என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • செந்துறை போலீசார் ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
    • முந்திரி காட்டில் சிறுத்தையை தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக் காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் பொன்பரப்பி கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் கூறிய சிறுத்தையின் கால் தடம் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    நேற்று நள்ளிரவு நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்துள்ளது.

    சிறுத்தை மருத்துவமனை சாலையின் குறுக்கே வந்து கம்பி வேலியை தாண்டி செல்லும் காட்சிகள் மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து செந்துறை போலீசார் வாகனத்தில் சென்றபடி ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைப் பார்த்து இது சிறுத்தை தான் என்று உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு பிரிவு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து தெர்மல் டிரோன் கேமராவை வைத்து சிறுத்தையை இருக்கும் இடத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சிமெண்ட் ஆலை சுரங்கம் மற்றும் முந்திரி காட்டில் சிறுத்தையை தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் செந்துறை, பொன்பரப்பி ஆகிய ஊர்களில் முந்திரி காடுகள், நீர்நிலைகளில் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். 3 பிரிவுகளாக பிரிந்து வனத்துறை அதிகாரிகள் கேமராக்களை பொருத்தினர்.

    இந்நிலையில் சிறுத்தை நடமாட்டத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.

    பள்ளி சென்ற மாணவர்கள் மதியம் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    • ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியை தாண்டி அண்ணாமலை பிரசாரம்.
    • ஏற்கனவே பாஜகவினர் 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

    கோவையில் திமுக கூட்டணி கட்சியினர் மீது பாஜகவினர் நேற்று தாக்குதல் நடத்தினர்.

    இந்த விவகாரம் தொடர்பாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கோவை ஆவாரம்பாளையத்தில் நேற்றிரவு 10 மணியை தாண்டி அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டதாக திமுகவினர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் ஏற்கனவே பாஜகவினர் 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    • முதலமைச்சர் ஏற்படுத்திய மகளிருக்கு இலவச பஸ் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் பெண்கள் 25 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.
    • கடந்த தேர்தல்களின்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

    தென்காசி:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு தீவிர பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும். சொன்னதை செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். அதற்கு நீங்கள் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் விற்பனை செய்யப்படும். தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் முழுமையாக அகற்றப்படும். இதனால் நீங்கள் சுங்கச்சாவடிக்கு கட்ட வேண்டிய கட்டணம் ஒன்றிய அரசுக்கு செலுத்த வேண்டியது இல்லை.

    நெல்லை-சங்கரன்கோவில் ரெயில்வே வழித்தடத்தை இணைத்து ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமங்கலம் பகுதிகளை உள்ளடக்கிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். கோவையில் இருந்து சென்னை செல்லும் ரெயில் கடையம் பகுதியில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்களின் அன்பை பெற்று அவர்களின் ஆதரவு மூலம் முதலமைச்சர் ஆனவர் தி.மு.க. தலைவர். ஆனால் எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் ஆனார். பின்னர் அவருக்கே துரோகம் செய்தார்.

    கொரோனா உச்சத்தில் இருந்தபோது தடுப்பூசி செலுத்திக்கொண்டு கோவையில் கொரோனா வார்டுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்த ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், ஆவின் பால் லிட்டருக்கு 2 ரூபாயும் குறைத்தவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    முதலமைச்சர் ஏற்படுத்திய மகளிருக்கு இலவச பஸ் திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் மட்டும் பெண்கள் 25 கோடி முறை பயணம் செய்துள்ளனர்.

    அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் மேற்படிப்புக்காக திராவிட மாடல் ஆட்சியால் செயல்படுத்தப்படும் மாதம் ரூ.1000 திட்டத்தின் கீழ் 3.50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் பேர் பயன்பெறுகிறார்கள்.

    திராவிட மாடல் ஆட்சியின் சாதனை திட்டமான முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் 31 ஆயிரம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இதில் தென்காசி மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். இந்த திட்டத்தை தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.

    கலைஞரின் மகளிர் உரிமைத்தொகைக்காக 1 கோடியே 60 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 1 கோடியே 18 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் கலைஞர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும்.

