என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
    • பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டதே இதற்கு காரணம்.

    சென்னை:

    இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, போனஸ் மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் சர்ச்சையானது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. பீகார், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விசாரணை நடத்தியதில் பலர் கைது செய்யப்பட்டனர்.

    நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளியின் முதல்வர், துணை முதல்வரும் இந்த வழக்கில் கைதாகி உள்ளனர். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 8-ந்தேதி நடந்த விசாரணையின் போது, நீட் தேர்வின் புனிதத் தன்மை மீறப்பட்டுள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் முழுமை யாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. சென்னை ஐ.ஐ.டி. தொழில்நுட்ப மதிப்பீடு, மதிப்பெண்கள் வினியோகம், நகரம் மற்றும் மையங்கள் வாரியாக ரேங்க் வினியோகம் போன்றவற் றின் தரவுகளை ஆய்வு மேற்கொண்டது.

    ஐ.ஐ.டி. சென்னை வழங்கிய அறிக்கையின்படி எந்த ஒரு பெரிய அளவிலான முறைகேடும் நடக்கவில்லை. எந்த அசாதாரணமும் இல்லை. மேலும் மோசடி காரணமாக பெரும்பாலான முறைகேடுகள், அதிக மதிப்பெண் பற்றிய எந்த ஆதாரமும் இல்லை.

    மதிப்பெண்களில் ஒட்டுமொத்த அதிகரிப்பு உள்ளது. குறிப்பாக 550 முதல் 720 வரை இந்த அதிகரிப்பு நகரங்கள் மற்றும் மையங்கள் முழுவதும் காணப்படுகிறது.

    பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்கப்பட்டதே இதற்கு காரணம்.

    கூடுதலாக அதிக மதிப் பெண்கள் பெறும் விண்ணப்பதாரர்கள் பல நகரங்கள், பல மையங்களில் பரவி உள்ளனர். இது முறை கேடுக்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்பதை குறிக்கிறது.

    சென்னை ஐ.ஐ.டியின் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எங்களை கேலி செய்த எதிர்க்கட்சியினர் முன்னிலையில் எங்களுக்கு வெற்றி தந்தீர்கள்.
    • தனித்துறையை உருவாக்கி மக்களின் கோரிக்கையில் சாத்தியமுள்ள அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    ஊரகப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கான விழா தர்மபுரி நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    * ஆட்சிக்கு வந்தவுடன் துறைவாரியாக மனுக்கள் பிரிக்கப்பட்டு 2.29 லட்சம் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

    * கொளத்தூர் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து தொகுதியும் என்னுடையது என்ற நோக்கில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம்.

    * புகார் பெட்டியில் பெற்ற மனுக்களுக்கு ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்கு தீர்வு காணப்படும் என கூறினேன்.

    * எங்களை கேலி செய்த எதிர்க்கட்சியினர் முன்னிலையில் எங்களுக்கு வெற்றி தந்தீர்கள்.

    * தனித்துறையை உருவாக்கி மக்களின் கோரிக்கையில் சாத்தியமுள்ள அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    * ஆட்சிக்கு முன் மட்டுமல்ல, ஆட்சிக்கு பின்னரும் முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்டவை மூலம் மனு பெற்றோம்.

    * முதல்வரின் முகவரியின் கீழ் பெற்ற 68 லட்சம் மனுக்களில் 66 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    * மக்களின் கோரிக்கை எங்கள் பார்வையில் இருந்து தவறக்கூடாது என்று செயல்பட்டோம்.

    * தர்மபுரி மாவட்டத்தில் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன.

    * அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து மக்கள் நன்றி தெரிவித்து கடிதம் எழுதி வருகின்றனர்.

    * ஒவ்வொரு வீட்டிற்கும் ஏதாவது ஒரு அரசு திட்டம் பயன்படுகிறது.

    * ரூ.51 கோடி செலவில் அரூர் அரசு மருத்துவமனை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

    * தர்மபுரி வெண்ணம்பட்டி சாலையில், ரூ.38 கோடியில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

    * தீர்த்தமலையில் துணை விரிவாக்க வேளாண் மையம் அமைக்கப்படும்.

    * பாளையம்புதூர் அரசு பள்ளி வகுப்பறையில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

    * பேரூராட்சியாக உள்ள அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    * மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தி தருகிறோம்.

