search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    8 இடங்களில் புறவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக்க வேண்டும்- நிதின் கட்கரிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்
    X

    அன்புமணி ராமதாஸ் - நிதின் கட்கரி


    8 இடங்களில் புறவழிச்சாலைகளை 4 வழிச்சாலையாக்க வேண்டும்- நிதின் கட்கரிக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்

    • விபத்து விகிதம் அதிகரிப்பதற்கான மிக முக்கியக் காரணம் சாலையின் தவறான வடிவமைப்பு தான்.
    • தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் கடந்த 2011 முதல் 2022 வரையிலான 11 ஆண்டுகளில் மட்டும் 1036 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சென்னை:

    மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில், சேலம்-உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணியை கட்டி, இயக்கி, ஒப்படைக்கும் திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் இன்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ. 941 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக மாற்றி 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் போக்குவரத்துக்கு திறந்து விட்டது.

    இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்த சாலையில் 97.37 கி.மீ நான்கு வழிச்சாலை. மீதமுள்ள 38.99 கி.மீ நீள நெடுஞ்சாலை இருவழிச்சாலை ஆகும்.

    இந்த நெடுஞ்சாலையில் மொத்தம் 8 இடங்களில், அதாவது உடையாப்பட்டி (6.40 கி.மீ), வாழப்பாடி(4.62 கி.மீ), நரசிங்கபுரம் மற்றும் ஆத்தூர் (7.20 கி.மீ), சின்னசேலம் (4.60 கி.மீ), கள்ளக்குறிச்சி (5.10 கி.மீ), தியாகதுருகம் (3.90 கி.மீ), எலவனாசூர்கோட்டை (4.கி.மீ), உளுந்தூர்பேட்டை (2.57 கி.மீ) ஆகிய இடங்களில் இரு வழி புறவழிச்சாலைகள் அமைக்கப்பட்டன.

    2014-ம் ஆண்டில் தனியார் ஆலோசனை நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட சுதந்திரமான ஆய்வில், மேட்டுப்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியின் வழியாக ஒவ்வொரு மாதமும் இரு சக்கர ஊர்திகளை சேர்க்காமல் சுமார் 2 லட்சம் வாகனங்கள் இந்த சாலையில் பயணிப்பதாக தெரிய வந்தது. நடப்பு 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரித்திருக்கும்.

    ஆனால், 8 இடங்களில் உள்ள புறவழிச்சாலைகளும் இரு வழிச்சாலைகளாகவே இருப்பதால், 4 வழிச்சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், புறவழிச்சாலை மட்டும் இருவழிச் சாலையாக இருப்பதை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. அதனால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன.

    இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட, இரவு நேரத்தில் பிரகாசமான ஒளிரும் விளக்குகள் இல்லாமை, சாலைத் தடுப்புகளின் இடைவெளியிலும், சந்திப்புகளிலும் சூரிய ஒளியில் இயங்கும் மினுமினுப்பான்கள் அமைக்கப்படாமை, நான்கு வழிச்சாலைகள் இருவழிச்சாலைகளாக குறுகும் இடங்களில் பிரதிபலிப்பான்கள் இல்லாமை ஆகியவை தான் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கான முதன்மைக் காரணம் ஆகும்.

    விபத்து விகிதம் அதிகரிப்பதற்கான மிக முக்கியக் காரணம் சாலையின் தவறான வடிவமைப்பு தான். எடுத்துக்காட்டாக, நெடுஞ்சாலை திடீரென நான்கு வழிச்சாலையிலிருந்து இருவழிச் சாலையாக மாறுவதால், நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் இரு வழிச்சாலையிலும் அதே வேகத்தில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

    தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் கடந்த 2011 முதல் 2022 வரையிலான 11 ஆண்டுகளில் மட்டும் 1036 பேர் உயிரிழந்துள்ளனர்.

    8 இடங்களிலும் இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீண்டும், மீண்டும் கோரிக்கை விடுத்தும் கூட, அதன் மீது ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

    எனவே, தேசிய நெடுஞ்சாலை எண் 79-ல் சேலம்-உளுந்தூர்பேட்டை இடையிலான 136 கி.மீ பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் 8 இடங்களில் உள்ள இருவழி புறவழிச்சாலைகளையும் 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேன்டும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் என்ற முறையில் தாங்கள் ஆணையிட வேண்டும்; அதன்மூலம் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×