search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள்"

    • போலீசாரின் அறிக்கையை பரிசீலனை செய்த மாநில அரசு போன் ஹெட்செட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.
    • கட்டுப்பாடு காரணமாக இனி வாகனங்களில் செல்பவர்கள் ஸ்டைலாக ஹெட்செட் மாட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    வாகனங்களில் செல்பவர்கள் தற்போது ஹெட்செட், இயர்போன் போன்றவற்றை கழுத்தில் அணிந்தபடி அதிகளவில் செல்கின்றனர்.

    மேலும் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசிய படியும், கழுத்தில் போன் ஹெட் செட் மாட்டி பேசியபடி செல்லும்போது கவனம் சிதறி விபத்தில் சிக்குகின்றனர்.

    ஆந்திராவில் போன் ஹெட்செட் மாட்டி செல்வதால் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக போலீசார் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் மாநில அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

    அதன்படி இயர் போன், போன் ஹெட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை அதிகமாக விதிக்க வேண்டும்.

    இதன்மூலம் விபத்துக்களை குறைக்க முடியும் என தெரிவித்து இருந்தனர்.

    போலீசாரின் அறிக்கையை பரிசீலனை செய்த மாநில அரசு போன் ஹெட்செட் மாட்டி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்தனர்.

    வரும் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் கார், பைக், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் கழுத்தில் போன் ஹெட்செட், இயர் போன் மாட்டி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினாலோ அல்லது கழுத்தில் போன் ஹெட்செட் மாட்டி இருந்தாலும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நடைமுறை அமலுக்கு வந்த பிறகு விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த கட்டுப்பாடு காரணமாக இனி வாகனங்களில் செல்பவர்கள் ஸ்டைலாக ஹெட்செட் மாட்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    • மதுரையில் தூசி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.
    • சாலைகளில் அதிகளவில் மண் மற்றும் தூசி சேர்கிறது.

    மதுரை

    மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாலங்கள் அமைப்பது குறித்தும், மெட்ரோ திட்டம் செயல்படுத்துவது குறித்தும் திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மதுரை நகரின் முக்கிய சாலைகளில் மண்ணும், தூசியும் பறந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் சேரும் மண்ணை அகற்றும் பணிகளில் ஏற்படும் தாமதம் காரணமாக அதிகளவில் மண் சேர்ந்து காற்று அடிக்கும் போது மண்ணும் தூசியும் பறந்து வாகன ஓட்டிகளை கவனம் சிதற செய்கிறது.

    மதுரை சாலைகளில் கார்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் மண் சேர்கிறது. இந்த நிலையில் இவ்வாறு சேரும் மண்ணை அதிகாலை நேரத்திலேயே அகற்றி சாலையை தூய்மையாக பராமரிப்பதற்காக புதிய நவீன மண் அகற்றும் எந்திரங்களை வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த வாகனங்களை வாங்குவது தாமதமாகி வருகிறது.

    தற்போது மாநகராட்சி வசம் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்வ தற்காக 5 எந்திரங்கள் உள்ளன. ஆனால் 2 எந்திரங்கள் பழுதடைந்துள்ளன. 3 எந்திரங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த 3 எந்திரங்களை பயன்படுத்தி 5 மண்டல பகுதிகளிலும் உள்ள முக்கிய சாலைகளில் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் சாலைகள் மற்றும் சாலை தடுப்புகளின் ஓரங்களில் சேரும் மண்ணை அகற்றும் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் மண் அகற்றும் பணிகளை விரைவாக செய்து முடிக்க இயலாமல் சில பகுதிகளில் மண் அகற்ற முடியாமல் போகிறது.

    இதனால் அந்தப் பகுதிகளில் மேலும் மண் சேர்ந்து சாலைகள் தூசியாக காணப்படுகின்றன. அந்த சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது தூசி பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில், கண்களில் விழுகிறது. இதனால் அவர்கள் கவனம் சிதறி தடுமாறுகின்றனர்.

    மதுரையில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள ஆரப்பாளையம் - திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோடு, தேனி ரோடு, புதுஜெயில் ரோடு, சிம்மக்கல், அண்ணா பஸ் நிலையம், மாட்டுத்தாவணி ரோடு, புதூர் ரோடு, கே.கே.நகர், காமராசர் சாலை ஆகிய சாலைகளில் அதிகளவில் மண் மற்றும் தூசி சேர்கிறது.