    * மக்களுடன் முதல்வர்.. யாருக்கும் எந்த குறையும் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

    * தமிழ்நாட்டில் தொடர் தோல்வி அடைந்த பிறகும் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

    * 10 ஆண்டுகால ஆட்சியில் பா.ஜ.க தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
    • மணிக்கூண்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆத்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை இழிவாக பேசியதாக கூறி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆத்தூர் பஸ் நிலையம் மணிக்கூண்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டு அண்ணாமலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    மேலும் ஆட்டுக்குட்டியுடன் திடீரென அவர்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். மேலும் அண்ணாமலையின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • பெற்றோர்கள் திடீரென பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை அருகே தெற்கு பாப்பான்குளம், மணி முத்தாறு, அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, வைராவிகுளம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களில் இருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதிகளுக்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.

    இதுதவிர வேலை நிமித்தமாகவும், தொழில் சம்பந்தமாகவும் ஏராள மானவர்கள் அம்பைக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்பவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால், அரசு பஸ்சில் போதிய இடவசதி இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், தெற்கு பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி தினமும் ஆபத்தான பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு, கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று காலை தெற்கு பாப்பாங்குளம் பகுதியில் அரசு பஸ் வழக்கம்போல் வந்தபோது அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் திடீரென பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • மாதந்தோறும் மின் கட்டணத்தை செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தவேண்டும், இதனை தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    • தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் அத்துமீறலையும், தேர்தல் ஆணையத்தின் பாராமுகத்தையும் கடந்து பா.ம.க. வெற்றி பெறும். கப்பியாம்புலியூரில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். தொரவியில் டி.எஸ்.பி. ஒருவர் பா.ம.க.வினர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். காவல்துறையினர் தி.மு.க.வினருக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இதையும் கடந்து பா.ம.க. 25,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும்.

    தமிழகத்தில் அரசியல் படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு என்றால் கிலோ எவ்வளவு என கேட்கும் நிலை உருவாகியுள்ளது. சென்னையில் காவல் அதிகாரிகள் பணிமாறுதல் செய்யப்பட்டது மட்டும் போதுமானதல்ல. 15 நாட்களுக்கு ஒருமுறை உள்துறை மற்றும் காவல்துறையினருடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு நடத்தவேண்டும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதியில் உள்ள காவல் அதிகாரிதான் பொறுப்பு என அறிவிக்கவேண்டும்.

    மாதந்தோறும் மின் கட்டணத்தை செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தவேண்டும், இதனை தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி, மதுரை சிங்காநல்லூர் கொலைகளுக்கு மதுதான் காரணம். இந்திய குடியரசு என்பதன் பொருள் அப்போது புரியவில்லை. இப்போதுதான் தமிழ்நாடு அரசின் மூலம் புரிகிறது. குடியரசு என்றால் மக்களை குடிக்கத்தூண்டும் அரசு. குடியரசு என்றால் குழந்தைகள் வரை குடிக்கப் பழக்கத்தை ஏற்படுத்தும் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 14 இடங்களில் தையல் போட்டதாக கூறப்படுகின்றது.
    • மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலை கோவில் அடிவாரப் பகுதியில் தனியார் தோட் டத்தின் காவலாளியாக இருப்பவர்கள் பரமசிவன்-காளியம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் கவுசிக்(வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகின்றார்.

    கடந்த 7-ந்தேதி சைக்கிளில் இருந்து கீழே விழுந்த கவுசிக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை உறவினர் பூவையா அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு சிறுவனுக்கு தலைப்பகுதியில் சுத்தம் செய்யாமல் 14 இடங்களில் தையல் போட்டதாக கூறப்படுகின்றது.

    இதன் தொடர்ச்சியாக மறுநாள் கடுமையான வலியில் துடித்த சிறுவனை அவரது தாய் காளியம்மாள் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தலையில் பட்ட காயத்திற்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் தலையில் பட்ட காயத்தின் பகுதி புண் ஏற்பட்டு சீழ் வடிந்து பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் இருந்தது. சரியான நேரத்தில் சிறுவனை அழைத்து வந்ததால் அவரது தலையில் இருந்த மண் உள்ளிட்டவைகள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு மறு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து அவரது தாயார் தெரிவிக்கும்போது, பண்பொழியில் உள்ள ஒரு மருத்துவமனையில் காயம்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யப்படாமல், வலிக்கு எந்த விதமான ஊசி உள்ளிட்டவைகள் செலுத்தாமல், முறையான சிகிச்சை அளிக்காமல் அவசர கதியில் தனது குழந்தைக்கு சிகிச்சை அளித்ததாக தெரிவித்தார்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து அவரது உத்தரவுப்படி நேற்று இரவு மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பிரேம லதா தலைமையில் மாவட்ட மருத்துவமனை கண்காணிப் பாளர் ஜெஸ்லின் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த மருத்துவமனையில் நெல்லையை சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவர் பெயரில் போர்டு வைக்கப்பட்டி ருந்தது. ஆனால் அங்கு அவர் இல்லை.

