search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை வெள்ளம்"

    • தமிழக முதலமைச்சர் மீண்டும் இந்த மாவட்டங்களுக்கு வர வேண்டும்.
    • வரலாற்றில் மிகப்பெரிய சேதத்தை இந்த மாவட்டங்கள் சந்தித்துள்ளன.

    நெல்லை:

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நெல்லை மாவட்டம் ராஜகோபாலபுரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளை வேகமாக சரி செய்ய வேண்டும். அரசின் தற்போதைய வேலையில் வேகம் வேண்டும். தமிழக முதலமைச்சர் மீண்டும் இந்த மாவட்டங்களுக்கு வர வேண்டும்.

    அப்போதுதான் வேலை வேகமாக நடக்கும். வெள்ளம் பாதித்து 6 நாட்கள் ஆகியும் பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு உணவு, தண்ணீர், குழந்தைகளுக்கு பால் உள்ளிட்டவை கிடைக்கவில்லை.

    நெல்லை நகரப் பகுதிக்குள் இந்த நிலைமை என்றால் கிராமங்களில் மக்களின் நிலை என்னவாக இருக்கும்?. அரசு அறிவித்துள்ள ரூ.6000 நிவாரணம் போதாது. 3 கட்டங்களாக சேர்த்து மொத்தம் ரூ.25,000 பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும்.

    கால்நடைகள் ஆயிரக்கணக்கில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதுவரை எவ்வளவு கால்நடைகள் இறந்துள்ளது என்ற கணக்கே இல்லை.

    இந்த பெரு வெள்ளத்திற்கு காரணம் தாமிரபரணி ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்தது தான். முதலில் 30 ஆயிரம் கன அடி என்றார்கள். அதன் பின்னர் 50,000 கன அடி என்றார்கள். அதன் பின்னர் ஒரு லட்சம் கன அடி திறந்து உள்ளதாக தெரிவித்தாலும் அதனை விட கூடுதலாகவே தண்ணீர் திறந்தனர்.


    இதன் காரணமாகவும், ஏற்கனவே ஆற்று படுகைகளில் ஆக்கிரமிப்பு காரணமாகவும் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் நகரத்துக்குள் வந்து விட்டது.

    இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்டவைகள் பாதிப்படைந்துள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய சேதத்தை இந்த மாவட்டங்கள் சந்தித்துள்ளன.

    ஒரு ஆண்டுக்கு பெய்ய வேண்டிய மழை காயல்பட்டினத்தில் ஒரே நாளில் பெய்துள்ளது. தூத்துக்குடியில் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இனி இது போன்ற நிலை ஏற்படாமல் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் மனநிலையும் மாற வேண்டும் ஒவ்வொரு முறையும் மழை வரும் போது இந்த நிலை தான் ஏற்படும் என்பதை உணர்ந்து அதற்கு முன்பாகவே பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் இடம் பெயரவேண்டும்.

    அரசு இலவச பொருள்களை கொடுத்து மக்களை ஏமாற்ற கூடாது. புதிதாக ஏரிகளை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெள்ள காலத்தில் கடலுக்கு நீர் செல்வதை தடுத்து ஏரிகள், குளங்களில் நிரப்பலாம்.

    ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளை போன்று மழை நீர் வடிகால்கள் அமைக்க வேண்டும். அடுத்த வெள்ளம் வருவதற்குள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாறுகால்கள் அமைக்க வேண்டும்.

    தாமிரபரணியை காக்க நான் 2 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்ட போது பார்த்தேன். பாபநாசத்தில் ஆரம்பித்து புன்னக்காயல் வரையிலும் ஆற்றை கெடுத்து வைத்திருக்கிறார்கள். வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக ஆளுநரும் நேரில் வந்து பார்க்க வேண்டும். மத்திய அரசுக்கு பாதிப்பின் தன்மை குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும்.

    தமிழக அரசு தற்போது நிவாரணமாக ரூ.2000 கோடி கேட்டுள்ளது. அதனை மத்திய அரசு கொடுப்பதில் தவறில்லை. இந்த நேரத்தில் கொடுக்காமல் வேறு எந்த நேரத்தில் மத்திய அரசு கொடுக்கப் போகிறது. இது போன்ற காலகட்டம் அரசுக்கும் மிகப்பெரிய சவால் தான். எனினும் மீட்பு பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் சீயோன் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கடலில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • எண்ணெய் கழிவு கலந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது எண்ணூர் கடல்பகுதியில் எண்ணெய் கழிவு கலந்தது. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளிலும் எண்ணெய் படலம் படர்ந்து பொது மக்களுக்கு பல்வேறு உடல் ரீதியான பிரச்சினையும் ஏற்பட்டது. எண்ணூர் முகத்துவார பகுதி மற்றும் கடலில் தேங்கி உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி இன்று காலை எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார்.

