என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தொடர் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- தனியார் பஸ் டிரைவர்கள் பொறுப்புணர்ந்து பஸ்களை இயக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளியில் நடந்த விபத்தில் தனியார் பஸ் கவிழ்ந்து 2 கல்லூரி மாணவர்கள் பலியனார்கள். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்திற்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் மாடசாமி மற்றும் நடத்துனர் மீது ஊத்துக்குளி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் மற்றும் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் நேரிடையாக ஆய்வு நடத்தினர். அப்போது விபத்தில் தனியார் பேருந்து சிக்கியதற்கு, வலதுபுறம் லாரியை பேருந்து முந்த முயன்றதே விபத்துக்கு முக்கிய காரணம் என தெரிய வந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தை ஓட்டிய டிரைவர் மாடசாமியின் ஓட்டுனர் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
இது தொடர்பாக வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் கூறுகையில்,
மேற்படி தனியார் பேருந்து கவிழ்ந்த இடத்திற்கு அருகிலேயே குழி இருக்கிறது. பேருந்து வேகமாக வந்து லாரியை முந்தி முன்னேறி சென்றிருந்தால் வேகமாக விழுந்திருக்கும். பலியும் அதிகரித்திருக்கும். பேருந்து வேகம் குறைவு என்பதால், சாலையை விட்டு இறங்கி சாய்ந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. படுகாயம் அதிகரித்துள்ளது. வலது புறம் முந்த முயற்சி எடுத்தது தவறு. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பஸ் டிரைவர்கள் பொறுப்புணர்ந்து பஸ்களை இயக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
- புகாரின் பேரில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டிவனம்:
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவருக்கு அப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
தற்போது திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்து கைதான சம்பவம் அரங்கேறி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவிக்கு பொருளாதார பேராசிரியராக குமார் பாடம் எடுத்து வருகிறார்.
இவர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை தொலைபேசி மூலமாகவும் மற்றும் சமூக வலைதள மூலமாகவும் மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி பேராசிரியர் மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தவறான முறையில் பேசி பாண்டிச்சேரிக்கு போகலாம் எனக் கூறி அழைத்ததாகவும் அதற்கு மாணவி மறுத்து விட்டதாகவும் மேலும் அன்று இரவு 9 மணி அளவில் வீடியோ கால் மூலம் மாணவியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி மாணவி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார்.
- 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக நேற்று தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரெயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.
வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிலர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார்.
கர்ப்பிணி பெண் குரல் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் அந்த நபர்கள் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், கோவை- திருப்பதி விரைவு ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணி பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
இந்நிலையில், ஓடும் ரெயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவம் தகவல் வெளியாகியுள்ளது.
- போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
- பிரிமியம் பஸ்கள், மினி பஸ்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசே இயக்க வேண்டும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே சி.ஐ.டி.யூ. போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.
சி.ஐ.டி.யூ. தொழிலாளர் சம்மேளன தலைவர் சவுந்தர்ராஜன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போக்குவரத்து துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். பிரிமியம் பஸ்கள், மினி பஸ்கள் போன்றவற்றை தமிழ்நாடு அரசே இயக்க வேண்டும். தமிழ்நாட்டில் 300 பணிமனைகள் உள்ளன. தேவையான கட்டமைப்பு அரசு போக்குவரத்து கழகத்திடம் உள்ளது. எனவே எந்த விதமான பஸ்களாக இருந்தாலும் தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசு போக்குவரத்து கழகமே அதை இயக்க வேண்டும்.
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட பிற அரசு துறைகள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் உடனடியாக அமல் படுத்த வேண்டும். தற்போது இதற்காக குழு அமைக்கப்பட்டு 9 மாத காலம் அவகாசம் என கூறப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு திருப்தி இல்லை.
எனவே முதலமைச்சர் உடனடியாக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். முறைசாரா தொழிலாளர்கள் பதிவு மற்றும் அவர்களுக்கு கேட்பு மனுக்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் குளறுபடி உள்ளது. 75 லட்சம் தொழிலாளர்களின் பதிவு, சர்வரில் அழிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். மற்ற துறைகளில் எல்லாம் சர்வர்கள் முறையாக இயங்கும்போது முறைசாரா தொழிலாளர்கள் பதிவில் மட்டும் சர்வர் எப்படி அழிந்தது என்பது தெரிய வில்லை. எனவே உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு கிலோ ரூ.10 என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது வெளி மாநில தேவை குறைந்துள்ளது.
