என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி வில்சன்"

    • திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞரான பி. வில்சன் உரையாற்றினார்.
    • 1960களில் இந்திய பெண் மருத்துவ அதிகாரிகள் காங்கோவில் பணியாற்றினர்

    ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி நிறுவல் ஆணையம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா பொதுச்சபை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 2005 ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த அமைதி நிறுவல் ஆணையத்தின் தூதர் மட்டக் கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்று திமுக மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞரான பி. வில்சன் உரையாற்றினார்.

    இந்தியா சார்பில் உரையாற்றிய பி. வில்சன் கூறியதாவது:-

    மாண்புமிகு தலைவர் அவர்களே, வணக்கம்.

    1. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1325ன் 25ஆம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி இன்றைய நிகழ்வை ஒருங்கிணைத்ததற்காக, அமைதி நிறுவல் ஆணையத்தின் தலைமை ஜெர்மனிக்கு இந்தியா தனது பாராட்டுகளை தெரிவிக்கின்றது.

    பெண்கள் சமத்துவத்திற்காக நமீபியா அமைச்சரும், ஐ.நா. மகளிர் அமைப்பின் நிறைவேற்று இயக்குநரும், மற்றும் மற்ற உரையாளர்களும் தங்களது ஆழமான கருத்துகளையும், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) திட்டத்தை மேலும் வலுப்படுத்த உதவும் மதிப்புமிக்க பங்களிப்புகளையும் வழங்கியதற்காக நன்றி தெரிவிக்கிறோம்.

    2. ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதிப்படை நடவடிக்கைகளுக்கான முன்னணி பங்களிப்பாளர்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, அமைதியை உருவாக்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்கேற்பு இன்றியமையாதது என்பதை வலியுறுத்துகிறது. அமைதிக்காப்பு மற்றும் அமைதிநிறுவல் மீதான எங்கள் அர்ப்பணிப்பு, தேசிய உரிமை மற்றும் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு(WPS) நோக்கங்களின் கொள்கைகளுடன் இணைந்துள்ளது.

    3. இந்தியாவின் அமைதிக்காப்பு பாரம்பரியத்தை தனித்துவமாக ஆக்கும் அம்சம் எங்கள் பங்களிப்பின் அளவில் மட்டும் இல்லை, நிலைத்த அமைதிக்கான இன்றியமையாத செயற்பாட்டாளர்களாக பெண்களை முன்கூட்டியே அடையாளம் கண்டது என்பதிலும் இருக்கிறது.

    பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1325 பிறக்கும்முன்பே, 1960களில் இந்திய பெண் மருத்துவ அதிகாரிகள் காங்கோவில் பணியாற்றினர். இது, ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் பெண்கள் பங்கேற்ற முதன்மையான நிகழ்வுகளில் ஒன்றாகவும் பதிவாகிறது. இது ஒரு குறியீட்டு நடவடிக்கை மட்டுமல்ல; மாறாக, பெண்களின் பார்வை, திறன்கள், மற்றும் அவர்களின் பங்கு பயனுள்ள அமைதிக்காப்பு மற்றும் அமைதி நிறுவலிற்கு அத்தியாவசியமானவை என்பதைக் கண்கூடாக அங்கீகரிக்கிறது.

    4. 2007 ஆம் ஆண்டு, இந்தியா ஐ.நா.வின் முதல் முழு பெண்கள் கொண்ட காவல் படை பிரிவை (Formed Police Unit) லைபீரியாவிற்கு அனுப்பியது. இந்த முன்னோடியான முயற்சி, அந்நாட்டின் உள்ளூர் பெண்களை தங்கள் தேசிய காவல் மற்றும் பாதுகாப்பு சேவைகளில் சேர ஊக்குவித்தது. இன்று, இந்திய பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகள் காங்கோ ஜனநாயகக் குடியரசு, அப்யேய் மற்றும் தென் சூடான் ஆகிய இடங்களில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் சமூகங்களுடன் நம்பிக்கையை உருவாக்குவதிலும், பாலின அடிப்படையிலான வன்முறையைத் தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பை வலுப்படுத்தவும் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