    சில இடங்களில் குடிநீர் பைப்லைன் உள்ளிட்ட திட்டங்களுக்காக பள்ளம் தோண்டப்பட்டு அவை மூடப்பட்டு சரியாக சாலை அமைக்காமல் விடப்படுகிறது. அந்த சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதுடன் மண், தூசி சேர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்து பவையாக உள்ளன.

    இந்த நிலையில் மதுரை சாலைகளில் மண் அகற்றும் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு நவீன எந்திரங்களை விரைவாக வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், பள்ளம் தோண்டி மூடும் பகுதிகளில் சாலைகளை விரைவாக செப்பனிட வேண்டும் என்றும், மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக அடையாளப் படுத்தும் வகையில் சாலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகள் கடந்த 30-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி வரை தமிழக முழுவதும் கோப்பிங் ஆபரேஷன் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
    • சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி தலைமையில் 3 நாட்கள் இந்த ஆப்ரேஷன் நடைபெற்றது.

    சேலம்:

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. மற்றும் ஏ.டி.ஜி.பி. மாற்றப் பட்டதை அடுத்து புதிதாக பொறுப்பேற்ற அதிகாரிகள் கடந்த 30-ந் தேதி தொடங்கி 2-ந் தேதி வரை தமிழக முழுவதும் கோப்பிங் ஆபரேஷன் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

    அதன்படி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜய குமாரி தலைமையில் 3 நாட்கள் இந்த ஆப்ரேஷன் நடைபெற்றது. இதில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டி யது உட்பட பல்வேறு விதி மீறல் தொடர்பாக 8 ஆயி ரத்து 971 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. போதையில் வாக னம் ஓட்டிய 213 பேரிடம் வாக னம் பறிமுதல் செய்து அப ராதம் விதித்தனர். மாநகரில் உள்ள 824 ரவுடிகளில் 424 பேரை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

    • காற்றின் வேகத்தின் காரணமாக மரங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது
    • சுசீந்திரம் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

    இந்த நிலையில் மாவ ட்டம் முழுவதும் இன்று காலையில் சூறைக்காற்று வீசியது. நாகர்கோவில் புத்தேரி பகுதியில் வீசிய சூறைக்காற்றினால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். புத்தேரி குளத்தின்கரை பகுதியில் செல்லும் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் அவதிபட்டனர்.

    இதையடுத்து சில வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். பலரும் தங்களது இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் சாலையின் ஓரத்தில் நிறுத்தினர். காற்றின் வேகம் குறைந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    புத்தேரி குளத்தின்கரை பகுதியில் பழமை வாய்ந்த மரங்கள் உள்ளது. காற்றின் வேகத்தின் காரணமாக மரங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முன்னதாக அந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து ள்ளனர்.

    இதேபோல் சுசீந்திரம் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் காற்றில் பறந்தன. சூறைக்காற்றின் காரணமாக மணல்களும் காற்றில் புழுதியாக பறந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மரக்கிளைகள் பல்வேறு இடங்களில் முறிந்து விழுந்தது.

    அகஸ்தீஸ்வரம் ராஜாக்க மங்கலம் ஒன்றியத்து க்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப்பு றங்களிலும் இன்று காலை யில் சூறைக்காற்று வீசியது. கன்னியாகுமரி பகுதியில் வீசிய சூறைக்காற்றின் காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதேபோல் மேற்கு மாவட்ட பகுதிகளிலும் இன்று காலையில் சூறைக்காற்று வீசியது.

    • ரெயில்வேகேட் கிராசிங்கில் ஊழியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
    • ரெயில்வே கேட்டை திறக்க மறந்து தூங்கிவிட்டது அவருக்கு தெரிந்தது.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கத்தில் இருந்து வெங்கடேசபுரம் வழியாக பெருங்கருணை, கயப்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது.

    இந்த ரெயில்வேகேட் கிராசிங்கில் ஊழியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வழியே ரெயில்கள் வரும்போது ரெயில்வேகேட்டை பூட்டி விட்டு பின்னர் ரெயில் கடந்து சென்ற பின்னர் திறப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 6.45 மணிக்கு சென்னை நோக்கி சென்ற ரெயிலுக்காக ஊழியர் ஆனந்த் ரெயில்வே கேட்டை மூடினார். பின்னர் அவர் அங்குள்ள ஓய்வு அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டி தூங்கி விட்டார்.