    அவர் எண்ணூர் சிவன் படை குப்பம், கமலாம்பாள் நகர் பகுதிகளில் எண்ணெய் கழிவு கலந்த இடத்தில் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    • மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும், பேரிடர் மீட்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆறு, குளங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    கோரம்பள்ளம் உள்ளிட்ட சில குளங்கள் உடைந்ததால் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சூழ்ந்தது.

    இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். 6-வது நாளாக இன்றும் வெள்ளம் அப்பகுதியில் சூழ்ந்து உள்ளதால் குடியிருப்பு வாசிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    எனவே அங்குள்ளவர்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்கள். வீடுகளை சுற்றி வெள்ளம் உள்ளதால் குடிநீருக்காக அவர்கள் பெரிதும் தவித்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    மாநகர பகுதியான முத்தையாபுரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஞானமுத்து, அவரது தாயார் ஞானம்மாள் மற்றும் உறவினர் குழந்தை என 3 பேரும், அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 பேர் உடல்களும் இன்று கண்டெடுக்கப்பட்டது.

    தொடர்ந்து மாநகர பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும், பேரிடர் மீட்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    எனினும் வெள்ள நீர் வடியாததால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இன்றும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    • பல தொழில் முனைவோர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
    • பீக் ஹவர் கட்டணங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்,

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தி.மு.க. அரசின் முதலமைச்சர், 2-வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தியதால், தமிழகத்தில் உள்ள தொழில் துறையும், ஜவுளித் துறையும் பெரும் சரிவை சந்தித்து வருகிறது என்றும், எனவே, மின் கட்டணங்களைக் குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    ஏற்கெனவே, தமிழகத்தில் மூலப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஆட்கள் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், தற்போது இரண்டாம் முறையாக மின் கட்டணத்தையும் உயர்த்தியதால், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் மூடப்பட்டு, பல தொழில் முனைவோர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

    தமிழகம் தொழிற்துறையில் தொடர்ந்து சிறந்து விளங்க வேண்டுமெனில், ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையையும், மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்படுவதையும் தடுக்கும் விதத்தில் மின் கட்டணங்களை முன்பிருந்தது போல், அதாவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்ததைப் போல் மாற்றி அமைக்க வலியுறுத்துகிறேன்.


    ஒரு அரசு வரி விதிக்கும் போதும், கட்டணங்களை உயர்த்தும் போதும், எப்படி பசுவிடம் இருந்து பசு அறியாமலேயே பால் கறக்கிறோமோ அதுபோல், தொழில் முனைவோர் பாதிப்படையாத வகையில், அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குறையாத நிலையில் செயல்பட வேண்டும். அளவுக்கு மீறி பசுவிடம் இருந்து பாலை உறிஞ்ச நினைத்தால், பசு ரத்தம் இன்றி மாண்டு போகக்கூடிய நிலை ஏற்படும். ஏனெனில், பசு தனது ரத்தத்தை பாலாக மக்களுக்கு வழங்குகிறது.

    அதுபோல், தொழில் முனைவோர்கள் தங்கள் முதலீடுக்கு நஷ்டம் இன்றி, தங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ப ஊதியம் வழங்க ஏதுவாக, அதே சமயத்தில், அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயை பெறக்கூடிய வகையில், சொத்து வரி உயர்வு, தொழில் வரி, மின் கட்டண உயர்வு போன்றவற்றை தொழில் முனைவோர்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய விதத்தில் விதிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

