search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேட்பாளர்களில் 15% பேர் கிரிமினல் குற்றவாளிகள்
    X

    வேட்பாளர்களில் 15% பேர் கிரிமினல் குற்றவாளிகள்

    • வேட்பாளர்களின் பொருளாதார பின்னணியை பொறுத்தவரை 945 பேரில், 202 பேர் அதாவது 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.
    • காங்கிரஸ் சார்பில் 78 சதவீதம் குற்ற வழக்குகள், 22 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையே 4 முனைப் போட்டி நிலவுகிறது.

    இவர்களுடன் கணிசமான அளவுக்கு வழக்கம் போல சுயேட்சை வேட்பாளர்களும் உள்ளனர். இந்த வேட்பாளர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதை அவ்வளவு எளிதில் வாக்காளர்களால் கண்டுபிடித்து விட முடியாது.

    அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனநாயக சீர்திருத்தக் கழகம் தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்களை மிக நுட்பமாக ஆய்வு செய்துள்ளது. மொத்தம் களத்தில் உள்ள 950 வேட்பாளர்களில் 945 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    இதில், 135 வேட்பாளர்கள் அதாவது 15 சதவீதம் பேர் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களாக உள்ளனர். இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதை அந்த வேட்பாளர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர். தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகள் இருப்பதை அவர்கள் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளனர்.

    இந்த 15 சதவீத குற்றவாளிகளில் 81 பேர் மிக கடுமையான குற்றவாளிகள். அதாவது இவர்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. இது மொத்த வேட்பாளர்களில் 8 சதவீதம் ஆகும்.

    இந்த கடுமையான குற்றவாளிகள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள். கட்சி வாரியாக குற்றவாளி வேட்பாளர்களை ஆய்வு செய்த போது பல ருசிகர தகவல்கள் கிடைத்தன.

    அந்த வகையில், நாம் தமிழர் கட்சியில் 28 சதவீதம் குற்ற வழக்குகள், 15 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்டவர்களும், அ.தி.மு.க. சார்பில் 35 சதவீதம் குற்ற வழக்குகள், 18 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்டவர்களும் களத்தில் உள்ளனர்.

    பா.ஜ.க. சார்பில் 70 சதவீதம் குற்ற வழக்குகள், 39 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், தி.மு.க. சார்பில் 59 சதவீதம் குற்ற வழக்குகள், 27 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், பா.ம.க. சார்பில் 60 சதவீதம் குற்ற வழக்குகள், 40 சதவீதம் கடும் குற்ற வழக்குகள், காங்கிரஸ் சார்பில் 78 சதவீதம் குற்ற வழக்குகள், 22 சதவீதம் கடும் குற்ற வழக்குகள் கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    வேட்பாளர்களின் பொருளாதார பின்னணியை பொறுத்தவரை 945 பேரில், 202 பேர் அதாவது 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்.

    அ.தி.மு.க.வின் 34 வேட்பாளர்களில் 33 பேரும், பா.ஜ.க.வின் 23 வேட்பாளர்களில் 22 பேரும், தி.மு.க.வின் 22 வேட்பாளர்களில் 21 பேரும், நாம் தமிழர் கட்சியின் 39 வேட்பாளர்களில் 15 பேரும், காங்கிரஸ் கட்சியின் 9 பேரில் 8 பேரும், தே.மு.தி.க.வின் 5 பேரில் 3 பேரும், சுயேச்சைகள் 606 பேரில் 62 பேரும் கோடீஸ்வரர்கள்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். இவர்களில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அசோக்குமார் ரூ.662.47 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    சிவகங்கை தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ் ரூ.304.92 கோடி சொத்துக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். வேலூர் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் ரூ.152.77 கோடி சொத்துக்களுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.

    சுயேட்சை வேட்பாளர்கள் 606 பேரில் 62 பேர் கோடீஸ்வரர்கள் ஆவார்கள். வடசென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் ரூ.13.15 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

    சுயேட்சைகளில் 10 வேட்பாளர்கள் தங்களிடம் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவே சொத்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு எந்த சொத்தும் இல்லை என்று மனுவில் தெரிவித்துள்ளனர். குறைவான சொத்து உள்ளதாக 3 சுயேச்சைகள் தெரிவித்து உள்ளனர்.

    42 சதவீத வேட்பாளர்கள் 5 முதல்12-ம் வகுப்பு வரை படித்தவர்களாகவும், 48 சதவீதம் பட்டதாரிகளாகவும் உள்ளனர். மேலும், 25 முதல் 40 வயதுக்குட்பட்ட வேட்பாளர்கள் 325 பேர், அதா வது 34 சதவீதமும், 41 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 487 பேர், அதாவது 52 சதவீதமும் உள்ளனர். 130 பேர் 61 முதல் 80 வயதுக்குள் உள்ளனர். 945 வேட்பாளர்களில் 8 சதவீதம் அதாவது 77 பேர் பெண் வேட்பாளர்கள்.

    Next Story
    ×