    ரெயில் கடந்து சென்ற பின்னரும் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை 7 மணியை தாண்டியும் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள ரெயில்வே கேட் கீப்பர் அறைக்கு சென்று பார்த்த போது ஊழியர் ஆனந்த் குறட்டை விட்டு தூங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கதவை தட்டி ஆனந்தை தூக்கத்தில் இருந்து எழச்செய்தனர். இதன் பின்னரே ரெயில்வே கேட்டை திறக்க மறந்து தூங்கிவிட்டது அவருக்கு தெரிந்தது. பதறியடித்தபடி அவர் ரெயில்வே கேட்டை திறந்து விட்டார்.

    எனினும் கடும்கோபத்தில் இருந்த வாகன ஓட்டிகள் ஊழியர் ஆனந்த்திடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் கடந்த பின்னரும் ஊழியர் ஆனந்த் சுமார் 20 நிமிடம் ரெயில்வே கேட்டை திறக்காமல் இருந்திருப்பது தெரியவந்து உள்ளது. ரெயில் வரும் நேரத்தில் அவர், ரெயில்வே கேட்டை மூடாமல் இருந்து இருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அந்த பகுதியில் நாய்-குரங்குகள் தொல்லை அதிகமாக காணப்பட்டது.
    • திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருமங்கலக்குடியில் வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். அந்த பகுதியில் நாய்-குரங்குகள் தொல்லை அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வேகத்தடை அமைக்கக்கோரியும், நாய்-குரங்குகளை கட்டுப்படுத்தக்கோரியும் திருமங்கலக்குடியில் உள்ள கல்லணை பூம்புகார் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

    • படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
    • தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைவாக செல்லவும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கடந்த 2017 -ம் ஆண்டு சுமார் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆலத்தூர் ஊராட்சி வெங்கலேரி கிராமத்தில் இருந்து காலவாக்கம் தனியார் கல்லூரி வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் மற்றும் தையூர் ஊராட்சி செங்கன் மால் பகுதியில் இருந்து படூர் வரை சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 7½ கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டு இச்சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். இடையில் கொரோனா காலகட்டம், ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் இந்தப் புறவழிச் சாலை பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்தன. வெங்கலேரி முதல் காலவாக்கம் தனியார் கல்லூரி வரை 90 சதவீத பணிகள் நிறை வடைந்துள்ளன. இப்பணிகள் நிறைவு பெறும் முன்னே இச்சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்போரூர் நகரத்துக்குள் வராமல் இந்த புறவழிச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயண நேரம் குறைவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தையூர் செங்கண்மால் பகுதியில் இருந்து படூர் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைய உள்ள சாலையில் ஒரு மேம்பாலம் அமைகிறது.

    இதில் படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பாதி பணிகள் நடைபெறவில்லை. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தால் இப்பகுதியில் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு குறித்த நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைவர்.

    மந்தகதியில் நடைபெறும் திருப்போரூர், கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • லைசென்ஸ் பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.
    • சென்னையில் அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்சுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகம்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 145 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 14 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன.

    இங்கு கார் மற்றும் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர்.

    தினமும் ஒவ்வொரு அலுவலகத்திலும் சுமார் 100 பேர் லைசென்ஸ் பெற விண்ணப்பம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டு இதற்கான ஒதுக்கீடு நாள் ஒன்றுக்கு 50 ஆக குறைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

    இதற்கான பணியினை நிக் என்ற நிறுவனம் எழிலகத்தில் உள்ள கன்ட்ரோல் அறையில் இருந்து செய்து வருகிறது. ஒரு நாளைக்கு காருக்கு 15 நபர்களும், இருசக்கர வாகனங்களில் கியர் வாகனங்களுக்கு 20 நபர்களும் கியர் இல்லாத வாகனங்களுக்கு 15 நபர்களும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க செல்லும் போது ரெயில் டிக்கெட் போல் காலை 6 மணிக்கே முடிந்துவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏற்பட்ட இந்த பாதிப்பில் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து புகார் அதிகமாவதால் பூந்தமல்லி 80, மீனம்பாக்கம் 70 ஆகிய இடங்களில் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டதாக தெரிகிறது. சென்னையில் அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லைசென்சுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகம்.

    இந்த அலுவலகத்துக்குட்பட்டு 35 டிரைவிங் பயிற்சி பல்ளிகள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு 50 நபர்களுக்கே விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லைசென்ஸ் அப்பாயின்மெண்ட் கிடைக்காமல் ஏராளமான பொதுமக்கள் தினமும் ஏமாந்து செல்வது வாடிக்கையாகி வருகிறது.

