search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நோட்டாவுக்கு வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    'நோட்டா'வுக்கு வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு

    • நோட்டாவுக்கு என்று பொதுவான குறிப்பிட்ட சின்னம் எதுவும் கிடையாது.
    • தமிழகம் இந்த வரிசையில் பீகார், உத்தரபிரதேசத்தை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது.

    வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாவிட்டால் செல்லாத ஓட்டு போடுவதற்கு பதில் "விருப்பம் இல்லை" என்று வாக்களிக்கும் முறை உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறைக்கு "நோட்டா" என்ற பெயர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் மின்னணு எந்திரங்களில் நோட்டாவுக்கு வாக்காளிப்பதற்கு என்று வசதிகள் செய்யப்பட்டன.

    நோட்டாவுக்கு என்று பொதுவான குறிப்பிட்ட சின்னம் எதுவும் கிடையாது. சிலர் தேர்தல்களில் நோட்டாவுக்கு என்று தனி சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் கடந்த தேர்தலில் நோட்டா எனும் ஆங்கில வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

    மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்களுக்கு பிறகு கடைசியில் நோட்டா பிரிவு சேர்க்கப்பட்டு இருக்கும்.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டா அறிமுகம் ஆன போது நாடு முழுவதும் சுமார் 60 லட்சம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர். அதாவது வாக்களித்தவர்களில் சுமார் 2 சதவீதம் பேர் எந்த வேட்பாளரையும் விரும்பவில்லை என்பது தெரிய வந்தது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 22 ஆயிரமாக அதிகரித்தது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுமார் 8 லட்சத்து 17 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர்.

    பீகாரை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர். தமிழகம் இந்த வரிசையில் பீகார், உத்தரபிரதேசத்தை தொடர்ந்து 3-வது இடத்தை பிடித்தது.

    தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 570 பேர் நோட்டாவுக்கு வாக்களித்தனர். மேற்கு வங்காளம், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம், மத்திய பிரதேசம், ஆந்திரா மாநிலங்களிலும் கணிசமானவர்கள் நோட்டாவுக்கு வாக்களித்து இருந்தனர்.

    இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 1 கோடி பேர் நோட்டாவுக்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுதான் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. தமிழகத்திலும் நோட்டாவுக்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு மேல் செல்லக்கூடும் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    சில தொகுதிகளில் நோட்டாவுக்கு விழும் வாக்குகள் கட்சி வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக கூடமாறலாம் என்கிறார்கள். இதன் காரணமாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் கடும் பீதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இளைய தலைமுறை மற்றும் முதல் முதலாக வாக்களிக்கப் போகும் இளைஞர்களை பிரசாரத்தின் மூலம் கவர்ந்தால் மட்டுமே அவர்களை நோட்டாவில் இருந்து தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்று அரசியல் கட்சி வேட்பாளர்கள் இளம் வாக்காளர்களுக்காக சமூக வலைதள பிரசாரத்தை அதிகப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×