என் மலர்
உள்ளூர் செய்திகள்
- செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமி அருள்புரிகின்றனர்.
- பங்குனி மாத கிருத்திகையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமி அருள்புரிகின்றனர்.
இங்கு பங்குனி மாத கிருத்திகையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு 21வகையான நறுமன திரவியபொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு மலர்கள்,ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து சண்முகார்ச்சனை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வருகை புரிந்து, கிருத்திகை வழிப்பாட்டில் பங்கேற்று தரிசனம் செய்தார்.
இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- தமிழ்நாட்டில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை... ஆளும் கட்சியும் இல்லை.
- ஏப்ரல் 19 உன் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4 சிங்கக்குட்டிகளின் உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் ஓடோடி வந்துவிட்டது. அடுத்த வாரம் இதே நாள், இதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மக்கள் இந்தியத் தேசத்தின் எதிர் காலத்தைத் தங்களின் விரல் நுனிகளால் எழுதிக் கொண்டிருப்பார்கள்.
தமிழ்நாட்டில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை... ஆளும் கட்சியும் இல்லை. அதனால் நம்மிடம் கோடிகளும் இல்லை. நம்மிடம் இருப்பவை அனைத்தும் கொடிகளும், கொள்கைகளும் தான். இவற்றை வைத்துக் கொண்டு இவர்களால் என்ன செய்து விட முடியும்? என்ற ஏளனப் பார்வையுடன் தான் தமிழகத்தின் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் நுழைந்தன. ஆனால், சிங்கத்தின் குகையில் சிறு நரிகளால் என்ன செய்து விட முடியும்? என்பதைப் போல நமது உழைப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் அக்கட்சிகள் தொலைதூரத்துக்குப் பின்னால் துவண்டு கிடக்கின்றன. நீயோ வெற்றிக் கோட்டை நெருங்கி விட்டாய்.
2019-ம் ஆண்டில் திமுக கூட்டணி சார்பில் 38 பேர் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றனர். ஆனால், அவர்கள் ஆறாவது விரலாகத் தான் இருந்தனர். அவர்களால் அவர்களைத் தேர்வு செய்த தொகுதிகளின் மக்களுக்கோ, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கோ எந்தவித பயனும் ஏற்படவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி காலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட பல தொடர்வண்டித் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப் படாமலேயே கிடக்கின்றன. கால ஓட்டத்தில் தமிழகத்திற்கான தேவைகள் அதிகரித்திருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால், தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய, செயல் படக்கூடிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பா.ம.க. 10 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றிக்கனியை பரிசாக வழங்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர். அதே நேரத்தில் அந்தக் கனியை பறிக்க நமது உழைப்பும் மிகவும் அவசியம். இதை நான் உனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து களத்தில் எப்படி உழைக்கிறாயோ, அதே உழைப்பை இன்னும் ஒரு வாரத்திற்கு கொடு. வெற்றி நம் வசமாகிவிடும். ஏப்ரல் 19 உன் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4 சிங்கக்குட்டிகளின் உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கை இல்லை.
- நெல்லை தொகுதிக்கு ராகுல் காந்தி வருவதை தேர்தல் திருவிழாவாக பார்க்கிறோம்.
நெல்லை:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இன்று மாலை பாளையங்கோட்டையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதையொட்டி காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை தரிசித்து வந்துள்ளேன். முருகப்பெருமான் எப்படி பாசிச சக்திகளை சூரசம்காரம் செய்தாரோ அதேபோல் சூரசம்காரம் செய்ய வேண்டி தரிசனம் செய்து முடித்துள்ளோம்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., இன்று மாலை 4 மணி முதல் 4.50 மணி வரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து கோவை செல்கிறார். அங்கே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் சேர்ந்து பிரசாரத்தில் பங்கேற்க உள்ளார்.
இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணியின் வெற்றி எழுச்சி மிக்க ஒன்றாக அமைந்துள்ளது. தினந்தோறும் 25, 50 என வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் நாளுக்கு நாள் இறங்கி கொண்டே போகிறது என்று மாம்பழத்தை ஒப்பிட்டு பேசியுள்ளார். இந்த பேச்சு எங்களுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. மோடியின் ஆட்சியில் அதிகாரிகளாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களே அவருக்கு எதிராக பேசி வருகிறார்கள்.
தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படும் என்ற நம்பிக்கை இல்லை. ரூ.4 கோடி பிடிபட்ட பிறகும் ஒரு வாரம் கடந்த நிலையிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை அதிகாரிகள் கும்பகர்ணன் போல் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் வேட்பாளரிடம் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை. மக்கள், தொண்டர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து தான் பிரசாரம் செய்து வருகிறார். அவருக்கு சொந்தமாக வண்டி கூட இல்லை.
ரஜினிகாந்த் கர்நாட காவில் பிறந்து தமிழகத்தில் வந்து நடித்து வருகிறார். பக்கத்து மாவட்டத்தில் இருந்து வந்து போட்டியிடுபவரை இறக்குமதி வேட்பாளர்கள் என்கிறீர்கள். அவர் இறக்குமதி வேட்பாளர் இல்லை. அவர் தென் இந்தியா முழுவதும் மிகவும் பரிச்சயமான வேட்பாளர்.
அவர் ஒரு மத போதகர். இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்பவர். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்துக்குமான தேர்தல் இப்போது நடக்கிறது.
நெல்லை தொகுதிக்கு ராகுல் காந்தி வருவதை தேர்தல் திருவிழாவாக பார்க்கிறோம். அவரது வருகை மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாடு முழுவதும், 27 லட்சம் கோடி ரூபாய், 44 கோடி மக்களுக்கு சென்றடைந்தது.
- நிறைய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட நிறைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வருகை தந்தார்.
அப்போது அவர் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் கொளுத்தும் வெயில் என்று பாராமலும், வேலை நாட்களிலும் இந்த பிரசார கூட்டத்திற்கு மக்கள் திரண்டுள்ளனர். இதனை கண்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு இரண்டு, மூன்று கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறனே். மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கோஷம் ஒலித்து வருகின்றன.
எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சியினர், தி.மு.க.வினர் பாராளுமன்றத்தில் கிருஷ்ணகிரியை பற்றியோ, ஓசூரை பற்றியோ என்ன கேள்விகளை எழுப்பினர்கள் என்று பெரிய கேள்விகுறியாக உள்ளது.
நிறைய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட நிறைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறது. இதில் பி.எம். முத்ரா யோஜன திட்டத்தின் மூலம் ஏழை எளியோருக்கு சிறு,குறு தொழில்கள் தொடங்க வங்கி மூலம், எந்த ஒரு ஆவணமின்றி குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், 27 லட்சம் கோடி ரூபாய், 44 கோடி மக்களுக்கு சென்றடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் 5 ஆயிரம் 427 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 6.34 லட்சம் பேருக்கு கடன் கிடைத்துள்ளது. அதேபோன்று ஸ்டார் அப்திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 465 பேருக்கு ரூ.60 கோடி கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக பெண்கள், எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினரும் பயன் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் 2.75 லட்சம் பேரின் வீட்டிற்கு குழாய் மூலம் நேரடியாக குடிநீர் மூலம் விநியோக செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் நேரிடையாக வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறத்தில் 18,600 பேருக்கு பிரதமர் மோடி வீடு கட்டி கொடுத்துள்ளார். அதேபோல் மாவட்டத்தில் நகர்ப்புறத்தில் 7460 பேருக்கு பிரதமர் மோடியின் பெயரில் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு மூலம் ஒரு ரூபாய் செலவில்லாமல், எந்தவொரு ஆவணம் காட்டாமல் கேஷ் லெஸ் என்ற முறையில் இலவச சிகிச்சை அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 64 ஆயிரம் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2.35 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் தொழில் வளர்ச்சி அடைந்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் துறையில் தி.மு.க.வினர் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் முதலமைச்சர் குடும்பத்துடன் தொடர்பில் இருந்துள்ளார்.
முன்னதாக அவர் டெல்லியில் இருந்து பெங்களூரு விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் மூலம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் ஓசூரில் உள்ள பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., மற்றும் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை முடித்துவிட்டு அவர் காரில் அங்கிருந்து புறப்பட்டு பெங்களூருவுக்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டார்.
- பெரும்பாக்கத்தில் 30,000 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
- தபால் வாக்களிக்கும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 6.32 கோடி வாக்காளர்களில் நேற்று வரை 4.36 கோடி வாக்காளர்களுக்கு அதாவது 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.
சி.விஜில் செயலி மூலம் இதுவரை 3605 புகார்கள் பெறப்பட்டுள்ளது. 74.52 கோடி ரூபாய் வருமான வரித்துறை மூலம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தபால் வாக்களிக்கும் முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி திருச்சியில் மாநில அளவிலான ஒருங்கிணைந்த மையம் தபால் வாக்கிற்கு என அமைக்கப்படும். அங்கிருந்து தபால் வாக்குகள் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும்.
எடுத்துக்காட்டுக்கு சென்னையில் பணிபுரியும் ஒருவரின் வாக்கு கன்னியாகுமரியில் இருந்தால் சென்னையிலிருந்து ஒரு அதிகாரி கன்னியாகுமரிக்கு சென்று அந்த தபால் வாக்கு சீட்டுகளை அளித்துவிட்டு வருவார்.
தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு அனைத்தும் ஒருங்கிணைந்த மையமான திருச்சிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
பெரும்பாக்கத்தில் 30,000 வாக்காளர் பெயர் நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் அளிக்க எந்தவித தடையும் இல்லை.
தொடர்ச்சியாக செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடரலாம் என்று தேர்தல் ஆணையத்தில் விதி உள்ளது. இதற்கு தேர்தல் ஆணையத்திடம் எந்தவித அனுமதி பெற தேவையில்லை. இன்று மதியம் இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்.
கோவை:
கோவை பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை இன்று கோவை மாவட்டத்திற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* கோவை எப்போதும் பசுமையாக இருக்க மரங்கள் நட்டு பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* கோவைக்கு 100 வாக்குறுதிகள்... 500 நாட்களில் நிறைவேற்றப்படும்.
* சரவணம்பட்டியில் மக்களின் பொழுதுபோக்குக்காக பொதுப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சரவணம்பட்டியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின்கீழ் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* கோவையில் IIM கொண்டுவர வலியுறுத்துவோம்.
* கோவையில் இருந்து ஆன்மிக தலங்களுக்கு 10 புதிய ரெயில்கள் இயக்கப்படும்.
* 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி அமித்ஷா தரிசனம் செய்ய இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று மாலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை அடுத்த நேதாஜி சாலையில் தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத் தூண் பகுதி வரை ரோடு-ஷோ மூலமாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதி முழுவதும் காவல்து றையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக மதுரை நேதாஜி சாலை, தெற்கு ஆவணி மூல வீதி, விளக்குத் தூண் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள், வணிகர்கள் நடந்து சென்று வருகின்றனர்.
ரோடு-ஷோ நடைபெறும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே நிற்கக்கூடிய வாகனங்களில் வெடி குண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்றபடி காவல்துறையினர் முழுவதுமாக கண்காணித்து வருகின்றனர்.
உள்துறை மந்திரி அமித் ஷா மதுரையில் இரண்டு முறை பிரசாரத்திற்கு திட்டமிட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் திட்டம் உறுதி செய்யப்பட்டு மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் ரோடு-ஷோ நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 3 மணி முதல் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கும் அந்த பகுதியில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதைடுத்து இன்று மாலை சுவாமி வீதி உலா வரவுள்ள நிலையில் பக்தர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய மந்திரி அமித்ஷா தரிசனம் செய்ய இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் இன்று மாலை சுவாமி வீதியுலா வருவதால் அவர் கோவிலுக்கு செல்வதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கருத்தில் கொண்டு தற்போது அமித்ஷா சுவாமி தரிசனம் செய்வது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விளாத்திகுளம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி விளாத்திகுளத்தை அடுத்து சின்னவநாயக்கன்பட்டியில் தனியார் மில் அருகே இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி ரூ.60ஆயிரத்து 50 கொண்டு சென்றது தெரிய வந்தது.மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் விருதுநகர் மாவட்டம், ராஜீவ்காந்திபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் விக்ரம் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
- மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
- தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக முக்கிய பிரமுகர்கள் பலரும் வருகை தந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 1½ லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்றும், எந்த சூழலிலும் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அதே நேரத்தில் தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக வெளிமாநில போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர ஊர்க்காவல் படையினர், சிறப்பு தமிழ்நாடு சிறப்பு போலீசார், ஆயுதப்படை காவலர்கள் ஆகியோரும் தேர்தல் பாதுகாப்புக்காக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அனைத்திலும் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக தேர்தல் பாதுகாப்பு பணியில் 200 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடிகளில் இவர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக முக்கிய பிரமுகர்கள் பலரும் வருகை தந்துள்ளனர். பிரதமர் மோடி 7 முறை தமிழகத்துக்கு வந்து பிரசாரம் செய்துள்ளார். வருகிற 14-ந்தேதி 8-வது முறையாக மீண்டும் பிரசாரத்துக்காக வருகை தருகிறார்.
