search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதின் கட்கரி"

    • உத்தர பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்டப்பணிகள் நடைபெறும் என நிதின் கட்கரி கூறினார்.
    • 2024-ம் ஆண்டுக்குள் உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலைகள் அமைக்கப்படும்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி, முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி பேசியதாவது:

    வரும் 2024-ம் ஆண்டு முடிவதற்குள் உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையான சாலை உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

    இதற்காக, உத்தர பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும். அரசாங்கத்திடம் தரமுள்ள சாலைகளை அமைப்பதற்கு பண பற்றாக்குறை இல்லை.

    உத்தர பிரதேச மாநிலத்தை பொருத்தவரை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் சாலை கட்டுமானத்திற்குத் தேவையான பொருட்களை பயன்படுத்துவதே, தற்போதைய காலத்தின் தேவை ஆகும். பொருளாதாரத்துடன், சுற்றுச்சூழலிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    • விபத்து விகிதம் அதிகரிப்பதற்கான மிக முக்கியக் காரணம் சாலையின் தவறான வடிவமைப்பு தான்.
    • தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் கடந்த 2011 முதல் 2022 வரையிலான 11 ஆண்டுகளில் மட்டும் 1036 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சென்னை:

    மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், சேலம்-உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணியை கட்டி, இயக்கி, ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் இன்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ. 941 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றி 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் போக்குவரத்துக்கு திறந்து விட்டது.

    இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த சாலையில் 97.37 கி.மீ நான்கு வழிச்சாலை. மீதமுள்ள 38.99 கி.மீ நீள நெடுஞ்சாலை இருவழிச்சாலை ஆகும்.

    இந்த நெடுஞ்சாலையில் மொத்தம் 8 இடங்களில், அதாவது உடையாப்பட்டி (6.40 கி.மீ), வாழப்பாடி(4.62 கி.மீ), நரசிங்கபுரம் மற்றும் ஆத்தூர் (7.20 கி.மீ), சின்னசேலம் (4.60 கி.மீ), கள்ளக்குறிச்சி (5.10 கி.மீ), தியாகதுருகம் (3.90 கி.மீ), எலவனாசூர்கோட்டை (4.கி.மீ), உளுந்தூர்பேட்டை (2.57 கி.மீ) ஆகிய இடங்களில் இரு வழி புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டன.

    2014-ம் ஆண்டில் தனியார் ஆலோசனை நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட சுதந்திரமான ஆய்வில், மேட்டுப்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியின் வழியாக ஒவ்வொரு மாதமும் இரு சக்கர ஊர்திகளை சேர்க்காமல் சுமார் 2 லட்சம் வாகனங்கள் இந்த சாலையில் பயணிப்பதாக தெரிய வந்தது. நடப்பு 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும்.

    ஆனால், 8 இடங்களில் உள்ள புறவழிச்சாலைகளும் இரு வழிச்சாலைகளாகவே இருப்பதால், 4 வழிச்சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், புறவழிச்சாலை மட்டும் இருவழிச் சாலையாக இருப்பதை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. அதனால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

    இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட, இரவு நேரத்தில் பிரகாசமான ஒளிரும் விளக்குகள் இல்லாமை, சாலைத் தடுப்புகளின் இடைவெளியிலும், சந்திப்புகளிலும் சூரிய ஒளியில் இயங்கும் மினுமினுப்பான்கள் அமைக்கப்படாமை, நான்கு வழிச்சாலைகள் இருவழிச்சாலைகளாக குறுகும் இடங்களில் பிரதிபலிப்பான்கள் இல்லாமை ஆகியவை தான் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கான முதன்மைக் காரணம் ஆகும்.

    விபத்து விகிதம் அதிகரிப்பதற்கான மிக முக்கியக் காரணம் சாலையின் தவறான வடிவமைப்பு தான். எடுத்துக்காட்டாக, நெடுஞ்சாலை திடீரென நான்கு வழிச்சாலையிலிருந்து இருவழிச் சாலையாக மாறுவதால், நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் இரு வழிச்சாலையிலும் அதே வேகத்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் கடந்த 2011 முதல் 2022 வரையிலான 11 ஆண்டுகளில் மட்டும் 1036 பேர் உயிரிழந்துள்ளனர்.