    5. இவ்வாறான பணியமர்வுகளின் மூலம், அமைதிக்காப்பு மற்றும் அமைதிநிறுவலில் பெண்கள் வழங்கும் நேர்மையான பங்களிப்பு மற்றும் தாக்கத்தை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. பெண்கள், சமூகங்களில் நம்பிக்கையை உருவாக்கி, குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நம்பிக்கையை அளிக்கின்றனர். மிக முக்கியமாக, அவர்கள் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்கொள்ளவும், அமைதிக்கான வழிமுறைகள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் தேவைகள் மற்றும் பார்வைகளை பிரதிபலிக்கவும் உதவுகின்றனர். அத்துடன், மோதல் நிலப்பரப்புகளில் உள்ள பெண்களுக்கு, அவர்களும் தலைவர்களாகவும், அமைதி நிறுவர்களாகவும் ஆக முடியும் என்பதற்கான உதாரணமாக திகழ்கின்றனர்.

    6. தேசிய அளவில், பெண்கள் முன்னேற்றத்திலிருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற இந்தியாவின் பயணம், எங்கள் சமூகத்தின் ஒவ்வொரு துறையையும் மாற்றியுள்ளது. இன்று, அடிப்படை மட்டத்தில் 14 இலட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக பணியாற்றுகின்றனர். மேலும், 23க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களும் ஒன்றிய பிரதேசங்களும், உள்ளூராட்சி மன்றங்களில் 50 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளன. இது, சமூக ஒற்றுமை மற்றும் ஒன்றிணைந்த ஆட்சி ஒன்றை ஒன்று பூர்த்தி செய்யும் அம்சங்கள் என்பதை வலியுறுத்துகிறது.

    7. இந்தியா, பெண்களுக்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளில், குறிப்பாக உலக தெற்கு நாடுகளிலிருந்து வரும் அமைதிப்படைப் பணியாளர்களுக்காக, தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. புது டெல்லியில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிக்காப்பு மையம் (Centre for United Nations Peacekeeping), இன்று பாலின உணர்வுமிக்க பயிற்சிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த மையமாக உருவெடுத்துள்ளது. அது, பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக முக்கிய பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கு இயக்கத்திட்டமிடல், பொதுமக்கள் பாதுகாப்பு, பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறைத் தடுப்பு, பாலின உணர்வுமிக்க தலைமைத்துவம் போன்ற துறைகளில் அத்தியாவசிய பயிற்சிகளை வழங்குகிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில், இந்தியா உலக தெற்கு நாடுகளிலிருந்து பெண்கள் அமைதிப்படை வீராங்கனைகளுக்காக நடத்தப்பட்ட முதல் வகையான சர்வதேச மாநாட்டை நடத்தி வரலாறு படைத்தது.

    8. எதிர்காலத்தை நோக்கி நாம் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு (WPS) திட்டத்தின் மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக உள்ளது. இந்தியா தனது கூட்டு நாடுகளுடன், குறிப்பாக உலக தெற்கு நாடுகளிலுள்ளவர்களுடன், தனது அறிவு, பயிற்சி, மற்றும் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டு, பொதுவான சவால்களுக்கு கூட்டாக தீர்வுகளை உருவாக்குவதில் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

    • பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
    • இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு தொடர்பாக, சமீபத்தில் வெளியிட்ட ஆவணத்தின் உண்மைத்தன்மை குறித்து, சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் கச்சத்தீவு குறித்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது, வெளியுறவு துறை அமைச்சகத்தில் இருந்து, தகவல் உரிமை சட்டமான ஆர்.டி.ஐ., வாயிலாக, தனக்கு கிடைத்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது: கடந்த, 1961ல் அப்போதைய பிரதமர் நேரு, குட்டித் தீவான கச்சத் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்றும், அதன் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    இது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தனது எக்ஸ் தளபதிவில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்

    அதில் கூறியிருப்பதாவது,

    கச்சத்தீவு விவகாரம் புனையப்பட்டது. எனக்கு ஆச்சரியமில்லை. அவர்கள் பொய்யான செய்திகளை பரப்புவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    கச்சத்தீவு குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட RTI தகவல் தற்போது உண்மையில்லை என நிருபணமாகியுள்ளது.

    1976ல் எந்த பகுதியும் இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை என 2015ல் பிரதமர் மோடி அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு RTI தகவலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.

    இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது மாதிரி நடத்தை விதிகளை மீறுவதைத் தவிர, அரசாங்கப் பதிவேடுகளைத் திருத்துதல் மற்றும் பொய்யாக்குதல் போன்ற கிரிமினல் குற்றங்களை ஈர்க்கவில்லையா?

    இதுபற்றி காவல்துறையில் புகார் பதிவு செய்து இந்தப் பிரச்சனையை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன்.

    2024 பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் நாட்டின் பிரதமரால் கச்சத்தீவு பற்றி கண்டுபிடிக்க முடியும்? இது தேர்தல் பாசாங்குதனம் இல்லையா? 2024 ஜனவரியில் இருந்து மட்டும் எப்படி தமிழகத்தை நினைவு கூர்ந்தார்களோ அதேபோல் தான் கச்சத்தீவு விவகாரத்திலும் நுழைந்து இருக்கிறார்கள். கச்சத்தீவை மீட்பத்தில் பா.ஜ.க. அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் 2014 முதல் 2024 வரை ஏன் ஒரு சிறு விரலை கூட அசைக்கவில்லை? என்று அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார்.

    • உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.
    • உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அமர்வு நிச்சயமாக பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என அந்த மசோதா வலியுறுத்துகிறது.

    நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் பாராளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டுவந்துள்ளார்.

    அவர் கொண்டுவந்துள்ள மசோதாவில், ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

    இந்த சிறந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    நீதித்துறை நியமனங்களை சீர்திருத்துவதற்கும், இந்திய உயர் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது, மக்கள் தொகை மற்றும் பெண்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப, ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கும் ஒரு முக்கியமான தனிநபர் மசோதாவை தான் பாராளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போதும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்தும்போதும் மாநில அரசுகளின் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் இந்த மசோதா வலியுறுத்துகிறது.

    உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்புக்கு அரசியலமைப்பின் பண்புகளை வழங்கவும், கொலீஜியம் பரிந்துரைகளை அறிவிக்க மத்திய அரசுக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்கவும் இந்த மசோதா முயற்சிசெய்கிறது.

    சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் செல்லும் தன்மையை நீதிபதிகள் திறம்பட தீர்மானிப்பதால், மாநில மற்றும் நாட்டின் சமூக பன்முகத்தன்மையை நீதிமன்ற அமர்வு பிரதிபலிக்கவேண்டியது கட்டாயமாகும் எனவும் இது ஒரு ஒரே மாதிரியான சமூக வர்கத்தினருக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

    அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த 75 ஆண்டுகளாக இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட ஒரே துறை உயர் நீதித்துறை (உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்) மட்டுமே என்றும், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் அமர்வு நிச்சயமாக பன்முகத்தன்மையை பிரதிபலிக்க வேண்டும் என அந்த மசோதா வலியுறுத்துகிறது.

    • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.
    • மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.

    திமுக எம்.பி.வில்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காததன் காரணமாக, PM Shri திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியானது மறுக்கப்பட்டு குஜராத் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் அளித்த பேட்டி கண்டனத்திற்குரியது.

    புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் ஒன்றிய அரசு தனது அரசியல் கருத்துக்களையும், அழுத்தங்களையும், சித்தாந்தங்களையும் தமிழக அரசின் மீதும், தமிழக மாணவர்கள் மீதும் திணிக்க முயல்வதையே இது காட்டுகிறது.

    இதன் மூலம் மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பிற்கும் - ஒன்றிய அரசின் கொள்கை முடிவுகளுக்கும் இடையேயான வேறுபாடு தெரிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

    நாம் குழப்பமான மக்கள் என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.

    தமிழக மக்கள் நன்கு படித்தவர்கள், ஆணித்தரமானவர்கள், தெளிவான கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் கொண்டவர்கள். ஆகையால் மாண்புமிகு அமைச்சர் அவர்களே, நீங்கள் முதலில் உங்கள் குழப்பத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    சில முடிவுகளை எங்கள் மீது திணிப்பது உங்கள் அரசாங்கத்தின் சூட்சமமான திட்டம் என்பதை நாங்கள் அனைவரும் புரிந்துகொண்டிருக்கிறோம்.

    மாண்புமிகு அமைச்சர் அவர்களே..

    உங்களது குழப்பங்கள் அனைத்தையும் நான் தீர்த்து வைக்கிறேன்.