    அவருக்கு பதிலாக மருத்துவமனை கட்டிடத்தின் உரிமையாளரான கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த அமீர் ஜலால் மருத்துவம் பார்த்து வருவதை கண்டு பிடித்தனர்.

    அப்போது மருத்துவ அதிகாரிகள் குழுவினர், அங்கு முதியவர் ஒருவருக்கு சிகிச்சையளித்ததையும் கண்டறிந்து அவர் மருத்து வம் படிக்காமல் மருத்துவம் பார்த்தத்தை அறிந்தனர்.

    தொடர்ந்து அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் அளித்த புகாரை தொடர்ந்து அமீர் ஜலாலை கைது செய்தனர். விசாரணையில், அவர் மருத்துவம் படிக்காமல் 17 ஆண்டு காலமாக மருத்துவம் பார்த்தது தெரிய வந்துள்ளது.

    • ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று தொடங்கி உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்பு தூர் பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சிவகங்கை, வேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

    மாலையில் திருவண்ணா மலை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். இந்த ஆலோசனையின் போது பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டுள்ளார்.

    அப்போது பலர் காரசாரமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகள் சிறப்பாக செயல்படாவிட்டால் பதவியில் நீடிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    எப்போதுமே நடந்து முடிந்த ஒரு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அடுத்து நடக்கப்போவதை பற்றியே சிந்திக்க வேண்டும்.

    இதன்படி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான தேர்தலாகும். அதில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்போதே சிறப்பாக செயல்படத் தொடங்குங்கள்.

    கூட்டணி சரியாக அமையாத காரணத்தாலேயே தோற்றுப்போய் விட்டோம் என்று இங்கு பலரும் கூறியுள்ளீர்கள். வரும் காலங்களில் நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத வகையில் கட்சி உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்.

    நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நிச்சயமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழ்மட்ட நிர்வாகிகளை மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் கீழ்மட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்போடு பணியாற்றுவார்கள். மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    • ஜூலை மாதத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
    • இதுவரை 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில்,

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் என்றாலும் அவர்களை கைது செய்த சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    ஜூலை மாதத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஒன்றாம் தேதி தனுஷ்கோடி மீனவர்கள் 25 பேரை சிங்களக் கடற்படை கைது செய்த இலங்கைக் கடற்படை, அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே மேலும் 13 மீனவர்களை கைது செய்துள்ளது. தனுஷ்கோடி மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டியும் இராமேஸ்வரத்தில் மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த கைது நிகழ்வு நடந்திருக்கிறது.

    மீன்பிடித்தடைக்காலம் முடிந்து தமிழக மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்கச் சென்று இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இதுவரை 74 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 169 விசைபடகுகளை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், அவற்றை நம்பியுள்ள மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று பலமுறை மத்திய அரசை வலியுறுத்தியும் இதே நிலை தொடருவது கவலையளிக்கிறது.

    தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படும் அவலம் முடிவில்லாமல் தொடரக்கூடாது. இந்திய - இலங்கை அதிகாரிகள், தமிழக - இலங்கை மீனவர்கள் ஆகியோர் பங்கேற்கும் பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து, இந்திய, இலங்கை கடல் பகுதியில் இரு நாட்டு மீனவர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் இந்த விரிவாக்கத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
    • விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றதால் அங்கு மட்டும் இந்த திட்டம் இன்று தொடங்கப்படவில்லை.

    தமிழ்நாட்டில் அன்றாடம் அரசுத் துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி, அரசின் சேவைகள் எளிதாக சென்று சேருவதற்காக தீட்டப்பட்ட திட்டம் மக்களுடன் முதல்வர் திட்டமாகும்.

    இத்திட்டம் முதற்கட்டமாக நகரப் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந்தேதி மக்களுடன் முதல்வர் திட்டத்தை கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கொண்டு உள்ளூர் அளவிலேயே முகாம்களை நடத்தி அங்கு அளிக்கப்படும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தி 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்கு இதில் தீர்வு காணப்பட்டது. இதன்படி நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு கிடைத்த தீர்வினால் மக்கள் பலர் திருப்தி அடைந்தனர்.

    வெற்றிகரமாக நகரப் பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டம் தற்போது ஊரக பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்படுகிறது.

    மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டம் சென்று தொடங்கி வைத்தார்.