    8 இடங்களிலும் இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீண்டும், மீண்டும் கோரிக்கை விடுத்தும் கூட, அதன் மீது ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

    எனவே, தேசிய நெடுஞ்சாலை எண் 79-ல் சேலம்-உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் 8 இடங்களில் உள்ள இருவழி புறவழிச்சாலைகளையும் 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேன்டும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் என்ற முறையில் தாங்கள் ஆணையிட வேண்டும்; அதன்மூலம் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பா.ஜனதா கட்சியின் முக்கிய குழுக்களில் இருந்து நிதின் கட்காரி சமீபத்தில் நீக்கப்பட்டார்.
    • காங்கிரசின் சித்தாந்தம் தனக்கு பிடிக்கவில்லை.

    நாக்பூர் :

    பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'நான் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தால், சிறந்த அரசியல் எதிர்காலம் கொண்ட நல்ல மனிதராக இருப்பேன் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் ஜிச்கார் ஒருமுறை என்னிடம் தெரிவித்தார். ஆனால் நான் அவரிடம், காங்கிரசில் இணைவதை விட கிணற்றில் குதிப்பேன் என்று பதிலளித்தேன்' என தெரிவித்தார்.

    காங்கிரசின் சித்தாந்தம் தனக்கு பிடிக்கவில்லை எனக்கூறிய கட்காரி, நல்லதோ, கெட்டதோ, ஒரே சித்தாந்தத்தில் ஒருவர் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். உங்களிடம் நேர்மறை, தன்னம்பிக்கை இருக்க வேண்டுமே தவிர ஆணவம் கூடாது என்றும் கூறினார்.

    பா.ஜனதா கட்சியின் முக்கிய குழுக்களில் இருந்து நிதின் கட்காரி சமீபத்தில் நீக்கப்பட்டு இருந்தார். இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியை குறித்து அவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ நவீன வசதிகள் இந்தப் பூங்காவில் இடம் பெற்றிருக்கும்.
    • மாற்று திறனாளி பூங்கா அமைக்க மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் உதவி.

    நாக்பூர்:

    மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, வீரேந்திர குமார் ஆகியோர் பல்வேறு உதவி உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்கரி, சமூகத்தில் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சேவை செய்வதும், கடைக் கோடியில் இருப்பவர்களும் அரசின் திட்ட பலன்களை பெறுவதை உறுதி செய்வதும் அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

    பின்னர் பேசிய மத்திய சமூக நீதித்துறை மந்திரி வீரேந்திர குமார், மகாராஷ்டிராவின் முதல் மாற்றுத்திறனாளி பூங்காவை நாக்பூரில் உருவாக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அமைச்சகம் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

    இந்த பூங்காவில் உணர்திறன் தோட்டம், நறுமணத் தோட்டம், திறன் பயிற்சி வசதி, விளையாட்டு மற்றும் தகவல் சார்ந்த வசதி உள்பட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல நவீன வசதிகள் இடம் பெற்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி.
    • ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.

    புதுடெல்லி

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, கடந்த வாரம் பா.ஜனதா ஆட்சி மன்ற குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நிதின் கட்காரி கலந்து கொண்டார். அங்கு பேசுகையில் ஒரு பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

    மராட்டிய மாநிலத்தில் ஒரு கிராமத்துக்கு சாலை அமைக்க அவர் திட்டமிட்டார். அதைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் அவர் பேசும்போது, ''என்ன பின்விளைவுகள் ஏற்பட்டாலும் இதை செய்வேன். நீங்கள் என்னுடன் இருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டேன்'' என்று கூறியதாக அந்த நிகழ்ச்சியில் நிதின் கட்காரி பேசினார்.

    ஆனால், அவரது பேச்சை ஆங்காங்கே வெட்டி, ''பதவி பறிக்கப்பட்டதற்கு கவலைப்பட மாட்டேன்'' என்று அவர் பேசியது போன்ற வீடியோவை சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிட்டனர். ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங்கும் அந்த வீடியோவை பகிர்ந்து, கருத்து தெரிவித்தார்.

    இந்தநிலையில், தனது பேச்சு அடங்கிய முழுமையான வீடியோவை நிதின் கட்காரி நேற்று வெளியிட்டார். அத்துடன் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

    சில ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் அரசியல் ஆதாயத்துக்காக எனக்கு எதிராக இழிவான, இட்டுக்கட்டிய பிரசாரம் நடக்கிறது.

    எனது பேச்சை தவறாக சித்தரித்து, திரித்து வெளியிடுகிறார்கள். இதுபோன்ற அவதூறு பிரசாரத்தால் நான் பதற்றம் அடைய மாட்டேன்.

    இருப்பினும், இத்தகைய தவறான பிரசாரம் நீடித்தால், எங்கள் அரசு, பா.ஜனதா மற்றும் கோடிக்கணக்கான செயல்வீரர்களின் நலனுக்காக அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய மந்திரி நிதின் கட்கரி, இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
    • மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் மாசுபாட்டை குறைப்பதற்கான வழிகளை ஆய்வுசெய்து வருகிறோம்.

    டீசல் பேருந்துகளை இயக்குவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது. ஆகையால், இந்தியாவில் விரைவில் பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மெட்ரோ ரெயில் போன்ற போக்குவரத்து அமைப்பாகும். மணிக்கு சுமார் 100 கி.மீ. வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிக்கலாம்.

    இந்தியாவின் முதல் பறக்கும் பேருந்து டெல்லி மற்றும் அரியானாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் இயக்கப்பட உள்ளது.

    இத்திட்டம் வெற்றி பெற்றால் நாட்டின் அனைத்து பெருநகரங்களுக்கும் பறக்கும் பேருந்துகள் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

    • 50 முறை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்த மூன்றில் இரண்டு பங்கு கட்டணம் வசூல்.
    • சுங்கச் சாவடிகளின் அருகில் வசிக்கும் வாகன உரிமையாளர்களுக்கு சலுகை.

    தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்க கட்டணம் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அதில் தெரிவித்துள்ளதாவது:

    தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகள் 2008-ன்படி, தேசிய நெடுஞ்சாலை, நிரந்தர பாலம், புறவழிச்சாலை அல்லது சுரங்கப்பாதை ஆகியவற்றை அடிக்கடி பயன்படுத்தும் வர்த்தகமில்லாத வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது.

    அதன்படி மாதாந்திர பயண அட்டை பெறும் நாளிலிருந்து 1 மாதத்திற்கு அதிகபட்சமாக 50 முறை அந்த சாலையை பயன்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பங்கு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இதற்கான கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது.

    நடப்பு நிதியாண்டில் இக்கட்டணம் 315 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளிலிருந்து 20 கி.மீ. தொலைவிற்குள் வசிக்கும் வர்த்தகமில்லாத வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்களுக்கு மட்டும் இச்சலுகை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா மாவட்டத்தில் பயோ எத்தனால் தயாரிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி என்ற வேளாண்மை பல்கலைகழகம் சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. மாரட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, மத்திய மந்திரிக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். அந்த விழாவில் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தீர்ந்து விடும். இதனால் நாட்டில் எரிபொருட்களுக்கு தடைவிதிக்கப்படும். மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா மாவட்டத்தில் பயோ எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதனை கொண்டு வாகனங்களுக்கு பயன்படுத்தலாம்.

    பச்சை ஹைட்ரஜனை ஆழ்துளை கிணற்றில் இருந்து தயாரிக்கலாம். இதனை ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்கலாம். விவசாயிகள் உணவு வழங்குபவர்களாக மட்டுமில்லாமல் எரிசக்தி வழங்குபவர்களாகவும் மாற வேண்டும். விவசாயிகள் கோதுமை, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை மட்டும் பயிரிடுவதால் தனது எதிர்காலத்தை மாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • இந்தியாவில் அமலாக இருக்கும் புது சட்டம் பற்றிய தகவலை மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
    • இது மக்களுக்கு வருவாய் ஈட்டித் தருவதோடு, சாலை ஒழுங்கை பின்பற்ற வைக்கும்.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி சாலைகள் மற்றும் வீதிகளில் தவறாக பார்க் செய்யப்பட்டு இருக்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க புது சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார்.

    புது சட்டத்தின் கீழ் தவறாக பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கும் வாகனத்தின் புகைப்படத்தை யார் வேண்டுமானாலும் எடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பலாம். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு தவறை இழைத்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து, அதில் ரூ. 500-ஐ புகைப்படம் எடுத்து அனுப்பிய நபருக்கு வழங்கப்படும்.


    தவறான பார்க்கிங் செய்த நபரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டால், அது குறித்து புகைப்படம் மூலம் தகவல் கொடுத்தவருக்கு ரூ. 500 சன்மானமாக வழங்கப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    புது சட்டம் பற்றிய தகவல்களை மத்திய மந்திரி நிதின் கட்கரியோ அல்லது அமைச்சக அதிகாரிகளோ அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. அந்த வகையில், இந்த சட்டம் இயற்றப்படுவது குறித்த பரிசீலனை நடைபெற்று வருவதாகவே எடுத்துக் கொள்ள வேணஅடும். ஒருவேளை இந்த தட்டம் அமலுக்கு வந்தால், சாலைகளில் பார்க்கிங் தொடர்பாக நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்காலத்தில் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.