    பீக் ஹவர் கட்டணங்களை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், நிறுவனத்தின் மேற்கூரையில் வங்கிக் கடன் பெற்று சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்வதற்கு மின் வாரியம் யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.53 பைசா கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மொத்த மின்கட்டணத்தில் ஒன்றரை மடங்கு கட்டணத்தை முன்பணமாக ஏற்கெனவே மின் வாரியம் வசூலித்துள்ளது என்றும், இப்பணத்திற்கு அவர்கள் வங்கிகளில் 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று மின் வாரியத்திற்கு கட்டி உள்ளதாகவும், ஆனால் மின் வாரியம் 5.70 சதவீத வட்டி மட்டுமே வழங்குவதாகவும், இந்நிலையில் ஒரு கி.வாட்டுக்கு முன்பு இருந்த ரூ. 35/-கட்டணத்தை, 430 சதவீதம் உயர்த்தி ரூ. 153 என்று கட்டணம் விதித்து உள்ளதால், தொழிற்சாலைகள் மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய ஒன்றரை மடங்கு முன்பணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும்; எனவே, தொழில் முனைவோர்கள் வங்கிகளுக்கு அதிக வட்டி தரவேண்டி உள்ளதால், முன்பு இருந்தது போல் ஒரு கிலோ வாட்டுக்கு 35 ருபாய் மட்டுமே நிலைக் கட்டணமாக விதிக்க வலியுறுத்துவதாகவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தமிழ் நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையைக் காப்பற்ற இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வண்ணார்பேட்டையில் செல்லப் பாண்டியன் மேம்பாலம் அருகே உள்ள பணிமனைகளிலும் வெள்ளம் புகுந்தது.
    • சாலைகள் சரி செய்யப்பட்டவுடன் முழு அளவில் அங்கு பஸ்கள் இயக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நெல்லை வண்ணார்பேட்டையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் தாமிரபரணி போக்குவரத்து பணிமனை கடும் பாதிப்புக்குள்ளானது.

    இதேபோல் வண்ணார்பேட்டையில் செல்லப் பாண்டியன் மேம்பாலம் அருகே உள்ள பணிமனைகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் வெள்ளத்தில் சிக்கியது.

    மேலும் அங்குள்ள அலுவலக அறைகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் ஏராளமான ஆவணங்கள், உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் வெள்ளம் வடிந்ததை தொடர்ந்து சேதமடைந்த பஸ்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே மற்ற பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு குறைந்ததையடுத்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இன்று பஸ்கள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படுகிறது.

    இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பணிமனைகளை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் வெள்ளநீர் சுமார் 10 அடி உயரத்திற்கு நின்றுள்ளது. இதனால் பணிமனைக்குள் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இங்குள்ள நிர்வாக இயக்குனர் ரூ.10 கோடி அளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.

    கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் தற்போது 55 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகிறது. சாலைகள் சரி செய்யப்பட்டவுடன் முழு அளவில் அங்கு பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல கிராமங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் சூழ்ந்து நிற்கிறது.
    • குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    ஸ்ரீவைகுண்டம்:

    கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. தாமிரபரணி ஆற்றில் இன்னும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் குளங்கள் நிரம்பி உடைந்ததால் வெளியேறிய தண்ணீரால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இன்னும் இந்த பாதிப்பில் இருந்து முழுவதும் மீள முடியவில்லை.

    பல கிராமங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் சூழ்ந்து நிற்கிறது. குளங்களில் இருந்து வெளியேறிய தண்ணீர் வயல்வெளிகள் மற்றும் தாழ்வான இடங்களில் தேங்கி நிற்பதால் அதனை அகற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் மின்சார வினியோகம் சீராக வில்லை. இதனால் கடந்த 6 நாட்களாக கிராம மக்கள் இருளில் தவித்து வருகிறார்கள்.

    வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களில் இன்னும் சில பகுதிகளுக்கு அரசு அதிகாரிகளும், மீட்பு குழுவினரும் செல்ல முடியாத நிலையே நீடித்து வருகிறது.

    இதற்கிடையே தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆழ்வார் திருநகரியில் ஆற்றின் நடுவில் இருந்த உயர்அழுத்த மின்கம்பத்தை தண்ணீர் வாரி சுருட்டி சாய்த்தது. அந்த மின்கம்பத்தை மூழ்கடித்து தண்ணீர் சீறி பாய்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் அருகில் உள்ள ஆழ்வார்தோப்பு, கீழ ஆழ்வார் தோப்பு, சிவராம மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    மழை நின்று 5 நாட்கள் ஆகியும் இன்னும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறையவில்லை. இதனால் கடந்த 6 நாட்களாக கிராம மக்கள் தொடர்ந்து மின்சாரம் இன்றி இருளில் தவித்து வருகிறார்கள். மின்சாதன பொருட்கள், மின்மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    ஏற்கனவே செல்போன் நெட்வொர்க் இன்னும் சீராக இல்லாததால் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாமலும், வெளி உலக தொடர்பு இல்லாமலும் கிராமம் தனித் தீவாக மாறிவிட்டன. அவர்களால் அடிப்படை வசதிகள், நிவாரண பணிகள் மற்றும் தேவைகள் குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்க கூட முடியாத சூழ்நிலை உள்ளது.