    இதற்கான விழா தர்மபுரி நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் புதூர் ஊராட்சி அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் இந்த விரிவாக்கத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடைபெற்றதால் அங்கு மட்டும் இந்த திட்டம் இன்று தொடங்கப்படவில்லை.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவில் பேசும் போது, இந்த திட்டத்தால் மக்கள் பயனடையும் விதம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

    கிராமப்புற மக்கள் அதிகம் அணுகும் 15 அரசு துறைகள் அடையாளம் காணப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 முகாம்களை நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் சாந்தி, எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • உயிரே போனாலும் மன்னிப்பும் கேட்க மாட்டேன்; வரியும் செலுத்த மாட்டேன் என்று முழங்கிவர் வீரன் அழகுமுத்துக்கோன்.
    • வீரன் அழகுமுத்துக்கோனின் வீரமும், தன்மானமும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை.

    சென்னை:

    பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில்,

    ஆங்கிலேயர்களுக்கு எதிராக முதன் முதலில் போரிட்ட கட்டாலங்குளம் சீமையின் மன்னன் மாவீரன் வீரன் அழகுமுத்துக்கோனின் 304-ஆம் பிறந்தநாள் இன்று.

    பெத்தநாயக்கனூர் கோட்டை போரில் வீழ்த்தப்பட்ட நிலையில், மன்னிப்புக் கேட்டு, வரி செலுத்தினால் உயிர் பிழைக்கலாம் என்று ஆங்கிலேயர்கள் நிபந்தனை விதித்த நிலையில், உயிரே போனாலும் மன்னிப்பும் கேட்க மாட்டேன்; வரியும் செலுத்த மாட்டேன் என்று முழங்கி பீரங்கி குண்டுகளுக்கு தமது மார்புகளைக் காட்டி உயிர்த்தியாகம் செய்த மாவீரர் அவர். அவருடைய வீரமும், தன்மானமும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவை. தமிழரின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்த வீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாளில் அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்! என்று தெரிவித்துள்ளார்.

    • சசிகலா கூறுவது சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போன்றது.
    • அண்ணாமலை என்கிற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது.

    சென்னை:

    இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன். மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, மூர்த்தி, அப்துல் ரகீம், விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன், பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் சின்னையன், வடபழனி, சத்திய நாராயண மூர்த்தி உள்பட ஏராளமான நிர்வாகிகள் மகளிரணியினர் பங்கேற்று மரியாதை செலுத்தினார்கள்.

    இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அதிமுக-வை 90 சதவீதம் இணைத்துவிட்டதாக சசிகலா கூறுவது சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போன்றது.

    * கட்சிக்கு துரோகம் செய்தவர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்களின் இரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி.

    * அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி போன்ற ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை.

    * அதிமுக எழுச்சியுடன் பயணித்து வருகிறது. அதிமுக பற்றி தொடர்ந்து மாய கருத்தை சிலர் திட்டமிட்டு பரப்புகின்றனர்.

    * அண்ணாமலை என்கிற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என்று கூறினார்.

    • பிளஸ்-2 முடித்துவிட்டு, ஊரில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் நடத்தி வந்தார்.
    • இளநிலை பட்ட படிப்பிற்கு தொலைதூர கல்வி திட்டத்தில் விண்ணப்பித்த சங்கீதா அதனை படித்து வருகிறார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரும் இவரது மனைவியும் கொரோனாவில் இறந்து போயினர். இதனை தொடர்ந்து இவர்களது ஒரே மகள் சங்கீதா பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு, ஊரில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் நடத்தி வந்தார்.

    பெற்றோரை இழந்த சங்கீதாவிற்கு திருமண வயது வந்தது. பெற்றோர் இல்லாத சங்கீதாவிற்கு திருமணம் செய்து வைக்க ஊர் மக்கள் ஒன்று கூடி முடிவு செய்தனர். தொடர்ந்து கோட்டேரியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர்.

    தொடர்ந்து இளநிலை பட்ட படிப்பிற்கு தொலைதூர கல்வி திட்டத்தில் விண்ணப்பித்த சங்கீதா அதனை படித்து வருகிறார். இந்த நிலையில் சங்கீதா கருவுற்றார். இத்தகவல் காட்டுக்கூடலூர் கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து தாய் வீட்டின் சார்பில் வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர்.

    அதனை தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்று கூடி, 5 விதமான சாத வகைகள், பலகாரம், பால், பழங்கள் போன்ற சீர் வரிசை பொருட்களுடன் சென்றனர். அங்கு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவிற்கு தாய் வீட்டின் சார்பில் ஊர்மக்கள் வளைகாப்பு நடத்தினர். பெற்றோர் இல்லாத இளம்பெண்ணுக்கு ஊர்மக்கள் கூடி வளைகாப்பு நடத்திய சம்பவம் பண்ருட்டி பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×