என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வேட்பாளர்களின் பொருளாதார பின்னணியை பொறுத்தவரை 945 பேரில், 202 பேர் அதாவது 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.
    • காங்கிரஸ் சார்பில் 78 சதவீதம் குற்ற வழக்குகள், 22 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே 4 முனைப் போட்டி நிலவுகிறது.

    இவர்களுடன் கணிசமான அளவுக்கு வழக்கம் போல சுயேட்சை வேட்பாளர்களும் உள்ளனர். இந்த வேட்பாளர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவ்வளவு எளிதில் வாக்காளர்களால் கண்டுபிடித்து விட முடியாது.

    அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனநாயக சீர்திருத்தக் கழகம் தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களை மிக நுட்பமாக ஆய்வு செய்துள்ளது. மொத்தம் களத்தில் உள்ள 950 வேட்பாளர்களில் 945 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    இதில், 135 வேட்பாளர்கள் அதாவது 15 சதவீதம் பேர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களாக உள்ளனர். இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதை அந்த வேட்பாளர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதை அவர்கள் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர்.

    இந்த 15 சதவீத குற்றவாளிகளில் 81 பேர் மிக கடுமையான குற்றவாளிகள். அதாவது இவர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. இது மொத்த வேட்பாளர்களில் 8 சதவீதம் ஆகும்.

    இந்த கடுமையான குற்றவாளிகள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். கட்சி வாரியாக குற்றவாளி வேட்பாளர்களை ஆய்வு செய்த போது பல ருசிகர தகவல்கள் கிடைத்தன.

    அந்த வகையில், நாம் தமிழர் கட்சியில் 28 சதவீதம் குற்ற வழக்குகள், 15 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்டவர்களும், அ.தி.மு.க. சார்பில் 35 சதவீதம் குற்ற வழக்குகள், 18 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்டவர்களும் களத்தில் உள்ளனர்.

    பா.ஜ.க. சார்பில் 70 சதவீதம் குற்ற வழக்குகள், 39 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், தி.மு.க. சார்பில் 59 சதவீதம் குற்ற வழக்குகள், 27 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், பா.ம.க. சார்பில் 60 சதவீதம் குற்ற வழக்குகள், 40 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், காங்கிரஸ் சார்பில் 78 சதவீதம் குற்ற வழக்குகள், 22 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    வேட்பாளர்களின் பொருளாதார பின்னணியை பொறுத்தவரை 945 பேரில், 202 பேர் அதாவது 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.

    அ.தி.மு.க.வின் 34 வேட்பாளர்களில் 33 பேரும், பா.ஜ.க.வின் 23 வேட்பாளர்களில் 22 பேரும், தி.மு.க.வின் 22 வேட்பாளர்களில் 21 பேரும், நாம் தமிழர் கட்சியின் 39 வேட்பாளர்களில் 15 பேரும், காங்கிரஸ் கட்சியின் 9 பேரில் 8 பேரும், தே.மு.தி.க.வின் 5 பேரில் 3 பேரும், சுயேச்சைகள் 606 பேரில் 62 பேரும் கோடீஸ்வரர்கள்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். இவர்களில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் ரூ.662.47 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் ரூ.304.92 கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். வேலூர் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் ரூ.152.77 கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.

    சுயேட்சை வேட்பாளர்கள் 606 பேரில் 62 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். வடசென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் ரூ.13.15 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

    சுயேட்சைகளில் 10 வேட்பாளர்கள் தங்களிடம் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவே சொத்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு எந்த சொத்தும் இல்லை என்று மனுவில் தெரிவித்துள்ளனர். குறைவான சொத்து உள்ளதாக 3 சுயேச்சைகள் தெரிவித்து உள்ளனர்.

    42 சதவீத வேட்பாளர்கள் 5 முதல்12-ம் வகுப்பு வரை படித்தவர்களாகவும், 48 சதவீதம் பட்டதாரிகளாகவும் உள்ளனர். மேலும், 25 முதல் 40 வயதுக்குட்பட்ட வேட்பாளர்கள் 325 பேர், அதா வது 34 சதவீதமும், 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 487 பேர், அதாவது 52 சதவீதமும் உள்ளனர். 130 பேர் 61 முதல் 80 வயதுக்குள் உள்ளனர். 945 வேட்பாளர்களில் 8 சதவீதம் அதாவது 77 பேர் பெண் வேட்பாளர்கள்.

