என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • காவிரி ஆறு ஓடும் கரையோர மாவட்டங்களில் ஆடி 18-ந் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 124.80 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 42 ஆயிரத்து 45 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரத்து 914 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அதே போல் கபினி அணையும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு இன்று வினாடிக்கு 15 ஆயிரத்து 965 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரத்து 792 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 57 ஆயிரத்து 706 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடிக்கும் மேல் இருந்தது. பின்னர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்து உபரி நீரும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 33 ஆயிரத்து 849 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 33 ஆயிரத்து 40 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 89.31 அடியாக உயர்ந்து காணப்பட்டது. இன்று மாலைக்குள் அணையின் நீர்மட்டம் 90 அடியை தொட்டுவிடும்.

    இதற்கிடையே இன்று காலை முதல் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு மீண்டும் அதிகரித்து காணப்படுவதால் அந்த தண்ணீர் இன்று மாலை முதல் தமிழகத்துக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தண்ணீர் வந்தால்மேட்டூர் அணை நாளை மறுநாள் மாலைக்குள் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 51.86 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    காவிரி ஆறு ஓடும் கரையோர மாவட்டங்களில் ஆடி 18-ந் தேதி அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது காவிரியில் ஓடும் புது வெள்ளத்தில் பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் புனித நீராடுவார்கள். மேலும் ஆடி பட்டம், தேடி பார்த்து விதைக்கனும் என்ற பழமொழிக்கு ஏற்ப விவசாயிகள் காவிரியில் புனித நீராடி விட்டு விவசாய பணிகளை தொடங்குவார்கள். எனவே அணை வேகமாக நிரம்பி வருவதால் வருகிற 3-ந்தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தே.மு.தி.க.வினரின் பெயரை கெடுப்பதற்கு சதி நடக்கிறது.
    • தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    மின் கட்டண உயர்வு, ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதது ஆகியவற்றை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மின் கட்டண உயர்வும், மின் வெட்டும் வழக்கமாகி விடுகிறது. ரேசன் கடைகளில் மக்களுக்கு பொருட்கள் சரியான முறையில் கிடைப்பது இல்லை. மாதம் தோறும் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்குவதாக கூறிவிட்டு ஒரு சிலருக்கு மட்டுமே கொடுத்துள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தே.மு.தி.க.வினரின் பெயரை கெடுப்பதற்கு சதி நடக்கிறது. மக்கள் பிரச்சனைகளுக்காக தே.மு.தி.க. இதுபோன்ற போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவோம்.

    இவ்வாறு பிரேமலதா பேசினார்.

    சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், சூரியா, பிரபாகரன், மாறன், செந்தில் குமார், பழனி, வேல் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தாம்பரம் சண்முகம் சாலையில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் செழியன், மகாதேவன் மற்றும் தே.மு.தி.க.வினர் கலந்து கொண்டனர்.

    கோவையில், துணை செயலாளர் பார்த்தசாரதி, தர்மபுரியில் அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

    • கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது.
    • நைவேத்தியம் தயாரிக்க தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலின் உள் பிரகாரத்தில் வடக்கு பக்கம் மிகவும் பழமையான புனிதமான தீர்த்த கிணறு உள்ளது. இந்த கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தினமும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீரை கோவில் மேல் சாந்தி அல்லது கீழ் சாந்தி குடத்தில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். கோவில் மூலஸ்தானத்துக்கு முன்பு உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் இருந்து பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாகத் தான் கோவில் மேல் சாந்திகள் இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று அபிஷேகத்துக்குரிய புனித நீர் எடுத்து வருவதற்கான வழி உள்ளது.

    மின்விளக்கு வசதி இல்லாத இருள் சூழ்ந்து கிடக்கும் இந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு நடக்கும் அபிஷேகத்துக்குரிய புனித நீரை கிணற்றில் இருந்து குடத்தில் மேல்சாந்திகள் எடுத்து வருவார்கள். மேலும் அம்மனுக்கு பூஜைக்கு பயன்படுத்துவதற்குரிய புனித நீரும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமின்றி அம்மனுக்கு தினமும் காலையில் நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், அரவணை பாயாசம், பால் பாயாசம், பொங்கல் போன்றவைகளை தயாரிப்பதற்காகவும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    அதேபோல இரவு அம்மனுக்கு நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் அப்பம், வடை போன்ற பதார்த்தங்கள் தயாரிப்பதற்கும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வெளியூர்களில் உள்ள கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம், திருவிழா, கொடை விழா மற்றும் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் குடங்களில் புனித நீர் எடுத்து பகவதி அம்மனின் காலடியில் வைத்து பூஜை செய்து கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த தீர்த்த கிணறு குப்பை கூழங்கள் விழுந்து மாசுபட்டு விடக்கூடாது என்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு கம்பி வலைகளால் மூடப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த தீர்த்த கிணற்றில் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் பணம், காசு மற்றும் தங்கம், வெள்ளி போன்றவைகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக காசி, ராமேசுவரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வரும் வடமாநில பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் உள்ள தீர்த்த கிணற்றில் அதிக அளவில் பணம் காசுகளை காணிக்கையாக கொண்டு வந்து கொட்டி வணங்கி செல்கிறார்கள்.

    பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம் மற்றும் காசுகள் இந்த தீர்க்கக் கிணற்றின் மேலே உள்ள கருங்கற்களால் ஆன தளத்தில் குவிந்து கிடக்கின்றன. இந்தத் தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம், காசுகள் இந்த கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு எண்ணப்படவில்லை.

    இந்த நிலையில் கோவிலில் ஆய்வு செய்ய வந்த கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இந்த தீர்த்த கிணற்றை பார்வையிட்டார். அப்போது தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகளை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தீர்த்த கிணற்றுக்கு செல்லும் சுரங்க பாதையில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் திறந்து எண்ண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகியோர் ஒருங்கே பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உடுமலை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகின்றனர்.

    இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்கியதால் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதையடுத்து அங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும் தடை விதித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் வெள்ள நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
    • சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும்.

    ஆனால் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை. மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

    மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. மத்திய அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

    மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் மத்திய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் அளித்த பொய்ப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதை அறிந்த முருகவேல், முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது. முருகவேலுக்கு முன்பிணை கிடைக்க வாய்ப்பிருப்பதை அறிந்த காவல்துறை, அதற்கு முன்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மத்தியப்பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.

    மிகச்சாதாரணமான, அதுவும் நீதிமன்றமே நிபந்தனையின்றி முன்பிணை வழங்கியுள்ள பொய் வழக்கில் தொடர்புடைய பா.ம.க. நிர்வாகி முருகவேலுவை பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.

    கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர், தி.மு.க.வினர் தூண்டிவிட்டார்கள் என்பதற்காக ஏதோ சர்வதேச பயங்கரவாதியை கைது செய்வது போன்று மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வருவதை என்னவென்று சொல்வது?

    பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதை காவல்துறையும், அதை வழி நடத்திச் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொள்ள வேண்டும்.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேனை உண்பதற்காக மரத்தில் ஏறிய கரடி.
    • சுமார் 17 மணிநேரத்திற்கு பிறகு சென்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி சிறுத்தை, கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து அட்ட காசத்தில் ஈடுபடுவது வழக்கம்.

    பின்னர் அதனை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு விடுவார்கள்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மணிமுத்தாறு மெயின் ரோட்டில் கரடி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. உடனே அதனை கண்ட மக்கள் அலறியபடி ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் அந்த கரடி அங்கிருந்த பட்டாலியன் கமாண்டர் வீட்டில் புகுந்து அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டு இறங்காமல் நின்றது.

    இதுகுறித்து அறிந்து, அம்பை வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடியை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் கரடி இறங்காமல் இரவு வரையிலும் மரத்தின் மீது நின்று கொண்டே இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு இருந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.10 மணிக்கு அந்த கரடி மரத்தில் இருந்து நைசாக இறங்கி காட்டுப்பகுதிக்குள் ஓடியது. அந்த மரத்தில் தேன் கூடு கட்டி இருந்தது. அதனை உண்பதற்காக மரத்தில் ஏறிய கரடி, நள்ளிரவில் தேன் முழுவதையும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் மரத்திலேயே தூங்கியதாகவும், அதன்பின்னர் இறங்கி சென்றுவிட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    சுமார் 17 மணி நேரம் அந்த கரடி மரத்தின் மீதே நின்று கொண்டிருந்த நிலையில், அதன் பின்னர் இறங்கி சென்றுள்ளது. கடந்த மாதம் 16-ந்தேதி இதே இடத்திற்கு கரடி ஒன்று வந்து மரத்தில் ஏறி நின்றுவிட்டு நள்ளிரவில் இறங்கி வனத்துக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • தமிழக எல்லையோர மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை.
    • மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை:

    கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 14 வயது சிறுவன் உயிரிழந்தான். அவனுடன் தொடர்பில் இருந்த 6 பேர் நிபா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கேரளாவை ஒட்டிய தமிழக எல்லையோர மாவட்டங்களில் உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சுகாதார மற்றும் மருத்துவக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் கோவையில் இருந்து கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்ல 2 தனியார் கல்லூரிகள் திட்டமிட்டு இருந்தன. இதுகுறித்து கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்விக்கு தெரியவந்தது.

    தொடர்ந்து அவர் நிபா வைரஸ் பரவல் நீடிப்பதால் கேரளாவுக்கு கல்வி சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். தொடர்ந்து அந்த கல்லூரிகள் கேரளாவுக்கான கல்வி சுற்றுலாவை ரத்து செய்து விட்டன.

    கோவையின் அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்து உள்ளார்.

