என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது- அமைச்சர் சிவசங்கர்
- வண்ணார்பேட்டையில் செல்லப் பாண்டியன் மேம்பாலம் அருகே உள்ள பணிமனைகளிலும் வெள்ளம் புகுந்தது.
- சாலைகள் சரி செய்யப்பட்டவுடன் முழு அளவில் அங்கு பஸ்கள் இயக்கப்படும்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் நெல்லை வண்ணார்பேட்டையில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் தாமிரபரணி போக்குவரத்து பணிமனை கடும் பாதிப்புக்குள்ளானது.
இதேபோல் வண்ணார்பேட்டையில் செல்லப் பாண்டியன் மேம்பாலம் அருகே உள்ள பணிமனைகளிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்கள் வெள்ளத்தில் சிக்கியது.
மேலும் அங்குள்ள அலுவலக அறைகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் ஏராளமான ஆவணங்கள், உபகரணங்கள் சேதமடைந்த நிலையில் வெள்ளம் வடிந்ததை தொடர்ந்து சேதமடைந்த பஸ்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மற்ற பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு குறைந்ததையடுத்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இன்று பஸ்கள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பணிமனைகளை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் வெள்ளநீர் சுமார் 10 அடி உயரத்திற்கு நின்றுள்ளது. இதனால் பணிமனைக்குள் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இங்குள்ள நிர்வாக இயக்குனர் ரூ.10 கோடி அளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிதி ஒதுக்கப்படும்.
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டத்தில் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளதால் தற்போது 55 சதவீதம் பஸ்கள் இயக்கப்படுகிறது. சாலைகள் சரி செய்யப்பட்டவுடன் முழு அளவில் அங்கு பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