    • படிப்பாதை வழியாக அடிவாரம் வந்தபோது நேச லிங்கத்தின் 8 வயது மகன் விஸ்வாவுக்கு மயக்கம் ஏற்பட்டது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல்:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கணபதிபாளையத்தைச் சேர்ந்த நேசலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முடித்து விட்டு படிப்பாதை வழியாக அடிவாரம் வந்தபோது நேச லிங்கத்தின் 8 வயது மகன் விஸ்வாவுக்கு மயக்கம் ஏற்பட்டது.

    உடனடியாக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டான். கடுமையான வெயில் காரணமாக மயக்கமடைந்து உயிரிழந்திருக்கலாம் என பழனி அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    வேடசந்தூர் ஆத்துமேட்டில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் அங்குள்ள நிழற்குடையில் தங்கி இருந்து யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று மாலை கடும் வெயில் காரணமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் இறந்தவர் நவாமரத்துப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் என தெரிய வரவே அவரது உறவினர்களை வரவழைத்து போலீசார் உடலை ஒப்படைத்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தியுள்ளார்.
    • முதியவருக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு ஜெய்ப்பூரில் இருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பின்னர் இந்த ரெயில் திருப்பூரில் இருந்து புறப்பட்டது. அப்போது, திருப்பூர் கல்லம்பாளையம் அருகே ரெயில் சென்றபோது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் ரெயில் அருகில் வருவதைப் பார்த்து உடனடியாக தண்டவாளத்தில் படுத்தார்.

    இதை பார்த்து சுதாரித்துக்கொண்ட ரெயில் என்ஜின் டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்து ரெயிலை நிறுத்தியுள்ளார். இருப்பினும், ரெயில் என்ஜின் அந்த முதியவரைத்தாண்டி சென்று நின்றது. அந்த முதியவர் ரெயில் என்ஜினுக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.

    பின்னர், உடனடியாக தண்டவாளத்தில் இறங்கி வந்து பார்த்த என்ஜின் டிரைவர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை பின்னோக்கி இயக்கி அந்த முதியவரை மீட்டனர். இதில் அந்த முதியவருக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் அவர் திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த பாலையா (வயது 67) என்பது தெரியவந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் வந்ததால் அவர் தண்டவாளத்தில் படுத்து உயிர் தப்பி உள்ளார். உடனடியாக ரெயிலை நிறுத்திய என்ஜின் டிரைவரை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். இந்த சம்பவத்தால் ரெயில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது.
    • ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை.

    மக்களவை தேர்தலில் பிரதிபலிக்கும் பிரச்சனைகள் குறித்து லோக்நிதி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

    அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும்,

    23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,

    55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும்,

    ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.

    இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது.

    அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.

    'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.
    • தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டை, ஏரி வறண்டு போய் உள்ளது. இதனால் காட்டுயானைகள் தண்ணீர் மற்றும் உணவை தேடி அங்கும் இங்கும் அலைகின்றன.

    இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக பண்ணாரி வனப்பகுதியில் புதுக்குய்யனூர் என்ற இடத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது அடர்ந்த வனப்பகுதியில் உடல்நலம் குன்றிய நிலையில் ஒரு பெண் யானை படுத்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த யானையை சுற்றி ஒரு குட்டி யானை சுற்றி சுற்றி வந்து பிளறிக் கொண்டிருந்தது.

