search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எதிரிகள் மிரள்கிறார்கள்.. தொண்டர்கள் உழைப்பால் வெற்றி நம் வசமாகிறது..- ராமதாஸ்
    X

    எதிரிகள் மிரள்கிறார்கள்.. தொண்டர்கள் உழைப்பால் வெற்றி நம் வசமாகிறது..- ராமதாஸ்

    • தமிழ்நாட்டில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை... ஆளும் கட்சியும் இல்லை.
    • ஏப்ரல் 19 உன் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4 சிங்கக்குட்டிகளின் உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தல் ஓடோடி வந்துவிட்டது. அடுத்த வாரம் இதே நாள், இதே நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில மக்கள் இந்தியத் தேசத்தின் எதிர் காலத்தைத் தங்களின் விரல் நுனிகளால் எழுதிக் கொண்டிருப்பார்கள்.

    தமிழ்நாட்டில் நாம் ஆண்ட கட்சியும் இல்லை... ஆளும் கட்சியும் இல்லை. அதனால் நம்மிடம் கோடிகளும் இல்லை. நம்மிடம் இருப்பவை அனைத்தும் கொடிகளும், கொள்கைகளும் தான். இவற்றை வைத்துக் கொண்டு இவர்களால் என்ன செய்து விட முடியும்? என்ற ஏளனப் பார்வையுடன் தான் தமிழகத்தின் இரு கூட்டணிகளும் தேர்தல் களத்தில் நுழைந்தன. ஆனால், சிங்கத்தின் குகையில் சிறு நரிகளால் என்ன செய்து விட முடியும்? என்பதைப் போல நமது உழைப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் அக்கட்சிகள் தொலைதூரத்துக்குப் பின்னால் துவண்டு கிடக்கின்றன. நீயோ வெற்றிக் கோட்டை நெருங்கி விட்டாய்.

    2019-ம் ஆண்டில் திமுக கூட்டணி சார்பில் 38 பேர் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றனர். ஆனால், அவர்கள் ஆறாவது விரலாகத் தான் இருந்தனர். அவர்களால் அவர்களைத் தேர்வு செய்த தொகுதிகளின் மக்களுக்கோ, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கோ எந்தவித பயனும் ஏற்படவில்லை.

    பாட்டாளி மக்கள் கட்சி காலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட பல தொடர்வண்டித் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப் படாமலேயே கிடக்கின்றன. கால ஓட்டத்தில் தமிழகத்திற்கான தேவைகள் அதிகரித்திருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால், தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய, செயல் படக்கூடிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பா.ம.க. 10 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வெற்றிக்கனியை பரிசாக வழங்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர். அதே நேரத்தில் அந்தக் கனியை பறிக்க நமது உழைப்பும் மிகவும் அவசியம். இதை நான் உனக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து களத்தில் எப்படி உழைக்கிறாயோ, அதே உழைப்பை இன்னும் ஒரு வாரத்திற்கு கொடு. வெற்றி நம் வசமாகிவிடும். ஏப்ரல் 19 உன் உழைப்பை எடைபோடும் நாளாகவும், ஜூன் 4 சிங்கக்குட்டிகளின் உழைப்பின் பயனைக் கொண்டாடும் நாளாகவும் அமைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×