search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பறிப்பு"

    • மூர்த்தியிடம் ரூ.500 பணத்தை பறித்து மிரட்டி சென்றனர்.
    • மூர்த்தி சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சரவணம்பட்டி,

    கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி(51). இவர் சத்தி-விளாங்குறிச்சி ரோட்டில் டிபன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம்போல வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 4 பேர் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி மூர்த்தியிடம் ரூ.500 பணத்தை பறித்து மிரட்டி சென்றனர்.

    இதுகுறித்து அவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், டிபன் கடைக்காரரிடம் கத்தி முனையில் பணம் பறித்தது கணபதி மோர் மார்க்கெட்டை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(18), 16 மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

    • மின்சார ரெயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்தார்.
    • ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம்கேட்டு மிரட்டினர்.

    தாம்பரம்:

    சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். (40). இவர், நேற்று காலில் சிகிச்சை பெறுவதற்காக ஒமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவற்காக சென்ட்ரலில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரெயிலில் ஊனமுற்றோருக்கான பெட்டியில் பயணம் செய்தார்.

    தாம்பரம் சானட்டோரியம் அருகே ரெயிலில் ஏறிய 4 மர்ம நபர்கள் ஜீவானந்தத்திடம் கத்திமுனையில் பணம்கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்று கூறியதால் கூகுள் பே மூலம் ரூ.1400 பெற்றனர். பின்னர் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் மெதுவாக சென்றபோது கொள்ளையர்கள் 4 பேரும் குதித்து தப்பி சென்றுவிட்டனர்.

    • விவசாயிடம் ரூ.35 லட்சம் பணம் பறிப்பு வழக்கில் தலைமறைவாக இருக்கும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்
    • கண்காணிப்பு கேமிரா உதவிகளை கொண்டு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி,

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 67). விவசாயி. இவருக்கு தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பண்பட்டியை சேர்ந்த பாண்டி (50) என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் சிவாஜியிடம், பாண்டி ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்ற நபரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன. ரூ.35 லட்சம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்குவதாக பாண்டி தெரிவித்துள்ளார்.

    இதனை நம்பிய சிவாஜி நமக்கு மேலும் ரூ.15 லட்சம் கமிஷனாக கிடைப்பதாக நம்பி ரூ.35 லட்சத்தை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு உறவினர்கள் செந்தில், மாதேஷ் குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தடைந்தார். இதனையடுத்து லக்காபுரம் வந்தவுடன் ராஜ்குமார் என்பவருக்கு சிவாஜிக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜ்குமார் 2 நபர்களுடன் வந்து சிவாஜியை சந்தித்து பணம் தருவதாக கூறி தனது காரில் சிவாஜியையும், உறவினர்கள் 2 பேரையும் ஏற்றிக்கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார்.

    கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே வந்த காரில் இருந்த 4 நபர்கள் ராஜ்குமாரின் காரை வழிமறித்து நாங்கள் அரசு அதிகாரிகள் எனக்கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் உறவினர்கள் 2 பேரையும் கீழே இறக்கி விட்டனர். இதனையடுத்து ராஜ்குமார் காரில் வைத்திருந்த ரூ.35 லட்சம் பணத்தோடு அந்த 7 பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த சிவாஜி எனது பணம் ரூ.35 லட்சத்தை மீட்டு தருமாறு மொடக்குறிச்சி போலீசில் சம்பவத்தன்று இரவு புகார் அளித்தார்.

    புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வட்டாரத்தில் கூறியதாவது:- விவசாயிடம் பணம் பறித்த கார் கொள்ளையர்கள் குறித்து புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வருகிறோம். செல்போன் எண்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமிரா உதவிகளை கொண்டும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதுவரை நடந்த ஆய்வுகளின் அடிப்படையில் துப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    • பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சரவணக்குமார் (வயது 48). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் தனது குடும்பத்துடன் பாரதி நகரில் வசித்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ கால் வந்தது. அதனை சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆன் செய்தபோது எதிர்முனையில் இருந்து யாரும் பேசவில்லை. அதன் பிறகு சில மணி நேரங்கள் கழித்து வீடியோ கால் பதிவு செய்து அதனுடன் பெண் ஒருவர் செக்சியாக பேசுவது போன்ற தவறாக சித்தரித்து வீடியோவை அவரது செல்போனுக்கு அனுப்பினர்.