    இது குறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கால்நடை மருத்துவ குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சத்தியம ங்கலம் புலிகள் காப்பாக துணை இயக்குனர் குலால் யோகேஷ் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெண் யானையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    முதலில் குட்டி யானையை தாய் யானையிடம் இருந்து பிரித்து வனத்துறையினர் தனியாக அழைத்து சென்றனர். பின்னர் தாய் யானைக்கு முதலில் காது நரம்பு வழியாக குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. எனினும் அந்த யானையின் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தது. இதற்கு இடையே குட்டி யானையின் சத்தத்தை கேட்டு காட்டில் உள்ள 6 காட்டுயானை கூட்டம் சம்பவ இடத்திற்கு வந்தது.

    காட்டு யானைகள் கூட்டத்தை கண்டதும் வனத்துறையினர் மருத்துவக் குழுவினர் அங்கிருந்து சற்று விலகி இருந்தனர். பின்னர் அந்த யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சென்றது. அதன் பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் யானையை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் யானை இரவில் பரிதாபமாக இறந்தது.

    இதனையடுத்து அந்த யானையின் உடல் அங்கேயே மற்ற விலங்குகளுக்கு உணவாக போடப்பட்டுள்ளது. இதற்கிடையே காட்டு யானை கூட்டத்துடன் சென்ற குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை சார்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழுவினர் அந்த குட்டி யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் பண்ணாரி கோவில் அருகே பெண் யானை உயிரிழந்தது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூரில் ஒரு பெண் யானை உயிரிழந்தது. தற்போதும் ஒரு பெண் யானை உயிரிழந்துள்ளது.

    தொடர்ச்சியாக யானைகள் இறப்பது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஆரணி, திருவண்ணாமலையில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் வந்தார்.
    • பரமத்திவேலூர் ரோடு புறநகர் போலீஸ் நிலையம் எதிரில் திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    ஆரணி, திருவண்ணாமலையில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் வந்தார். பின்னர் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். தொடர்ந்து இன்று மாலை நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து திருச்செங்கோட்டில் பரமத்திவேலூர் ரோடு புறநகர் போலீஸ் நிலையம் எதிரில் திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து இரவு 7 மணியளவில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி திருச்செங்கோடு மற்றும் சேலம் கோட்டை பகுதியில் அ.தி.மு.க.கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளது.

    • ஏரியில படகு சவாரி செய்வது மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
    • மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு கோடைகாலம் தொடங்கியது முதல் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. தற்போது ரம்ஜான் பண்டிகை முதல் தொடர் விடுமுறை வருவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் நகரின் அனைத்து இடங்களிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது. தரைப்பகுதியை போலவே கொடைக்கானலிலும் பகல் பொழுதில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இருந்த போதும் ஏரியில படகு சவாரி செய்வது மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் கொடைக்கானலில் நேற்று நள்ளிரவு முதல் நகர் பகுதியிலும், மலை கிராமங்களிலும் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் பிடியில் சிக்கி தவித்த உள்ளூர் மக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானலில் பல்வேறு வனப்பகுதியிலும், தனியார் பட்டா இடங்களிலும் கோடைகாலம் தொடங்கியது முதல் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மரங்கள், மூலிகை செடிகள் கருகி வந்தன.

    தற்போது பெய்துவரும் மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏரிச்சாலை, கலையரங்கம், மூஞ்சிக்கல், கல்லறைமேடு, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தபடி சென்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரவு 10 மணியை தாண்டி பிரசாரம் மேற்கொண்டதை திமுகவினர் கேள்வி எழுப்பினர்.
    • எங்கள் புகாரின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கோவை:

    கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் பிரசாரத்தின்போது மோதல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாஜக வேட்பாளர் அண்ணாமலை இரவு 10 மணியை தாண்டி பிரசாரம் மேற்கொண்டதை திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தினர்.

    இரவு 10.40 மணிக்கு பிரசாரம் செய்துள்ளனர். இது நியாயமா?.

    எங்கள் புகாரின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்ட விதிகளை மீறி செயல்பட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    தோல்வி பயம் பாஜகவினர் முகத்தில் நன்றாக தெரிகிறது. கல்லூரி மாணவர்களை வைத்து பாஜகவினர் பிரசாரம் மேற்கொள்கின்றனர். தோல்வி பயத்தால் வேறு ஏதேனும் இடையூறு செய்ய திட்டமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.

