என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும்.
    • மோடிஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

    இன்றைய தினம், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் T.K.தமிழ்நெஞ்சம், அவர்கள் தலைமையில், தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஆளுமைத் திறனாலும், தலைமைப் பண்பாலும் ஈர்க்கப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    அவர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு, வலிமையான பாரதம், வளர்ச்சியடைந்த தமிழகம் என்ற நமது குறிக்கோளை நோக்கி அயராது உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம்.
    • மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டுப் புகழ் சேர்த்தது பெருமைக்குரியது.

    சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    தேச விடுதலைக்காக, இறுதிவரை துணிச்சலுடன் போராடி, தன்னுயிரையே தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்கள் பிறந்த தினம் இன்று.

    சென்னை எழும்பூரில் உள்ள மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று, மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம்.

    நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2015 ஆம் ஆண்டு, மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டுப் புகழ் சேர்த்தது பெருமைக்குரியது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில், இறுதிவரை பின்வாங்காமல், அச்சமின்றிப் போரிட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம் என்று கூறியுள்ளார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
    • ஒன்றிய செயலாளர்கள் அனைவரும் உங்கள் பகுதியில் ஓட்டுகள் குறையாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று தொடங்கி உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சிவகங்கை, வேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

    மாலையில் திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். இந்த ஆலோசனையின் போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டுள்ளார்.

    அப்போது பலர் காரசாரமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகள் சிறப்பாக செயல்படாவிட்டால் பதவியில் நீடிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

    நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நிச்சயமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழ்மட்ட நிர்வாகிகளை மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் கீழ்மட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்போடு பணியாற்றுவார்கள். மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் இன்று சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு முடிவடைந்திருந்தது.

    இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் வலுவான கூட்டணியை அமைப்போம். ஆனால் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    ஒன்றிய செயலாளர்கள் அனைவரும் உங்கள் பகுதியில் ஓட்டுகள் குறையாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி குறைந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • அண்ணாமலையை வேதாளம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி இருந்தார்.
    • தமிழகத்தை இன்று பீடைகள் போல பல பேய்கள் பிடித்துள்ளன.

    சென்னை:

    பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையை வேதாளம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக அண்ணாமலையிடம் இன்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    தமிழகத்தை இன்று பீடைகள் போல பல பேய்கள் பிடித்துள்ளன. இந்த பேய்களை ஓட்ட வந்த வேதாளம் நான். எல்லா பேய்களையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக ஓட்ட வேண்டியதுதான்.

    இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

    • கடந்த 7.5.2021 முதல் 11.7.2024 வரை 1,856 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன.
    • 65 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நாளை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பணிகள், குடமுழுக்கு, தேர் மற்றும் குளங்கள் புனரமைப்பு, கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்தல், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகள் செம்மையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடந்த 7.5.2021 முதல் 11.7.2024 வரை 1,856 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளன. 9,141 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கும்பாபிஷேகம் நடைபெற்று 66 ஆண்டுகளும், பாலாலயம் செய்யப்பட்டு 36 ஆண்டுகளும் கடந்த நிலையில் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தி, ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள திருவான்மியூர், பாம்பன் சுவாமிகள் கோவில், ரூ.170.11 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவு திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்று வரும் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், பவானியம்மன் கோவில், ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறும் திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி, ஆபத்சகாயேஸ்வரர் (குரு தலம்) கோவில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடைபெற்ற திருச்சி மாவட்டம், பூர்த்திகோவில் திருமுக்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட 65 கோவில்களுக்கு குடமுழுக்கு நாளை (12-ந் தேதி) வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