    ஆழ்வார்தோப்பு கிராமத்தில் வசிக்கும் மக்கள் அங்குள்ள கோவிலில் இருக்கும் ஒரே ஒரு ஜெனரேட்டரை இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இயக்கி அதில் செல்போன்களை சார்ஜ் செய்து வருகின்றனர். மற்றபடி எந்த தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாமல் தினமும் இருளில் தவிக்கும் நிலையே நீடித்து வருகிறது. கிராமங்களை சுற்றி காடுகளில் இருந்த பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் மழை வெள்ளத்தின் காரணமாக வீடுகளுக்கு படையெடுத்து வருவதால் இரவில் அச்சத்துடன் இருக்கும் நிலையும் உள்ளது. இதனால் சிறுவர்கள், வயதானவர்கள் பயத்துடன் ஒவ்வொருநாள் இரவையும் கழித்து வருகின்றனர்.

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் முழுவதும் குறைய 15 நாட்களுக்கு மேலாகும் என்று தெரிகிறது. எனவே கிராமங்களுக்கு மின் சப்ளை வழங்க அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த 1992-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது தாமிரபரணி ஆற்றின் நடுவே இருந்த அந்த மின்கம்பம் சரிந்து இருந்தது. இதன் பின்னர் அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் அடுத்து வந்த ஆண்டுகளில் பெரிய அளவில் ஆற்றில் வெள்ளம் ஏற்படாததால் இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலை இருந்தது.

    இந்த நிலையில் தற்போது ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக மின்கம்பம் இருந்த இடமே தெரியாத அளவுக்கு தண்ணீரில் மூழ்கி உள்ளது. ஆழ்வார் திருநகரி-ஆழ்வார் தோப்பு இடையே புதிய மேம்பாலம் தாமிரபரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த பாலத்தை ஒட்டி பாதுகாப்பான முறையில் மின்கம்பம் அமைத்து மின்சப்ளை வேண்டும் அல்லது மாற்று வழியில் தற்காலிகமாக மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் உரிய ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறும் போது, தாமிரபரணி ஆற்றின் நடுவே இருந்த மின் கம்பம் மூழ்கி உள்ளதால் கிராமம் முழுவதும் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த 6 நாட்களாக இரவில் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறோம். கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரிகள் மாற்று வழி ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். இன்னும் எத்தனை நாட்கள் இதே போல் மின்சாரம் இல்லாமல் இருளில் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நாங்கள் தெரிவித்து உள்ளோம். ஆனால் தற்போது வரை எந்த உறுதியும் அவர்கள் கொடுக்கவில்லை. மின் இணைப்பு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம். மாவட்ட நிர்வாகமும், மின்வாரிய அதிகாரிகளும் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
    • கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் கோழிப்பண்ணை நடத்தி 5 ஆயிரம் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

    மேலும் கோழிப்பண்ணைக்கு கடந்த 2 நாட்களாக செல்ல முடியாத நிலையில் இன்று காலையில் மனோஜ்குமார் சென்று பார்த்தபோது அங்கு அனைத்து கோழிகளும் உயிரிழந்து துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மனோஜ் குமார் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் அப்பகுதியில் கிடங்கு தோண்டி இறந்த கோழிகள் அனைத்தையும் புதைத்துள்ளார். அதேபோல் சிலோன் காலனி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் சுமார் 7 ஆயிரம் கோழிகளும், கவர்னகிரியில் பொன்பெருமாள் என்பவர் நடத்தி வரும் கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன. இதுகுறித்து கோழி பண்ணை நடத்தி வருபவர்கள் கூறுகையில், வங்கிகளில் கடன் வாங்கி தொழிலை நடத்தி வந்த நிலையில் அதிக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோழிகள் அனைத்தும் உயிரிழந்தது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொகை பெற்று தந்தால் மட்டுமே மீண்டும் இத்தொழிலை செய்ய முடியும் என தெரிவித்தனர்.