    • அ.தி.மு.க. அழிந்து போகும் என்று பேசி வரும் அண்ணாமலைக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
    • தேன்கூட்டில் கையை வைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியாது.

    மதுரை:

    மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பரவை, ஊர் மெச்சிகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஒரு உயரமான சுவரில் ஆட்டுக்குட்டி ஒன்று நின்று கொண்டு அவ்வழியாகச் சென்ற சிங்கத்தை வம்புக்கு இழுத்தது. ஏய் சிங்கம் நில், எனக்கு தழையை பறித்து போடு என சவடால் அடித்தது. சுவர் என்பது ஆளுங் கட்சி. மத்தியில் தனது கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது என்ற திமிரில் அண்ணாமலை வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார்.

    நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை. அவர் மட்டுமல்ல, அவரது அப்பனே வந்தாலும் அ.தி.மு.க.வை அளிக்க முடியாது. அரசியலில் அவர் கற்றுக் குட்டி தான், திராவிட இயக்கங்களின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் அண்ணாமலை. அவர் படித்து பாஸ் செய்தாரா, அல்லது பிட்டு அடித்து பாஸ் செய்தாரா என சந்தேகமாக உள்ளது.


    அ.தி.மு.க. அழிந்து போகும் என்று பேசி வரும் அண்ணாமலைக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். திராவிட இயக்கம் வளர வேண்டும் என உழைத்த தலைவர்களை அண்ணாமலை இழிவாக பேசி வருகிறார். அவர்களைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது . உயர்ந்த தலைவர்களை இழிவாகப் பேசி வரும் அவரது நாக்கை வெட்டணுமா, வேண்டாமா? பத்தாண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது.

    பா.ஜ.க.வில் முழுவதும் திருடர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. திருட்டுக் கூட்டம் அனைத்தும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது. அண்ணாமலை வந்த பிறகு தான் இதுபோன்ற நபர்கள் பா.ஜ.க.வில் அதிகமாக சேர்ந்துள்ளனர். அ.தி.மு.க. அழிந்து போகும் என்று பேசிவரும் அண்ணாமலை தான் தேர்தலுக்குப் பிறகு அழிந்து போவார். அரசியலில் இருந்து அவர் அப்புறப்படுத்தப்படுவார். முகவரி இல்லாமல் ஆகிவிடுவார்.

    தேன்கூட்டில் கையை வைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியாது. நிச்சயம் அதற்கான பலனை அனுபவிப்பார். ஒரு கவுன்சிலர் பதவிக்கு கூட வெற்றி பெற இயலாமல் பணத்தை வாரி இறைத்த போதும் அண்ணாமலைக்கும், பா.ஜ.க.வுக்கும் யாரும் ஓட்டு போட தயாராக இல்லை. அ.தி.மு.க. தலைவர்களைப் பற்றியும், அ.தி.மு.க.வை பற்றியும் பேசுவதற்கு அண்ணாமலைக்கு அருகதையே கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
    • தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    சென்னை:

    தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் மு.வேல்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 19-ந்தேதி நடை பெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 1358-ன் படி தமிழ்நாட்டில் உள்ள தொழிற் சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி. தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று அவர்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.

    எனவே அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் வாக்குப்பதிவு நாளான 19-ந் தேதி அன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    இது குறித்து புகார் அளிக்க ஏதுவாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை மற்றும் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது புகார்கள் இருப்பின் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கீழ்கண்ட கட்டுப்பாட்டு அறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

    தமிழ்நாடு மாநில கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் எம்.பி.கார்த்திகேயனை 9444221011 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    சென்னை மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை துணை இயக்குனர் சா. இளவரசனை 6374160918 என்ற எண்ணிலும் செங்கல்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர் கோ.அசோக்கை 9025155455 என்ற எண்ணிலும் அணுகி புகார் கூறலாம்.

