search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை அல்ல, அவரது அப்பாவே வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது
    X

    அண்ணாமலை அல்ல, அவரது அப்பாவே வந்தாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது

    • அ.தி.மு.க. அழிந்து போகும் என்று பேசி வரும் அண்ணாமலைக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
    • தேன்கூட்டில் கையை வைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியாது.

    மதுரை:

    மதுரையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பரவை, ஊர் மெச்சிகுளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஒரு உயரமான சுவரில் ஆட்டுக்குட்டி ஒன்று நின்று கொண்டு அவ்வழியாகச் சென்ற சிங்கத்தை வம்புக்கு இழுத்தது. ஏய் சிங்கம் நில், எனக்கு தழையை பறித்து போடு என சவடால் அடித்தது. சுவர் என்பது ஆளுங் கட்சி. மத்தியில் தனது கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது என்ற திமிரில் அண்ணாமலை வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார்.

    நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை. அவர் மட்டுமல்ல, அவரது அப்பனே வந்தாலும் அ.தி.மு.க.வை அளிக்க முடியாது. அரசியலில் அவர் கற்றுக் குட்டி தான், திராவிட இயக்கங்களின் வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் அண்ணாமலை. அவர் படித்து பாஸ் செய்தாரா, அல்லது பிட்டு அடித்து பாஸ் செய்தாரா என சந்தேகமாக உள்ளது.


    அ.தி.மு.க. அழிந்து போகும் என்று பேசி வரும் அண்ணாமலைக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். திராவிட இயக்கம் வளர வேண்டும் என உழைத்த தலைவர்களை அண்ணாமலை இழிவாக பேசி வருகிறார். அவர்களைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி உள்ளது . உயர்ந்த தலைவர்களை இழிவாகப் பேசி வரும் அவரது நாக்கை வெட்டணுமா, வேண்டாமா? பத்தாண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது.

    பா.ஜ.க.வில் முழுவதும் திருடர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. திருட்டுக் கூட்டம் அனைத்தும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளது. அண்ணாமலை வந்த பிறகு தான் இதுபோன்ற நபர்கள் பா.ஜ.க.வில் அதிகமாக சேர்ந்துள்ளனர். அ.தி.மு.க. அழிந்து போகும் என்று பேசிவரும் அண்ணாமலை தான் தேர்தலுக்குப் பிறகு அழிந்து போவார். அரசியலில் இருந்து அவர் அப்புறப்படுத்தப்படுவார். முகவரி இல்லாமல் ஆகிவிடுவார்.

    தேன்கூட்டில் கையை வைத்துவிட்டு நிம்மதியாக இருக்க முடியாது. நிச்சயம் அதற்கான பலனை அனுபவிப்பார். ஒரு கவுன்சிலர் பதவிக்கு கூட வெற்றி பெற இயலாமல் பணத்தை வாரி இறைத்த போதும் அண்ணாமலைக்கும், பா.ஜ.க.வுக்கும் யாரும் ஓட்டு போட தயாராக இல்லை. அ.தி.மு.க. தலைவர்களைப் பற்றியும், அ.தி.மு.க.வை பற்றியும் பேசுவதற்கு அண்ணாமலைக்கு அருகதையே கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×