    கும்பாபிஷேகம் நடைபெறும் கோவில்களில் சென்னை, சேத்துப்பட்டு, கருகாத்தம்மன் கோவில், சேலம் மாவட்டம், கிருஷ்ணாநகர், சீதாராமச்சந்திர மூர்த்தி கோவில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, நாட்டுச்சாலை, அமிர்தகடேஸ்வரர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மொனசந்தை, கரியமாணிக்கப் பெருமாள் கோவில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, ஞாயிறு, புஷ்பரதீஸ்வரர் கோவில், கன்னியாகுமரி மாவட்ட தேவஸ்தான கட்டுப்பாட்டிலுள்ள 7 கோவில்கள், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், முத்து மாரியம்மன் கோவில், ராணிப்பேட்டை மாவட்டம், சேந்தமங்கலம், சுந்தர விநாயகர் கோவில், ஆகியவையும் அடங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லுங்கி கட்டுவது அவமரியாதை போல அண்ணாமலை புதிய கண்டுபிடிப்பை கூறியுள்ளார்.
    • தமிழ்நாட்டில் ஒரு அரசு உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாமலை என்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீது போய் ஏறியுள்ளது.

    நான் லுங்கி கட்டிக்கொண்டு பேட்டி அளிப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். லுங்கி கட்டுபவர்களை அவமதிப்பது போல அவர் பேசி உள்ளார். இஸ்லாமியர்களில் பெரும்பாலானவர்கள் லுங்கிதான் கட்டுகிறார்கள். தமிழகத்தில் வீட்டில் இருக்கும்போது பலர் லுங்கியுடன்தான் இருப்பார்கள். எனவே லுங்கி கட்டுவது அவமரியாதை போல அண்ணாமலை புதிய கண்டுபிடிப்பை கூறியுள்ளார்.

    அண்ணாமலை மாதிரி கொச்சையாக சொல்ல வேண்டுமென்றால் யாரும் நைட்டி போட்டுக்கொண்டு சுற்றுவது இல்லை. அ.தி.மு.க. எழுச்சியோடு வழிநடத்தப்படுகிறது. இதனை பிடிக்காதவர்கள் தான் திட்டமிட்டு திரைக்கதை எழுதி மாயையை உருவாக்கி உள்ளார்கள். இது ஒரு மாயை தான்.

    சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத துரோகச்செயலை செய்து இருக்கிறார்.

    இவர்கள் 3 பேரும் அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்து அ.தி.மு.க.வின் ரத்தத்தை குடித்த அட்டைகள் என்பது தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும்.

    மூன்று பேரையும் வெளியேற்றியது பொதுக்குழு எடுத்த முடிவாகும். ஒன்றரை கோடி தொண்டர்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அ.தி.மு.கவில் பயணிக்கின்றனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கண்டுபிடியுங்கள் என்று கேட்கிறோம். அதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேச்சை யாரும் பொருட்படுத்துவதாக இல்லை. தமிழ்நாட்டில் ஒரு அரசு உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது. முதலமைச்சர் இருக்கிறாரா? உள்துறை இருக்கிறதா? என்பதே சந்தேகமாக உள்ளது. பொதுமக்கள் தன்னைத் தானே காப்பாற்றிக்கொண்டால் போதும் என்ற நிலை தான் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.

    • இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
    • இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் புதிய படம் இந்தியன் 2. நாளை (ஜூலை 12) வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியன் 2 படத்திற்கு சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை ஒருநாள் மட்டும் ஐந்து காட்சிகள் வரை திரையிட அரசு அனுமதி அளித்து இருக்கிறது. முன்னதாக வெளியான திரைப்படம் ஒன்றின் சிறப்பு காட்சி கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சிறப்பு காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    லைகா நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின.
    • நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து காலியாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.

    இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தொகுதியில் இருந்த 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களுக்காக 276 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.

    நேற்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின. இதற்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமிற்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் ஸ்ட்ராங் ரூமிற்கு இன்று காலை 11.45 மணிக்கு சீல் வைக்கப்பட்டது. தேர்தல் பொது பார்வையாளர் அமித் சிங் பன்சால், மாவட்ட கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச், தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. மாவட்ட தலைவர் பழனிவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவராஜ் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

    தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூமிற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    • மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சிவ கோஷங்களை எழுப்பினர்.
    • முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

    சிதம்பரம்:

    பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனி திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

    முன்னதாக இன்று அதிகாலை சித்சபையில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், தேர் நிலையான கீழரத வீதியில் தனித்தனியே அமைக்கப்பட்ட தேர்களில் வைக்கப்பட்டனர்.

    சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சிவ கோஷங்களை எழுப்பினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர். அங்கு திரண்ட திரளான பக்தர்கள் இன்று காலை 6.45 மணிக்கு தேரை இழுத்தனர்.

    தேரானது கீழரதவீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் தேர்நிலையான கீழரத வீதிக்கு இரவு இரவு 7 மணிக்கு வந்தடையும். பின்னர் இரவு 8 மணிக்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

    நாளை ஜூலை 12-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. 

    • புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    புதுக்கோட்டை மாவட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 13 பேரை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்திருப்பதோடு, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்திருக்கும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

    கடந்த இரு வாரங்களில் மட்டும் 40க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் கைது சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    எனவே, ஒவ்வொருமுறை மீனவர்கள் கைதின் போதும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் நாடகத்தை இனியும் தொடராமல், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    • பறவை ஓன்று பயப்படாமல் அமர்ந்து கொண்டிருந்தது.
    • ஊழியர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தின் அருகே செல்லும் அடையாறு ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள புல்வெளிகள் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பரப்பில் அதிக அளவில் பறவகைள் வந்து செல்கின்றன.

    இப்படி வரும் பறைவைகள் விமான நிலைய ஓடுபாதை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பல்வேறு வகை பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து அமர்ந்து இருக்கும்.

    இதனால் ஊழியர்கள் மூலமாக விமானம் ஓடுபாதை அருகே பட்டாசுகள் வெடித்து அதன் சத்தத்தால் பறவைகளை துரத்தும் பணியில் சென்னை விமான நிலைய நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான ஓடுபாதைகளை சரிபார்க்கும் பணியும் ஊழியர் ஒருவர் ஈடபட்டார். அப்போது ஓடுபாதை அருகே பறவை ஓன்று பயப்படாமல் அமர்ந்து கொண்டிருந்தது.

    இதை பார்த்து ஆச்சரியப்பட்ட ஊழியர் அதன் பறவையை அருகில் சென்று பார்த்த போது தரையில் 2 முட்டைகளை அடைகாத்து வருவது தெரிந்தது. இதனை அந்த ஊழியர் தனது செல்போனில் பதிவு செய்தார்.

    அந்த பறவை சிவப்பு லாப்விங் வகை பறவை என்பது தெரியவந்தது. இந்த பறவைகள் குறைந்த அடி உயரத்தில் தான் பறக்கும் மேலும். இது உயரமான இடத்திலோ மரங்களிலோ கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுகள் பொறிக்காது. இது புல்வெளி மற்றும் விவசாய நிலங்களில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

    விமான ஓடு பாதை அருகே விமானங்களின் இரைச்சலுக்கு மத்தியில் பறவை ஒன்று தரையில் முட்டையிட்டு அடைகாத்து வருவது ஊழியர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அனைத்து பணியாளர்களும் அமரும் வகையில் உரிய அடிப்படை வசதிகள் நிறைந்த இடத்தில் நடத்த வேண்டும்.
    • பணியாளர் நிகழ்வு நடைபெறும் விவரத்தினை அனைத்து பணியாளர்களுக்கும் முன்னரே தெரிவித்து கலந்து கொள்ளச்செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு செய்திடும் வகையில் இருமாதங்களுக்கு ஒருமுறை இரண்டாவது வெள்ளிக்கிழமை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    அவ்வாறு இராண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலோ அல்லது வேறு காரணங்களினால் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டாலோ அடுத்து வரும் வேலை நாளில் அக்கூட்டத்தினை நடத்திடவும், பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும் இடம் அனைத்து பணியாளர்களும் அமரும் வகையில் உரிய அடிப்படை வசதிகள் நிறைந்த இடத்தில் நடத்திடவும், பணியாளர் நிகழ்வு நடைபெறும் விவரத்தினை அனைத்து பணியாளர்களுக்கும் முன்னரே தெரிவித்து கலந்து கொள்ளச்செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    நிராகரிக்கப்படும் மனுக்கள் எந்த காரணத்திற்காக நிராகரிக்கப்படுகிறது என்பதையும் தெளிவாக குறிப்பிட்டு மனுதாரர்களுக்கு பதில் அனுப்பி அவ்விவரங்கள் இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்றும் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    ×