    சென்னை மிச்சாங் புயலின்போதும், நெல்லை, தூத்துக்குடி வெள்ளப்பாதிப்பின் போதும், நீட் தேர்வால் 22 மாணவர்கள் இறந்தபோதும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி வரவில்லை. தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வருகிறார்.

    கடந்த தேர்தல்களின்போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.

    5 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் எய்ம்ஸ்க்காக ஒற்றை செங்கலை நட்டு வைத்தனர். அதையும் நான் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன். ஆனால் அதன் பின்னர் பா.ஜ.க. ஆளும் 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் முதலமைச்சர் சென்னையில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என கூறியதுடன் 10 மாதத்தில் அது கட்டி முடிக்கப்பட்டு தற்போது அது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளது.

    தமிழக மக்கள் ஒன்றிய அரசுக்கு ஜி.எஸ்.டி. வரியாக 1 ரூபாய் செலுத்தினால் அதனை பிரித்து தமிழ்நாட்டிற்கு ரூ.29 பைசா மட்டுமே வழங்குகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான உத்தரபிரதேசத்திற்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் வழங்குகிறது.

    இதனால் ஒன்றிய பா.ஜ.க. அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. இதனால் பிரதமர் மோடியை இனி மிஸ்டர் 29 பைசா என்றே அழைக்க வேண்டும். எனவே மாநிலங்களுக்கு நிதி உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் அரசு அமையவும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் கைகாட்டும் நபர் பிரதமராக வருவதற்கு இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசு மக்களுக்கு கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
    • தடுமாறி கொண்டிருக்கும் கூட்டணியாக அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    தாராபுரம்:

    ஈரோடு பாராளுமன்ற தொகுதி த.மா.கா. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தமிழை வளர்த்து வருகிறார். தமிழ்நாட்டின் பாரம்பரியத்தைக் காக்க பாராளுமன்றத்தில் செங்கோலை நிறுவியவர் மோடி. எண்ணற்ற திட்டங்களை தமிழகத்திற்கு செய்துள்ளார்.

    ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் நிறைய நிலுவைப்பணி இருக்கிறது. சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையாக சரி செய்யவில்லை. இந்த தொகுதி மேலும் வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற வேண்டும். உயர வேண்டும். பாராளுமன்ற தொகுதி மென்மேலும் அனைத்து துறையிலும் உயர வேண்டும். அதற்கு நீங்கள் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கும் தி.மு.க., அரசு மக்களுக்கு கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் மூன்று ஆண்டு ஆட்சி காலத்தில் நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக சொத்து வரி உயர்வு , மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு செய்யும் தொகை உயர்வு என தி.மு.க.வின் கஜானாவை நிரப்பி கொள்கிறார்கள். ஆனால் மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.

    தடுமாறி கொண்டிருக்கும் கூட்டணியாக அ.தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    • சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தமிழகத்தில் இன்று முதல் தொடர்ந்து 5 தினங்களுக்கு பல்வேறு இடங்களில் பலத்த மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    தூத்துக்குடியில் இன்று காலையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதே போல ஏரல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை முதலே மிதமான மழை பெய்தது.

    இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நனைந்தபடியே சென்றனர். கார்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    தொடர்ந்து கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், ஏரல் பகுதியில் இன்று சுமார் 1 மணி நேரமாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக கொட்டியது.
    • குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கன மழை சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக கொட்டியது. இதனால் தென்காசியின் கூலகடை பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் சாக்கடை நீர் கலந்து தெருக்களில் சூழ்ந்து நின்றதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை பெய்ததால் குற்றாலத்தின் பிரதான அருவிகளான பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீண்ட நாட்களாக வறண்டு காணப்பட்ட குற்றால அருவிகளில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் மிதமான அளவில் விழ தொடங்கியுள்ளதால் அதில் ஆனந்த குளியல் போட சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

    • வெயிலில் இருந்து வாக்காளர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சாமியானா பந்தல்களும் அமைக்கப்படுகின்றன.
    • 16 ஆயிரத்து 500 பணியாளர்களும் வாக்குப் பதிவுக்கு தேவையான பணிகளை தங்களுக்குள்ளேயே பிரித்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த பணிகளை தேர்தல் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகிறார்கள்.

    சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 16 சட்ட மன்ற தொகுதிகள் வருகின் றன. இந்த தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தேர்தலுக்காக 3,719 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 600 பதற்றமான சாவடிகள் உள்ளன. சென்னையில் தேர்தல் பணிகளை கண்காணிக்க 299 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ள 16 ஆயிரத்து 500 பணியாளர்களும் வாக்குப் பதிவுக்கு தேவையான பணிகளை தங்களுக்குள்ளேயே பிரித்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.

    வாக்குப்பதிவு நடை பெறும் மையங்களில் போதிய மின் விளக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கூட வகுப்பறைகளே வாக்குப்பதிவு மையங்களாக மாறும் நிலையில் அங்கு ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள விளக்குகளோடு சேர்த்து கூடுதல் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டு போட வரும் வாக்காளர்களின் தாகத்தை தணிக்க தேவையான குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.

    தற்போது கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வெயிலில் இருந்து வாக்காளர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சாமியானா பந்தல்களும் அமைக்கப்படுகின்றன.

    மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி ஓட்டு போடுவதற்கு வசதி யாக சாய்வு தளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. சக்கர நாற்காலி களில் வரும் வாக்காளர்கள் எளிதாக அதில் ஏறி வாக்குச் சாவடி மையத்துக்குள் சென்று ஓட்டு போடுவதற்கு உரிய நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    தேர்தலுக்கு முந்தைய நாளில் இருந்தே பாதுகாப்பு தொடர்பான பணிகளை போலீசாருடன் இணைந்து அனைத்து தேர்தல் அலுவலர்களும் மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தேர்தல் நாளில் வாக்குப் பதிவு மையங்களில் வாக் காளர்கள் அடையாள அட்டையுடன் இருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் வெளியாட்களை அனுமதிக்கவே கூடாது என்றும் தேர்தல் அலுவலர் களிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் நாள் அன்று இது தொடர்பாக வாக்குப்பதிவு மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற் பாடுகளை போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசி முன்கூட்டியே முடி வெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பதற்றமான சாவடிகளில் கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்னும் சில தினங்களில் கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

    பதற்றமான சாவடிகளில் துணை ராணுவ படையினை கூடுதலாக மையத்தின் வளாகத்துக்குள்ளும் வெளியேயும் பணி அமர்த்த வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இப்படி பாராளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை திட்டமிட்டு அதில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்ள உயர் போலீஸ் அதிகாரிகளும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

    • பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் திருப்பூர் வருகை தர உள்ளார்.
    • திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் நாளை எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13ந்தேதி) சனிக்கிழமை திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம், வேலூர் கிராமத்தில் நடக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள திருப்பூர் வருகை தர உள்ளார்.

    எனவே முதலமைச்சரின் வருகையையொட்டி, பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் நாளை 13-ந்தேதி எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது.
    • கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதனால் பொது மக்கள் குழந்தைகள் தவிப்பிற்கு ஆளாகி இருந்தனர். இந்த நிலையில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. ஆனால் நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் தொடர்ந்து வெயில் அடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இன்று அதிகாலையில் நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. அதன் பிறகு காலை 9 மணி முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாகவே காணப்பட்டது. அதன் பிறகு மழை பெய்ய தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்தது. இடி மின்னலுடன் கொட்டிய மழையின் காரணமாக வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது.

    கொட்டாரம், சாமிதோப்பு, சுசீந்திரம், குளச்சல், குழித்துறை, தக்கலை, மார்த்தாண்டம், தடிக்காரன்கோணம், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தக்கலையில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோடை மழை பெய்து வருவதையடுத்து பொது மக்கள் மட்டுமின்றி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பேச்சிபாறை அணையை பொருத்தமட்டில் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.16 அடியாக உள்ளது. அணைக்கு 122 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.75 அடியாக உள்ளது.

    அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தனர்.
    • மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் அத்திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சில பெண்கள், தங்கம் விலை தற்போது அதிக அளவு உயர்ந்துள்ளதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

    தங்கம் விலையை உயர்த்தியது ஒன்றிய பா.ஜ.க. அரசுதான். தங்கம் விலைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லையம்மா என அவரது பாணியில் நகைச்சுவையாக பதில் அளித்தார்.

    தொடர்ந்து சில பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு வரவில்லை என புகார் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த 70 சதவீதம் பேருக்கு மாதம் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தகுதி வாய்ந்த அனைவருக்கும் தேர்தல் முடிந்ததும் அத்திட்டத்தின்படி உரிமை தொகை வழங்கப்படும் என்றார்.

    • தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியை ஆசிரியர்களுக்கு கடந்த 7-ந் தேதி நடந்த 2-ம் கட்ட பயிற்சியின் போது தபால் வாக்குப்பதிவு நடந்தது. இதில் அவர்கள் தங்களது வாக்கினை தபால் மூலமாக ஓட்டு பெட்டியில் போட்டனர்.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடும் சீருடை பணியாளர்களான ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) தபால் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,

    பாராளுமன்ற தேர்தலில் ஈடுபடும் 2,050 போலீசாருக்கு ஏற்கனவே தபால் வாக்களிக்கும் படிவம் வழங்கப்பட்டு அவர்கள் தொகுதிக்கான வேட்பாளரின் பெயர், சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பரும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதில் போலீசார்களுக்கான தபால் வாக்களிக்க ஏதுவாக வருகிற 15-ந் தேதி சீலிடப்பட்ட தபால் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட உள்ளது. அதில் மாவட்டத்தில் உள்ள போலீசார் தங்களது தபால் வாக்கினை செலுத்த உள்ளனர். தபால் வாக்களிக்க ஈரோட்டில் வேளாளர் கல்லூரி, கோபியில் ஒரு இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உறுதி செய்தால் முறைப்படி அனைத்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்படும். இது தவிர பிற தொகுதிகளில் வாக்குரிமை உடைய போலீஸ் அதிகாரிகள் நேரடியாக தபால் மூலமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் 100 சதவீத வாக்குப்பதிவை கொண்டு வர 18 வகையான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
    • 588 மிக உயர அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்கள் இந்த முறை வாக்களிக்க தனி கவனம் செலுத்தப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் 100 சதவீத ஓட்டுப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தினமும் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவர்கள், புதிய வாக்காளர்கள் கட்டாயம் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று காலையில் திருவான்மியூர் கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியத்தினை வலியுறுத்தி 'பாரா செய்லிங்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு கூடி இருந்த அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் மத்தியில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பாரா கிளைட்டில் பறந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    பின்னர் ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் 100 சதவீத வாக்குப்பதிவை கொண்டு வர 18 வகையான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. 40 சதவீதத்திற்கு குறைவாக வாக்குப்பதிவான 35 வாக்குச்சாவடிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    தீவுத்திடல் பகுதி, நிர்வாக கட்டிடங்கள், குடிசைப் பகுதிகளில் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது சரி செய்யப்படுகிறது. அதே போல ராணுவ பணியாளர்கள் மற்றும் தி.நகர், பாண்டிபஜார் பகுதியில் வசிக்கும் வியாபார பிரமுகர்கள் முறையாக வாக்களிக்கவில்லை. அதனையும் இந்த முறை சரி செய்ய விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

    மேலும் அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதியிலும் வாக்குப்பதிவு குறைவாக இருந்துள்ளது.

    மேலும் 588 மிக உயர அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்கள் இந்த முறை வாக்களிக்க தனி கவனம் செலுத்தப்படுகிறது. வெயில் பாதிப்பு இருப்பதால் பந்தல், குடிநீர் வசதி போன்றவை செய்யப்படுகின்றன.

    இதுவரையில் தபால் ஓட்டு 1,175 பதிவாகி உள்ளன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நாளை (சனிக்கிழமை) வரை தபால் ஓட்டு போடலாம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி, 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பெரும்பாலான இடங்களில் முடிந்து விட்டது. சோழிங்கநல்லூர் தொகுதியில் 600 வாக்குச்சாவடிகள் உள்ளதால் அங்கு மட்டும் இன்று இரவு வரை சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×