    காஞ்சிபுரம், மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குனர் பா.பாலமுருகனை 86672 22871 என்ற எண்ணிலும் திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலரான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் கே.திவ்யாவை 9952000256 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துன்பங்களை நீக்கும் கோவிலாக விளங்குகிறது.
    • பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் பழஞ்சிறை தேவி கோவில் அமைந்துள்ளது.

    700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் துன்பங்களை நீக்கும் கோவிலாக விளங்குகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இந்த பிறவியிலேயே துன்பங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதிக் கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய மனைவி, சக்தி சொரூபிணியான பார்வதிதேவி ஆவார்.

    உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள் அந்த தேவி. ஒரு காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழங்களும் (பள்ளத்தாக்குகள்) நிரம்பப் பெற்றிருந்தது கேரளம். அதனால் அந்த பகுதி 'மலையாளம்' என்று அழைக்கப்பட்டது.

    அப்போது திருவனந்தபுரம் என்ற பகுதி பெரும் காடாகக் கிடந்தது. அதனால் அந்த இடத்தை 'அந்தன் காடு' என்று அழைத்தனர்.

    உயரமான மலைகளுக்கு இடையே தோன்றி, பல இடங்களின் மண்ணை தழுவியபடி அந்தன் காடு வழியாக ஓடிய நீலாற்றின் கரையில், யோகீஸ்வரர் என்ற முனிவர் பார்வதி தேவியை நினைத்து தவம் செய்தார். அனைத்து உயிர்களும் நலமுடன் வாழ்ந்திடவும், ஆன்மிகம் தழைத்து வளர்ந்திடவும், தான் முக்தி அடைந்திடவும் அந்த தவத்தை செய்து கொண்டிருந்தார்.

    முனிவரின் தவத்தை மெச்சிய பார்வதி தேவி, அவர் முன்பாகத் தோன்றி, "இந்த இடத்திலேயே என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுக.

    இங்கு வந்து என்னை வழிபடும் பக்தர்கள் அனைத்து நலனும் பெற்றிடுவர்" என்று கூறி மறைந்தாள். தனக்கு அம்பாள் எந்த வடிவத்தில் காட்சி தந்து அருள்புரிந்தாலோ, அதே வடிவில் ஒரு சிலையைச் செய்து வடக்கு நோக்கி பிரதிஷ்டை செய்தார், முனிவர். பின்னர் அவர் முக்தி நிலையை அடைந்தார்.

    நாளடைவில் அந்த வனப்பகுதி அழிந்து போனது. காடாக இருந்த இடத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிறைச்சாலை பல ஆண்டுளுக்கு பின்னர் காலநிலை மாற்றத்தினாலும், பராமரிப்பு இன்றியும் அழிந்து போனது. ஆனால் பல நெடுங்காலமாக இங்கு சிறைச்சாலை இருந்ததைக் கொண்டு, அந்த பகுதி 'பழஞ்சிறை' என்று அழைக்கப்பட்டது.

    ஒரு கட்டத்தில் சிறைச்சாலை இருந்த இந்த பகுதியில் அதற்கு முன்பாகவே ஒரு அம்மன் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிலை மீட்டெடுக்கப்பட்டு இங்கு ஆலயம் அமைக்கப்பட்டது. பழமையான சிறைச்சாலை இருந்த இடத்தில் உள்ள தேவி என்பதால் இந்த அன்னையை 'பழஞ்சிறை தேவி' என்றே பெயரிட்டு அழைத்தனர்.

    இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் முன்பாக சிலையை வடிவமைத்த யோகீஸ்வர முனிவரும் வீற்றிருக்கிறார். கொடுங்கல்லூர் பகவதி அம்மனின் அம்சமாக இங்குள்ள பழஞ்சிறை தேவி கருதப்படுகிறாள்.