    • கடந்த 17-ந் தேதி முதல் தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.
    • சென்னையில் இருந்து 5 நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த மிக கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதேபோல் தூத்துக்குடி ரெயில் நிலையம் மற்றும் ரயில்வே தண்டவாளங்களையும் மழை நீர் சூழந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 17-ந் தேதி முதல் தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ரெயில் நிலையம் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிய தொடங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது.

    அதேபோல் சென்னையில் இருந்து 5 நாட்களுக்குப் பின்பு முத்துநகர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடிக்கு ரெயில் நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தது. அப்போது முத்துநகர் எக்ஸ்பிரஸ் பயணிகள் கூறும்போது, தாங்கள் 5 நாட்களுக்குப் பிறகு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயில் மூலம் வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

    • தனித்தீவில் இருப்பதைப் போல தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
    • அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்துக்குமாராபுரம் கிராமத்தில், காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக சுமார் 150 மீட்டர் சாலை முற்றிலும் பெயர்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் தூத்துக்குடி, விளாத்திகுளம் செல்வதற்கு பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்வதாகவும், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர முடியாத மோசமான சூழ்நிலை இருப்பதால் தனித்தீவில் இருப்பதைப் போல தவிப்பதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    அதுமட்டுமின்றி, காட்டாற்று வெள்ளத்தினால் சாலை அடித்துச் செல்லப்பட்டு 4 நாட்கள் ஆகியும் தற்போது வரை அரசு அதிகாரிகள் யாரும் வந்து இதனை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

    எனவே சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் அவரச மருத்துவத் தேவைக்குக்கூட தூத்துக்குடி, விளாத்திகுளம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் முத்துக்குமாரபுரம் மக்களின் நலன் கருதி உடனடியாக சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும்.
    • கால்நடைகளை கணக்கீடு செய்து அவற்றிற்கான இழப்பீட்டு தொகையையும் அரசு வழங்க வேண்டும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தென்மாவட்டங்களில் பெய்த கொடூர மழையால் தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உடுத்த துணி தவிர மாற்று துணிகளுக்கு வழி இல்லாத நிலைமையை வெள்ளம் உருவாக்கியது. இந்த நிலையில் இருந்து மீண்டும் முந்தைய நிலைமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

    வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடும்ப அட்டைகள் மூலம் தலா 20 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கிடவேண்டும்.

    தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்டும் வகையில் அரசு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் வழங்கவும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கால்நடைகளை கணக்கீடு செய்து அவற்றிற்கான இழப்பீட்டு தொகையையும் அரசு வழங்க வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிவாரணப் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது.
    • மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், அவை பெருமளவில் சேதமடைந்துள்ளன. வெள்ளம் காரணமாக விவசாயிகள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல், விளைபொருட்கள் அழிந்துவிட்டன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.

    எனவே, தயவு செய்து மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்ய ஆய்வுக் குழுவை அனுப்பவும், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி மற்றும் நிவாரணங்களை வழங்கவும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி, விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.
    • எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    மிச்சாங் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் கழிவு பரவியது. கடலில் மிதந்து வரும் இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணி இன்னும் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே இந்த எண்ணெய் கழிவு பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைர வன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கும் பரவியது.

    ஏராளமான மீன்களும் இறந்து கரை ஒதுங்கின. இதுபற்றி அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து கடலில் மிதந்து வரும் எண்ணெய் கழிவு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் கடல் நீரின் தன்மையை அறிய தண்ணீரை பரிசோதனைக்கும் அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையே திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி லிவிங்ஸ்டன் மற்றும் வருவாய்த்துறை, மீன்வளத்துறை அலுவலர்கள் நேரடியாக வந்து பழவேற்காடு கடல் பகுதி, பக்கிங்காம் கால்வாய் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ., மீஞ்சூர் ஒன்றியக் குழு சேர்மன்ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் பிரபு சங்கர் கூறும்போது, பழவேற்காடு கடல்பகுதியில் ஒதுங்கிய எண்ணெய் கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தற்போது இங்குள்ள மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் முடிவு வந்த பின்னர் மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

    ஆய்வின் போது பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கெத் பல்வந்த், வட்டாட்சியர் மதிவாணன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன், ஊராட்சி மன்ற தலைவர் ஞானவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மிச்சாங் புயல் எச்சரிக்கையில் இருந்தே கடந்த 20 நாட்களுக்கு மேலாக பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    ×