- ஒரு சில வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கே சென்று தக்காளிகளை வாங்கி வாகனங்களில் வைத்து தெருக்களில் விற்பனை செய்து வந்தனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வரும் காந்தி, காமராஜர் மார்க்கெட்டுக்கு தினந்தோறும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த சில வாரங்களாகவே தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து விற்பனையானது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.200 என விற்கப்பட்டது. இதனால் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் விற்றுச் சென்றனர். ஒரு சில வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கே சென்று தக்காளிகளை வாங்கி வாகனங்களில் வைத்து தெருக்களில் விற்பனை செய்து வந்தனர்.
ஒரு கிலோ ரூ.10 என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது வெளி மாநில தேவை குறைந்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்து இங்கிருந்து அனுப்பப்படும் தக்காளி முற்றிலும் நின்று விட்டது. இதேபோல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும் தக்காளி குறைந்து போனது.
இன்று காலை காமராஜர் மார்க்கெட்டுக்கு 15 ஆயிரம் பெட்டிகள் வரையிலும், காந்தி மார்க்கெட்டுக்கு 20 ஆயிரம் பெட்டிகள் வரையிலும் விற்பனைக்கு வந்தன. ஒரு பெட்டி ரூ.220 வரை விற்பனையான நிலையில் ஏற்கனவே இருப்பு வைத்த தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் தக்காளிகளை விற்பனை செய்யாமல் குப்பையில் கொட்டிச் சென்றனர். சாதாரணமாக இந்த சீசனில் தக்காளிக்கு போதிய விலை கிடைத்து வந்த போதிலும் வரத்து அதிகரித்து காணப்படுவதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கடும் பனிப்பொழிவுக்கு இடையே செடிகளை பாதுகாத்து பராமரித்து பின்னர் அவற்றுக்கு பறிப்பு கூலி கொடுத்து மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் கூலி வரை செய்த செலவு தொகை கூட சந்தையில் கிடைப்பதில்லை என வேதனையுடன் தெரிவித்தனர். ஏற்கனவே தக்காளி விலை வீழ்ச்சி அடையும் சமயங்களில் அதனை பதப்படுத்தி வைக்க எந்திரம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதுபோன்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டு தக்காளி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
- பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை பிரதிபலிக்கிறது.
டெல்லி சட்டசபை தேர்தலில் 48 இடங்களில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது. இதனால் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் பா.ஜ.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பா.ஜ.க. வெற்றி குறித்து மாநில தலைவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியை டெல்லி மக்கள் நிராகரித்து, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மூன்றாவது முறையாக அழித்து, சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர். இன்றைய முடிவுகள், இந்திய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் பரப்பும் பிளவுபடுத்தும் அரசியலை விட, நமது பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை பிரதிபலிக்கிறது.
இந்த அற்புதமான வெற்றிக்காக டெல்லி பா.ஜ.க.வின் அனைத்துத் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார்.
- மாணவன் அஸ்வத்துக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- அஸ்வந்த் தற்போது அரபு நாடான கத்தாரில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். சிவில் என்ஜீனியர். மனைவி வித்யாலட்சுமி . தற்போது சென்னை அண்ணாநகர் கிழக்கில் வசித்து வருகிறார்கள். இவர்களது மகன் பி. அஸ்வந்த் (வயது 11). அஸ்வந்த் தற்போது அரபு நாடான கத்தாரில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.
ஆங்கிலத்தில் அதிகம் நாட்டம் மிகுந்த மாணவனாக திகழும் அஸ்வந்த் ஆங்கில வாக்கியங்களை தலைகீழாக விரைந்து படிப்பதில் திறமை வாய்ந்தவன்.
தற்போது அஸ்வந்த் 5 நிமிடங்களில் 92 ஆங்கில வாக்கியங்களை தலைகீழாக படித்து சாதனை படைத்து உள்ளார். மாணவனின் இந்த சாதனை நிகழ்வு இந்தியா புக் ஆப் ரெக்கார்ல்ட் சில் இடம் பெற்றுள்ளது. சாதனை படைத்த மாணவன் அஸ்வத்துக்கு ஆசிரியர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களமாடியது.
- இனி வருகிற தேர்தலிலாவது இதனை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும்.
திண்டுக்கல்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
டெல்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களமாடியது. சமூக ஊடகங்களில் கூட வாக்காளர்களுக்கு அந்த கட்சியினர் பணம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்தியா கூட்டணியில் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காங்கிரஸ், ஆம் ஆத்மி ஈகோ பிரச்சனையால் பிரிந்து தேர்தலை சந்தித்தது. இது பா.ஜ.க. வெற்றிக்கு பெரிதும் உதவியாக அமைந்து விட்டது. பா.ஜ.க.வின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது.
பாராளுமன்ற தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் தான் பா.ஜ.க. என்ற மதவாத சக்தியை வீழ்த்த முடியும். இனி வருகிற தேர்தலிலாவது இதனை உணர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தமிழக அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு, ஆழியார் அணையை பார்த்து ரசிக்கின்றனர்.
- கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டமும், குளிரும் காணப்படுகிறது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை அருகே கவியருவி (குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.
சுற்றுலா தலமான இந்த நீர்வீழ்ச்சிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இதன் அருகேயே ஆழியார் அணை, அணை பூங்காவும் உள்ளது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு, ஆழியார் அணையை பார்த்து ரசிக்கின்றனர். பின்னர் அணை பூங்காவில் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அமர்ந்து பேசி பொழுதை கழித்து செல்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டமும், குளிரும் காணப்படுகிறது. பகல் நேரங்களில் கடும் வெயில் நிலவுகிறது. மழை குறைந்து விட்டதால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது.
தற்போது அருவியில் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது. கவியருவியில் தண்ணீர் குறைந்ததால், கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
விடுமுறை தினமான இன்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் கவியருக்கு வந்தனர். ஆனால் குளிப்பதற்கு அனுமதியில்லை என்பதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை நடை பெற்றன.
- இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மலேசியாவில் 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை நடை பெற்றன.
இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த கமாலினி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவர்தான் விளையாடிய 7 போட்டிகளில் ஒரு அரைச் சதம், 143 ரன்கள், 2 கேட்சுகள், 4 ஸ்டம்பிங் நிகழ்த்தி அசாத்திய சாதனைகள் புரிந்துள்ளார். இந்த போட்டிகளில் கமாலினியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அதே போல், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகள், ஜனவரி 13 முதல் ஜனவரி 19-ந்தேதி வரை நடைபெற்றன.
இப்போட்டிகளில் தமிழ் நாட்டைச் சார்ந்த வி.சுப்ரமணி அபாரமாக விளையாடியதற்காக "சிறந்த அட்டாக்கர் விருதை" வென்றார். இறுதிப் போட்டியில் நேபாள அணியை 54-36 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, இந்திய அணி கோ-கோ உலகக் கோப்பையை வென்றது. இந்த போட்டிகளில் தமிழக வீரர் வி.சுப்ரமணியின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் கமாலினியின் இந்தச் சாதனையைப் போற்றிப் பாராட்டும் வகையில், பல விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று, தமிழ் நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையிலும் கமாலினிக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 25 லட்சம் வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த வி.சுப்ரமணி போல மேலும் பல விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்றுத் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையில், அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.25 லட்சம் வழங்கிட இன்று உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
- விபத்தில் எட்டயபுரத்தை சேர்ந்த தொழிலாளர் முனியசாமி என்பவர் காயமடைந்தார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் சிட்கோ தொழிற்பேட்டையில் விஜயகாந்த் என்பவருக்கான தீப்பெட்டி ஆலை உள்ளது. இதனை கோவில்பட்டி லாயல் மில் காலனியை சேர்ந்த செண்பக விநாயக மூர்த்தி, சிராக் ஆகியோர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை திடீரென அங்கு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென அப்பகுதி முழுவதும் பரவியது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ கட்டுக்கடங்காமல் எரிந்ததால் டிராக்டர் டேங்கர்கள் மூலமாகவும் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் எட்டயபுரத்தை சேர்ந்த தொழிலாளர் முனியசாமி (வயது 55) என்பவர் காயமடைந்தார். அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் ஆலையில் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள், மூலப்பொருட்கள், எந்திரங்கள் ஆகியவை முற்றிலும் எரிந்து சேதமானது. விபத்து குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.
- உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அமர்வு நிச்சயமாக பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என அந்த மசோதா வலியுறுத்துகிறது.
நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் பாராளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டுவந்துள்ளார்.
அவர் கொண்டுவந்துள்ள மசோதாவில், ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கும், இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது, மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் ஒரு முக்கியமான தனிநபர் மசோதாவை தான் பாராளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.
உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்புக்கு அரசியலமைப்பின் பண்புகளை வழங்கவும், கொலீஜியம் பரிந்துரைகளை அறிவிக்க மத்திய அரசுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவும் இந்த மசோதா முயற்சிசெய்கிறது.
சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் செல்லும் தன்மையை நீதிபதிகள் திறம்பட தீர்மானிப்பதால், மாநில மற்றும் நாட்டின் சமூக பன்முகத்தன்மையை நீதிமன்ற அமர்வு பிரதிபலிக்கவேண்டியது கட்டாயமாகும் எனவும் இது ஒரு ஒரே மாதிரியான சமூக வர்கத்தினருக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட ஒரே துறை உயர் நீதித்துறை (உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்) மட்டுமே என்றும், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அமர்வு நிச்சயமாக பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என அந்த மசோதா வலியுறுத்துகிறது.