    அதன் பிறகு பேசிய ஒரு மர்ம நபர் பணம் கொடுக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் பணத்தை அனுப்பினார். அதன் பிறகு இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தேனி சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏ.விடம் பேசிய செல்போன் எண், பணம் செலுத்தப்பட்ட வங்கி கணக்கு எண் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உண்மையிலேயே வீடியோ அனுப்பியது பெண்ணா அல்லது வேறு யாருமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பெரியகுளம் எம்.எல்.ஏ.விடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது அவர் உரிய பதிலளிக்க மறுத்து விட்டார்.

    • மோட்டார் சைக்கிளில் இருந்த பையை பறித்து சென்றனர். ஆனால் அதில் பணத்திற்கு பதில் தக்காளிகள் இருந்தது.
    • ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தக்காளி பையை வீசிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எஸ்.வி.புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 44). இவர் மொடக்குபட்டி-தளிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 1-ந்தேதி இரவு 10.30 மணிக்கு ஜெய்பிரகாஷ் வேலையை முடித்துக்கொண்டு தன்னுடன் வேலை பார்க்கும் விற்பனையாளர் சரவணன் என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ஆனைமலை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    இவர்களது வாகனம் தளி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது இவர்களது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த கார் ஜெயப்பிரகாஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அந்தக்காரில் வந்த முககவசம் அணிந்த மர்ம ஆசாமிகள் மது விற்ற பணத்தை கொடுங்கடா என்று பீர்பாட்டில் மற்றும் அரிவாளை காட்டி மிரட்டியதுடன் , மோட்டார் சைக்கிளில் இருந்த பையை பறித்து சென்றனர். ஆனால் அதில் பணத்திற்கு பதில் தக்காளிகள் இருந்தது.

    இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தக்காளி பையை வீசிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.இது குறித்து ஜெயப்பிரகாஷ் தளி போலீசில் புகார் செய்தார்.

    அதைத்தொடர்ந்து உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன், தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த சூழலில் டாஸ்மாக் பணியாளரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற தேனி மாவட்டம் வீரபாண்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது28), மடத்துக்குளம் தாலுகா பாப்பான்குளத்தை சேர்ந்த வீரமுத்து (24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பெண் ஆசையால் வாலிபர் கொடுக்கப்பட்டிருந்த லிங்கை க்ளிக் சென்றுள்ளார்.
    • கட்டணம் செலுத்திய பிறகு அது மோசடி என்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இணையவழி மூலம் வேலை வாங்கி தருவதாகவும், கடன் வாங்கி தருவதாகவும் மர்ம நபர்கள் பணத்தை மோசடி செய்து வருகின்றனர்.

    இதில் புதுச்சேரியை சேர்ந்த பலரும் சிக்கி தவிக்கின்றனர். சைபர் கிரைம் போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை. இதனிடையே இணையவழி மோசடிக்காரர்கள் தற்போது பெண் ஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து ரசித்து வந்துள்ளார். அப்போது அவரது செல்போனில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் ஆன்லைனில் அழகிய பெண்களிடம் பேசலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    பெண் ஆசையால் அந்த வாலிபர் அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கில் சென்றுள்ளார். அப்போது அதில் கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    கட்டணம் செலுத்தி சென்ற பிறகு அது மோசடி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது அக்கவுண்டில் இருந்த பணமும் எடுக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து அந்த வாலிபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இதேபோல் ஒரே நாளில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம், வெளிநாட்டில் வேலை, கொரியரில் பொருட்கள் வந்துள்ளது. பான்கார்டு அப்டேட் என கூறி புதுச்சேரியை சேர்ந்த 9 பேரிடம் சுமார் ரூ 6 லட்சத்து 82 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இணைய வழியில் அதிக லாப முதலீடுகள், வேலைவாய்ப்பு அல்லது வங்கிகளில் இருந்து, கொரியர்களில் இருந்து வரும் அழைப்புகளை உறுதி செய்யாமல் ஏற்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • ராகுல்ராஜ் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் பிரபல தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் அதே பகுதியை சேர்ந்த ராகுல்ராஜ் (20) தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தங்களின் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியிருந்த புள்ளலூர் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரை சந்திப்பதற்காக பரந்தூர் சென்று விட்டு அங்கிருந்து தனது நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார்.

    புள்ளலூரில் வாடிக்கையாளர் இல்லாததால் மீண்டும் பரந்தூர் வந்து நண்பரை விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் சிறுவாக்கம் பகுதியில் வழிமறித்து தாக்கிவிட்டு அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து ராகுல்ராஜ் காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வினோத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த போதை பொருள் பயன்படுத்தும் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • பயந்துபோன வினோத்தின் தந்தை வங்கி மூலமாக ரூ.1.90 லட்சம் அனுப்பி வைத்து உள்ளார்.