    நான் டிரைவிங் பயிற்சி பெற்று எல்.எல்.ஆருக்கு விண்ணப்பித்து அதனுடைய கால அவகாசம் வரும் செவ்வாய் கிழமையுடன் முடிகிறது. பலமுறை ஆன்லைனில் விண்ணப்பித்தும் எனக்கு கிடைக்கவில்லை. என்னைப்போல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் அதிக பணத்தை பெற்றுக்கொண்டு ஆன்லைனில் ஒதுக்கீடு பெற்று கொடுக்கின்றனர். இப்பிரச்சினைக்கு அரசு தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊர் பெயர் பலகையில் திருமண வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது.
    • வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெளியூரில் இருந்து வருபவர்கள் பாபநாசம் வழியை அடையாளம் காணும் வகையில் நகரின் முக்கிய சாலைகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    பெயர் பலகையை மறைத்து கண்ணீர் அஞ்சலி, திருமண வாழ்த்து ஆகிய போஸ்டர்கள் ஒட்டப்படு வதால்அந்த வழியாக புதிதாக வரும் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் திண்டாடு கின்றனர்.

    மேலும் ஒரு சில இடங்களில் ஊர் பெயர் எழுத்துக்கள் அழிந்து காணப்படுவதோடுபெயர் பலகை கீழே விழுந்து கேட்பார் இன்றி காணப்படுகிறது.

    மேலும் இரவில் வரும் வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

    தொடர்ந்து ஒட்டப்படும் சுவரொட்டிகளால் ஊர் பெயர் பலகை விளம்பர பலகையாக மாறிவருகிறது.

    உடனடியாக விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்து அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
    • இந்த சாக்கடை நீரால் சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலை ஓரங்களில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து அண்ணா பூங்கா சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    சில மாதங்களுக்கு பிரதான சாலையான, அண்ணா பூங்கா சாலையின் ஓரத்தில் இருந்த நடைபாதை கடைகளை அகற்றிய நெடுஞ்சாலைத் துறையினர், சாலையின் இருபுறமும் நடைபாதை அமைத்தனர்.

    அப்போது, சாக்கடை, மழை நீர் செல்ல சரியான வழி அமைக்காததால்

    மழை பெய்யும் நேரங்களில் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. மேலும் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள சிறிய கடைகளும் தண்ணீரில் தத்தளிக்கும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

    மழை செல்லும் வழியை நடைபாதை அமைக்கும் போது அடைத்து விட்டதால், இங்கு தேங்கும் தண்ணீரில் துர்நாற்றம் வீசிகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர்.

    உடனடியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மழைநீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    • தெருநாய்கள் தொல்லையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்
    • இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினாலும், தெருநாய்கள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினாலும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • காந்தளூர், மறையூர், மூணார் பகுதிகளை சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன.
    • வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் நிலை தடுமாறி பழுதடையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    உடுமலை:

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக கேரள மாநிலம் மூணாறுக்கு செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக சுற்றுலா பயணிகள், வனப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் கேரளாவை சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் உடுமலை- மூணாறு சாலையில் எஸ் வளைவு பகுதியில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.அதை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், கேரளா மாநிலத்திற்கு செல்வதற்கு உடுமலை -மூணார் சாலை பெரிதும் உதவிகரமாக உள்ளது. அங்குள்ள காந்தளூர், மறையூர், மூணார் பகுதிகளை சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சூழலில் எஸ் வளைவுப் பகுதியில் நடு சாலையில் பள்ளம் போன்ற அமைப்பு ஏற்பட்டு உள்ளது.அதை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகனங்கள் வளைவு பகுதியில் திரும்ப முடியாமல் நிலை தடுமாறும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி உடுமலை- மூணாறு சாலையின் ஓரத்தில் மழை பெய்த போது பள்ளம் போன்ற அமைப்பு ஏற்பட்டது. அதையும் மண் கொட்டி சீரமைப்பதற்கு முன் வரவில்லை. இதனால் வாகனங்கள் விலகி செல்ல முடியாமல் நிலை தடுமாறி பழுதடையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே உடுமலை - மூணாறு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம் போன்ற அமைப்பை மண்ணை கொட்டி சீரமைப்பதற்கும் எஸ் வளைவு பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ×