search icon
என் மலர்tooltip icon
    • திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • வரையறுக்கப்படாத பணிகள் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சிக்குழு கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சத்தியபாமா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி செயலாளர் முரளிகண்ணன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்கள். தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் தெரிவித்தார்கள்.

    15-வது நிதிக்குழு மானியத்தில் வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத பணிகள் தேர்வு குறித்து கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை சில கவுன்சிலர்கள் பணிகளை தேர்வு செய்து வழங்காமல் உள்ளனர். 60 நாட்களுக்குள் பணித்தேர்வு பட்டியலை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இருக்கின்ற பணித்தேர்வு பட்டியலை கூட்டத்தில் தீர்மானமாக வைக்கப்பட்டு நிறைவேற்றவும், விடுபட்ட பணித்தேர்வு பட்டியலை அடுத்த கூட்டத்தில் வைத்து நிறைவேற்றலாம் என்று விவாதிக்கப்பட்டது. கவுன்சிலர்கள் பணித்தேர்வு பட்டியலை விரைந்து கொடுக்க மாவட்ட ஊராட்சி தலைவர் வலியுறுத்தினார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலைய பகுதியில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம் துணை மின் நிலையத்திற்குப்பட்ட காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்–மங்காளிபாளையம், அர்த்தநாரிப்பாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர்.

    சிவன்மலை துணை மின் நிலையத்திற்குப்பட்ட சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோடடம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம். ஆலாம்பாடி துணை மின் நிலையத்திற்குப்பட்ட நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம் நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி.

    முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர்,வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தாராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை தாராபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட தாராபுரம், வீராட்சி மங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார் டேம், பஞ்சப்பட்டி, சின்னபுத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம், கள்ளக்கிணறு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டுப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.

     காங்கயம் :

    திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.20.30 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.41.53 கோடியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் தண்ணீர் தொட்டி பகுதியில் குடிநீர் மேம்பாட்டுப்பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பதுமன் குளம் மேம்பாட்டு பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கயம் நகராட்சிக்குட்பட்ட மூர்த்திரெட்டிபாளையம் பகுதியில் ரூ.8 லட்சத்தில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தும், கோட்டைமேடு பகுதியில் ரூ.7.10 லட்சத்தில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தும், ஏ.சி.நகரில் ரூ.5.20 லட்சத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தும், காங்கயம் நகராட்சி தண்ணீர் தொட்டி வீதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.37.49 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகளையும், பதுமன் குளத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பதுமன்குளம் மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், ஆணையாளர் வெங்கடேஸ்வரன், காங்கயம் தி.மு.க நகர செயலாளர் வசந்தம் ந.சேமலையப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ஊத்துக்குளி பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் இந்த திட்டத்தை தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதையடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊத்துக்குளி பேரூராட்சித் தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராசுக்குட்டி, ஊத்துக்குளி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பிறப்பு சான்றிதழ், போட்டோ, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
    • குழந்தையின் பிறப்புச்சான்றிதழ், பெற்றோர் ஆதார் இருந்தால் சில நிமிடங்களில் குழந்தைகளை போட்டோ எடுத்து விட்டு சென்று விடலாம்.

    திருப்பூர்:

    பிரிகேஜி, அங்கன்வாடி மையம் துவங்கி எல்.கே.ஜி., யு.கே.ஜி.,1-ம்வகுப்பு வரை குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதார் அட்டை அவசியமானதாகிறது.புதிய கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில் தன் மகன், மகளை பள்ளியில் சேர்க்கும் பணியில் பெற்றோர் ஆர்வமுடன் தயாராகியுள்ளனர்.அதற்காக, பிறப்பு சான்றிதழ், போட்டோ, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

    இதனால் திருப்பூர் மாவட்டத்தில் தபால் அலுவலகம், அரசு வங்கிகள், இசேவை மையம் போன்ற இடங்களில் மாணவ, மாணவிகளுக்கு வங்கிக்கணக்கு துவங்கவும், புதிய ஆதார் அட்டை பெறவும், ஆதாரில் திருத்தங்கள் செய்யவும் மக்கள் அலைமோதுகின்றனர்.

    இங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து, விண்ணப்பித்துச்செல்கின்றனர். குறிப்பாக, வருவாய்த்துறை அலுவலக இ-சேவை மையங்களில் இருப்பிட, சாதிச்சான்றிதழ் பெற முனைப்பு காட்டுகின்றனர்.