     இந்த ஆலயத்தில் அழகு வண்ணச் சிற்பங்கள், கண்களையும் கருத்தையும் கவரும் விதமாக அமைந்துள்ளன. கர்ப்பக் கிரகத்தை, 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும் மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதாரக் காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்வு மிகவும் புகழ்பெற்றது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலை போல, இந்த கோவிலில் பொங்கல் வைபவம் என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பெண்கள் பலரும் கூடி நின்று பொங்கல் வைக்கும் இந்த விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    இந்த விழாவைத் தவிர, மேலும் பல விழாக்களும் பழஞ்சிறை தேவி கோவிலில் நடைபெறுகின்றன. அவற்றில் மாசி மாதம் நடைபெறும் விழா முக்கியமானது. அந்த விழாவின் போது 'கன்னியர் பூஜை' என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறு வயது தோற்றத்தில் இருப்பது போல பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்பார்கள்.

    இந்த நாளில் பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள். அதே போல் இங்கு நடைபெறும் பூதபலி பூஜையும், பஞ்சபூத பொங்கல் விழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பூதபலி பூஜை என்பது நள்ளிரவில் நடைபெறும் பூஜையாகும். அம்மனுடைய அருள் பெற்ற ஆலய பூசாரி, தனது பாதங்களில் சிலம்பு அணிந்து, கரங்களில் திரிசூலம் ஏந்தி, மூவர்ண பட்டு உடுத்தி வருவார்.

    கோவிலின் முன்பாக நின்று நடனமாடியபடியே பின்னோக்கிச் செல்வார். அங்கிருக்கும் பூத கணங்களுக்கு நேராக காலத்திற்கு ஏற்றபடி திக்கு பலி நடத்தி அம்மனை வழிபடுவார். இந்த இரவு பூஜையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.

    பஞ்சபூத பொங்கல் விழா என்பது மாசி மாதத்தின் 7-ம் நாள் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும். பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் என்கிறோம். மண்ணால் உருவாக்கப்பட்ட பானையில், கைகுத்தல் அரிசியை போடுவார்கள். பானையில் நீர் விட்டு, நெருப்பு மூட்டி பொங்கல் தயார் செய்வார்கள். காற்று என்னும் வாயுவை குறிக்கும் வகையில் அம்மனின் வாழ்த்தொலி, குரவை ஒலி ஆகியவை எழுப்பப்படும்.

    பொங்கல் தயாரானதும், வான் என்னும் ஆகாயம் வழியாக பொங்கல் பானைகள் மீது மலர் தூவப்படுகிறது. இந்த ஐந்து தத்துவங்களும் அடங்கியதால் அதற்கு 'பஞ்சபூத பொங்கல்' என்று பெயர் பெற்றது. நவராத்திரி விழா காலங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் கோவிலின் முன்பு அணையாத ஹோமம் நடத்தப்படுகிறது.

    நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் 'சண்டி ஹோமம்' நடத்தப்படும். மார்கழி மாதத்தில் அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், சித்திரை புத்தாண்டு, தமிழ் வருட பிறப்பில் சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கும். இத்தலத்தில் அருளும் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து, சுயம்வர அர்ச்சனை நடத்தினால், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை. அருள்சுரக்கும் இந்த அன்னையின் ஆலயத்தில் பங்குனி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தன்று திருவிழா தொடங்கும்.

    விழாவில் ஒவ்வொரு நாளும் சில பக்தர்கள் தங்கள் இனிய குரலில் 'தோற்றப்பாட்டு' என்னும் பாடலைப் பாடுவார்கள். அன்னையின் அவதார மகிமை இந்த பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலை பாடுபவர்கள் அதற்கு முன்பாக 41 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

    இந்த பாடலைக் கேட்டாலே அனைத்து பாவங்களும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.

    2024-ம் ஆண்டுக்கான பொங்கல் திருவிழா நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. காலை 10.55 மணிக்கு தேவியை பாடி காப்பு கட்டி குடியிருத்தி விழா தொடங்குகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு கேரள கல்வித் துறை மந்திரி வி.சிவன் குட்டி கலாசார கலை விழாவை தொடங்கி வைக்கிறார். மேயர் ஆர்யா ராஜேந்திரன் குத்து விளக்கேற்றி வைப்பார்.

