருப்பி அனுப்பி உள்ளார்.

    பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து அப்பகுதியில் உள்ள ஜனசேனா கட்சி நிர்வாகிகளிடம் தனது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் காசோலையை தராமல் கமிஷன் கேட்பதாக தெரிவித்தனர்.

    நிவாரணத் தொகையில் பாதி பணத்தை கேட்ட அமைச்சரை கண்டித்து ஜனசேனா கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதாரணமாகிவிட்டது.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • கரூரில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
    • சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது.

    இந்நிலையில், அதில் போடப்பட்ட சவுக்கு குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலகைகளைப் பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் மேன்ஹோல் எனப்படும் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

    இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு சென்ற சிவா என்ற மற்றொரு தொழிலாளியும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் மற்ற தொழிலாளர்கள் அங்கு வந்து பார்த்த போது, 3 பேரும் மயங்கி கிடப்பதைப் பார்த்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் கழிவுநீர் தொட்டியில் எவ்வாறு விஷவாயு தாக்கியது என்பது குறித்தும், அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கோவை சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
    கோவை:

    கோவையில் தனியார் குடியிருப்பு ஒன்றில் தொழிலாளர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை செய்துள்ளனர்.

    அப்போது விஷவாயு தாக்கியதில் இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கோவை சிங்காநல்லூரை சேர்ந்த முருகவேல், பாண்டித்துரை என தெரியவந்துள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews
    விழுப்புரம் அருகே கிணற்றில் இறங்கிய போது வி‌ஷவாயு தாக்கியதில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள ஆலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 55). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு 30 அடி ஆழத்தில் பழைய கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. கிணற்றுக்குள் இருந்த மோட்டார் பழுதாகி இருந்தது.

    அதனை சரி செய்ய ராஜாராமன் எண்ணினார். அதன்படி இன்று மதியம் ஆலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர் (35) என்பவருடன் சேர்ந்து ராஜாராமன் தனது நிலத்துக்கு சென்றார்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் மோட்டாரை சரி செய்ய முயன்றனர். பழைய கிணறு என்பதால் கிணற்றில் வி‌ஷவாயு பரவி இருந்தது. அப்போது அவர்களை வி‌ஷவாயு தாக்கியது.

    இதனால் அவர்கள் 2 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு கிணற்றுக்குள் ளேயே மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தனர். பின்னர் அந்த தண்ணீரை மேலே இருந்து கிணற்றுக்குள் மயங்கி கிடந்த ராஜாராமன், பன்னீர் ஆகியோர் மீது ஊற்றினர்.

    ஆனால், அவர்களுக்கு மயக்கம் தெளியவில்லை. இதையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் கிணற்றுக்குள் இறங்கினர். 2 பேரையும் மீட்டு கிணற்றை விட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராஜாராமன், பன்னீர் ஆகிய 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் 2 பேரின் உடலும் அதே ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×