    அந்த அறிவிப்பில், கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் இருப்பதால் மாணவ-மாணவிகளின் நலன்கருதி கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகள் மாணவ-மாணவிகளை கேரளாவுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டுமென கூறப்பட்டு உள்ளது.

    • மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை.
    • பெண் பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற ஏர் ஏசியா விமான பய ணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு பெண் பயணியின் உடமையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பார்சல் ஒன்று இருந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    சுங்கத்து றை அதிகாரிகள் அதனை சோதனை செய்தபோது அதில் 8000 அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் இந்திய ரூபாயின் மதிப்பு 5.63 லட்சம் என தெரிய வருகிறது.

    அதற்கான உரிய ஆவணங்கள் அந்த பெண்ணிடம் இல்லை என்பதால் அமெரிக்க டாலரை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பெண் பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதே போன்று சிங்கப்பூ ருக்கு சென்ற ஸ்கூட் விமான பயணிகளின் உடமை களை சோதனை செய்தபோது பயணி ஒருவர் சிங்கப்பூருக்கு கடத்த இருந்த ரூபாய் 10.33 லட்சம் மதிப்பிலான அமெரிக்க எண் மற்றும் யூரோ பறிமுதல் செய்யப்பட்டது.

    சுங்கத்து றை அதிகாரிகள் அவரை கைது செய்து தொடர்பு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் அதிக அளவில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • கடந்த 20-ந் தேதி திடீரென மின்சாரம் தடைப்பட்டது.
    • குடிநீர் இல்லாமல் மக்கள் அவதி.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம், ராஜன் நகர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கபட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த மலை கிராமங்களுக்கு கடந்த 20-ந் தேதி திடீரென மின்சாரம் தடைப்பட்டது. அதனை த்தொடர்ந்து மின்சாரமின்றி இந்த மலை கிராம மக்கள் தவித்து வருகின்றனர். இரவு நேரத்தில் இருளில் மூழ்கி கிடக்கின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் இன்று 6-வது நாட்களாக அவதி பட்டு வருகின்றனர்.

    மலைகிராமம் கேர்மாளம், ஒசட்டி, காட ட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், பூதாளபுரம் என 50-க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. மின் தடையால் ஊராட்சிக்கு செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர்.

    மின்தடையால் இரவு நேரங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், செல்போன் கூட ஜார்ஜ் செய்ய முடியாமல் அவசர தேவைக்கு உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது.விவசாயிகள் பயிர்களுக்கு நீர்பாச்ச முடியாமலும், பள்ளி மாணவ-மாணவிகள் படிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருவதாக வேதனையாக தெரிவித்தனர்.

    தொடர்ந்து 6-வது நாளாக மின்தடை ஏற்பட்டுள்ளதால் பல இன்னல்களை சந்தித்து வருவதாகவும், மின்வாரிய ஊழியர்களிடம் தகவல் அளித்து பயணில்லை என மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஆரோக்கியசாமி வழக்கு தொடர்ந்தார்.
    • தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார். இவரின் உறவினர் நேசம் என்பவர் கடந்த 28.11.2021 அன்று இறந்துவிட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக 27.11.2022 அன்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் 25 சாப்பாட்டுக்கு ரூ.80 வீதம் ரூ.2 ஆயிரத்தை ஆரோக்கியசாமி செலுத்தினார். பின்னர் மறுநாள் 28.11.2022 அன்று ஆர்டர் கொடுத்தப்படி 25 பார்சல் சாப்பாட்டை ஆரோக்கியசாமி வாங்கினார். அதற்கு ஒரிஜினல் ரசீது கேட்டபோது ஓட்டல் உரிமையாளர் கொடுக்க மறுத்துவிட்டு, சிறிய ரசீது எழுதி கொடுத்துள்ளார்.

    அதன்பிறகு வீட்டிற்கு சென்று முதியோர்களுக்கு உணவு பொட்டலங்களை ஆரோக்கியசாமி வழங்கியுள்ளார். அப்போது அந்த பார்சல் உணவுடன் வழங்க வேண்டிய ஊறுகாய் இல்லாதது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆரோக்கியசாமி, ஓட்டல் உரிமையாளரிடம் ஊறுகாய்க்குரிய தொகை ரூ.25-ஐ திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ஓட்டல் உரிமையாளர் தர மறுத்துவிட்டார்.

    இதையடுத்து ஆரோக்கியசாமி, இதுகுறித்து விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை குறைதீர் ஆணையத்தின் தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறினார்கள்.

    அதில், ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு ஆகும். இதனால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.30 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும், ஊறுகாய் பொட்டலம் 25-க்குரிய தொகை ரூ.25-ம், தொகைக்குரிய ஒரிஜினல் ரசீதும், தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அபராத தொகையாக ஓட்டல் உரிமையாளர் செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினர்.

    • அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழ்ப் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

    சென்னை:

    புதுமைப்பெண் திட்டம் போல உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இந்த திட்டத்தின் பயன்களை எப்படி பெற வேண்டும்? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

    இந்நிலையில் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

    ×