    சென்னை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் வினோத் வனாஸ்வர். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்தார். அங்கு படிப்பை முடித்து விட்டு தமிழகத்துக்கு திரும்பிய வினோத் பழைய பல்லாவரத்தில் தங்கியுள்ளார். தற்போது மருத்துவ தேர்வுக்கான படிப்பை அவர் மேற்கொண்டு வருகிறார்.

    வினோத்துக்கு, அதே பகுதியை சேர்ந்த போதை பொருள் பயன்படுத்தும் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி வினோத்துக்கு ஏற்கனவே அறிமுகமான சங்கர் என்பவர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் போல நடித்து கடத்த திட்டமிட்டார். இதன்படி சங்கரும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து வினோத்தை டீ குடிக்க அழைத்துள்ளனர்.

    அப்போது திடீரென 2 பேர் சேர்ந்து வினோத்தை காரில் தூக்கி போட்டு கடத்திச் சென்றனர். அவர்கள் நாங்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் என்று கூறி ஏமாற்றியுள்ளனர்.

    மருத்துவ மாணவனான வினோத்தின் தந்தைக்கு போன் செய்து உங்கள் மகனை கைது செய்துள்ளோம். சிறைக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.8 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளனர்.

    இதனால் பயந்துபோன வினோத்தின் தந்தை வங்கி மூலமாக ரூ.1.90 லட்சம் அனுப்பி வைத்து உள்ளார். இந்த பணத்தை பறித்துக் கொண்ட 2 பேரும் 5 பவுன் செயின் மற்றும் ஒரு பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு மாணவர் வினோத்தை காரில் இறக்கி விட்டு தப்பினார்கள்.

    இதுபற்றிய புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவ மாணவரை கடத்திய வழக்கில் சங்கர் மற்றும் காரில் கடத்திய சிவா, பாஸ்கர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

    கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஸ்ரீதத் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • நகை வியாபாரியிடம் பணம் பறித்த கும்பல் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
    • குட்டி, மீனா, பாண்டியன், அழகர்சாமி, சவுமியன், கவாஸ்கர் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது44). இவர் தங்க நகை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். பிரகாசுக்கு வங்கி மேலாளர் ஒருவரின் மூலமாக பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்பவர் அறிமும் ஆனார்.குட்டி தன்னை ரியல் எஸ்டேட் செய்து வருவதாக பிரகாஷிடம் அறிமுகப்படுத்தி கொண்டார்.

    சம்பவத்தன்று பிரகாஷை குட்டி செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது, தனக்கு தெரிந்த நபரிடம் ரூ.1 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளது.அதனை தங்க நகை விற்பனை தொழிலில் கைமாற்றி விட்டு விட்டு, உங்களுக்கான கமிஷனை எடுத்து கொண்டு, ரூ.85 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை மட்டும் திரும்ப தந்தால் போதும் என தெரிவித்தார்.

    கூடுதலாக 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தாலும், அதை விட அதிக தொகைக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தருவதாகவும் கூறினார். இதற்கு பிரகாசும் மாற்றி தருவதாக ஒப்புக்கொண்டார். மேலும் பணத்தை பொள்ளாச்சியில் மாற்றிக்கொள்ளலாம் என திட்டமிட்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று மாலை பிரகாஷ் தனது டிரைவர் மற்றும் வங்கி மேலாளருடன் தனது காரில் தன்னிடம் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்த ரூ.1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து கொண்டு பொள்ளாச்சிக்கு சென்றார். அங்கு குட்டி மற்றொரு காரில் வந்தார். அந்த காரில் அவருடன் பெண் உள்பட 2 பேர் இருந்தனர்.

    காரை விட்டு இறங்கிய குட்டி, இவர்களிடம் தான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளது. அவர்கள் அம்பாரம்பாளையத்தில் நிற்பார்கள். அங்கு சென்று மாற்றி கொள்ளலாம் என பிரகாஷிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றனர். அங்கு ஏற்கனவே காத்திருந்த 2 பேருடன் மேலும் 4 பேர் இருந்தனர்.