    திருவிழாவின் முன்னோடியாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலையில் புண்யாகம், பிரகார சுத்தி, திரவ்யகலச பூஜை ஆகியவை நடைபெறும். விழா நாட்களில் தினமும், காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், உஷபூஜை, கணபதி ஹோமம், திரவ்ய கலசாபிஷேகம் நடைபெறும். மாலையில் பஞ்சாலங்கார பூஜை, புஷ்பாபிஷேகம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதே போல் தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும்.

    விழாவையொட்டி, 17-ந்தேதி இரவு 9 மணிக்கு களமெழுத்தும் சர்ப்பபாட்டும், 18-ந்தேதி இரவு 8.30 மணிக்கு அஷ்டமங்கல்ய பூஜை நடைபெறும்.

    7-ம் திருவிழாவான 19-ந்தேதி அன்று பிரசித்திப் பெற்ற பொங்கல் வழிபாடு நடக்கிறது. அன்று காலை வழக்கம் போல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு பகல் 10.25 மணிக்கு பொங்கல் வழிபாடு தொடங்குகிறது.

    மதியம் 1 மணி முதல் தாலப்பொலி உருள் நேர்ச்சை, பிற்பகல் 2.15 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்படும். இரவு 7.45 மணிக்கு குத்தியோட்டம், சுருள் குத்து. இரவு 10.35 மணிக்கு யானை மீது தேவி பவனி நடக்கிறது.

    20-ந்தேதி இரவு 7.40 மணிக்கு காப்பு அவிழ்ப்பு, 12 மணிக்கு குருதி தர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் மோகன்தாஸ், செயலாளர் விஜயன், துணை தலைவர் சந்திர சேனன், இணை செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நோட்டாவுக்கு என்று பொதுவான குறிப்பிட்ட சின்னம் எதுவும் கிடையாது.
    • தமிழகம் இந்த வரிசையில் பீகார், உத்தரபிரதேசத்தை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது.

    வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாவிட்டால் செல்லாத ஓட்டு போடுவதற்கு பதில் "விருப்பம் இல்லை" என்று வாக்களிக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறைக்கு "நோட்டா" என்ற பெயர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மின்னணு எந்திரங்களில் நோட்டாவுக்கு வாக்காளிப்பதற்கு என்று வசதிகள் செய்யப்பட்டன.

    நோட்டாவுக்கு என்று பொதுவான குறிப்பிட்ட சின்னம் எதுவும் கிடையாது. சிலர் தேர்தல்களில் நோட்டாவுக்கு என்று தனி சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் கடந்த தேர்தலில் நோட்டா எனும் ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு பிறகு கடைசியில் நோட்டா பிரிவு சேர்க்கப்பட்டு இருக்கும்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டா அறிமுகம் ஆன போது நாடு முழுவதும் சுமார் 60 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர். அதாவது வாக்களித்தவர்களில் சுமார் 2 சதவீதம் பேர் எந்த வேட்பாளரையும் விரும்பவில்லை என்பது தெரிய வந்தது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 22 ஆயிரமாக அதிகரித்தது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுமார் 8 லட்சத்து 17 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர்.

    பீகாரை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர். தமிழகம் இந்த வரிசையில் பீகார், உத்தரபிரதேசத்தை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது.

    தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 570 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர். மேற்கு வங்காளம், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், மத்திய பிரதேசம், ஆந்திரா மாநிலங்களிலும் கணிசமானவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர்.

    இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 1 கோடி பேர் நோட்டாவுக்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுதான் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. தமிழகத்திலும் நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு மேல் செல்லக்கூடும் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    சில தொகுதிகளில் நோட்டாவுக்கு விழும் வாக்குகள் கட்சி வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக கூடமாறலாம் என்கிறார்கள். இதன் காரணமாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் கடும் பீதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இளைய தலைமுறை மற்றும் முதல் முதலாக வாக்களிக்கப் போகும் இளைஞர்களை பிரசாரத்தின் மூலம் கவர்ந்தால் மட்டுமே அவர்களை நோட்டாவில் இருந்து தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் இளம் வாக்காளர்களுக்காக சமூக வலைதள பிரசாரத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.

    ×