search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூசி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    தூசி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி

    • மதுரையில் தூசி பறக்கும் சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.
    • சாலைகளில் அதிகளவில் மண் மற்றும் தூசி சேர்கிறது.

    மதுரை

    மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய பாலங்கள் அமைப்பது குறித்தும், மெட்ரோ திட்டம் செயல்படுத்துவது குறித்தும் திட்ட அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மதுரை நகரின் முக்கிய சாலைகளில் மண்ணும், தூசியும் பறந்து வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. சாலைகளில் சேரும் மண்ணை அகற்றும் பணிகளில் ஏற்படும் தாமதம் காரணமாக அதிகளவில் மண் சேர்ந்து காற்று அடிக்கும் போது மண்ணும் தூசியும் பறந்து வாகன ஓட்டிகளை கவனம் சிதற செய்கிறது.

    மதுரை சாலைகளில் கார்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் மண் சேர்கிறது. இந்த நிலையில் இவ்வாறு சேரும் மண்ணை அதிகாலை நேரத்திலேயே அகற்றி சாலையை தூய்மையாக பராமரிப்பதற்காக புதிய நவீன மண் அகற்றும் எந்திரங்களை வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் அந்த வாகனங்களை வாங்குவது தாமதமாகி வருகிறது.

    தற்போது மாநகராட்சி வசம் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்வ தற்காக 5 எந்திரங்கள் உள்ளன. ஆனால் 2 எந்திரங்கள் பழுதடைந்துள்ளன. 3 எந்திரங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த 3 எந்திரங்களை பயன்படுத்தி 5 மண்டல பகுதிகளிலும் உள்ள முக்கிய சாலைகளில் மண் அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் சாலைகள் மற்றும் சாலை தடுப்புகளின் ஓரங்களில் சேரும் மண்ணை அகற்றும் பணிகளை செய்து வருகின்றனர். இதனால் மண் அகற்றும் பணிகளை விரைவாக செய்து முடிக்க இயலாமல் சில பகுதிகளில் மண் அகற்ற முடியாமல் போகிறது.

    இதனால் அந்தப் பகுதிகளில் மேலும் மண் சேர்ந்து சாலைகள் தூசியாக காணப்படுகின்றன. அந்த சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது தூசி பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில், கண்களில் விழுகிறது. இதனால் அவர்கள் கவனம் சிதறி தடுமாறுகின்றனர்.

    மதுரையில் வாகனப் போக்குவரத்து அதிகமுள்ள ஆரப்பாளையம் - திருப்பரங்குன்றம் பைபாஸ் ரோடு, தேனி ரோடு, புதுஜெயில் ரோடு, சிம்மக்கல், அண்ணா பஸ் நிலையம், மாட்டுத்தாவணி ரோடு, புதூர் ரோடு, கே.கே.நகர், காமராசர் சாலை ஆகிய சாலைகளில் அதிகளவில் மண் மற்றும் தூசி சேர்கிறது.

    சில இடங்களில் குடிநீர் பைப்லைன் உள்ளிட்ட திட்டங்களுக்காக பள்ளம் தோண்டப்பட்டு அவை மூடப்பட்டு சரியாக சாலை அமைக்காமல் விடப்படுகிறது. அந்த சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதுடன் மண், தூசி சேர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்து பவையாக உள்ளன.

    இந்த நிலையில் மதுரை சாலைகளில் மண் அகற்றும் பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு நவீன எந்திரங்களை விரைவாக வாங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், பள்ளம் தோண்டி மூடும் பகுதிகளில் சாலைகளை விரைவாக செப்பனிட வேண்டும் என்றும், மதுரையை ஸ்மார்ட் சிட்டியாக அடையாளப் படுத்தும் வகையில் சாலைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×