என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மதுரை நேதாஜி சாலையில் உள்துறை மந்திரி அமித் ஷா ரோடு ஷோ தொடங்கினார்.
    • சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை அடுத்த நேதாஜி சாலையில் தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் பகுதி வரை ரோடு-ஷோ மூலமாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.

    உள்துறை மந்திரியின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். குறிப்பாக மதுரை நேதாஜி சாலை, தெற்கு ஆவணி மூல வீதி, விளக்குத்தூண் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    ரோடு ஷோவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்றபடி காவல்துறையினர் முழுவதுமாக கண்காணித்தனர்.

    இந்நிலையில், மதுரை நேதாஜி சாலையில் உள்துறை மந்திரி அமித் ஷா ரோடு ஷோ தொடங்கினார். பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். வழியெங்கும் நின்றிருந்த தொண்டர்களைப் பார்த்து மந்திரி அமித் ஷா உற்சாகமாக கையசைத்தார்.

    • ஜிஎஸ்டி வரி குறித்து பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
    • இதனால் அவரை தகாத வார்த்தைகளில் பேசி பா.ஜ.,வினர் தாக்குதல் நடத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் பாஜகவினர் பிரசாரத்திற்கு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த ஒரு பெண், பா.ஜ.க.வினரிடம் சானிடரி நாப்கின்களுக்கு கூட ஜி.எஸ்.டி வரி வசூலிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

    இதையடுத்து, பா.ஜ.க.வினர் அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அந்தப் பெண்ணே வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியது. இதற்கு தி.மு.க.வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், முதலில் கோவையில் பா.ஜ.க. வன்முறை. அடுத்து திருப்பூரில் கோழைத்தனமாக தன்னந்தனியாக நின்ற ஒரு இளம்பெண் மீது கொலைவெறித் தாக்குதல். கோவையில் தோல்வி நிச்சயம் என்றதும் வன்முறை வெறியாட்டம் ஆட துவங்கியுள்ளது பா.ஜக. திருப்பூரிலும் ஒரு பெண்மணி ஜி.எஸ்.டி அநியாயங்கள் குறித்து துணிவாகவும் நேர்மையாகவும் கேட்டதற்கு பா.ஜ.க.வினர் 5 பேர் சேர்ந்து அந்த இளம் பெண்ணை தாக்கியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் இந்த அடாவடி அராஜகக் கூட்டம் அமைதியான கோவை-திருப்பூருக்கும், தமிழகத்திற்கும் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை.
    • தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை ஊட்டியில் உள்ள பாஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி என்பது உறுதியாகி விட்டது. அதுவும் பிரதமர் பிரசாரத்திற்கு வந்து சென்ற பின்னர் இங்கு பா.ஜ.க மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் தொகுதியாக இது இருக்கும்.

    10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை. நீலகிரியில் உள்ள மக்கள் மீது அவருக்கு எந்தவித அக்கறையும் இல்லை. அவர்களை பற்றியும் அவர் கவலைப்படுவதோ அல்லது இங்குள்ளவர்களை சிந்திப்பதோ கிடையாது.

    ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எந்த பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்றாலும் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட குன்னூர் பகுதியில் பிரசாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் இங்கு நீங்கள் பிரசாரத்திற்கு வர வேண்டாம் என கூறி அங்கிருந்து போக சொல்லி விட்டனர். அந்தளவுக்கு ஆ.ராசா மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இவர் பெண்கள், கடவுள்கள் பற்றி அவதூறு பேசி வருகிறார்.

    2009-ம் ஆண்டு முதல் இங்கு போட்டியிட்டுள்ள ஆ.ராசா இதுவரை தனது வாக்காளர் அடையாள அட்டையை கூட நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை. சமூகநீதி பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கோ எந்த தகுதியும் இல்லை.

    அருந்ததியர் மக்களுக்கு என்று உள்ள தனி தொகுதி நீலகிரி. அந்த தொகுதியில் கூட, அருந்ததியர் வேட்பாளருக்கு தி.மு.க.வினர் இடம் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் சமூக நீதி பற்றி பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.

    நீலகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவர் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார். இதுபற்றி பா.ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்படும். 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் அதிகாரிகள் என்னையே கண்காணிப்பு கேமராவுடன் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் ஆ.ராசாவை அவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. அவரின் வாகனத்தை கூட பறக்கும் படையினர் முறையாக சோதிப்பது கிடையாது.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. தங்கள் மீது குறை சொல்லா அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது அப்படி தெரியவில்லை.

    இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் பலர் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் போல செயல்படுகிறார்கள். இன்னும் சிலர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் வேலை பார்க்கும் ஆளாகவே செயல்படுகின்றனர். ஆ.ராசா என்ன சொன்னாலும் கேட்பவர்களாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தேர்தல் நியாமாக நடக்கும் என்று சொல்ல முடியும். பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டபோது கூட சான்றிதழ்கள் கேட்டு அலைக்கழித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது.
    • எனவேதான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன் என்றார்.

    நெல்லை:

    நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

    தமிழ்நாட்டு மக்களை என்றும் அன்போடி நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாசாரம், வரலாறு, மொழி ஆகியவை என்னை ஈர்த்துள்ளது.

    எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ, அப்போதெல்லாம் நான் தமிழ்நாட்டை பார்ப்பேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது.

    பெரியாரைப் போன்ற பேராளுமைகளை தமிழ்நாடு கொடுத்துள்ளது. காமராஜர், கருணாநிதி போன்றோரையும் இந்த மண் தந்துள்ளது. எனவேதான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன்.

    தமிழக விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராடியபோது மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

    இந்தியாவில் உள்ள மற்ற எந்த மொழிகளை விட தமிழ் ஒன்றும் குறைந்தது இல்லை. தமிழ் என்பது மொழி அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை.

    தமிழ் மொழி மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்பதை தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே பார்க்கிறேன்.

    மத்தியில் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவோம்.

    ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவோம்.

    அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்.

    பிரதமர் மோடி மீனவர்களை மறந்துவிட்டார். விவசாயிகளைப் போல மீனவர்களும் முக்கியமானவர்களே.

    உலகின் எந்த சக்தியாலும் தமிழை தொட்டுப் பார்க்க முடியாது என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது.
    • தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தமிழகத்தில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நெல்லையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    நெல்லை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அமைந்துள்ள தனியார் பள்ளி மைதானத்தில் பொதுக்கூட்ட மேடையில் பேசுகிறார். ராகுல் காந்தியுடன் இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மதுரை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த ராகுல் காந்திக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி நெல்லை வந்தடைந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே அவர்களின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தின் அடிப்படையாகும்.
    • சதித்திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சனநாயக முறையைப் பாதுகாப்பதும் நமது முதன்மையான கடமைகளாகும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றித் தந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழிப்பதையே மோடி அரசு தனது இலக்காக வைத்துள்ளது. இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றான 'மதச்சார்பற்ற நாடு' என்பதை மாற்றி இந்தியாவை 'மதம் சார்ந்த நாடு' என அறிவிப்பதற்கும், மீண்டும் மனு நூலின் அடிப்படையில் வருண வேற்றுமையை சட்ட பூர்வமாக ஆக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது.

    அவர்களது நோக்கம் நிறைவேறிவிட்டால், அதாவது மீண்டும் பா.ஜ.க. பாசிசக் கும்பல் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது. இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே அவர்களின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்தின் அடிப்படையாகும்.

    அரசமைப்புச் சட்டம் தான் சமத்துவத்தையும் சமூக நீதியையும் பாதுகாக்கிறது. அது இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த உரிமையும் இருக்காது. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களைக் கல்வி பெற விடாமல் தடுத்து மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு செல்வதுதான் ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜகவின் திட்டமாகும். அதற்காகவே அவர்கள் தேர்தல் அரசியலை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, அவர்களது சதித்திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சனநாயக முறையைப் பாதுகாப்பதும் நமது முதன்மையான கடமைகளாகும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் இந்தக் கடமைகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம்.

    புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளின் போது அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து'நாட்டை மீட்போம்! அரசமைப்புச் சட்டம் காப்போம்' என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார்.
    • அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் அப்பகுதி மக்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தான் வெற்றி பெற்றவுடன் பெரியதொகை தருவதாக ஏமாற்றிச் சென்றவர்தான் இங்கு போட்டியிடும் டி.டி.வி. தினகரன்.

    ஆர்.கே.நகர் தொகுதி மக்களை ஏமாற்றியதைப் போல தேனி மக்களையும் ஏமாற்ற பிரசாரம் செய்து வருகிறார். அவரை வாக்காளர்கள் நம்ப மாட்டார்கள். மத்தியில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டபோதும் சரி தொழிலாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்ட போதும் மத்திய அரசுக்கு துணையாக இருந்தது அ.தி.மு.க. அரசு. தற்போது கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக நாடகமாடி வருகின்றனர்.

    இவர்கள் கபட கூட்டணியை மக்கள் நம்ப மாட்டார்கள். திருவிழாவில் புகுந்து கொள்ளும் திருடன் தான் நகையை திருடி விட்டு திருடன் ஓடுகிறான்... திருடன் ஓடுகிறான்... என்று சத்தம் போடுவான். பொதுமக்கள் அவனை பிடிக்க செல்லும் போது இந்த திருடன் தப்பித்து ஓடி விடுவான். அதே போல்தான் மத்திய மந்திரிகள் இன்று தேர்தலுக்காக வாகன பேரணி, பிரசாரம் போன்றவற்றை செய்து வருகின்றனர்.

    இந்தியாவில் வேலையின்மை, பொருளாதார சீர்கேடுகள், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு பிரச்சினையை மோடி கையில் எடுத்து வருகிறார். அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஆக்கிரமித்து வருவதை பற்றி பேச மோடிக்கு மனமில்லை. இது போன்ற ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியா அழிவுப்பாதையில் செல்லும். எனவே மக்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்த சேவைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத்தேவையில்லை.
    • வழக்குகளில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன.

    தஞ்சாவூா்: தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சமரசநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக சமரச மையத்தின் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஊனச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜெசிந்தாமார்ட்டின் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது,

    நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகளை சுமூகமான முறையில் தீர்வுகாண வலியுறுத்தியும், நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

    சமரசமாக தீர்வு காணும் வழக்குகளில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன.

    சமரசமாக பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    • கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்டடோர் வசித்து வருகிறார்.
    • அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சீர்காழி: சீர்காழி அருகே கீழ மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரக்குடி கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இந்த கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் செய்து தர வில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஒவ்வொரு முறையும் தங்களது பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் தங்களது கிராமத்தில் உள்ள அடிப்படை வசதி களை நிவர்த்தி செய்து தருவதாக வாக்குறுதி அளித்து செல்கின்றனர்.

    ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றனர்.

    இந்நிலையில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க வரக்கூடாது என போஸ்ட ர்கள் மற்றும் பேனர்கள் அடித்து கிராமப் பகுதியில் ஒட்டி உள்ளனர்.

    இந்நிலையில் குமாரகுடி கிராமத்தில் கிராம மக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அதில் தங்களது கிராமத்திற்கு இது வரையில் எந்த ஒரு அடி ப்படை வசதிகளும் செய்து தராத அரசியல் கட்சி வேட்பாளர்கள் யாரும் தங்களது பகுதியில் வாக்கு சேகரிக்க வரக்கூடாது எனவும், இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை எனில் வருகிற 14-ம் தேதி தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை வட்டாட்சி யரிடம் ஒப்படைக்க போவதாகவும் கிராம மக்கள் கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

    • ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • ராகுல் காந்தி வருகையின் காரணமாக இன்று போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக இன்று தமிழகம் வருகிறார்.

    நெல்லையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். அப்போது நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்து பேசுகிறார்.

    இதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மாலை 4 மணிக்கு பாளை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்குகிறார்.

    பின்னர் ராகுல்காந்தி அங்கிருந்து காரில் ஏறி பொதுக்கூட்டம் நடைபெறும் பாளை ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே அமைந்து உள்ள பெல் பள்ளி மைதானத்திற்கு செல்கிறார். தொடர்ந்து பொதுக்கூட்ட மேடைக்கு சென்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பேசுகிறார்.

    முன்னதாக அவர் ஹெலிபேடு தளத்தில் இருந்து கார் மூலம் பொதுக்கூட்ட மேடை வரையிலும் ரோடு-ஷோ செல்கிறார்.

    இதையொட்டி சாலையின் இருபுறமும் தொண்டர்கள் திரள்வார்கள் என்பதால் நெரிசல் ஏற்படாமல் இருக்க சாலை ஓரம் இருபுறங்களிலும் கம்புகள் கட்டப்பட்டுள்ளது.

    ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தையொட்டி நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ராகுல் காந்தி பொதுக்கூட்டத்திற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேன்கள், கார்களில் இன்று காலை முதலே நெல்லையில் குவியத் தொடங்கினர். இதனால் நெல்லை மாநகரம் போக்குவரத்தால் ஸ்தம்பித்தது. பாளை -திருச்செந்தூர் சாலை முழுவதும் விழாக்கோலம் பூண்டது.

    ராகுல் காந்தி வருகையின் காரணமாக இன்று போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் பல்வேறு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    அதன்படி தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் மற்றும் டவுன் வழியாக வரும் வாகனங்கள் பாளை மார்க்கெட் வழியாக சீவலப்பேரி சாலையில் வந்து திம்மராஜபுரம் பெருமாள் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல் குமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக வரும் வாகனங்கள் சாந்திநகர், ரகுமத் நகர் சாலையில் வந்து திம்மராஜபுரம் பெருமாள் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேலும் தாழையூத்து, சங்கர்நகர் வழியாக வரும் வாகனங்கள் மாவட்ட நீதிமன்றம்- சாந்திநகர் வழியாக திம்மராஜபுரம் கோவில் மைதானத்திற்கும் வந்து நிறுத்தப்பட்டிருந்தது.

    ராகுல் வருகையையொட்டி பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்பு முன்எச்சரிக்கை காரணங்களுக்காக பைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.

    பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திலும், திருச்செந்தூர் சாலையின் இருபுறத்திலும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பறந்தன.

    மேடை அமைந்திருந்த பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் முழு உருவ பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது.
    • சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மதுரை:

    தமிழகத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றதாகும். வருடத்தின் 12 மாதங்களும் மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் சித்திரை மாதத்தில் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனைத்தொடர்ந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடக்கும்.

    மதுரையில் சைவமும், வைணவமும் இணையும் வகையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் லட்சக்கணக் கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (12-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக இன்று அதி காலை கோவில் நடை திறக் கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி சன்னதி முன் புள்ள தங்க கொடிமரம் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

     காலை 9.30 மணியளவில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்ம னும் கொடி மரம் முன்பு எழுந்தருளினர். அதனைதொடர்ந்து 9.55 மணி முதல் 10.19 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி-அம்பாள் முன்னிலையில் சித்திரை திருவிழா கொடி யேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் சிவ...சிவ.. கோஷமிட்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    சித்திரை திருவிழா இன்று தொடங்கி வருகிற 23-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று இரவு கற்பக விருட்சக வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரே சுவரர் சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மனும் 4 மாசி வீதிகளில் உலா வருகின்றனர்.

    2-ம் நாள் (13-ந்தேதி) திருவிழாவில் காலையில் சுவாமி-அம்பாள் தங்க சப்பரத்திலும், இரவு பூதம்-அன்னம் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    14-ந் தேதி காலையில் 4 சப்பர வாகனங்களிலும், இரவு கைலாசபர்வதம்-காமதேனு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலிக்கின்றனர்.

    4-ம் நாள் திருவிழாவான 15-ந் தேதியன்று காலை 9 மணிக்கு தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி சின்னக்கடை தெரு, தெற்குவாசல் வழியாக வில்லாபுரம் பாகற்காய் மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்கள். பின்னர் மாலை 6 மணிக்கு அங்கிருந்து சுவாமி-அம்பாள் கோவிலுக்கு திரும்புகிறார்கள்.

    16-ந்தேதி காலையில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாய ணச்சாவடி, நவநீத கிருஷ்ணசுவாமி தேவஸ்தான மண்டகப்ப டியில் எழுந்தரு ளுகிறார்கள். இரவு 7 மணிக்கு அங்கிருந்து தங்க குதிரை வாகனத்தில் புறப் பாடாகி கோவிலுக்கு சுவாமி-அம்பாள் திரும்பு கிறார்கள்.

    6-ம் நாள் (17-ந் தேதி) திருவிழாவில் காலையில் தங்க சப்பரத்திலும், இரவு தங்க ரிஷபம்-வெள்ளி ரிஷபம் வாகனத்திலும் வீதி உலா நடைபெறுகிறது. 18-ந் தேதி காலை தங்கசப்பரத்தி லும், இரவு நந்திகேசு வரர்-யாளி வாகனத்திலும் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    விழாவில் 8-ம்நாளான 19-ந் தேதியன்று காலையில் தங்கப்பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. அன்று இரவு 7.35 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபி ஷேகம் நடைபெறும்.

    கோவில் அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் ரத்தின ஆபரணங்கள் இழைத்த ராயர் கீரிடம் சாற்றி, செங்கோல் வழங்கி மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடக்கும். அதனை தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் (கைபாரம்) வீதி உலா நடக்கும்.

    20-ந்தேதி காலை மர வர்ண சப்பரத்திலும் வீதி உலா நடக்கிறது. அன்று மாலை மீனாட்சி அம்மன் இந்திர விமானத்தில் எழுந்தருளி 4 மாசி வீதிகளில் வந்து அஷ்டதிக்கு பாலகர்களை போரிட்டு வெற்றி கொள்ளும் வகையில் திக்கு விஜயம் நடக்கிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாணம் மறுநாள் (21-ந் தேதி) விமரி சையாக நடைபெறுகிறது. அன்று இரவு மணக் கோலத் தில் சுவாமி-அம்பாள் யானை, ஆனந்தராயர் பூப்பல்லக்கில் வீதி உலா வருகின்றனர்.

    22-ந்தேதி காலை திருத்தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா வருகிறார்கள்.

    சித்திரை திருவிழாவின் நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி-அம்பாள் 4 மாசி வீதிகளில் உலா வருகிறார்கள். அப் போது சாலையின் இருபுற மும் பல்லாயிரக் கணக்கா னோர் குடும்பம், குடும்பமாக வந்து சாமி தரிசனம் செய் வார்கள். இதன் காரணமாக மாசி வீதிகள் மக்கள் வெள் ளத்தில் தத்தளிக்கும்.

    மீனாட்சி அம்மன்சித் திரை திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டும்போது பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. 21-ந் தேதி அழகர் மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்பாடாகிறார்.

    22-ந்தேதி புதூரில் எதிர் சேவையும், 23-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபமும் நடக்கிறது. சித்திரை திருவிழா தொடங்கியதையடுத்து மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

    • காவல்துறை அனுமதியோடு தான் கூட்டம் நடைபெற்றது. சில காரணங்களால் தாமதமானது.
    • இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள்.

    கோவை:

    கோவையில் திமுக கூட்டணி கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து கோவை பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இரவு 10 மணிக்கு மேல் மைக் பயன்படுத்தாமல் மக்களை சந்திக்கலாம்.

    * 10 மணிக்கு மேல் மக்களை வேட்பாளர்கள் சந்திக்கக்கூடாது என எங்கும் சொல்லவில்லை.

    * மக்களின் அன்பினால் தாமதம் ஆவது, தேர்தல் பிரசாரத்தில் சகஜம் தான்.

    * பாஜகவினரை திமுகவினர் தள்ளிவிட்டதால் தான் கைகலப்பு ஏற்பட்டது.

    * காவல்துறை அனுமதியோடு தான் கூட்டம் நடைபெற்றது. சில காரணங்களால் தாமதமானது.

    * பாரதிய ஜனதா பிரசாரத்திற்கு ஆர்வமாக வந்து மக்கள் காத்திருக்கிறார்கள்.

    * அரசியல் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மோடி 3வது முறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    * இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள்.

    * தேர்தல் விதிகளை நான் நன்கு அறிவேன். தேர்தல் விதிகளை மீறவில்லை என்று அவர் கூறினார். 

    ×