    அவர்களிடம் 500 ரூபாய் நோட்டுகளை காட்டும்படி பிரகாஷிடம் குட்டி தெரிவித்தார். அவரும் பணத்தை காட்டினார். அப்போது திடீரென பணத்தை மாற்ற வந்த கும்பல், பிரகாஷ் மற்றும் அவருடன் வந்த டிரைவர் ஆகியோரை தாக்கி விட்டு அவரிடம் இருந்து ரூ.1¼ கோடி பணத்தை பறித்து விட்டு காரில் தப்பினர்.

    இதுகுறித்து பிரகாஷ் ஆனைமலை போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை வியாபாரியிடம் பணம் பறித்த கும்பல் யார் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், நகை வியாபாரியிடம் பணம் பறித்தது பொள்ளாச்சியை சேர்ந்த குட்டி என்ற சின்னகுட்டி (43) மற்றும் அவரது கூட்டாளிகளான திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த மீனா (38), தேனி பெரியகுளத்தை சேர்ந்த பாண்டியன் (52), தேவதாசன்பட்டி அழகர்சாமி (45), மதுரையை சேர்ந்த சவுமியன் (29), கவாஸ்கர் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதில் குட்டி இவர்களுக்கு தலைவனாக செயல்பட்டுள்ளார். இவர் தான், தங்க நகை வியாபாரியான பிரகாஷிடம் அதிக பணம் இருப்பதை அறிந்து அதனை பறிக்க திட்டம் தீட்டியுள்ளார்.

    அதன்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி தாருங்கள் என கேட்டு, அவரிடம் உள்ள பணத்தை பறித்து விடலாம் என கூறியுள்ளார். இதற்கு அவர்களும் சம்மதித்தனர். அதன்படி பிரகாசை வரவழைத்து, பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதியில் பதுங்கி இருந்த குட்டி, மீனா, பாண்டியன், அழகர்சாமி, சவுமியன், கவாஸ்கர் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் இவர்களை தவிர வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், பூச்சி ராஜேஷ் ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமார், ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை பஸ் டிப்போ மற்றும் சேணிஅம்மன் கோவில் அருகில் வண்டியில் காய்கறி கடை நடத்தி வரும் வியாபாரிகளிடம் புது வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், பூச்சி ராஜேஷ் ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன் குமார், ராஜேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    • கார்முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஸ்ரீராமை வெட்டியதுடன் அவரை தாக்கினர்.
    • இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள விநாயக மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே காடகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 21). சம்பவத்தன்று இவர் தனது வீட்டிலிருந்து திருக்கோவிலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரசவத்தி ற்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.திருக்கோவிலூர் -விழுப்புரம் சாலை காடகனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வடகரை தாழனூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த கார்முகிலன், விநாயகமூர்த்தி ஆகிய 2 பேரும் ஸ்ரீராம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். இதனையடுத்து கார்முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஸ்ரீராமை வெட்டியதுடன் அவரை தாக்கினர். மேலும் ஸ்ரீராம் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூபாய் 1000 பணத்தை திருடிச் சென்றனர்.

    இது குறித்து ஸ்ரீராம் அரங்கண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கார்முகிலன் மற்றும் விநாயகமூர்த்தி ஆகியோரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூருக்கு தப்ப முயன்ற கார்முகிலனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்முகிலன் மீது அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள விநாயக மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • அவனியாபுரத்தில் கத்தியை காட்டி பணம் 2 பேர் பறித்தனர்.
    • கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    அவனியாபுரம்

    ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்தவர் சத்திய நாராயணன். இவர் மாநகராட்சி காலனி-அவனியாபுரம் சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்தார்‌. அப்போது அடையாளம் தெரியாத 2 பேர் சத்தியநாராயணனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்து 350-ஐ பறித்து தப்பினர்.

    இதுகுறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் சத்தியநாராயணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட சிலைமான் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற கிரி, கல்மேடு பகுதியைச் சேர்ந்த அதீஸ்வரன் ஆகிேயாரை கைது செய்தனர்.

    வில்லாபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் பிரபு (22). இவர் அவனியாபுரம் அம்பேத்கர் தெரு சந்திப்பில் சென்றபோது சக்கிமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற ஆசாரி மணி (27), சிவகங்கை மாவட்டம் பெரிய சிலைமானை சேர்ந்த சண்முகம் மகன் தினகரன் என்ற தீனா (20) ஆகியோர் கத்திமுனையில் மிரட்டி பிரபுவிடம் இருந்து ரூ1000-த்தை வழிப்பறி செய்து தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மணிகண்டன் என்ற ஆசாரி மணி, தினகரன் என்ற தீனா இருவரையும் கைது செய்தனர்.

    ×