    • 125 கிலோ எடையுடன் இருந்த அனில் பிரோஜியா தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
    • அனில் பிரோஜியா உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறார்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் மால்வா பகுதியில் ரூ.5,772 கோடி மதிப்பிலான 11 சாலை திட்டங்களுக்கு, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார்.

    அப்போது, மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினி மக்களவை தொகுதியின் பா.ஜ.க. உறுப்பினர் அனில் பிரோஜியாவிடம், உடல் எடையை குறைத்தால், ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1000 கோடி தொகுதி வளர்ச்சி நிதி வழங்கப்படும் என நிதின் கட்கரி நகைச்சுவையாக கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அனில் பிரோஜியா தனது தொகுதி வளர்ச்சி திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அவருக்கு நான் ஒரு நிபந்தனை விதித்துள்ளேன். 135 கிலோவாக இருந்த எனது உடல் எடையை இப்போது 93 கிலோவாக குறைத்து உள்ளேன்.

    இது தொடர்பான எனது புகைப்படத்தை அவரிடம் காண்பித்து நீங்களும் உங்கள் எடையைக் குறைத்துக் கொண்டால் நிதி வழங்கப்படும் என அவரிடம் கூறினேன். ஒவ்வொரு கிலோ எடை குறைவுக்கும் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து 125 கிலோ எடையுடன் இருந்த அனில் பிரோஜியா தனது உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தினமும் உடற்பயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் உள்ளிட்ட செயலில் ஈடுபட்டு 6 கிலோ எடையை குறைத்தார். இதற்காக 2 மணி நேரம் செலவிடுகிறார். அத்துடன் உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடித்து வருகிறார்.

    இது குறித்து அவர் கூறும்போது, "மத்திய மந்திரி நிதின்கட்கரியின் அறிவுரைப்படி உடல் எடையை குறைத்து வருகிறேன். இதுவரை ரூ.6 ஆயிரம் கோடி நிதி பெற்றுள்ளேன். மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது அவரை சந்தித்து, வாக்குறுதியை நிறைவேற்றுமாறு நினைவுப்படுத்த உள்ளேன்" என்றார்.

    நாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து பொய்யான வாக்குறுதிகள் அளித்தோம், ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துவிட்டனர் என மத்திய மந்திரி நிதின் கட்கரி வெளிப்படையாக கூறியுள்ளார். #NitinGadkari #RahulGandhi
    மும்பை :

    மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரி மற்றும் காலா பட வில்லன் நடிகர் நானா படேகர் ஆகியோர் பங்குபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று கடந்த 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஒளிபரப்பானது.

    அந்த நிகழ்சியில் நிதின் கட்கரி கூறியதாவது, ‘ கடந்த தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என எதிர்ப்பார்க்கவில்லை, அதனால் நாட்டு மக்களுக்கு பெரிய பெரிய வாக்குறுதிகளை கொடுத்தோம். ஒருவேலை நாங்கள் ஆட்சிக்கு வராமல் போயிருந்தால் அதற்கு நாங்கள் பொருப்பேற்று இருக்க வேண்டியதில்லை.

    ஆனால், மக்கள் எங்களுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திவிட்டார்கள். அதனால், நாங்கள் அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என மக்கள் கேட்கிறார்கள். இப்போதைக்கு அதைப்பற்றி சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறோம்’ என தெரிவித்தார்.

    நிதின் கட்கரி இப்படி வெளிப்படையாக பேசிய அந்த வீடியோ இணையத்தில் வைராலக பரவியது, எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் அந்த வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நிதின் கட்கரி பேசிய அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘நீங்கள் கூறியவை அனைத்தும் சரியே’ என குறிப்பிட்டுள்ளார். #NitinGadkari #RahulGandhi
    காவிரி மேலாண்மை ஆணையத்தை அரசிதழில் வெளியிட்டதற்கு மத்திய மந்திரி நிதின் கட்கரியை அதிமுக எம்.பி.க்கள் இன்று சந்தித்து நன்றி தெரிவித்தனர். #ADMK #BJP #Cauvery
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்த மத்திய அரசு சமீபத்தில் அதனை அரசிதழில் வெளியிட்டது. இதற்காக, மத்திய சாலை போக்குவரத்து, நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரியை இன்று சந்தித்த அதிமுக எம்.பிக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

    மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்.பி.க்கள் நவநீத கிருஷ்ணன், முத்துக்கருப்பன் உள்ளிட்டவர்கள் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். 
    ×