    இது குறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், குழந்தையின் பிறப்புச்சான்றிதழ், பெற்றோர் ஆதார் இருந்தால் சில நிமிடங்களில் குழந்தைகளை போட்டோ எடுத்து விட்டு சென்று விடலாம். விண்ணப்பித்ததும், மொபைலுக்கு வரும் எஸ்.எம்.எஸ்., லிங்க் போதுமானது.10 நாட்களில் ஆதார் வீடு தேடி வரும். இச்சேவை முற்றிலும் இலவசம் என்றனர்.

    • 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும், ஊதியம் தவிர வேறு எந்த சலுகையும் அனுபவிப்பதில்லை.
    • டெட் நிபந்தனை ஆசிரியர்கள் என எந்த சலுகையும் வழங்காமல் தொடர்ந்து புறக்கணிக்க ப்படுகிறோம்.

    தாராபுரம்:

    அரசு உதவிபெறும் பள்ளிகளில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் டெட் நிபந்தனை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 20-ந் தேதிக்கு மேல் தான் சம்பளம் வழங்கப்படுவதாக பலரும் புலம்புகின்றனர்.

    கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே, கற்பித்தல் பணிகளில் ஈடுபட முடியும் என 2009ல் மத்திய அரசு அறிவித்தது.ஆனால், இச்சட்டம் தமிழகத்தில் 2011ல் தான் அமலுக்கு வந்தது. இடைப்பட்ட காலத்தில், அரசுப்பணியில் சேர்ந்தவர்கள் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரினர்.சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரிவோர் டெட் தேர்வு எழுத தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    அரசுப்பள்ளிகளில் பணிபுரிவோருக்கும் விலக்கு அளிக்கப்பட்டு அதற்கு பதிலாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆனால் உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிவோர் மட்டும் டெட் தேர்வில் விலக்கு பெற முடியாமல் தவிக்கின்றனர்.இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தும், ஊதியம் தவிர வேறு எந்த சலுகையும் அனுபவிப்பதில்லை. மகப்பேறு விடுப்பு எடுக்கக்கூட கல்வித்துறை பரிந்துரைக்கவில்லை.

    இந்நிலையில் இவர்களுக்கான ஊதியமும் மாதந்தோறும், 20ந்தேதிக்கு மேல் வழங்குவதாக பலரும் புலம்புகின்றனர்.டெட் நிபந்தனை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், டெட் நிபந்தனை ஆசிரியர்கள் என எந்த சலுகையும் வழங்காமல் தொடர்ந்து புறக்கணிக்க ப்படுகிறோம். சம்பளமும் 20ந் தேதிக்கு மேல்தான் வருகிறது.

    உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரிவதால், நிர்வாகத்திடம் இதைப்பற்றி பேச முடியாது. அரசும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுகிறது. தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுத்தேர்வில் சென்டம் ரிசல்ட் தருகிறோம்.இதற்கு மேல் தகுதியை எப்படி நிரூபிப்பது என தெரியவில்லை.சொற்ப ஆசிரியர்களே, டெட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதால் எங்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றனர்.

    • நோய்த்தாக்குதல் பரவும் போது கட்டுப்படுத்த வழிகாட்டுதல் கிடைப்பதில்லை.
    • தமிழக அரசு பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை வாங்கவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கவும் சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    உடுமலை:

    உடுமலை பகுதிக்கு தேவையான பூக்கள் நிலக்கோட்டை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.முகூர்த்த சீசனின் போது தேவை அதிகரித்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து மக்கள் பாதிக்கின்றனர்.இந்நிலையில் குறிப்பிட்ட சில சீசன்களை இலக்கு வைத்து புங்கமுத்தூர், பாப்பனூத்து உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.

    சில இடங்களில் மல்லி, அரளி போன்ற சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். இருப்பினும், இச்சாகுபடியில் போதிய தொழில்நுட்ப வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. தேவையான விதை, நாற்றுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.நோய்த்தாக்குதல் பரவும் போது கட்டுப்படுத்த வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. எனவே பெரும்பாலானவர்கள் பூ சாகுபடியில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: -

    பூ சாகுபடியில் ஈடுபட ஆர்வம் இருந்தாலும் போதிய வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை, ராமநாதபுரம், நிலக்கோட்டை பகுதியில் இருந்து வாங்கி வருகிறோம். கோழிக்கொண்டை சாகுபடியில் நோய்த்தாக்குதலால் மகசூல் பாதிக்கிறது.எனவே உள்ளூர் தேவைக்கு தேவையான பூக்களை உற்பத்தி செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு தேவையான நாற்றுகளை வாங்கவும், தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கவும் சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு நிலையான வருவாய் கிடைக்கும். மக்களுக்கும் குறைந்த விலையில் பூக்கள் கிடைக்கும் என்றனர். 