ராகுல்காந்தி இன்று மாலை பிரசாரம் செய்ய உள்ள நிலையில் பிரியங்காவும் பிரசாரம் செய்ய உள்ளார். இவர்களை தவிர தமிழக தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுபோன்று முக்கிய பிரமுகர்கள் 240 பேர் போலீசாரின் வி.ஐ.பி. பட்டியலில் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணத்தோடு ரவுடிகள் செயல்பட்டு வருகிறார்களா? என்பது பற்றியும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
அவர்களை வேட்டையாட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுமார் 20 ஆயிரம் ரவுடிகளை போலீசார் பட்டியல் போட்டு கண்காணித்து வரும் நிலையில் 4 ஆயிரம் பேரிடம் எழுதி வாங்கி உள்ளனர். தேர்தல் நேரத்தில் தொடங்கி ஓராண்டு காலம் வரையில் எந்தவித தவறும் செய்ய மாட்டோம் என்று எழுதி வாங்கியுள்ள போலீசார் ரவுடிகள் யார்-யாருடன் தொடர்பில் உள்ளார்கள் என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் சிறையில் இருந்து வெளிவந்த ரவுடிகள் எத்தனை பேர்? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பது பற்றி சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆய்வு செய்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிமம் பெற்று துப்பாக்கியை பயன்படுத்தும் அனைவரும் தேர்தல் நேரத்தில் அவைகளை ஒப்படைத்து விட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 17 ஆயிரத்து 583 துப்பாக்கிகள் மாநிலம் முழுவதும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வங்கி பணிகள் மற்றும் முக்கியமான அலுவலகங்களில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், விளையாட்டு போட்டிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கு மட்டும் ஒப்படைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் போலீசார் இரவு-பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய எல்லையோர பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளது.
- நீலகிரி உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை.
தமிழகத்தில் 70 சதவீத வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றியுள்ளது.
நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னம் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது.
நீலகிரியில் வேட்பாளரின் செலவு கணக்கை குறைத்து காட்ட சொன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பார்வையாளர் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால், நீலகிரி உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
- ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
- ஏப்ரல் 14, 15ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் மழைபெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, கேவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 14, 15ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- செந்துறை போலீசார் ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
- முந்திரி காட்டில் சிறுத்தையை தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக் காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் பொன்பரப்பி கிராமத்திற்கு சென்று கிராம மக்கள் கூறிய சிறுத்தையின் கால் தடம் மற்றும் அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
நேற்று நள்ளிரவு நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த செந்துறை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை புகுந்துள்ளது.
சிறுத்தை மருத்துவமனை சாலையின் குறுக்கே வந்து கம்பி வேலியை தாண்டி செல்லும் காட்சிகள் மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து செந்துறை போலீசார் வாகனத்தில் சென்றபடி ஒலி பெருக்கியின் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைப் பார்த்து இது சிறுத்தை தான் என்று உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு பிரிவு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து தெர்மல் டிரோன் கேமராவை வைத்து சிறுத்தையை இருக்கும் இடத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சிமெண்ட் ஆலை சுரங்கம் மற்றும் முந்திரி காட்டில் சிறுத்தையை தேடுதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் செந்துறை, பொன்பரப்பி ஆகிய ஊர்களில் முந்திரி காடுகள், நீர்நிலைகளில் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். 3 பிரிவுகளாக பிரிந்து வனத்துறை அதிகாரிகள் கேமராக்களை பொருத்தினர்.
இந்நிலையில் சிறுத்தை நடமாட்டத்தால் ஏற்பட்ட அச்சம் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி சென்ற மாணவர்கள் மதியம் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.