    அரசியல் சாசனச் சட்டத்தின் 73-வது பிரிவின்படி ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து கொள்கை முடிவுகளும் எப்போதும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவை அல்ல!

    கொள்கைகளானது தன்னிச்சையானதாகவும், விசித்திரமானதாகவும், கற்பனையானதாகவும், சட்டவிரோதமானதாகவும், பகுத்தறிவற்றதாகவும், சட்டத்திற்கு முரணானதாகவும் இருக்கும் போது அல்லது மாநிலத்தின் சட்டங்கள், சுயாட்சி மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றில் தலையிடும்போது அவை மாநில அரசைக் கட்டுப்படுத்தாது.

    அந்த வகையில் அவற்றை மாநில அரசானது நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்ய முடியும்.

    குறிப்பாக மிரட்டல்கள், வற்புறுத்தல்கள் மூலம் திணிக்கப்பட்ட இதுபோன்ற பல கொள்கைகளை தமிழக அரசு நிராகரித்துள்ளது என்பதை வரலாறு காட்டும் நிலையில், ஒன்றிய அரசு திணிக்கும் கொள்கைகளை தமிழக அரசு கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.

    மும்மொழிக் கொள்கையை திணிப்பது, 1937-ம் ஆண்டிலேயே தமிழகம் நிராகரித்த இந்தி திணிப்பை நினைவூட்டுகிறது.

    மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 ஆம் ஆண்டில் அலுவல் மொழிச் சட்டத்தில் ஒன்றிய அரசை திருத்தம் செய்ய வைத்ததோடு, இந்தி மற்றும் ஆங்கிலம் அலுவல் மொழிகளாக காலவரையின்றி பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தது. இது இந்தியக் குடியரசில் தற்போதுள்ள கிட்டத்தட்ட காலவரையற்ற இருமொழிக் கொள்கையை நிறுவிட வழிவகுத்தது.

    இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை எப்படி வேறுபட முடியும்.

    1960 களில் ஒன்றிய அரசு அளித்த உத்தரவாதங்களை பலவீனப்படுத்த இது பின்வாசல் வழியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறையா?

    தமிழகம் தேசிய கல்விக் கொள்கையை கட்டாயம் ஏற்க வேண்டும் என நிர்பந்திக்கும் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களின் இத்தகைய அரசியல் கருத்துக்கள், நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தின் வலுவான கல்வி முறையை பலவீனப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது.

    இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் உயர்ந்த கல்வித் தரத்தையும், கல்வியில் மாநிலம் கொண்டுள்ள முன்னணி நிலையையும் அச்சுறுத்துவதாக இருப்பதோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும். இரு மொழிக் கொள்கையைத் தாண்டி கூடுதல் மொழிகளைக் கற்பதை தமிழ்நாடு எதிர்க்கவில்லை.

    ஆனால், தமிழக மக்களுக்கான சிறந்த கல்வி எது என்பதை மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள மாநில சுயாட்சியில் டெல்லியில் அமர்ந்து கொண்டு தலையிடும் ஒருவரால் தீர்மானிக்கப்படக் கூடாது.

    ஒன்றிய அரசு அளிக்கும் நிதியானது அதன் சொந்த நிதி அல்ல.. மாறாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணமாகும்.

    எனவே, அத்தகைய நிதியின் பயன்பாட்டை பகுத்தறிவற்ற கொள்கைகளால் நிர்பந்திக்க முடியாது. கல்வியை பொறுத்தவரை நாங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறோம்.

    கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் விவகாரத்தில் ஒன்றிய அரசின் திணிப்பு மற்றும் நிர்ப்பந்தச் செயல்களுக்கு எங்கள் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் என்றும் அடிபணிய மாட்டார்.

    ஒன்றிய அரசால் நிறுத்தி வைக்கப்படும் நிதியானது நமது மாநிலத்திற்கும் நமது மாணவர்களுக்கும் உரித்தானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். இந்த நிதிகள் வரி செலுத்துவோரின் பணத்தை உள்ளடக்கியது.

    மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களே, உங்களின் அரசியல் கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் எங்கள் மீது நீங்கள் திணிக்க முடியாது.

    இந்த நிதியானது எமது நியாயமான பங்கு மற்றும் அவற்றின் மீது சட்டப்படி எங்களுக்கு உரிமை உண்டு. இந்த நிதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×