    • மாலை 4 மணிக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜகா கார்டன் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
    • திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க இன்று வியாழக்கிழமை திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதி,ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வார்டு மற்றும் கிளை பகுதிகளில் பூத் கமிட்டி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும்கழக தலைமை நிலையச் செயலாளரும், சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.,வேலுமணிதலை மையிலும்எனது முன்னிலையிலும் கீழ்கண்ட இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    அதன்படி காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் காலை 10:30 மணிக்கு என்.எஸ்.என்.திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜகா கார்டன் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதன் பின்னர் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மாலை 6 மணிக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    அதுசமயம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அமைப்புச் செயலாளர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்,மாநில நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, பகுதி,ஒன்றிய,பேரூராட்சி,ஊராட்சி, வார்டு மற்றும் கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பூத் ஏஜெண்டுகள் மற்றும் உறுப்பினர்கள்,மகளிரணி நிர்வாகிகள், வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், தலைமை கழக பேச்சாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள்,பாசறை நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்கத்தினர்,கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • தோட்டம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் இருந்த வேப்ப மரத்தில், சண்முகம் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
    • லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 54) விவசாயி. இந்த நிலையில் நேற்று காலை வீடு அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன் லட்சுமணன், தந்தையைத் தேடிச் சென்றுள்ளார். அப்போது இவர்களின் தோட்டம் அருகே உள்ள சுடுகாடு பகுதியில் இருந்த வேப்ப மரத்தில், சண்முகம் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சண்முகத்தின் மகன் லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    • சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சோழீஸ்வரர்கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றிடம் கொண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர், ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம்-2023ஐ திரும்ப பெற வேண்டும்.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பரமசிவம்,லோகநாதன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023ஐ திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றிய தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிய 100 ஹெக்டேர் நிலங்கள் வரை, நீர் நிலைகள், நீர் வழித்தடங்கள் உட்பட தனியாருக்கு தாரைவார்க்க வழிவகுக்கும் தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம்-2023ஐ திரும்ப பெற வேண்டும்.

    ஒன்றிய அரசு எந்த ஆய்வும் செய்யாமல் ரேஷன் கடைகளிலும், ஊட்டச்சத்து மையங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை விளக்கி திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர். குமார், பல்லடம் ஒன்றிய செயலாளர் வை.பழனிசாமி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட தலைவர் கொளந்தசாமி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பரமசிவம் ஆகியோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பரமசிவம்,லோகநாதன் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்லடம் பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தவுடன் தூக்கம் கலைந்து திடீரென எழுந்தார்.
    • நடத்துனர் நாகராஜ், வேல்முருகனிடம் கேட்டபோது அவர் தெரியாமல் செய்து விட்டேன் என மன்னிப்பு கேட்டதாக கூறியதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பஸ் வந்தது. அந்த பஸ்ஸை சம்பத்குமார் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார். நாகராஜ் நடத்துனராக இருந்தார். இந்த நிலையில் அந்த பஸ்சில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்ற பெயிண்டர் பயணம் செய்தார். குடிபோதையில் தூங்கிய நிலையில் வந்தார்.பல்லடம் பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தவுடன் தூக்கம் கலைந்து திடீரென எழுந்தார். அப்போது அவர் அணிந்திருந்த கண் கண்ணாடி காணவில்லை என்று கூறப்படுகிறது.

    தேடிப் பார்த்த அவர் கண்ணாடி கிடைக்காததால், ஆத்திரத்தில் பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடியை கையால் ஓங்கி அடித்துள்ளார். இதில் கண்ணாடி உடைந்து சேதமானது. மேலும் வேல்முருகனின் கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து நடத்துனர் நாகராஜ், வேல்முருகனிடம் கேட்டபோது அவர் தெரியாமல் செய்து விட்டேன் என மன்னிப்பு கேட்டதாக கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பஸ் பல்லடம் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டது. போலீசார் விசாரணை செய்தனர். சேதமான கண்ணாடிக்கு இழப்பீடாக ரூ.500 வேல்முருகனிடம் வசூலிக்கப்பட்டது. பின்னர் போலீசார் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    ×